(1) வரவிருக்கிற தண்டனையின் அறிவிப்பே மிகப் பயங்கரமா யிருக்கும்.
1974 டிசம்பர் 24-ல் பெற்றுக்கொள்ளப்பட்ட செய்தி: "பெரிய ஓர் எச்சரிப்பு உலகத்திற்குக் கொடுக்கப்படும். அதே போல் உலகத்தில் இது வரையிலும் எதுவும் நிகழ்ந்ததில்லை" என்று கூறுகிறது.
இன்னொரு இடத்தில் வெரோணிக்கா கூறுகிறாள் : "எச்சரிப்பை நான் கண்டேன். அது வானத்தில் வெடிக்கும் ஒரு பெரிய சக்தியாக இருக்கிறது. அதைப் பார்த்து, அநேகர் உலகத்தின் முடிவு வந்து விட்டதென்று கருதுவார்கள். அதிலே, ஓ! ஒரு சொற்ப நேரம் ஒருவன் தன்மேல் நெருப்புப் பிடித்தாற்போல் உணருவான். இந்த ஆகாய விபத்தில் யாராவது இறப்பார்களென்றால் அது அவர்களுடைய பயத்தாலேயே நடக்கும்'' என்று.
2. மனிதரின் மனசாட்சி பெரும் சத்தமாய்க்குரல் எழுப்பும்.
மேலே கூறப்பட்டுள்ள பயங்கரமான வானமண்டல நிகழ்ச்சிகளைக் காணும் மனிதர் பலர் அதிர்ச்சியாலும், அச்சத்தாலும் இறக்கும் நிலை ஏற்படும். அதே சமயத்தில், ''கடவுளின் திட்டப்படி பிதாவின் வரப்பிரசாதத்தால் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதன் நிலை அறிவிக்கப்படும். அவ்வான்மாவை ஆபத்தின் விளிம்பிற்கு (லூஸிபரிடம் - நரகத்திடம் கொண்டு வரக்கூடிய அதன் செயல்கள் என்ன என்று உணர்த்தப்படும்.
ஒவ்வொரு தனி ஆத்துமத்திற்கும் லூஸிபரிடம் அது அகப்படும் ஆபத்து அறிவுறுத்தப்படும், இந்த எச்சரிப்பு ஆன்மாக்களை சுத்திகரிக்கவும், தண்டனையைத் தவிர்க்கவும் கடவுள் செய்யும் முயற்சியாக இருக்கும். அதனால் தண்டனைக்கு நாம் தப்பித்துக்கொள்ள முடியும்" என்று 30 மே, 1973 செய்தியில் காணப்படுகிறது.
இதை நாம் ஊன்றிப் படித்தால், இத்தகைய சுத்திகரிப்பின் அறிவிப்பு நம் ஆத்தும் சம்பந்தமானது என்பதையும், கடவுளின் அன்பாலும், இரக்கத்தாலும் நமக்குத் தரப் படுகிறதென்பதையும் நாமே கண்டு கொள்ளலாம்.
ஆத்துமத்திற்கான இந்த எச்சரிப்பின் ஒரு பிரதிபலிப்பாகவே உலகத்திலும் கோளங்களிலும் நடக்கிற மற்ற பயங்கரங்கள் இருக்கும். எச்சரிப்பு மனிதர்களின் ஆன்மாக்களுக்குத்தான்.
"என் பிள்ளைகளே, நீங்கள் அதிகம் மன்றாட வேண்டும், கூடுதல் பரித்தியாகங்களைச் செய்ய வேண்டும். ஏனென்றால் மனுக்குலத்தின் மீது எச்சரிப்பு விழவிருக்கிறது. ஆகாயத்தில் பயங்கர வெடித்தல் ஏற்பட்டு வானம் பின்வசமாக சுருட்டப்படும்.
இந்தப் பிரபஞ்ச வேகமும் வெடித்தலும் மனித உள்ளத்தின் உள்ளுக்குள்ளேயே பாயும். ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கெதிரான தன்னுடைய பாவங்களையெல்லாம் உணருவான்'' என்று 12 ஜூன் 1976-ல் நியூயார்க் செய்தி கூறுகிறது.
இதன் பொருள் என்ன?
துப்புரவும், தண்டனையும், எச்சரிப்பும் எல்லாம் ஞான சம்பந்தமானவை. நம் ஆத்தும் சம்பந்தமானவை, நம் மனசாட்சி சம்பந்தமானவை, நம் நித்திய இரட்சண்ய சம்பந்தமானவை என்பதுதான் உண்மை. பிரபஞ்சத்தில் நடக்கக்கூடிய வெடிப்புகளும், அழிவுகளும், பயங்கரங்களும் உலகின் கொடிய சேதங்களும் அதன் பிரதிபலிப்பாகவே இருக்கும்.
நாம் பொதுவாக நம் சரீர ஆபத்து விபத்துகளுக்குப் பயப்படுகிறோம். ஆனால் அதை விட அளவற்ற மடங்கு ஆத்தும சேதத்திற்கும் ஆன்ம விபத்திற்கும் நாம் பயப்பட வேண்டும்.
ஆன்மாதான் மனிதன். ஆன்மா இல்லையேல் மனிதனும் இல்லை. ஆன்மா வாசம் செய்யும் வீடுதான் சரீரம். வீட்டில் இருக்கிறவர்களால்தான் வீடு மதிப்புப் பெறுகிறது. அது போல் ஆன்மாவை வைத்துத் தான் சரீரத்திற்கு மதிப்பும் மரியாதையும் வருகிறது.
இப்படிப்பட்ட ஆன்மாவை இழப்பதுதான் உண்மையான நஷ்டம். ஆகவேதான் எல்லாம் வல்ல சர்வேசுரன் தாம் தமது சாயலாகப் படைத்த ஒரு ஆன்மாவைக் கூட இழக்க விரும்பவில்லை.
அன்பைக் காட்டி இரட்சிக்க முடியாத ஆன்மாவை அடித்து இரட்சிக்க முயலுகிறார் சர்வேசுரன். அதுவே இந்த எச்சரிப்பு.
அது மிகப் பயங்கரமாயிருக்கும் என்றால் காரணம், அப்படிப் பயந்தாவது மனுக்குலம் தன்னைப் படைத்தவரை, தன்னை இரட்சித்தவரை, கண்டு கொள்ளாதா என்றுதான்.
இதனாலேயே இந்த எச்சரிப்பு ஒவ்வொரு ஆன்மாவிலும் மனச்சாட்சியின் தாக்குதலைப் பயங்கரமாக ஏற்படுத்தி, அதைக் கடவுளிடம் கொண்டு வரும். இந்த நோக்கத்துடனேயே எச்சரிப்பு கடவுளாலேயே அனுப்பப்படுகிறது.