முழு அர்ப்பணம் செய்யும் முறை.

(மரியாயின் மீது உண்மை பக்தி எண் 231-233)

மூன்று வார முடிவில் நாம் நம்மை சேசு கிறிஸ்துவின் அன்பின் அடிமைகளாக மரியாயின் கரங்கள் வழியாய் அர்ப்பணிக்கும் கருத்தோடு, பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்ள வேண்டும். நற்கருணை வாங்கிய பின் அர்ப்பணிக்கும் செபத்தை சொல்ல வேண்டும். இச்செபம் இந்நூலின் இறுதியில் காணப்படுகிறது. இச்செபத்தின் அச்சிட்ட பிரதி ஒன்று நம்மிடம் இருந்தால் தவிர, அதை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அதே தினத்தில் அந்த அர்ப்பணித்தலில் கையொப்பம் இட வேண்டும்.

அந்நாளில் சேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய திரு அன்னைக்கும் ஏதாவது காணிக்கை செய்வது நல்லது. ஞானஸ்நான வார்த்தைப் பாடுகளை அனுசரியாத முந்திய பிரமாணிக்கமின்மைக்குத் தபசாக அல்லது தங்கள் மீது சுதந்திர உரிமை பூண்டுள்ள சேசுவையும் மாமரி யையும் முற்றிலும் எதிர்பார்த்து சார்ந்திருப்பதன் அடையாளமாக அக்காணிக்கை செலுத்தப்படலாம். அதன் தொகை அவரவர் வசதியையும் பக்தியையும் பொருத்தது. உதாரணமாக உபவாசம், பரித்தியாகம், தான தர்மம், மெழுகுவர்த்தி காணிக்கை முதலியன. நல்ல இருதயத்தோடு அவர்கள் ஒரு ஊசியைக் கொடுத்தாலும், நல்ல எண்ணத்தை மட்டும் நோக்குகிற சேசுவுக்கு அது போதுமானது.

ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது இவ்வரிப்பணத்தின் வருடாந்திர நாளிலாவது இதைப் புதுப்பிக்க வேண்டும் அதே பக்தி முயற்சிகளை மூன்று வாரங்களுக்கு அனுசரிக்க வேண்டும். மாதந்தோறும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட ஒரு சில வார்த்தைகளில் 'நான் முழுதும் உங்களுக்குச் சொந்தம். எனக்கிருப்பவை யாவும் உங்களுடையதே" இவ்வாறு கூறி அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். "ஓ என் அன்புள்ள சேசுவே! உம் திருத்தாயான மாமரி வழியாக உமக்கு நான் முழுச் சொந்தமாயிருக்கிறேன்" என்றும் கூறலாம்.

(மரியாயின் மீது உண்மை பக்தி எண் 234).

அவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மாமரியின் சிறிய ஜெபக் கிரீடத்தை தங்கள் வசதிக்கேற்ற முறையில் சொல்லி வர வேண்டும். பரலோக மந்திரம் மும்முறை, அருள்நிறை மந்திரம் பன்னிருமுறை. மாமரி பெற்றுள்ள வரங்களுக்காகவும் அவர்களின் மாட்சிமையை முன்னிட்டும் இவற்றைச் சொல்ல வேண்டும்.

இந்தப் பக்தி முயற்சி மிகத் தொன்மையானது. வேதாகம அடிப்படை கொண்டது. புனித அருளப்பர் (காட்சி 12, 1) பன்னிரு விண்மீன்களால் முடிசூடி சூரியனை அணிந்து கொண்டு சந்திரனைத் தன் பாதத்தடியில் கொண்ட ஒரு பெண்ணைத் தரிசித்தார். வேதாகமம் விரிவுரையாளர் கருத்துப்படி அவர்களுள் புனித அகுஸ்தீன், புனித பெர்னார்ட் உட்பட) இந்தப் பெண் நம் தேவ அன்னை மாமரியே.

மரியாயின் சிறு ஜெபக் கிரீடம்.

அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம் சொல்லவும். ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே உம்மை வாழ்தித் துதிக்க எனக்கு அருள் புரியும், உமது சத்துருக்களுக்கெதிராக எனக்கு பலமளித்தருளும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் (மற்றதும்.....)

விசுவாசப் பிரமாணம் சொல்லவும்.

பரலோக மந்திரம் சொல்லவும்.
(பிதாவுக்கு மகிமையாக)

1. கடவுளின் நித்திய திட்டத்திற்கென மாதா நித்தியத்திலேயே தெரிந்து கொள்ளப்பட்ட மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம். நம் மீது கடவுளின் திட்டத்தை மாதா நிறைவேற்றும்படி மன்றாடுவோம். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்....
ஒரு அருள் நிறை மந்.

(... இவ்வடையாளமிட்ட இடங்களில் சற்று நிறுத்தி மனதால் தியானிக்கவும்)

2 மாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்..... தன் பிள்ளைகளை ஜென்மப் பாவ தோஷத்திலிருந்து விடுவிக்கும்படி மாதாவிடம் மன்றாடுவோம்... நம்மை அப்படி விடுவிப்பார்கள் என நம்புவோம்.....
(ஒரு அருள் நிறை)

3. சர்வேசுரனுடைய சகல வரப்பிரசாதங்களும் வந்து குவியும் பாத்திரமாக மாதா இருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம் ...... தன் பிள்ளைகளாகிய நமக்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தேவையான சமயத்தில் தந்து ஆதரிக்கும்படியாக மன்றாடுவோம்..... மாதா நம் தாயாக இருப்பதால் நமக்கு ஒரு குறையும் இல்லாமல் அவ்வரப்பிரசாதங்களை தகுந்த நேரத்தில் தருவார்கள் என நம்புவோம்...
(ஒரு அருள் நிறை)

4. சர்வேசுரனுடைய தாயாக மாதா இருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்... கடவுளின் தேவைகளை தாயென்ற முறையில் மாதா அறிந்திருப்பதால் நம்மிடமிருந்து கடவுள் எதிர்பார்ப்பதையெல்லாம் அவருக்குக் கொடுக்க, உதவும்படி மன்றாடுவோம்... மாதாவே நம்மிடமிருந்து அவற்றை எடுத்து கடவுளிடம் சமர்ப்பிப்பார்கள் என்று நம்புவோம்...
ஒரு அருள் நிறை

(பிதாவுக்கும் சுதனுக்கும் மற்றதும்...)

பரலோக மந்திரம் சொல்லவும்
(சுதனுக்கும் மகிமையாக)

5. பிதாவாகிய சர்வேசுரனின் குமாரத்தியாக மாதா இருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம். இப்படி கடவுளின் வல்லமையில் பங்கு பெறும் நம் தாய், நாம் சாத்தானை எதிர்த்து வெற்றி பெறும் வலிமையை நமக்குத் தரும்படி மன்றாடுவோம்... மாதாவின் இப்பலத்தைக் கொண்டு நாம் சாத்தானை முறியடித்து வெற்றி பெறுவோம் என நம்புவோம்....
(ஒரு அருள் நிறை)

6. மாதா, சேசுவின் கன்னித் தாயாக இருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நாம் நினைப்போம்.... சிருஷ்டிக்கப்படாத ஞானமாகிய அவரை மாதா நமக்குத் தந்து அந்த ஞானத்தின்படி நம்மை வழிநடத்தும்படி மன்றாடுவோம்... தவறாத ஞான வாழ்வில் நம்மை நடத்தி அவரிடம் நம்மைக் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புவோம்...
(ஒரு அருள் நிறை)

7. மாதா, பரிசுத்த ஆவியாகிய தேவனின் பிரியமுள்ள நேசமாக இருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்.... அவரிடமிருந்து பிரிக்க முடியாத மணவாளியாக இருக்கும் நம் தாய்க்கு, அவர் தம் சிநேகம் முழுவதையும் கொடுத்துள்ளதால், உத்தமமாய்க் கடவுளை நேசிக்கிற அன்பை மாதா நமக்குத் தரும்படி மன்றாடுவோம்... தேவ சிநேகத்தால் நம்மைப் பற்றி எரியச் செய்வார்கள் என நம்புவோம்.... (ஒரு அருள் நிறை)

8. மாதா, சகல மனிதருக்கும் தாயாக இருக்கிற மகிமையை அன்புட்ட னும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்... நம் மாதாவுக்கு எல்லா மானிடரும் பிள்ளைகளாயிருப்பதால், ஒவ்வொருவருடைய தேவைகளிலும் சொந்தத் தாய் போல் வந்து உதவும்படி மன்றாடுவோம்... உலகம், திருச்சபை, பாப்பரசர், ஆன்மாக்கள், பாவிகள் அனைவரின் தாயாகிய மாதா எல்லாரின் தேவைக்காகவும் உலக சமாதானத் திற்காகவும் மன்றாடி உதவுவார்கள் என நம்புவோம்...
(ஒரு அருள் நிறை)

பிதாவுக்கும் சுதனுக்கும் மற்றதும்...)
பரலோக மந்திரம் சொல்லவும்
(பரி. ஆவிக்கு மகிமையாக)

9. சேசுவுடன் மாதா இணை இரட்சகியாயிருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்.... சேசுவின் பாடுகள் அனைத்தையும் மாதாவும் அனுபவித்து, அவருடன் சேர்ந்து சம்பாதித்த பேறுபலன்களால், சாத்தானின் சகல ஏமாற்ற தந்திரங்களிலும் நம்மைக் காப்பாற்றும்படி மன்றாடுவோம்... சேசுவுடன் இணை இரட்சகியாயிருப்பதால் நம்மை இரட்சித்து மோட்சம் அளிப்பார்கள் என நம்புவோம்...
(ஒரு அருள் நிறை)

10. மாதா சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்யஸ்தியாயிருக்கிற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்... மாதாவே நமக்கு எல்லாமாக இருந்து சகல தேவவரங்களையும் தந்து இவ்வுலகின் வாழ்விலும் மறுவுலகிலும் நம்மைப் பராமரிக்கும்படி மன்றாடுவோம்.... அவர்களே நம் உத்திரவாதமாக இருந்து நம்மை எப்படியும் காத்து கொள்வார்கள் என நம்புவோம்....
(ஒரு அருள் நிறை)

11. மாதா ஆத்தும் சரீரத்துடன் மோட்சம் சென்ற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்... அவர்களுக்கு நம் அர்ப்பணத்தின் அடையாளமான உத்தரியத்தை அணிந்திருக்கவும், அதற்கு மாதா வாக்களித்துள்ள படி நாம் மரணமடையும்போது மாதா நமக்குத் துணையாக இருக்கும்படி மன்றாடுவோம் நம்மை தன் குமாரன் சேசுவிடம் அவர்களே கூட்டிச் செல்ல வருவார்கள் என நம்புவோம்....
(ஒரு அருள் நிறை)

12. மாதா பரலோக பூலோக அரசியாக மோட்சத்தில் முடிசூட்டப்பெற்ற மகிமையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நினைப்போம்... நம் அன்னையும் அரசியுமான அவர்களுக்கு நாம் முழுச் சொந்தமாகிவிடும் வரத்தைக் கேட்டு மன்றாடுவோம்... நம்மை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு விநாடியிலும் நம்மை அவர்களே நடத்துவார்கள் என நம்புவோம்...
(ஒரு அருள் நிறை)
ஆமென்.

சிறு இரும்புச் சங்கிலி அணிதல்.

(மரியாயின் மீது உண்மை பக்தி எண் 236 - 237)

இவ்விதமாக மாமரியிடமாய் சேசுகிறிஸ்துவின் அடிமையானவர்கள் இவ்வன்பின் அடிமைத்தனத்தின் அடையாளமாக, இதற்கென மந்திரிக்கப் பெற்ற சிறு சங்கிலியை அணிந்து கொள்வது மிக புகழுக்குரியதும் மதிப்பும் பயனும் உடையதுமாகும். இத்தகைய வெளி அடையாளங்கள் அத்தியாவசியமில்லை என்பது உண்மையே. இந்த பக்தி முயற்சியைக் கைக் கொண்ட ஒருவன் அது இல்லாமலே இருக்கலாம். ஆயினும் ஜென்மப் பாவமும், ஒருவேளை கர்மப் பாவமும் தங்களைக் கட்டியிருந்த பசாசின் வெட்கத்துக்குரிய அடிமைத்தனத்தை உதறி விட்டு, தங்கள் சுதந்திர சுயாதீனமாய் சேசுகிறிஸ்துவின் மகிமையுள்ள இவ்வடிமைத் தனத்தைத் தங்கள் மீது ஏற்றுக் கொண்டு புனித சின்னப்பருடன் தாங்கள் அணிந்துள்ள சங்கிலியைப் (எபே. 3,1; கொலோ. 4:18) பற்றி மகிமை பாராட்டுகிறவர்களை நானும் ஆர்வமுடன் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை. இந்தச் சங்கிலி துருப்பிடித்த இரும்புச் சங்கிலியாயிருப்பினும், சக்கரவர்த்திகளின் எல்லா தங்கச் சங்கிலிகளையும் விட அதிக மகிமையும் மதிப்பும் உடையதாகும்.

ஒரு காலத்தில் சிலுவையைப் போல் அவமானமுடையது வேறு இல்லாமலிருந்தது. ஆனால் இப்போது அக்கழுமரம் கிறீஸ்தவ உலகின் மிகப்பெரும் புகழ்ச்சியுள்ள பெருமையாக உள்ளது. இவ்வடிமைத்தனத்தின் சங்கிலியைப் பற்றியும் இவ்வாறு நாம் கூறலாம். முற்காலத்தவரிடை சங்கிலியைப் போல் அவமானமுள்ளது இல்லை. புற இனத்தாரிடையிலும் இன்று வரை அதைப்போல் வெட்கத்துக்குரியது வேறு இல்லை. ஆனால் கிறிஸ்தவர்களிடையே சேசுகிறீஸ்துவின் சங்கிலியைப் போல் அதிக மகிமையுள்ளது வேறு எதுவுமில்லை. ஏனென்றால் அது நம்மை வெட்கத்துக்குரிய பாவத்தளையினின்றும் பசாசின் கட்டுகளிலிருந்தும் மீட்டுப் பாதுகாக்கிறது. அது நம்மை விடுவித்து சேவுடனும் மரியாயுடனும் இணைத்துக் கட்டுகிறது. கப்பலில் அடிமைகளைப் போல் கட்டாயத்திற்காகவோ, பலவந்தத்தினாலோ அல்ல ஆனால் குழந்தைகளைப் போல் சிநேகத்தாலும் அன்பாலும் அவ்வாறு கட்டுகிறது. ''பரிவு என்னும் கயிற்றால் அவர்களைப் பிணைத்து அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வந்தோம்" (ஓசே. 11,4) அவர்களை அன்புச் சங்கிலியால் கட்டி என்னிடம் இழுப்பேன் என்று தீர்க்கதரிசி வாயிலாக இறைவன் கூறுகிறார். அதனால் இச்சங்கிலி மரணத்தைப் போல் வலிமையுடையதாகிறது. ஏன், இந்த மகிமையுள்ள அடையாளத்தை மரணம் வரை பிரமாணிக்கமாய் அணிகிறவர்களுக்கு அது மரணத்தை யும்விட அது வலிமையுள்ளதாகிறது. ஏனென்றால் மரணம் அவர்களுடைய உடலை அழித்து தூசியாக்கிவிட்டாலும் இவ்வடிமைச் சங்கிலி இரும்பால் செய்யப்பட்டுள்ளதால் எளிதில் அழியாதாகையால் இதை அழிக்காது. மேலும் ஒருவேளை உயிர்தெழும் நாளில், கடைசித் தீர்ப்பில் அவர்களுடைய எலும்பில் தொங்கும் இச்சங்கிலி அவர்களுடைய மகிமையின் ஒரு பாகமாக இருக்கக்கூடும். ஒளியும் சிறப்பலங்காரமுமுள்ள சங்கிலியாக மாறக்கூடும். எனவே தங்கள் சங்கிலியைக் கல்லறை வரைக்கும் கொண்டு செல்லும் இந்த புகழ்ச்சிக்குரிய சேசு மரியின் அடிமைகள் ஆயிரந் தடவை பாக்கியசாலிகள்!

மனுவுரு எடுத்த தேவ ஞானமாகிய சேசு கிறிஸ்துவுக்கு மாமரியின் கரங்கள் வழியாகச் செய்யும் சுய அர்ப்பணம்.

செபம்.

ஓ மனித அவதாரமெடுத்த நித்திய ஞானமே ஓ மிகவும் இனிய ஆராதனைக்குரிய சேசுவே! உண்மையான கடவுளும் உண்மையான மனிதனுமானவரே, நித்திய பிதாவின் ஏக சுதனே எப்பொழுதும் கன்னிகையான மரியாயின் குமாரனே நித்தியத்தில் உம்முடைய பிதாவின் மடியிலும் அவருடைய மகிமையிலும் / உம்மை வணங்குகிறேன். உமது மிகவும் தகுதி பெற்ற மாதாவான மரியாயின் கன்னிமை பொருந்திய உதரத்திலே உமது மனித அவதாரத்தில் உம்மை ஆராதிக்கிறேன்

கொடிய பசாசின் அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவிக்கும்படி அடிமையின் உருவமெடுத்து / உம்மையே வெறுமையாக்கியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் / உமது தாயின் வழியாக என்னை உமக்குப் பிரமாணிக்கமுள்ள அடிமையாக்கிக் கொள்ளும்படி அவ்வன்னைக்கு உம்மைச் சகலத்திலும் கீழ்ப்படுத்தியதற்காக உம்மை வாழ்த்தி துதிக்கிறேன்./

ஆனால் அந்தோ நான் நன்றியற்று உண்மை தவறி / ஞானஸ்நானத்தில் எவ்வளவோ பகிரங்கமாய்க் கொடுத்த வாக்குறுதிகளை நான் காப்பாற்றவில்லை என் கடமைகளை நான் செய்யவில்லை உம்முடைய பிள்ளையென்றோ அடிமையென்றோ அழைக்கப்பட்ட நான் தகுதியில்லை / உம்முடைய கோபத்துக்கும் புறக்கணிப்புக்கும் உரியதாக அன்றி வேறு எதுவும் என்னிடம் இல்லை ஆதலால் உம்முடைய மிகப் புனித மகத்துவ சந்நிதியின் முன் தனியே வர நான் துணியவில்லை இதனாலேயே உம்மிடம் எனக்காகப் பரிந்து பேசும்படி / நீர் எனக்குத் தந்த உம் திருத்தாயின் உதவியை நான் நாடுகிறேன் / உம்மிடமிருந்து மனஸ்தாபத்தையும் மன்னிப்பையும் பெறவும் ஞானம் என்னும் வார்த்தை அடைந்து அதைக் காப்பாற்றிக் கொள்ளவும் இந்தத் தாய் வழியாகவே நம்பியிருக்கிறேன்.

ஓ ஜென்ம மாசற்ற மரியாயே வாழ்க! நித்திய ஞானமானவர் மறைந்து தங்கி சம்மனசுக்களாலும் மனிதர்களாலும் வணங்கப்படத் திருவுளங்கொண்ட உயிருள்ள பேழையே வாழ்க கடவுளுக்கடியிலுள்ள யாவற்றையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டிருக்கும் பரலோக பூலோக அரசியே வாழ்க யாருக்கும் இரக்கம் காட்டத் தவறாத பாவிகளின் உறுதியான அடைக்கலமே வாழ்க தாயே தேவ ஞானத்தை நான் அடைய எனக்கிருக்கும் ஆவலை நிறைவு செய்யுங்களம்மா அதற்கென நான் என் தாழ்நிலையில் செய்யும் அர்ப்பணத்தையும் வாக்குறுதிகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிரமாணிக்கமற்ற பாவியாகிய நான் (பெயர்....) என் ஞானஸ்நானம் வாக்குறுதிகளை உங்கள் கரங்களில் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறேன். பசாசையும் அதன் கிரியைகளையும் அதன் ஆரவாரங்களை யும் நித்தியத்திற்கும் விட்டுவிடுகிறேன் மனித உருவெடுத்த / தேவ ஞானமாகிய சேசு கிறிஸ்துவுக்கு என்னை முழுவதும் அர்ப்பணிக்கிறேன் என் வாழ்நாளெல்லாம் அவர் பின்னால் என் சிலுவையைச் சுமந்து செல்லவும் இதுவரை இருந்ததை விட அவருக்கு அதிக பிரமாணிக்கமாயிருக்கவும் என்னை அவருக்குக் கையளிக்கிறேன்.

ஓ மாமரியே இன்று சகல மோட்ச வாசிகள் முன்னிலையில் உங்களை என் தாயாகவும் தலைவியாகவும் தெரிந்து கொள்கிறேன் என் ஆத்துமம் சரீரம் என் உள்ளரங்க வெளியரங்க பொருட்கள் யாவும் என்னுடைய கடந்த கால நிகழ்கால வருங்கால நற்செயல்களின் பலன்கள் எல்லாவற்றையும் உங்களிடம் அர்ப்பணித்துக் கொடுத்து விடுகிறேன் | என்னையும் எனக்குள்ள யாவற்றையும் / ஒன்று கூட பாக்கியில்லாமல் கடவுளின் அதிமிக மகிமைக்காக உங்கள் விருப்பப்படி இப்பொழுதும் நித்தியமாகவும் உபயோகித்துக் கொள்ள உங்களுக்கே முழு உரிமையாக்குகிறேன்.

தயாளமுள்ள கன்னிகையே என் அடிமைத்தனமாகிய இச்சிறு காணிக்கையை நித்திய ஞானமானவர் உங்கள் தாய்மைக்கு செலுத்திய பணிதலுடன் ஒன்றித்து அதன் மகிமைக்காக ஏற்றுக்கொள்ளுங்கள் / அற்பப் புழுவும் பரிதாபத்துக்குரிய பாவியுமான என் மீது சேசுவுக்கும் உங்களுக்கும் உள்ள அதிகாரத்திற்கும் ஓர் மரியாதையாகவும் பரிசுத்த திரித்துவம் உங்களுக்கு அளித்துள்ள சலுகை வரங்களுக்கு நன்றியாகவும் என் காணிக்கையைப் பெற்றுக் கொள்ளுங்கள் இது முதல் நான் உங்கள் பிரமாணிக்கமுள்ள அடிமையாயிருந்து உங்கள் மகிமையைத் தேடவும் எல்லாவற்றிலும் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் விரும்புவதாக உறுதி கூறுகிறேன்.

ஒ ஆச்சரியத்துக்குரிய அன்னையே உங்களால் சேசு என்னை மீட்டதுபோல் உங்களாலேயே அவர் என்னைத் தன் நித்திய அடிமையாக ஏற்றுக் கொள்ளும்படி என்னை அவரிடம் சமர்ப்பியுங்கள் ஓ இரக்கத்தின் தாயே கடவுளின் உண்மையான ஞானத்தை நான் அடையும் படி செய்யுங்கள் / இதற்கேதுவாக நீங்கள் அன்பு பாராட்டி
அறிவூட்டி வழிநடத்தி உணவூட்டி பாதுகாக்கும் உங்கள் பிள்ளைகளுடனும் அடிமைகளுடனும் என்னையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஓ பிரமாணிக்கமுள்ள கன்னிகையே உங்கள் மன்றாட்டாலும் உங்கள் முன் மாதிரிகையிலும் உங்கள் குமாரன் சேசு கிறிஸ்துவின் நிறை வயதை நான் உலகத்திலும் மோட்சத்திலும் அடைந்து கொள்ளுமாறு / எல்லாவற்றிலும் அவருடைய / உத்தம சீடனாகவும் / அவருடைய முன்மாதிரிகைப்படி நடப்பவனாகவும் மனிதாவதாரமான தேவ ஞானத்தின் அடிமையாகவும் என்னை ஆக்கியருளும் தாயே!

ஆமென்.

இடம் :
கையொப்பம் தேதி :

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நம் சிந்தனைக்கு...

மிக முக்கிய அருட்கருவிகளான (Sacramentals) ஜெபமாலையும் உத்தரியமும், உலக சமாதானத்திற்காக, பாத்திமாவில் மாதா அளித்த செய்திகளில், முக்கியத்துவம் பெறுகின்றன. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு, தாய்திருச்சபையால் இவ்வருட் கருவிகள் (Sacramentals) ஒதுக்கி வைக்கப்படவில்லை.

"பத்தி 67. திருச்சங்கம் இந்தத் கத்தோலிக்கக் கோட்பாட்டை நன்கு உணர்ந்தே கற்பிக்கிறது. அதே வேளையில் திருச்சபையின் பிள்ளைகள் அனைவரும் இத்தூயக் கன்னியின் வணக்கத்தை, சிறப்பாய்ப் பொது வழிபாட்டு வணக்கத்தைப் பெருமையுடன் போற்றிப் பேணி வளர்க்கவேண்டும்; பல நூற்றாண்டுகளாய்த் திருச்சபையின் ஆசிரியம் போற்றிவரும் மரியன்னைப் பக்தி முயற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் மிகவாய் மதிக்க வேண்டும்; முற்காலங்களில் கிறிஸ்து, தூய கன்னி, புனிதர்கள் ஆகியவர்களின் உருவ வணக்கம் பற்றித் தீர்மானிக்கப்பட்டவைகளை மறையுணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்குத் திருச்சங்கம் அறிவுரைக் கூறுகிறது."

(2-ம் வத்திக்கான் திருச்சங்கம் : மறைக் கொள்கைத் திரட்டு - அதிகாரம் VIII. கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் மறைபொருளில் இறையன்னை தூய கன்னி மரி)

பாப்பரசர் ஆறாம் பவுல் (சின்னப்பர்) வத்திக்கான் சங்கப் போதனைப் பற்றி இன்னும் விரிவாக எடுத்துச் சொல்லி, கர்தினால் சில்வா அவர்களை தன் பிரதிநிதியாக மார்ச் 1965ல் நடந்த "சாந்தா டொமங்கோ மரியன் காங்கிரஸ் மாநாட்டுக்கு அனுப்பினார்.

''பல நூற்றாண்டுகளாக போதிக்கும் அதிகாரம் பெற்ற திருச்சபை அனுமதித்தவாறு, புனித கன்னி மரியாயின் மீதுள்ள பக்தியையும், பக்தி முயற்சிகளையும் விசுவாசிகள் மிக உயர்வாக கொள்வார்களாக, மரியாயின் செபமாலையும், கர்மேல் மாதாவின் உத்தரியமும் விசுவாசிகள், பக்தி முயற்சிகளாக சிபாரிசு செய்யப்பட்டவைகளில் மிக முக்கியமானதாகும். உத்திரியம் ஓர் இறைப்பற்றுக்கான வழிமுறை. அதன் முறை அனைவருக்கும் உகந்தது. ஞானப்பலன்களை முன்னிட்டு அது கிறிஸ்து விசுவாசிகளின் மத்தியில் பரவலாக பரவியுள்ளது.''

பாப்பரசர் பவுல், செபமாலையையும் உத்தரியத்தையும் குறித்து கூறும்போது, பாத்திமா செய்தியின் இந்த இரு முக்கிய அருட்கருவிகள் பால் நம் கவனத்தை மிகவும் ஈர்த்தார். இவ்விரண்டில், செபமாலை முதலில் நம் கவனத்தில் வருகிறது. ஏனெனில் "நான் செபமாலையின் அன்னை” என்று நம் கன்னித்தாய் சொல்லவில்லையா? (அக்டோபர் 13, 1917). நம் கன்னித்தாய்க்கு உள்ள பல சிறப்பு பெயர்களில் இது இன்றியமையாதது. வரலாற்று அடிப்படையில் நாம் காணும்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தப்பட்ட தருணத்தில் கிறிஸ்துவர்கள் செபமாலை ஆற்றலில் தங்கள் கவனத்தை திருப்பினர், வெற்றியும் கிடைத்தது.

ஒரு முறை சொல்லும் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு எவ்வளவு பெரிய விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என புனித அவிலா தெரெசா கூறுகிறார். அவர் இறந்த பின் தன்னுடைய சபை சகோதரிகளில் ஒருவருக்குத் தோன்றினார். "காலத்தின் முடிவுரை துன்பம் நிறைந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதன் வழியாக ஒரு அருள் நிறைந்த மரியே செபத்தை மிகுந்த பக்தியோடு சொல்லுபவரை இறைவன் மாட்சிமையோடு அதிக நன்மைகளை அளித்து நிறை செய்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவேன்" என்றார்.

பாப்பரசர்கள் செபமாலையை புகழ்வதில் தாராளம் காட்டி, அதை விசுவாசிகள் ஜெபித்தலில் ஆர்வம் கொள்ளும்படி ஊக்குவித்தனர். 1402ம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு பாப்பரசரும் புனித செபமாலையின் வல்லமை பற்றி பேசியும் இருக்கிறார்கள். அதைப்பற்றி சுற்று மடலாகாவும் எழுதியுள்ளனர். ஜெபமாலைப் பற்றி 514 பாப்பரசர்களின் பிரகடனங்கள் வெளியாகி உள்ளன. திருச்சபையின் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் ஜெபமாலையைப் போல் இவ்வளவு அதிக அற்புதங்களை வேறெந்த பக்தி முயற்சியும் நிகழ்த்தவில்லை. திருச்சபையின் வேறு எந்த பக்தி முயற்சிகளும் இத்தகைய பாப்புமாரின் அதிகார வரம்புக்குகந்ததாகவும் இருந்ததில்லை.

ஒவ்வொரு தற்கால பாப்புமாரும் செபமாலையின் முக்கியத்தை மிக வலியுறுத்தி போதித்துள்ளனர். செபமாலை, நமது காலத்தில் எழும் எல்லா தீமைகளையும் தீர்க்கும் அரிய மருந்து என பன்னிரண்டாம் பத்தி நாதர் கூறுகிறார். பாப்பரசர் ஆறாம் பவுல் தனது சுற்று மடலில் மூன்றில் ஒரு பகுதி முழுவதையும் செபமாலையின் முக்கியத்துவம் பற்றி எழுதியுள்ளார். பாப்பரசர் முதலாம் அருள் பவுல் வெனிஸ் நகர கர்தினாலாக இருந்தபோது கீழே குறிப்பிட்டபடி செபமாலை பற்றி குறை கூறுபவர்களுக்கு போதித்தார்.

"நாமான் என்ற சீரியன் யோர்தான் நதியில் (தான் குணமாக) வெறுமனே குளிப்பதை வெறுத்தான். நாமான் சொல்வதைப் போல் சிலர் செய்கிறார்கள். "நான் ஒரு பெரிய ஞானி, இறை இயல்பை நன்கு கற்றவன், மத நம்பிக்கைகளை நன்றாகவே அறிந்தவன், பழுத்த கிறிஸ்துவன், திரு விவிலியத்தில் ஆழமாக காலூன்றியவன், வழிபாட்டு முறைகளை தெளிவாக தெரிந்துள்ளவன். என்னிடம் வந்து செபமாலை பற்றி பேசுகிறார்களே" என்று. எனினும் செபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களும் புனித பைபிள்தானே. அதுபோலவே செபமாலையில் சொல்லப்படும் கர்த்தர் கற்பித்த ஜெபம், அருள் நிறைந்த மரியே மன்றாட்டு, பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மன்றாட்டு எல்லாம், திருவிவிலியத்தோடு இணைந்து ஆன்மாவை செழுமையாக்கும் மன்றாட்டுகள். மேலெழுந்த வாரியாக திருவிவிலியத்தைப் படித்துவிட்டு அதைப்பற்றி பெருமையாக கூறிக் கொள்வது வெறுமனே கர்வத்தை மட்டும் வளர்க்கும். அதனால் பலன் ஒன்றுமில்லை. இந்த மாதிரியான திருவிவிலிய ஞானிகள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிடுவது ஒன்றும் அரிதல்ல.''

பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பர், செபமாலையே எனக்கு மிக பிடித்த மன்றாட்டு என்று தனது ஆஞ் செலுஸ் (திரிகால) செய்தியில் அக்டோபர் 29, 1978-ல் சொல்லத் தயங்கவில்லை. அன்று முதல் அவர் செபமாலை பக்தியை தூண்டிக் கொண்டே இருக்கிறார். அண்மையில், ''ஒளியின் தேவ இரகசியத்தை", சந்தோஷம், துக்கம் மற்றும் மகிமை தேவ இரகசியங்களோடு சேர்த்துள்ளார்.

பழுப்புநிற உத்தரியம்.

நம் அன்னை, தம் பாத்திமா செய்தியில் இரண்டாவது அருட் கருவியாக பழுப்பு நிற உத்திரியத்தைக் கூறுகிறார். புனித டோமினிக் அருட் சகோதரர் ஆஞ்சலுஸ் அவர்களுக்கு பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே இதுபற்றி தீர்க்கதரிசனமாக இவ்வாறு கூறியுள்ளார். "ஒரு நாள் சகோதரர் ஆஞ் செலுஸ் அவர்களே! உங்கள் சபைக்கு, அருள் நிறைந்த அன்னை கன்னிமரியாள் பழுப்பு நிற உத்தரியம் வணக்கத்திற்குரிய அடையாளமாக அளிக்கப்படும். அதுபோல எங்கள் சபைக்கு செபமாலை அளிக்கப்படும். ''ஒருநாள் அன்னை இந்த உலகத்தை செபமாலையாலும் உத்தரியத்தாலும் காப்பாற்றுவார்கள்,

இருபது நூற்றாண்டு வரைக்கும் அளித்து வந்த காட்சிகளில் பாத்திமாவில் நம் அன்னை, முதன் முறையாக செபமாலையையும் உத்தரியத்தையும் கையில் ஏந்திக் கொண்டு தோன்றினார். அக்டோபர் 13, 1917-ல் சூரியன் தோன்றிய அதிசய நிகழ்வின்போது நம் அன்னை அளித்த கடைசி காட்சியில், கர்மேல் மலை கன்னித்தாய் போல் ஆடை அணிந்து உத்தரியம், செபமாலையுடன் தோன்றி நாமும் அவரைப்போல் அவைகளை அணிய வேண்டுமென உணர்த்தினார்கள். உத்தரியத்தின் நினைவாக கொண்டாடப்பட்ட ஏழாவது நூற்றாண்டு விழாவில் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் கர்மேல் சபையினருக்கு எழுதிய கடிதத்தில் ''நம்மை தூய்மைபடுத்திக் கொள்வதே நம் அன்னைக்கு நாம் அளிக்கும் புதுயுக மன்றாட்டு. பழுப்புநிற உத்தரியமே அந்த தூய்மையின் அடையாளம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர், போர்வீரர், மாலுமி, செவிலியர், நீதிபதி, குருக்கள், கன்னியர் அணியும் சீருடைகள் தன்னிலே ஒரு உயர்ந்த முக்கியத்துவத்தை பெறுகின்றன.  ஒரு காவல்துறை அதிகாரி அணியும் பேட்ஜ் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு உலோகத் துண்டு தான். ஆனால் யாரும் அந்த பேட்ஜ் அணிவதால் கிடைக்கும் அதிகாரத்தைப் பற்றி கேள்வி கேட்பதில்லை, அதுபோலவே, பழுப்புநிற உத்தரியம் நாம் மரியாயின் மைந்தர்கள் என்பதைக் காட்டும் ஒரு புனித அடையாளம்.

கடவுளின் தாய், நம்மை பிள்ளைகளாக சிறப்பான முறையில் தத்து எடுத்துக் கொண்டார் என்பதற்கு உத்தரியம் ஒரு அடையாளம். முதலானதும் மிகப் பெரிதுமான அது, கொண்டு வரும் பாக்கியம் என்ன வென்றால், அதை அணியும் நம்மை அருள் அன்னையின் அரிய அன்பினால் நம்மை போர்த்தி வைத்து விடுகிறது.

தீர்க்கதரிசி எசேக்கியலின் வார்த்தைகளையே அன்னை நமக்கு திரும்பச் சொல்கிறார். ''நீ ஆடையின்றி நாணி நின்றாய் அப்போது உன்னைப் பார்த்தோம். நாமே உன் அருகில் வந்து நீ பருவ மங்கையாய் இருப்பதைக் கண்டு, நம் ஆடையை விரித்து உன் நிர்வாணத்தை மூடினோம். பிறகு உனக்கு ஆணையிட்டு உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். அதனால் நீயோ நம்முடையவள் ஆனாய்.''

நம் அன்னை திருக்காட்சியில் தோன்றும் போதெல்லாம் அவர் துன்பத்தை அல்ல, இனிய ஆசியையே வழங்குகிறார். அவர் குரல் நம்பிக்கையை தூண்டும். அவ நம்பிக்கையை அகற்றும். மேலே பார்க்கச் சொல்லும். கீழே பார்ப்பதை தடுக்கும். நம்பிக்கை இழந்துவிட்ட இந்த உலகிற்கு நம்பிக்கையூட்டும். நமது பாவத்திற்காக வருந்தி அன்னைக்கு உயர்வளித்து நம்மையே நாம் அன்னையின் தூய இருதயத்திற்கு அர்பணித்துக் கொண்டு, அன்னைத் தன் திருக்கரங்களை நம்மை ஏந்தியுள்ளார். ஜெபமாலையும் உத்தரியமுமே சமாதானத் திட்டத்தின் ஆன்மீக ஆயுதங்களாகும். உலக ஞானம் இதனைப் புறக்கணிக்கும். மனித வரலாற்றை நோக்கும் போது, இறைவனின் சித்தப்படி நடவாத ஒரு அரசியல், இராணுவ மற்றும் அறிவு பூர்வமான முயற்சிகள் அமைதியினை கொண்டு வந்திட முடியாது. முடிவாக, அமைதி கடவுளின் ஒரு பெருங் கொடை. மனிதனால் இதனை சாத்தியமாக்குவது இயலாது. உத்தரியம் என்னும் அருளாடையை அணிந்து, ஜெபமாலை என்னும் பேராயுதத்தை கையிலேந்தி நமது சொந்த அமைதி மற்றும் உலக அமைதிக்கும் எதிரானவைகளை வென்றிடலாம்.

மாதத்தின் முதல் ஐந்து சனிக்கிழமைகள் நற்கருனை திருவிருந்தில் பங்கு கொண்டு அர்ப்பண வாழ்வு வாழ்வோம். அன்னை, உலகிற்கு அமைதி கொண்டு வருவார். இந்த அமைதி திட்டத்திற்கு இறைவனே ஆசிரியர், எனவே இத்திட்டம் தவறாது.

பாத்திமா அன்னையின் வேண்டுகோள்களில் செபமாலைப்போல் உத்தரியமும் அவ்வளவு முக்கியமானதா என்று லூசியாவிடம் கேட்டபோது, "செபமாலையையும் உத்தரியத்தையும் பிரிக்க முடியாது" என்று பதிலுரைத்தார்.


உத்தரியம் அணிபவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.

1251-ம் ஆண்டு, ஜூலை 16-ல் ஐல்ஸ் போர்டு, இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த அர்ச்சைமன் ஸ்டாக் என்ற கார்மேல் சபை அதிபருக்கு காட்சி அருளி, கார்மேல் பழுப்பு நிற உத்திரியத்தைக் கொடுத்து மாதா, இந்த உத்தரியத்தை பக்தியுடன் அணிந்தபடி மரிக்கிறவர்கள் நரக நெருப்பில் விழ மாட்டார்கள், இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் நிச்சயமான பாதுகாப்பு கவசம், சமாதானத்திற்கான வாக்குறுதி மற்றும் உலகம் முடியும்வரை எனது விசேஷ பாதுகாப்பாகும் என்று சொன்னார்கள்.

கார்மேல் பழுப்பு நிற உத்தரியத்தை அணிபவர்களுக்கு இரண்டாவதான பாரம்பரிய வாக்குறுதியானது சனிக்கிழமை சலுகையாகும் (Sabbatine Privileges).

22-ம் அருளப்பர் எனும் பாப்பரசர் 1322-ல் எழுதிய ஆணைப்படி இச்சலுகை அளிக்கப்பட்டது. மரணமட்டும் உத்தரியம் அணிந்து மரித்தவர்களை சனிக்கிழமையில், எவ்வளவு பேரை உத்தரிக்கிறஸ்தலத்தில் பார்ப்பேனோ, அவர்களை விடுவிப்பேன் என்று மாதா வாக்குறுதி தந்துள்ளார்கள்.

இச்சலுகையை அடைய மூன்று முக்கிய நிபந்தனைகள் உள்ளன அவை:

1. உத்தரியத்தை எப்பொழுதும் பக்தியுடன் முறைப்படி மந்தரித்து அணிந்திருத்தல்;

2. ஒருவரின் அந்தஸ்துக்கு ஏற்றபடி பரிசுத்தக் கற்பை அனுசரித்து வருதல்;

3. தினமும் தேவமாதாவின் மந்திரமாலை சொல்லிவருதல், வாசிக்கக் கூடாதவர்களும், மந்திர மாலையைச் சொல்ல முடியாதவர்களும் மாதாவுக்குத் தங்களை முழுவதும் ஒப்புக் கொடுத்து தினந்தோறும் ஜெபமாலையை பக்தியுடன் சொல்லி வரவேண்டும்.

குறிப்பு: மரியாயின் தாய்மை, கத்தோலிக்கருக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல; எல்லா மனிதர்க்கும் அது பொருந்தும். கத்தோலிக்கத்தைச் சாராதவர்களும் உத்தரியம் அணிந்து தங்களை முழுவதும் மரியாயிடம் ஒப்படைக்கலாம்.

(ஆதாரம்: திரு லூயிஸ் கக்ஷ்மரெட் என்பவர் எழுதிய அற்புதங்களை அவள் புரிகிறாள்' புத்தகம்)

ஜெபமாலை வாக்குறுதிகள்:

1. என் ஜெபமாலையை அன்போடு சொல்லி வருகிறவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பையும் வரப்பிரசாதங்களையும் கொடுப்பேன்.

2. ஜெபமாலையை விடாமல் தொடர்ந்து ஜெபிக்கிறவர்கள் சில விசேஷ வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

3. நரகத்திற்கெதிரான வலிமையுள்ள கேடயமாக இருக்கும் என் ஜெபமாலை தீய பழக்கங்களை அழிக்கும் பாவத்திலிருந்து விடுவிக்கும் தப்பறைகளை ஒழிக்கும்.

4. ஜெபமாலையானது புண்ணியங்களையும் நற்கிரியைகளையும் வளர்க்கும். ஆன்மாக்களுக்கு மிக ஏராளமான தேவ இரக்கத்தைப் பெற்றுத்தரும். உலகப்பற்றுள்ள ஆன்மாக்கள் கடவுளை நேசிக்கச் செய்யும். ஆன்மாக்கள் பரலோக நித்திய நன்மைகளை விரும்பும்படி அவைகளை உயர்த்தும். ஜெபமாலையால் ஆன்மாக்கள் தங்களை அர்ச்சித்துக் கொள்ள மிகவும் விரும்புகிறேன்.

5. ஜெபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.

6. தேவ இரகசியங்களை பக்தியுடன் தியானித்தபடியே ஜெபமாலை சொல்கிறவர்களை எந்த துர்ப்பாக்கியமும் மேற்கொள்ளமாட்டாது. அவர்களுக்கு துர்மரணம் நேரிடாது. பாவத்திலிருப்பவர்கள் மனந்திரும்புவார்கள். நல்லவர்கள் தேவ இஷ்டப் பிரசாதத்தில் வளர்ந்து நித்திய வாழ்வுக்கு தகுதியுடைவர்களாவார்கள்.

7. உண்மையான அன்பு கொண்டு ஜெபமாலையை ஜெபித்து வருகிறவர்கள் திருச்சபையின் கடைசி ஆறுதல்கள் இல்லாமலாவது தேவ இஷ்டப் பிரசாதமில்லாமலாவது மரணமடையமாட்டார்கள்.

8. என்னுடைய ஜெபமாலையை ஜெபித்து வருகிறவர்கள் தங்கள் வாழ்நாளிலும் மரண நேரத்திலும் கடவுளின் வெளிச்சத்தைக் காண்பார்கள். அவருடைய வரப்பிரசாத முழுமையைக் கண்டு கொள்வார்கள். புனிதர்களுடைய பேறு பலன்களில் பங்கடைவார்கள்.

9. என் ஜெபமாலை மீது அன்புள்ள ஆன்மாக்களை வெகு துரிதமாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டுக் கொள்வேன்.

10. என் ஜெபமாலையின் உண்மை புதல்வர்களாயிருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமையடைவார்கள்.

11. ஜெபமாலையின் வழியாக நீங்கள் கேட்பவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்.

12. என் ஜெபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என் மூலமாக தங்கள் எல்லா அவசரங்களிலும் உதவி பெறுவார்கள்.

13. ஜெபமாலையைக் கைக்கொண்டுள்ள யாவரும் வாழ்விலும் மரணத்திலும் பரலோகப் புனிதர்களைத் தங்கள் சகோதரர்களாக அடைந்து கொள்ளும்படியான வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து வாங்கியுள்ளேன்.

14. தினமும் தவறாமல் என் ஜெபமாலையைச் செபித்து வருகிறவர்கள் என் அன்புக் குழந்தைகளாயும் சேசுவின் சகோதரரும் சகோதரிகளுமாயிருப்பார்கள்.

15. என் ஜெபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஓர் பெரிய உறுதிப்பாடாகும்.

_"திருச்சபையின் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் ஜெபமாலையைப் போல் இவ்வளவு அதிக அற்புதங்களை வேறெந்த பக்தி முயற்சியும் நிகழ்த்தவில்லை"._

(வணக்கத்துக்குரிய பாப்பரசர் 9-ம் பத்திநாதர்)

 அற்புதப் பதக்கம்.

புதுமையான சுருபத்தின் பக்கங்கள்.

இந்த மாதிரி வடிக்கப்பட்ட பதக்கத்தை பெற்று அணிந்து கொள்ளுங்கள். இதை அணியும் அனைவரும் அதிகமான அருளைப் பெற்றுக்கொள்வர்.

(புனித கத்தரின்லாபோர் அவர்களுக்கு நமது அன்னை அளித்த வாக்குறுதி).

இந்த அற்புத பதக்கமானது ''இறையருளை நிறைக்கும் ஒரு அரிய கருவி. இந்த சுருபத்தை அணிந்து கொண்டு மனம் திரும்புதலையும் புனிதத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இது நம் நம்பிக்கை பாதுகாவலாம். நமது அர்பணத்திற்கு ஆற்றலும் அளிக்கிறது''.


ஐந்து முதல் சனிக்கிழமைகள் பரிகாரப்பக்திக்கு மாதாவின் வாக்குறுதிகள்.

பாத்திமாவில் மாதா தந்த காட்சிகளில் தந்த செய்திகளில் ஒரு பகுதியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கான பரிகாரம் கோரப்பட்டதாகும்.

இதனை அனுசரிக்கும் முறை மிக எளிதானது. இப்பக்தியை அனுசரிக்கிறவர்களுக்கு மாதா அளித்த அருட்கொடைகள் நம்பமுடியாத வகையில் பெரிது. ஐந்து முதல் சனிக்கிழமைப் பக்தியை அனுசரிப்பவர்களுக்கு அவர்களுடைய மரண சமயத்தில், ஈடேற்றத்திற்கான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்வதாக வாக்களித்தார்கள்.

1. தேவ இரகசியங்களை 15 நிமிடங்கள் மாதாவுடன் தியானித்தபடி
செலவிடுவது.

2. 53 மணி ஜெபமாலை ஜெபிப்பது.

3. பாவசங்கீர்த்தனம் செய்வது.

4. திவ்ய நற்கருணையைப் பரிகாரமாக உட்கொள்வது.

5. மேற்கூறிய 4 நிபந்தனைகளையும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பரிகாரமாக ஒப்புக் கொடுப்பது.

வருடங்கள் கடந்தன. ஏன் ஐந்து சனிக்கிழமை என்ற கேள்வி எழுந்தது. லூஸியா நமதாண்டவரையும் மரியாயையும் கேட்கப் பணிக்கப்பட்டார்.

நமதாண்டவராகிய சேசுவே, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு விரோதமாக இழைக்கப்படும் ஐந்து வகையான துரோகங்கள் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்யவே ஐந்து முதல் சனிக்கிழமைகள் என்றார்:-

1. மாதாவின் அமலோற்பவத்திற்கான எதிரான தூஷணங்கள்.

2. மாதாவின் தெய்வீகத் தாய்மையை மறுத்தல்.

3. மாதாவின் நித்திய கன்னிமையை நிராகரித்தல்.

4. மாதாவின் மீதுள்ள அன்பை இளம் உள்ளங்களிலிருந்து அகற்றுதல்.

5. மாதாவின் திரு உருவங்களை அவமதித்தல்.


பாத்திமாவில் சம்மனசு, லூஸியா, ஜெஸிந்தா பிரான்சிஸ்க்கு கற்பித்த ஜெபங்கள்.

I. "என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராத்திக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை அன்பு செய்கிறேன். உம்மை விசுவாசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை அன்பு செய்யாதவர்களுக்காவும் மன்னிப்புக் கோருகிறேன்." (மூன்று முறை தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து செபித்தனர்).

II. "மகா பரிசுத்த திரித்துவமே! பிதாவே, சுதனே பரிசுத்த ஆவியே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்கும் உள்ள நற்கருணை பேழைகளில் இருக்கும் சேசுக்கிறிஸ்துவின் விலைமதிக்கப்படாத திரு சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும் அவருக்குச் செய்யப்படும் நிந்தை - துரோகம், அலட்சியத்திற்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அவருடைய திரு இரத்தத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மன்னித்தருளும்படி மன்றாடுகிறேன்." ஆமென்.


தினசரி ஜெபமாலை.

அனுதினமும் ஜெபமாலை ஜெபிப்பது பரிசுத்த மாதாவுக்கு நம் கீழ்படிதலைக் காட்டும் செயல்;

மனு உருவெடுத்த ஆண்டவர் மீதுள்ள விசுவாச செயல் (சந்தோஷ தேவ இரகசியங்கள்)

சிலுவையில் அறையுண்ட சேசுவுக்கு அன்பு காட்டும் செயல்; (துக்க தேவ இரகசியங்கள்)

நம் சொந்த பாவங்களுக்கும் புறக்கணிப்புக்கும் மனம் வருந்தும் மற்றும் தவம் புரியும் செயல் (துக்க தேவ இரகசியங்கள்)

வருங்காலத்தில் வீழ்ச்சியுராமல் காக்கும் செயல் (மகிமை தேவ இரகசியங்கள்)

மாசற்ற இராக்கினியை மகிமைப்படுத்தும் தாழ்ச்சியின் செயல் மற்றும் விவேகமிக்க செயல் நீ விரும்பினால், அது நித்தியக் காப்பீடு பத்திரம்.

இறைவனின் இணையற்ற இரக்கத்திற்கும், நன்மைக்கும் செய்யும் நீதியும் நன்றியுமிக்க செயல்.

(தடைக்கற்களை விடாமுயற்சியால் வென்றிடும்) திடமான செயல்.

(தன்னலம், வறட்சி, சோம்பல் இவைகளை வென்று) சுயகட்டுப் பாட்டுக்கு இட்டுச் செல்லும் செயல்.

(எளியவரான பாவிகளை மனந்திரும்பச் செய்திடும்) பரிந்து பேசும் மன்றாட்டு

உத்தரிக்கிற ஆன்மாக்களின் வேதனைகளைக் குறைக்கும் செபம். (அதிக பரிபூரண பலன்களைக் கொண்டது)

இது சேசுவின் திருநாமத்தை புகழ்ந்து பாடும் கீதம்.

இது நல்மரணத்திற்கு மீண்டும் மீண்டும் வேண்டிடும் ஒப்பற்ற மன்றாட்டு.

ஆமென்.