மாற்கு

அதிகாரம் 01

1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.

2 இதோ, என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவர் உம் வழியைச் சீர்ப்படுத்துவார்.

3 'ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்' எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது" என்று இசையாஸ் இறைவாக்கினர் எழுதியபடி,

4 ஸ்நாபக அருளப்பர் பாலைவனத்தில் தோன்றி, பாவமன்னிப்படைய மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அறிவித்துக் கொண்டிருந்தார்.

5 யூதேயா, நாடு முழுவதும், யெருசலேம் நகரின் அனைவரும் அவரிடம் போய்த் தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.

6 அருளப்பர் ஒட்டக மயிராடையும், இடையில் வார்க்கச்சையும் அணிந்திருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

7 அவர் அறிவித்ததாவது: "என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வரகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்.

8 நான் உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார்."

9 அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்.

10 உடனே அவர் ஆற்றிலிருந்து கரையேறுகையில், வானம் பிளவுபடுவதையும், ஆவியானவர் புறாவைப் போலத் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார்.

11 அப்பொழுது, "நீரே என் அன்பார்ந்த மகன்; உம்மிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று வானிலிருந்து ஒரு குரலொலி கேட்டது.

12 உடனே ஆவியானவர் அவரைப் பாலைவனத்திற்குப் போகச்செய்தார்.

13 பாலைவனத்தில் அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டு நாற்பது நாள் இருந்தார். அங்குக் காட்டு விலங்குகளோடு இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.

14 அருளப்பர் சிறைப்பட்டபின் இயேசு கலிலேயாவிற்கு வந்து, கடவுள் அருளிய நற்செய்தியை அறிவிக்கலானார்.

15 "காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" என்றார்.

16 அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீமோனும், இவருடைய சகோதரர் பெலவேந்திரரும் கடலில் வலை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

17 ஏனெனில், அவர்கள் மீன்பிடிப்போர் இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்" என்றார்.

18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.

19 அங்கிருந்து சற்று அப்பால் சென்று செபெதேயுவின் மகன் யாகப்பரும், இவருடைய சகோதரர் அருளப்பரும் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கக் கண்டார்.

20 கண்டதும் அவர்களை அழைத்தார். அவர்கள் தம் தந்தை செபெதேயுவைக் கூலியாட்களுடன் படகில் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.

21 அவர்கள் கப்பர் நகூம் ஊருக்கு வந்தார்கள். ஓய்வுநாளில் அவர் செபக்கூடத்திற்குச் சென்று போதிக்கலானார்.

22 அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் மலைத்துப்போயினர். ஏனெனில், அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்.

23 அச்செபக்கூடத்தில் அசுத்த ஆவியேறிய ஒருவன் இருந்தான்.

24 அவன் "நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர்" என்று கத்தினான்.

25 இயேசுவோ, "பேசாதே, இவனை விட்டுப் போ" என்று அதட்டினார்.

26 அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, பெருங்கூச்சலிட்டு அகன்றது.

27 மக்கள் அனைவரும் எவ்வளவு திகிலுற்றனர் என்றால், "இது என்ன, அதிகாரம் கொண்ட புதிய போதனை! அசுத்த ஆவிகளுக்கும் இவர் கட்டளையிடுகிறார், அவை கீழ்ப்படிகின்றனவே! " என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.

28 உடனே அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று.

29 பின்னர், அவர்கள் செபக்கூடத்தை விட்டு சீமோன், பெலவேந்திரர் இவர்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். யாகப்பரும் அருளப்பரும் அவர்களோடு சென்றனர்.

30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தாள். உடனே அவளைப்பற்றி அவரிடம் சொன்னார்கள்.

31 அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவளை எழுப்பினார். காய்ச்சல் அவளை விட்டுவிட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.

32 பொழுது போய் இரவானது, நோயாளிகள், பேய்பிடித்தவர்கள் எல்லாரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.

33 ஊர் முழுவதும் வாயிலருகே ஒன்றாகத் திரண்டிருந்தது. பல்வேறு நோய்களால் வருந்திய பலரைக் குணப்படுத்தினார்.

34 பல பேய்களையும் ஓட்டினார். பேய்களை அவர் சே விடவில்லை. ஏனெனில், அவை அவரை அறிந்திருந்தன.

35 அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்துகொண்டிருந்தார்.

36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிப்போயினர்.

37 அவரைக்கண்டு, "எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றனர்.

38 அதற்கு அவர், "அடுத்த ஊர்களுக்குப் போவோம். அங்கும் நான் தூது அறிவிக்க வேண்டும். இதற்காகவே வந்திருக்கிறேன்" என்றார்.

39 அவ்வாறே கலிலேயா எங்கும் அவர்களுடைய செபக்கூடங்களில் தூது அறிவித்தும், பேய்களை ஓட்டியும் வந்தார்.

40 தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, "நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.

41 இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு, "விரும்புகிறேன், குணமாகு" என்றார்.

42 உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.

43 அவனை நோக்கி, "பார், யாருக்கும் ஒன்றும் சொல்லாதே. போய் உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக, மோயீசன் கட்டளையிட்டதைக் காணிக்கையாகச் செலுத்து.

44 அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்று கண்டிப்பாய்ச் சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

45 அவனோ சென்று நடந்ததைச் சொல்லி எங்கும் விளம்பரப்படுத்தினான். அதனால் அவர் எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ப் போக முடியாமல் வெளியே தனிமையான இடங்களில் இருந்தார். எனினும் மக்கள் எங்குமிருந்து அவரிடம் வந்தனர்.

அதிகாரம் 02

1 சில நாட்களுக்குப்பின் அவர் கப்பர் நகூம் ஊருக்கு மீண்டும் வந்தார். வீட்டில் அவர் இருக்கிறார் என்ற செய்தி பரவிற்று.

2 பலர் வந்து கூடவே, வாசலுக்கு வெளியே முதலாய் இடமில்லை. அவர் அவர்களுக்குத் தேவ வார்த்தையை எடுத்துச் சொன்னார்.

3 அப்பொழுது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு அவரிடம் வந்தனர்.

4 கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.

5 இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

6 அங்கிருந்த மறைநூல் அறிஞருள் சிலர். "என்ன, இவர் இப்படிப் பேசுகிறார்? கடவுளைத் தூஷிக்கிறார்.

7 கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்?" என்று உள்ளத்தில் எண்ணினர்.

8 இவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு உடனே மனத்தில் அறிந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளத்தில் இப்படி நினைப்பதேன்?

9 எது எளிது ? இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? 'எழுந்து உன் படுக்கையை எடுத்துகொண்டு நட' என்பதா?

10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

11 திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.

12 என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான். இதனால் அனைவரும் திகைப்புற்று, "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதேயில்லை" என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.

13 அவர் மீண்டும் கடலோரம் சென்றார். கூட்டம் எல்லாம் அவரிடம் வரவே அவர்களுக்குப் போதிக்கலானார்.

14 அவர் வழியே போகையில் அல்பேயுவின் மகன் லேவி, சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி. "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.

15 அவருடைய வீட்டில் இயேசு பந்தி அமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் ஒருங்கே அமர்ந்திருந்தனர். ஏனெனில், அவரைப் பின்தொடர்ந்தவர் பலர்.

16 பரிசேயரைச் சேர்ந்த மறைநூல் அறிஞர், அவர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதைக் கண்டு அவருடைய சீடரை நோக்கி, "உங்கள் போதகர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதேன்?" என்றனர்.

17 இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை. நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று அவர்களிடம் கூறினார்.

18 ஒருநாள் அருளப்பருடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்தனர். அப்பொழுது சிலர் அவரிடம் வந்து, "அருளப்பருடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருக்க, உம்முடைய சிடர் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.

19 இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும் அவன் தோழர்கள் நோன்பு இருக்கலாமா? மணமகனுடன் இருக்குந்தனையும் அவர்கள் நோன்பு இருக்க முடியாது.

20 மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும். அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

21 பழைய ஆடையில் கோடித்துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. அப்படிப் போட்டால் அந்த ஒட்டு பழையதைக் கிழிக்கும்,

22 கிழியலும் பெரிதாகும். புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவரும் இல்லை. வைத்தால் இரசம் சித்தைகளைக் கிழிப்பதுமல்லாமல் இரசமும் சித்தைகளும் பாழாகும். ஆனால், புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்கவேண்டும்" என்றார்.

23 ஓய்வுநாளில் விளைச்சல்வழியே அவர் செல்லும்பொழுது சீடர் நடந்துகொண்டே கதிர்களைக் கொய்யத் தொடங்கினர்.

24 பரிசேயரோ அவரை நோக்கி, "பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள்?" என்றனர்.

25 அதற்கு அவர், "தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உணவின்றிப் பசியாயிருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ?

26 அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்.

27 அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக: மனிதன் இருப்பது ஓய்வுநாளுக்காக அன்று.

28 ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்றார்.

அதிகாரம் 03

1 மீண்டும் செபக்கூடத்திற்கு வந்தார். அங்கே சூம்பிய கையன் ஒருவனிருந்தான்.

2 அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வுநாளில் குணமாக்குவாராவென்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

3 அவரோ சூம்பியகையனை நோக்கி, "வந்து நடுவிலே நில்" என்றார்.

4 பின் அவர்களிடம் "ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.

5 அவர்களோ பேசாதிருந்தனர். அவர் சினத்தோடு அவர்களைச் சுற்றிப் பார்த்து, அவர்களது மனக் கடினத்தைக் கண்டு வருந்தி, அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். நீட்டினான்; கை குணமாயிற்று.

6 பரிசேயரோ வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.

7 இயேசு தம் சீடருடன் அங்கிருந்து விலகிக் கடலோரம் சென்றார்.

8 கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.

9 கூட்டமாயிருக்கவே, அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்குப் படகு ஒன்றைத் தயாராக வைத்திருக்குமாறு சீடருக்குச் சொன்னார்.

10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால் நோயாளிகளெல்லாரும் அவரைத் தொடவேண்டுமென்று அவர்மேல் வந்து விழுந்தனர்.

11 அசுத்த அவிகள் அவரைக் காணும்போது, "நீர் கடவுளின் மகன்" என்று கத்திக்கொண்டு அவர் காலில் விழுந்தன.

12 ஆனால் அவர், தம்மை வெளிப்படுத்த வேண்டாமென மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

13 மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்கள் அவரிடம் வந்தனர்.

14 தம்மோடு இருப்பதற்கும்,

15 பேய்களை ஓட்டும் அதிகாரத்தோடு தூது அறிவிக்கத் தாம் அனுப்புவதற்குமெனப் பன்னிருவரை ஏற்படுத்தினார். இவ்வாறு பன்னிருவரை ஏற்படுத்தினார்.

16 அவர்கள் யாரெனில்: சீமோன் -- இவருக்கு இராயப்பர் என்று பெயரிட்டார். --

17 செபெதேயுவின் மகன் யாகப்பர், யாகப்பருடைய சகோதரர் அருளப்பர் - இவர்களுக்கு இடியின் மக்கள் எனப் பொருள்படும் போவனேர்கெஸ் எனப் பெயரிட்டார்.

18 பெலவேந்திரர், பிலிப்பு, பாத்தொலொமேயு, மத்தேயு, தோமையார், அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு, கனானேய சீமோன்,

19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.

20 வீட்டிற்கு அவர் வரவே, மீண்டும் கூட்டம் கூடியது. ஆதலால் அவர்கள் சாப்பிடவும் முடியவில்லை.

21 அவருடைய உறவினர் இதைக் கேட்டு அவரைப் பிடித்துக்கொண்டுவரப் புறப்பட்டார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கிவிட்டார். என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

22 யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர், இவரைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறதென்றும், பேய்த்தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்றும் சொல்லி வந்தனர்.

23 ஆதலால் அவர் அவர்களை அழைத்து அவர்களுக்கு உவமையாகச் சொன்னதாவது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?

24 ஓர் அரசு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால் அவ்வரசு நிலைக்க முடியாது.

25 ஒரு வீடு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால், அவ்வீடு நிலைக்க முடியாது.

26 சாத்தான் தனக்கு எதிராகத் தானே எழுந்தால் பிரிவபுட்டு நிற்கமுடியாமல் தொலைவான்.

27 முதலில் வலியவனைக் கட்டினாலன்றி அவ்வலியவனுடைய வீட்டினுள் நுழைந்து அவனுடைய பொருள்களைக் கொள்ளையிட எவனாலும் முடியாது. கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.

28 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மக்களுக்கு எல்லாம் மன்னிக்கப்படும். பாவங்களும் அவர்கள் சொல்லும் தேவ தூஷணங்களும் மன்னிக்கப்படும்.

29 ஆனால், பரிசுத்த ஆவியைத் தூஷிப்பவன் எவனும் ஒருபோதும் மன்னிப்புப் பெறான், என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவான்."

30 "அசுத்த ஆவி அவரைப் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் சொல்லிவந்தால் இயேசு இவ்வாறு கூறினார்.

31 அவருடைய தாயும் சகோதரரும் வந்து வெளியே நின்றுகொண்டு, அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினர்.

32 அவரைச் சுற்றி மக்கள் கூட்டமாய் உட்கார்ந்திருந்தனர். 'இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டுவந்து வெளியே இருக்கின்றனர்" என்று அவரிடம் சொன்னார்கள்.

33 அதற்கு அவர், 'என் தாயும் என் சகோதரரும் யார்?" என்று கேட்டு,

34 தம்மைச் சூழ்ந்து இருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரரும்,

35 கடவுளின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயுமாவான்" என்றார்.

அதிகாரம் 04

1 மீண்டும் அவர் கடலோரத்தில் போதிக்கத் தொடங்கினார். மாபெரும் கூட்டமொன்று அவரை நெருக்கவே, அவர் படகிலேறிக் கடலிலிருக்க, கூட்டமனைத்தும் கடலோரமாய்க் கரையிலிருந்தது.

2 அவர் அவர்களுக்கு உவமைகளால் பற்பல போதிக்கலானார். போதிக்கையில் சொன்னதாவது:

3 "கேளுங்கள்: இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.

4 விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழவே, பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.

5 சில அதிக மண்ணில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அடி மண்ணில்லாததால் உடனே முளைத்தன.

6 வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்து போயின.

7 சில முட்செடிகன் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெரித்துவிடவே அவை பலன் கொடுக்கவில்லை.

8 சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து ஓங்கி வளர்ந்து ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுத்தன."

9 மேலும், "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

10 அவர் தனித்திருக்கையில் பன்னிருவரும், அவரைச் சூழ இருந்தவர்களும் உவமைகளைப் பற்றி வினவினர்.

11 அவர் அவர்களை நோக்கி: " கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.

12 எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, ' பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே ' " என்றார்.

13 மேலும், அவர்களை நோக்கி, "இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா? பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்?

14 விதைப்பவன் விதைப்பது தேவ வார்த்தை.

15 வழியோரமாய் விழுந்த வார்த்தை என்னும் விதைப்போலச் சிலர் உள்ளனர். அவர்கள் அதைக் கேட்டவுடனே அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைச் சாத்தான் வந்து எடுத்துவிடுகிறான்.

16 அவ்வாறே பாறைநிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒருசிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றனர்.

17 ஆனால், இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு, வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல்படுவர்.

18 முட்செடிகள் நடுவில் விழுந்த விதை போன்றவர்கள் வேறு சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்கின்றனர்.

19 ஆனால், உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தையை நெரிக்க அது பயனற்றுப் போகின்றது.

20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைபோன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும் அறுப்பதும் நூறுமாகப் பலன்கொடுக்கின்றனர்" என்றார்.

21 மேலும் அவர்களை நோக்கி, "விளக்கைக் கொண்டுவருவது எதற்கு? மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா? விளக்குத் தண்டின்மேல் வைப்பதற்கு அன்றோ?

22 "வெளிப்படாதபடி ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாதபடி மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை.

23 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

24 பின்னும் அவர் சொன்னதாவது: "நீங்கள் கேட்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், கூடவும் கொடுக்கப்படும்.

25 ஏனெனில் உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

26 "கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.

27 அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

28 நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி.

29 பயிர் விளைந்ததும் அவன் அரிவாளை எடுக்கிறான். ஏனெனில், அறுவடை வந்துவிட்டது" என்றார்.

30 பின்னும், "கடவுளரசை எதற்கு ஒப்பிடுவோம்? எந்த உவமையால் எடுத்துக்காட்டுவோம்? அது கடுகுமணியைப் போன்றது.

31 இது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள விதைகளிலெல்லாம் மிகச் சிறியது.

32 விதைத்தபின்போ, முளைத்தெழுந்து செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகித் தன் நிழலில் வானத்துப் பறவைகள் வந்து தங்கக்கூடிய பெருங்கிளைகள் விடும்" எனறார்

33 அவர்கள் கேட்டறியும் திறனுக்கேற்ப இத்தகைய பல உவமைகளால் அவர்களுக்குத் தேவ வார்த்தையைச் சொல்லுவார்.

34 உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் பேசியதில்லை. தம் சீடருக்கோ தனியாக அனைத்தையும் விளக்குவார்.

35 அன்று மாலை அவர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.

36 அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர். அவருடன் வேறு படகுகளும் சென்றன.

37 அப்போது பெரிய பயுல் காற்று உண்டாயிற்று. அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.

38 அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே; உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.

39 அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றனர். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.

40 பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.

41 அவர்கள் பெரிதும் அச்சமுற்று, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

அதிகாரம் 05

1 அவர்கள் அக்கரை சேர்ந்து கெரசேனர் நாட்டை அடைந்தனர்.

2 அவர் படகை விட்டு இறங்கியதும் அசுத்த ஆவியேறிய ஒருவன் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தான்.

3 கல்லறைகளே அவன் தங்குமிடம் அவனை யாரும் சங்கிலியால் கூடக் கட்ட முடியவில்லை.

4 ஏனெனில், பலமுறை அவனுக்கு விலங்கும் சங்கிலியும் மாட்டியிருந்தும், சங்கிலிகளை முறித்து விலங்குகளைத் தகர்த்தெறிவான். யாரும் அவனை அடக்க முடியவில்லை.

5 அவன் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிடுவான். கற்களிலும் தன்னைக் கீறிக்கொள்வான்.

6 அவன் தொலைவிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடி வந்து அவர்முன் பணிந்து,

7 "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? கடவுள் பெயரால் உம்மைக் கேட்கிறேன், என்னை வதைக்க வேண்டாம்" என்று உரக்கக் கத்தினான்.

8 ஏனெனில் அவர், "அசுத்த அவியே, இவனை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார்.

9 "உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "என்பெயர் 'படை', ஏனெனில், நாங்கள் பலர்" என்றான்.

10 அவற்றை அந்நாட்டை விட்டு விரட்டாதபடி அவன் அவரை வருந்தி வேண்டினான்.

11 அங்கே மலைச்சாரலில் பன்றிகன் பெருங்கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

12 "நாங்கள் பன்றிகளுக்குள் போகும்படி எங்களை அனுப்பும்" என்று ஆவிகள் அவரை வேண்டவே,

13 அவற்றிற்கு அவர் விடை கொடுத்தார். அசுத்த ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கலாயிற்று.

14 அவை ஏறக்குறைய இரண்டாயிரம் இருக்கும். அவற்றை மேய்த்தவர்களோ ஓடிப் போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தனர். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.

15 அவர்கள் இயேசுவிடம் வந்து, பேய்பிடித்திருந்தவன் -- முழுப் பேய்ப்படையே பிடித்திருந்த அவன் -- ஆடையணிந்து, தன்னுணர்வுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.

16 பார்த்தவர்கள் பேய்பிடித்திருந்தவனுக்கு நேர்ந்ததையும் பன்றிகளைப்பற்றிய செய்தியையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.

17 அப்பொழுது அவர்கள், தம் நாட்டை விட்டுச் செல்லுமாறு அவரை வேண்டத் தொடங்கினர்.

18 அவர் படகேறும்பொழுது, பேய்பிடித்திருந்தவன் தானும் அவருடன் இருக்கவேண்டும் என அவரை வேண்டலானான்.

19 ஆனால் அவர் அதற்கு இசையாமல் அவனைப் பார்த்து, "உன் வீட்டிற்கு உன் உற்றாரிடம் போ. ஆண்டவர் உன்மீது இரங்கி உனக்குச் செய்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிவி" என்றார்.

20 அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். கேட்டவரெல்லாம் வியப்புற்றனர்.

21 இயேசு படகேறி, மீண்டும் கடலைக் கடந்து, இக்கரையை அடைந்ததும் பெருங்கூட்டமாக மக்கள் அவரிடம் வந்தனர். அவர் கடலோரத்தில் இருந்தார்.

22 செபக்கூடத் தலைவர்களுள் ஒருவனான யாயீர் என்பவன் வந்து, அவரைக் கண்டு, காலில் விழுந்து,

23 "என் மகள் சாகக்கிடக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும், அவள் குணமாகிப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினான்.

24 அவர் அவனுடன் சென்றார். பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து நெருக்கியது.

25 பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள்.

26 அவள் மருத்துவர் பலரிடம் மிகத் துன்பப்பட்டும், உடைமையெல்லாம் செலவிட்டும் ஒரு பயனும் அடையவில்லை. மாறாக, அவள் நிலைமை இன்னும் மோசமாயிற்று.

27 அவள் இயேசுவைப்பற்றிய செய்தி கேள்வியுற்றுக் கூட்டத்தில் அவருக்குப் பின்னே வந்து அவருடைய போர்வையைத் தொட்டாள்.

28 ஏனெனில், அவள், "நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் குணம் பெறுவேன்" என்று சொல்லிக்கொண்டாள்.

29 உடனே அவளுடைய உதிரப்பெருக்கு வற்றிப் போயிற்று. அவள் நோயினின்று குணம் பெற்றதைத் தன் உடலில் உணர்ந்தாள்.

30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, கூட்டத்திடையே திரும்பி, "என் ஆடையைத் தொட்டது யார்?" என்று கேட்டார்.

31 அவருடைய சீடர் அவரை நோக்கி, "கூட்டம் உம்மை நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டது யார்?' என்கிறீரே" என்றனர்.

32 அவரோ, இதைச் செய்தவளைக் காணுமாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.

33 அப்போது அந்தப் பெண் தனக்கு நேர்ந்ததை அறிந்தவளாய், அஞ்சி நடுங்கிக்கொண்டு வந்து, அவர் காலில் விழுந்து உண்மையெல்லாம் உரைத்தாள்.

34 அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ. நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.

35 அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே செபக்கூடத் தலைவனது வீட்டிலிருந்து ஆட்கள் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரை செய்கிறீர்?" என்றனர்.

36 அவர்கள் சொன்னது காதில் விழவே, இயேசு செபக்கூடத் தலைவனிடம், "அஞ்சாதே விசுவாசத்தோடு மட்டும் இரு" எனக் கூறினார்.

37 இராயப்பர், யாகப்பர், யாகப்பரின் சகோதரர் அருளப்பர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்முடன் வரவிட வில்லை.

38 அவர்கள் செபக்கூடத் தலைவனின் வீட்டுக்கு வந்தபோது, அவர் சந்தடியையும், ஓலமிட்டு அழுது புலம்புவோரையும் கண்டார்.

39 உள்ளே போய், "ஏன் இந்தச் சந்தடி? ஏன் இந்த அழுகை ? சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.

40 அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். ஆனால், அவர் அனைவரையும் வெளியே அனுப்பிச் சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு வந்தார்.

41 சிறுமியின் கையைப் பிடித்து, "தலித்தாகூம்" -- அதாவது, "சிறுமியே, உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்திரு" என்றார்.

42 என்றதும், சிறுமி எழுந்து நடக்கலானாள். அவளுக்கு வயது பன்னிரண்டு. மக்கள் பெரிதும் திகைத்துப் போயினர்.

43 இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். அவளுக்கு உணவுகொடுக்கச் சொன்னார்.

அதிகாரம் 06

1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தம் சொந்த ஊருக்கு வந்தார். அவர் சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

2 ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், "இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர் பெற்ற ஞானம்! என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள்! 3 இவர் தச்சன் அல்லரோ? மரியாளின் மகன் தானே! யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே! இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ?' என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர்.

4 இயேசு அவர்களை நோக்கி, "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.

5 அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.

6 அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்.

7 பன்னிருவரையும் அழைத்து இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்கு அசுத்த அவிகளின்மேல் அதிகாரம் அளித்தார்.

8 மேலும் பயணத்துக்கு ஒரு கோல் தவிர, பையோ உணவோ, மடியில் காசோ கொண்டுபோக வேண்டாம் என்று கட்டளையிட்டார்.

9 ஆனால், மிதியடி போட்டுக்கொள்ளலாம். "உள்ளாடை இரண்டு அணிய வேண்டாம்" என்றார்.

10 பின்னும் அவர்களுக்குக் கூறியது: " நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால் அவ்விடத்திலிருந்து போகும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.

11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுக்குச் செவி சாய்க்காமலும் இருந்தால், நீங்கள் அங்கிருந்து வெளியேறி அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் காலிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்."

12 அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனந்திரும்ப வேண்டுமென்று அறிவித்தனர்.

13 பேய்கள் பல ஓட்டினர். பிணியாளர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினர்.

14 ஏரோது அரசன் அவரைப்பற்றிக் கேள்வியுற்றான். ஏனெனில், அவர் பெயர் எங்கும் விளங்கிற்று. மக்களும், "ஸ்நாபக அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது". என்றனர்.

15 "இவர் எலியாஸ்" என்றனர் சிலர். "இறைவாக்கினர்களைப்போல் இருவரும் ஓர் இறைவாக்கினர்" என்றனர் வேறு சிலர்.

16 இதைக் கேட்ட ஏரோது, "இவர் அருளப்பர்தாம். அவர்தலையை நான் வெட்டினேன். ஆனால் அவர் உயிர்த்திருக்கிறார்" என்றான்.

17 இந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஆள்விட்டு, அருளப்பரைப் பிடித்துச் சிறையில் விலங்கிட்டிருந்தான். ஏனெனில், அவளைத் தன் மனைவியாக்கிருந்தான்.

18 அருளப்பரோ ஏரோதிடம், "உன் சகோதரன் மனைவியை நீ வைத்திருக்கலாகாது" என்று சொல்லி வந்தார்.

19 ஏரோதியாள் அவர்மேல் வர்மம் கொண்டு, அவரைக் கொல்ல விரும்பியும் முடியாமல் போயிற்று.

20 ஏனெனில், அருளப்பர் நீதிமானும் புனிதரும் என்றறிந்த ஏரோது அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான். அவர் சொல்லைக் கேட்கும்போது மிகக் கலக்கமுறுவான். ஆயினும் அவருக்கு மனமுவந்து செவிசாய்ப்பான்.

21 ஒருநாள் ஏரோதியாளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஏரோது, தன் பிறப்பு விழாவில் பெருங்குடி மக்களுக்கும் படைத்தலைவர்க்கும் கலிலேயாவின் பெரியோர்க்கும் விருந்து செய்தான்.

22 அந்த எரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் மகிழ்வித்தாள். அரசன் சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான்.

23 "நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்" என்று ஆணையுமிட்டான்.

24 அவள் வெளியே சென்று, "என்ன கேட்கலாம்?" என்று தன் தாயை வினவினாள். அவளோ, ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்" என்றாள். உடனே அவள் அரசனிடம் விரைந்து வந்து,

25 "ஸ்நாபக அருளப்பரின் தலையை இப்போதே ஒரு தட்டில் எனக்குக் கொடுக்கவேண்டும்" என்று கேட்டாள்.

26 அரசன் மிக வருத்தமுற்றான். ஆனால், தன் ஆணையின் பொருட்டும் விருந்தினர் பொருட்டும் அவளுக்கு மறுத்துச் சொல்ல விரும்பவில்லை.

27 உடனே அரசன் ஒரு கொலைஞனை அனுப்பி அவருடைய தலையை ஒரு தட்டில் கொண்டுவரக் கட்டளையிட்டான்.

28 அவன் போய்ச் சிறையில் அவருடைய தலையை வெட்டினான். அதைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொடுத்தாள்.

29 இதைக் கேள்விப்பட்டு அவருடைய சீடர்கள் வந்து அவருடலை எடுத்துச் சென்று கல்லறையில் வைத்தனர்.

30 அப்போஸ்தலர் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தது போதித்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.

31 அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாக வந்து சற்றே இளைப்பாறுங்கள்" என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாயிருந்தனர். உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

32 அவர்கள் படகேறி, தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாகச் சென்றனர்.

33 அவர்கள் போவதை மக்கள் கண்டார்கள். இதைப் பலர் தெரிந்து கொண்டு எல்லா ஊர்களிலிருந்தும் கால்நடையாகக் கூட்டமாய் ஓடி அவர்களுக்குமுன் அங்குவந்து சேர்ந்தார்கள்.

34 இயேசு கரையில் இறங்கியபோது பெருங்கூட்டத்தைக் கண்டார். ஆயனில்லா ஆடுகள்போல் இருந்ததால் அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.

35 இதற்குள் நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, "பாழ்வெளியாயிற்றே, ஏற்கனவே நேரமுமாகிவிட்டது.

36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்" என்றனர்.

37 அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என, "அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?' என்றனர்.

38 அவர் அவர்களை நோக்கி, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூறினார். அவர்களும் பார்த்துவந்து, "ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு" என்றனர்.

39 எல்லாரையும் பசும்புல் தரையில் பந்திபந்தியாக அமர்த்தும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

40 மக்கள் நூறு நூறாகவும், ஐம்பது ஐம்பதாகவும் கும்பல் கும்பலாய் அமர்ந்தனர்.

41 ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பங்களைப் பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். இரண்டு மீனையும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.

42 அனைவரும் வயிறார உண்டனர்.

43 அப்பத்துண்டுகளையும் மீன்களில் மீதியானதையும் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.

44 அப்பம் உண்டவர்கள் ஐயாயிரம் ஆண்கள்.

45 தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகேறிக் கடலைக் கடந்து முன்னதாகப் பெத்சாயிதாவை நோக்கிப் போகும்படி இயேசு வற்புறுத்தினார்.

46 மக்களை அனுப்பிவிட்டு மலைக்குச் செபிக்கச் சென்றார்.

47 இரவாயிற்று, படகு நடுக்கடலில் இருந்தது. அவர் தனியே தரையில் இருந்தார்.

48 எதிர்காற்று அடித்தால் அவர்கள் தண்டுவலிக்க வருந்துவதைக் கண்டு, ஏறக்குறைய நான்காம் சாமத்தில் அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்துவந்து அவர்களைக் கடந்து செல்ல இருந்தார்.

49 அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்.

50 அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்று சொன்னார்.

51 அவர்களை அணுகிப் படகில் ஏறினார். காற்று ஓய்ந்தது. அவர்கள் தங்களுக்குள் மிகமிகத் திகைத்துப்போயினர்.

52 ஏனெனில், அப்பங்களின் புதுமையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.

53 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்துக்கு வந்து கரைசேர்ந்தனர்.

54 அவர்கள் படகை விட்டு இறங்கியதும், மக்கள் அவரைத் தெரிந்துகொண்டு,

55 அந்நாடெங்கும் விரைந்துபோய், அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேயாளிகளைப் படுக்கைகளில் கொண்டுவரத் தொடங்கினர்.

56 அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும், பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்.

அதிகாரம் 07

1 பரிசேயரும், யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.

2 அவர்கள் அவருடைய சீடரில் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதைக் கண்டனர்.

3 பரிசேயரும் எல்லா யூதரும் முன்னோரின் பரம்பரையைக் கடைப்பிடித்துக் கைகளைத் தேய்த்துக் கழுவாமல் உண்பதில்லை.

4 பொது இடங்களிலிருந்து வரும்பொழுது, குளிக்காமல் உண்பதில்லை. பரம்பரையின்படி கடைப்பிடிக்க வேண்டியவை இன்னும் பல இருந்தன. அதாவது, கிண்ணங்கள், பாத்திரங்கள், செம்புகளைக் கழுவுவது முதலியன.

5 எனவே, "முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" என்று பரிசேயரும் மறைநூல் அறிரும் அவரைக் கேட்டனர்.

6 அதற்கு அவர், "வெளிவேடக்காரராகிய உங்களைப் பற்றி இசையாஸ் பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்: 'இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.

7 அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர்கற்பனை.' என்று அவர் எழுதியுள்ளார்.

8 கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்" என்றார்.

9 மேலும் சொன்னதாவது: "உங்கள் பரம்பரையைக் கடைப்பிடிக்கக் கடவுளுடைய கட்டளையை எவ்வளவு நன்றாக வெறுமையாக்குகிறீர்கள்!

10 ஏனெனில், 'உன் தாய் தந்தையரைப் போற்று' என்றும், 'தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும்' என்றும் மோயீசன் கூறியுள்ளார்.

11 ஆனால், ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, 'நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடிய தெல்லாம் கோர்பான் - அதாவது நேர்த்திக்கடன் - ஆயிற்று' என்பானாகில்,

12 அதன்பின் அவன் தன் தாய் தந்தையர்க்கு எவ்வுதவியும் செய்ய நீங்கள் விடுவதில்லை.

13 இவ்வாறு நீங்கள் சொல்லிக் கொடுத்த பரம்பரையின் பொருட்டு, கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிடுகிறீர்கள். இவை போன்ற பலவும் செய்கிறீர்கள்."

14 மீண்டும் அவர் கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, "அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்துகொள்ளுங்கள்.

15 புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்.

16 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

17 அவர் கூட்டத்தை விட்டு வீட்டிற்கு வந்தபோது, அவருடைய சீடர் இவ்வுவமையின் பொருளைக் கேட்டனர்.

18 அதற்கு அவர், "உங்களுக்குமா அறிவில்லை? புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே செல்வது எதுவும் அவனை மாசுபடுத்த முடியாதென்று உணர வில்லையா?

19 ஏனெனில், அது அவனுடைய உள்ளத்துள் நுழையாமல், அவனுடைய வயிற்றிலே சென்று ஒதுக்கிடத்திற்குப் போய்விடுகிறது" என்றார். இவ்வாறு உணவுகள் எல்லாம் தூயனவென்று குறிப்பிட்டார்.

20 மேலும், "மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.

21 ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,

22 களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.

23 இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.

24 அங்கிருந்து புறப்பட்டுத் தீர் நாட்டுக்குச் சென்றார். ஒரு வீட்டிற்குள் போனார். அது ஒருவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அது மறைவாயிருக்க முடியவில்லை.

25 உடனே ஒரு பெண் அவரைப்பற்றிக் கேள்வியுற்று, உள்ளே வந்து அவர் காலில் விழுந்தாள். அவளுடைய மகளை அசுத்த ஆவி பிடித்திருந்தது.

26 அவள் புற இனத்தவள். சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்தவள். தன் மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள்.

27 அவரோ, அவளைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.

28 அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.

29 அதற்கு அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்; பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்றார்.

30 அவள் வீடு திரும்பியபோது சிறுமி கட்டிலில் கிடப்பதையும், பேய் அகன்று விட்டதையும் கண்டாள்.

31 மீண்டும், தீர் நாட்டை விட்டு, சீதோன் வழியாகத் தெக்கப்போலி நாட்டின் நடுவே கலிலேயாக் கடலை அடைந்தார்.

32 செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனை அவரிடம் கொண்டுவந்து, அவன்மீது கையை வைக்குமாறு அவரை வேண்டினர்.

33 அவர் அவனைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று தம் விரல்களை அவன் காதுகளில் விட்டு, உமிழ் நீரால் அவன் நாவைத் தொட்டார்.

34 பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்.

35 உடனே அவன் காதுகள் திறக்கப்பட்டன. நாவின் கட்டு அவிழ்ந்தது. நன்றாகப் பேசினான்.

36 இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்.

37 அவர்கள் மிகவும் மலைத்துப்போய், "எல்லாம் நன்றாகச் செய்திருக்கிறார். செவிடர் கேட்கவும், ஊமைகள் பேசவும் செய்கிறார்" என்று கூறினர்.

அதிகாரம் 08

1 அந்நாட்களில் மீண்டும் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் உண்ண ஒன்றும் இல்லை. அப்போது, அவர் சீடரை அழைத்து,

2 "இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே! 3 இவர்களை வீட்டுக்குப் பட்டினியாக நான் அனுப்பினால் வழியில் சோர்ந்து விழுவர். இவர்களில் சிலர் தொலைவிலிருந்து வந்துள்ளனர்" என்றார்.

4 சீடர் அவருக்கு மறுமொழியாக, "இப்பாழ்வெளியில் இவர்களுக்கு வயிறார உணவளிப்பது எப்படி?" என்றனர்.

5 அதற்கு அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?" என்று கேட்க, " ஏழு " என்றனர்.

6 தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டார். பின்பு ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். அவர்கள் கூட்டத்துக்குப் பரிமாறினர்.

7 அவர்களிடம் சிறு மீன்கள் சிலவும் இருந்தன. அவற்றையும் அவர் எடுத்து இறைபுகழ் கூறி, பரிமாறச் சொன்னார்.

8 அவர்கள் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளை ஏழு கூடை நிறைய எடுத்தனர்.

9 உணவு அருந்தியவர் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.

10 பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டு, உடனே தம் சீடரோடு படகேறித் தல்மானூத்தாப் பக்கம் சென்றார்.

11 பரிசேயர் வந்து அவரோடு தர்க்கிக்கத் தொடங்கி, வானிலிருந்து அருங்குறி ஒன்றைக் காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.

12 அவர் பெருமூச்சுவிட்டு, "இத்தலைமுறை அருங்குறி கேட்பானேன்? உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறைக்கு அருங்குறி எதுவும் அளிக்கப்படாது" என்றார்.

13 அவர்களை விட்டுவிட்டு மீண்டும் படகேறி அக்கரைக்குச் சென்றார்.

14 சீடர்கள் அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள். படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.

15 பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை" என்று அவர் அறிவுரை கூறினார்.

16 நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

17 இதையறிந்த இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்? இன்னுமா உணரவில்லை? இன்னுமா விளங்கவில்லை?

18 உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் காண்பதில்லையா? காதிருந்தும் கேட்பதில்லையா? உங்களுக்கு நினைவில்லையா?

19 ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பத்தை நான் பகிர்ந்தபோது, மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?" என்று கேட்க, "பன்னிரண்டு" என்றனர்.

20 ஏழு அப்பத்தை நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தபோது மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?" என, "ஏழு" என்றனர்.

21 அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" என்றார்.

22 அவர்கள் பெத்சாய்தாவுக்கு வந்தனர். குருடன் ஒருவனை மக்கள் அவரிடம் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி வேண்டினர்.

23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவன்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டார்.

24 அவன் பார்வை பெறத்தொடங்கி, "மக்களைப் பார்க்கிறேன், மரங்கள் போலிருக்கின்றனர்; ஆனால் நடக்கின்றனர்" என்றான்.

25 பின்பு அவர் தம் கைகளை அவன் கண்களில் மீண்டும் வைக்கவே, அவன் பார்வை பெற்றுக் குணமடைந்து, அனைத்தையும் தெளிவாகக் காணலானான்.

26 அவர் அவனை வீட்டிற்கனுப்பி, "ஊருக்குள் நுழையவும் வேண்டாம்" என்றார்.

27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போனார். வழியில் தம் சீடரை நோக்கி, "மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.

28 அதற்கு அவர்கள், "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் இறைவாக்கினர்களுள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்" என்றனர்.

29 பின் அவர், "நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா" என்றார்.

30 தம்மைப்பற்றி யாருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

31 மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

32 இதெல்லாம் வெளிப்படையாகச் சொன்னார். இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டார்.

33 அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, "போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்.

34 பின் தம் சீடரையும் கூட்டத்தையும் அழைத்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.

35 ஏனெனில், தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.

36 ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?

37 ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுக்க முடியும் ?

38 விபசாரமும் பாவமும் உள்ள இத்தலைமுறையில் எண்னைப்பற்றியும், என் வார்த்தைகளைப்பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் பரிசுத்த வானதூதரோடு வரும்போது வெட்கப்படுவார்" என்றார்.

அதிகாரம் 09

1 மேலும் அவர்களை நோக்கி, "உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வல்லமையோடு வந்திருப்பதைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.

2 ஆறு நாட்களுக்குப் பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்து ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையில் ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்குமுன் உருமாறினார்.

3 அவர் ஆடைகள் வெள்ளைவெளேரென ஒளிவீசின. இவ்வுலகில் எந்தச் சலவைக்காரனும் அதுபோல வெளுக்க முடியாது.

4 எலியாசும் மோயீசனும் அவர்களுக்குத் தோன்றி, இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.

5 இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்.

6 தாம் சொல்வது இன்னதென அறியாமலே சொன்னார். ஏனெனில், அவர்கள் பேரச்சம் கொண்டிருந்தனர்.

7 அப்போது மேகம், ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட, "இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.

8 அவர்கள் உடனே சுற்றிலும் பார்த்தபோது, தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

9 மலையினின்று அவர்கள் இறங்கும்பொழுது, மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போதன்றி, அவர்கள் கண்டவற்றை ஒருவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது என்று அவர்அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

10 அவர்கள் அவ்வார்த்தையை மனத்தில் இருத்தி, ' இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போது' என்பதன் பொருள் என்ன என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.

11 முதலில் எலியாஸ் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" என அவர்கள் அவரைக் கேட்டனர்.

12 அவர், "எலியாஸ் முதலில் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தத்தான் போகிறார். ஆனால் மனுமகன் பாடுகள் பல படவும், புறக்கணிக்கப்படவும் வேண்டுமென எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?

13 ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் வந்தாயிற்று. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளபடி அவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்றார்.

14 அவர்கள் சீடரிடம் திரும்பி வந்தபோது பெருங்கூட்டம் ஒன்று அவர்களைச் சூழ்ந்து இருப்பதையும், மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.

15 மக்கள் அனைவரும் அவரைக் கண்டவுடனே திடுக்கிட்டு ஓடிவந்து வணக்கம் செய்தனர்.

16 அவர், "எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று அவர்களைக்கேட்டார்.

17 கூட்டத்திலிருந்த ஒருவன் மறுமொழியாகக் கூறியது: "போதகரே, ஊமைப் போய்பிடித்த என் மகனை உம்மிடம் கொண்டுவந்தேன்.

18 அது எங்கே அவனை ஆட்கொள்கிறதோ அங்கே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரைத்தள்ளிப் பல்லைக்கடித்து விறைத்துப்போகிறான். அதை ஓட்டும்படி உம் சீடரைக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை."

19 அதற்கு அவர், "விசுவாசமில்லாத தலைமுறையே, எதுவரை உங்களோடு இருப்பேன் ? எதுவரை உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.

20 அவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவரைக் கண்டவுடன் பேய் அவனை அலைக்கழிக்க, அவன் தரையில் விழுந்து நுரைத்தள்ளிக்கொண்டு புரண்டான்.

21 அவர், "இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாகிறது?" என்று அவனுடைய தகப்பனைக் கேட்க, அவன், "சிறுவயதிலிருந்தே இப்படித்தான்

22 இவனைத் தொலைக்க அந்தப் பேய் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்யக்கூடுமானால் எங்கள்மேல் மனமிரங்கி உதவிபுரியும்" என்றான்.

23 இயேசு அவனை நோக்கி, "கூடுமானாலா? விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்றார்.

24 உடனே சிறுவனுடைய தகப்பன், "விசுவசிக்கிறேன். என் விசுவாசமின்மையை நீக்க உதவிசெய்யும்" என்று கத்தினான்.

25 கூட்டம் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு, இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, "ஊமைச் செவிட்டுப் போயே, உனக்குக் கட்டைளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ, மீண்டும் இவனுள் நுழையாதே" என்றார்.

26 அது கத்திக்கொண்டு அவனை மிகவும் அலைக்கழித்தபின் வெளியேறிற்று. பையன் பிணம் போலானான். அதைப் பார்த்த மக்கள் கூட்டம், "இறந்துவிட்டான்" என்றது.

27 இயேசுவோ அவன் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் எழுந்தான்.

28 அவர் வீட்டிற்குள் போன பின்பு, சீடர்கள், "அதை ஓட்ட எங்களால் ஏன் முடியவில்லை?" என்று அவரைத் தனிமையாகக் கேட்டார்கள்.

29 அதற்கு அவர், "இவ்வகைப் பேய் செபத்தினாலன்றி வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.

30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயாவினூடே சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.

31 ஏனெனில், "மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். கொல்லப்பட்டு மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்று தம் சீடருக்குப் போதிக்கலானார்.

32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்கவும் அஞ்சினர்.

33 கப்பர்நகூமுக்கு வந்தனர். வீட்டிலிருக்கும்போது அவர் அவர்களை நோக்கி, "வழியில் என்ன வாதாடிக்கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார். அவர்களோ பேசாதிருந்தனர்.

34 ஏனெனில், "பெரியவன் யார்?" என்பதைப்பற்றி வழியில் தங்களுக்குள் விவாதித்திருந்தார்கள்.

35 அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.

36 பின்னர் ஒரு குழந்தையை எடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, அதை அரவணைத்து,

37 "இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்" என்றார்.

38 அருளப்பர் அவரிடம், "போதகரே, நம்மைச் சாராத ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு, அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்றார்.

39 இயேசு கூறியதாவது: "அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், என் பெயரால் புதுமை செய்தபின் உடனே என்னைப் பழித்துப்பேசக் கூடியவன் எவனுமில்லை.

40 நமக்கு எதிராக இல்லாதவன் நம் சார்பாக இருக்கிறான்.

41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."

42 "என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.

43 44 உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.

45 46 உன் கால் உனக்கு இடறலாயிருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கால்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட முடவனாய் முடிவில்லா வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.

47 உன் கண் உனக்கு இடறலாயிருந்தால் அதை எறிந்துவிடு. இரண்டு கண்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணனாய்க் கடவுளின் அரசிற்குள் நுழைவது உனக்கு நலம்.

48 அந்நரகத்திலோ அவர்களை அரிக்கும் புழு இறவாது; நெருப்பும் அணையாது.

49 ஏனெனில், ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்.

50 "உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள்? உங்களுக்குள் உப்பு இருக்கட்டும். ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."

அதிகாரம் 10

1 அவர் அங்கிருந்து புறப்பட்டு யூதேயா நாட்டுக்கும், யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள்கூட்டம் அவரிடம் வந்து கூட, வழக்கம்போல் அவர் அவர்களுக்கு மறுபடியும் போதித்தார்.

2 பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.

3 அதற்கு அவர், "மோயிசன் உங்களுக்கு என்ன கட்டளையிட்டார்?" என்று கேட்க,

4 அவர்கள், "முறிவுச் சீட்டு எழுதி அவளை விலக்கிவிடலாம் என்று மோயிசன் அனுமதி அளித்தார்" என்றனர்.

5 அதற்கு இயேசு, "உங்களுடைய முரட்டுத் தனத்தின் பொருட்டே இக்கட்டளையை எழுதி வைத்தார்.

6 படைப்பின் தொடக்கத்திலிருந்தே, கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

7 ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரைவிட்டுத் தன் மனைவியோடு கூடியிருப்பான்.

8 இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.

9 ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

10 வீட்டிற்கு வந்து அவருடைய சீடர் மீண்டும் அதைப்பற்றி அவரைக் கேட்டனர்.

11 அதற்கு அவர் அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணப்பவன் எவனும் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.

12 மனைவி தன் கணவனை விலக்கி வேறொருவனை மணந்துகொண்டால் அவளும் விபசராம் செய்கிறாள்" என்றார்.

13 குழந்தைகளை அவர் தொட வேண்டும் என்று அவரிடம் கொண்டுவந்தனர். சீடர் அதட்டினர்.

14 இயேசு அதைக் கண்டு சினந்து, அவர்களை நோக்கி "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.

15 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.

16 பின்பு அவர் அவர்களை அரவணைத்து, கைகளை அவர்கள்மேல் வைத்து ஆசீர்வதித்தார்.

17 அவர் புறப்பட்டுப் போகும்போது, ஒருவன் ஓடிவந்து அவர்முன் முழந்தாளிட்டு, "நல்ல போதகரே, நான் முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.

18 இயேசுவோ அவனை நோக்கி, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவர் அன்றி நல்லவர் எவருமில்லை.

19 கட்டளைகள் உனக்குத் தெரியுமே. கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய் சான்று சொல்லாதே, அநியாயம் செய்யாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.

20 அதற்கு அவன், "போதகரே, சிறுவமுதல் இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.

21 இயேசு, அவனை உற்றுநோக்கி, அவன்மீது அன்புகூர்ந்தார். "உனக்கு ஒன்று குறைவாயிருக்கிறது. போய் உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.

22 அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.

23 இயேசு சுற்றிலும் பார்த்துத் தம் சீடரிடம் "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! " என்றார்.

24 சீடர் அவருடைய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டனர். இயேசுவோ மீண்டும் அவர்களை நோக்கி, "பிள்ளைகளே, பணத்தை நம்பி இருப்பவர்கள் கடவுளின் அரசில் நுழைவது எவ்வளவோ அரிது! 25 பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

26 அவர்கள் இன்னும் அதிகமாக மலைத்துப்போய், 'பின்யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

27 இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.

28 அப்பொழுது இராயப்பர் அவரிடம், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" என்று சொன்னார்.

29 அதற்கு இயேசு, "தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ, நிலபுலங்களையோ என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,

30 இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

31 முதலானோர் பலர் கடைசியாவர், கடைசியானோர் பலர் முதலாவர்" என்றார்.

32 அவர்கள் பயணமாகி யெருசலேமை நோக்கிப் போகையில், இயேசு அவர்களுக்குமுன் நடந்துகொண்டிருந்தார். அவர்களோ திகைப்புற்றிருந்தனர். பின்னே வந்தவர்களும் அச்சம் கொண்டிருந்தனர். மீண்டும் பன்னிருவரையும் அழைத்துத் தமக்கு நேரப்போவதை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்:

33 இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப் படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரைப் புறவினத்தாரிடம் கையளிப்பர்.

34 அவர்கள் அவரை எள்ளிநகையாடி, துப்பி, சாட்டையால் அடித்துக் கொல்லுவார்கள். அவரோ மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்றார்.

35 செபெதேயுவின் மக்கள் யாகப்பரும் அருளப்பரும் அவரிடம் வந்து, "போதகரே, நாங்கள் கேட்கப்போவதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும்" என்றனர்.

36 இயேசுவோ அவர்களை நோக்கி, "நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?" என்றார்.

37 "நீர் உம் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்பக்கமும், மற்றவர் உமது இடப் பக்கமுமாக அமர அருளும்" என்றார்கள்.

38 அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா?" என்றார்.

39 "முடியும்" என்றனர். அதற்கு இயேசு, "நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிப்பீர்கள்; நான் பெறும் ஞானஸ்நானத்தையும் பெறுவீர்கள்.

40 ஆனால் எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று; யாருக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறதோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார்.

41 அதைக் கேட்ட பதின்மரும், யாகப்பர் மேலும் அருளப்பர் மேலும் சினம்கொள்ளத் தொடங்கினர்.

42 இயேசு, அவர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களுக்குக் கூறியது: 'புறவினத்தாரிடையே தலைவர்கள் எனப்படுவோர் அவர்களை அடக்கி ஆளுகின்றனர். அவர்களுள் பெரியோர் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்.

43 இது உங்களுக்குத் தெரியும். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

44 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்.

45 ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

46 அவர்கள் எரிக்கோவுக்கு வந்தார்கள். எரிக்கோவிலிருந்து அவரும் அவர் சீடரும் ஒரு பெருங்கூட்டமும் புறப்படும்பொழுது திமேயுவின் மகன் பர்த்திமேயு என்ற கண்தெரியாத பிச்சைக்காரன் வழியோரத்தில் உட்கார்ந்திருந்தான்.

47 நாசரேத்தூர் இயேசுதாம் அவர் என்று கேள்வியுற்று, "தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்" என்று கூவத் தொடங்கினான்.

48 பேசாதிருக்கும்படி பலர் அவனை அதட்டினார்கள். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.

49 இயேசு நின்று, "அவனை அழைத்து வாருங்கள்" என்றார். அவர்கள் குருடனை அழைத்து, "தைரியமாயிரு, எழுந்திரு, உன்னை அழைக்கிறார்" என்றார்கள்.

50 அவன் தன் போர்வையை எறிந்துவிட்டு, துள்ளிக்குதித்து அவரிடம் வந்தான்.

51 இயேசு, "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, குருடன், "ராபூனி, நான் பார்வை பெற வேண்டும்" என்றான்.

52 இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.

அதிகாரம் 11

1 அவர்கள் யெருசலேமை அணுகி ஒலிவமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபொழுது, அவர் தம் சீடர்களுள் இருவரை அழைத்து,

2 "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழைந்தவுடன் இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

3 ' என்ன செய்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை. உடனே திருப்பி இங்கே அனுப்பிவிடுவார்' என்றும் கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.

4 அவர்கள் சென்று தெருவில் ஒரு வாசலருகே கழுதைக்குட்டியொன்று கட்டியிருக்கக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.

5 அங்கே நின்றவர்களில் சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? குட்டியை அவிழ்க்கிறீர்களே" என்றார்கள்.

6 இயேசு சொன்னபடி சீடர் சொல்லவே, அவர்கள் விட்டுவிட்டார்கள்.

7 குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட, அவர் அதன்மேல் அமர்ந்தார்.

8 பலர் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். வேறு சிலர் வயல் வெளிகளில் இலைத்தழைகளை வெட்டி வழியில் பரப்பினர்.

9 முன்னே சென்றவர்களும் பின்னே வந்தவர்களும், "ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! நம் தந்தையாம் தாவீதின் அரசு வருகிறது.

10 அது வாழ்க! உன்னதங்களில் ஓசான்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.

11 அவர் யெருசலேமிற்கு வந்து கோவிலுக்குள் சென்றார். எல்லாம் சுற்றிப்பார்த்தார். ஏற்கெனவே பொழுது போய்விட்டதால் பன்னிருவருடன் பெத்தானியாவுக்குச் சென்றார்.

12 மறுநாள் பெத்தானியாவிலிருந்து போகும்பொழுது அவருக்குப் பசித்தது.

13 இலைகள் நிறைந்த ஓர் அத்திமரத்தைத் தொலைவிலே கண்டு, அதில் ஏதாவது அகப்படுமாவென்று பார்க்கப்போனார். அதன் அருகே வந்தபோது இலைகள் தவிர வேறொன்றும் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக் காலமன்று.

14 அவர் அதை நோக்கி, "இனி ஒருவனும் ஒருகாலும் உன் பழத்தை உண்ணாதிருக்கட்டும்" என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

15 அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தத் தொடங்கி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.

16 யாதொரு பண்டத்தையும் கோயில்வழியாகக் கொண்டுபோக எவனையும் விடவில்லை.

17 என் வீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறதல்லவா? நீங்களோ அதைக் கள்வர் குகை யாக்கிவிட்டீர்கள்" என்று அவர்களுக்குப் போதிக்கலானார்.

18 இதைக் கேட்டுத் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று வழித்தேடினார்கள். ஏனெனில், மக்கள்கூட்டம் அனைத்தும் அவருடைய போதனையைப்பற்றி மலைத்துப்போனதால் அவர்கள் அவருக்கு அஞ்சியிருந்தார்கள்.

19 மாலையானதும் பட்டணத்தை விட்டு வெளியேறினார்.

20 காலையில் அவர்கள் அவ்வழியோரமாய்ப் போகும்பொழுது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருக்கக் கண்டார்கள்.

21 இராயப்பர் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து, அவரை நோக்கி, "ராபி, நீர் சபித்த அத்திமரம் இதோ! பட்டுப்போயிற்று" என்றார்.

22 இயேசு மறமொழியாக, "கடவுள்மீது விசுவாசம் கொண்டிருங்கள்.

23 உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இம்மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து கடலில் விழு' என்று சொல்லி, தான் சொல்லியதெல்லாம் நிறைவேறும் என்று தன்னுளத்தில் தயங்காது விசுவசிப்பவன் எவனோ, அவனுக்கு அது கைகூடும்.

24 ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும்.

25 நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்.

26 அவ்வாறே வானகத்திலிருக்கும் உங்கள் தந்தையும் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவார்" என்றார்.

27 மீண்டும் அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் மூப்பரும் அவரிடம் வந்து,

28 "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? அல்லது, இப்படிச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?" என்றார்கள்.

29 அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறுவேன்.

30 அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா? பதில் சொல்லுங்கள்" என்றார்.

31 அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " 'வானகத்திலிருந்து வந்தது' என்போமாகில், 'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார்.

32 இல்லை, 'மனிதரிடமிருந்து வந்தது' என்று சொல்லலாமா?" -- பொதுமக்களுக்கு அஞ்சினார்கள். ஏனெனில், எல்லாரும் அருளப்பரை உண்மையான இறைவாக்கினர் என்று கருதிவந்தனர்.

33 எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக, "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.

அதிகாரம் 12

1 பின்னும் அவர் உவமைகளில் அவர்களிடம் பேசத் தொடங்கினார். "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.

2 பருவக்காலத்தில் அக்குடியவானவர்களிடமிருந்து தோட்டத்துப் பலனில் தன் பங்கை வாங்கி வரும்படி ஊழியன் ஒருவனை அனுப்பினான்.

3 அவர்களோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டார்கள்.

4 மீண்டும் மற்றோர் ஊழியனை அவர்களிடம் அனுப்பினான். அவனையும் அவர்கள் தலையில் அடித்து இழிவபுடுத்தினார்கள்.

5 வேறொருவனையும் அனுப்பினான். அவனைக் கொன்றனர். வேறு பலரை அனுப்பினான். அவர்களுள் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டனர்.

6 அனுப்புவதற்கு இன்னும் ஒருவனே இருந்தான். அவன் அவனுடைய அன்பார்ந்த மகன். 'என் மகனை மதிப்பார்கள்' என்று, இறுதியாக அவனை அவர்களிடம் அனுப்பினான்.

7 குடியானவர்களோ, 'இவனே சொத்துக்குரியவன்; வாருங்கள், இவனைக் கொன்றுபோடுவோம், சொத்து நம்முடையதாகும்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டு,

8 அவனைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.

9 இனி, தோட்டத்துக்கு உரியவன் என்ன செய்வான் ? வந்து அக்குடியானவர்களை ஒழித்துத் தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்.

10 'கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது.

11 ஆண்டவர் செயல் இது, நம் கண்ணுக்கு வியப்பே' என்று மறைநூலில் நீங்கள் படித்ததில்லையா?" என்றார்.

12 தங்களைக் குறித்தே இவ்வவுமையைக் கூறினார் என்று அவர்கள் உணர்ந்து, அவரைப் பிடிக்க வழிதேடினார்கள். ஆனால் பொதுமக்களுக்கு அஞ்சி அவரை விட்டுப் போனார்கள்.

13 பின்னும் அவர்கள் அவரைப் பேச்சில் சிக்கவைக்கும்படி, பரிசேயர், ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.

14 அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே நீர் உண்மையுள்ளவர். எவர் தயவும் உமக்கு வேண்டியதில்லை. ஏனெனில், முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். செசாருக்கு வரி கொடுப்பது முறையா? இல்லையா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?" என்று கேட்டார்கள்.

15 அவர்களுடைய கபடத்தை அறிந்து, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை என்னிடம் கொண்டு வாருங்கள், நான் பார்க்கவேண்டும்" என்றார்.

16 அவர்கள் கொண்டுவந்தார்கள். "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர்.

17 இயேசு, "செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அவரைக்குறித்து வியப்படைந்தார்கள்.

18 பின்னர், 'உயிர்த்தெழுதல் இல்லை' என்று கூறும் சதுசேயர் அவரிடம் வந்து,

19 "போதகரே, ஒருவனுடைய சகோதரன் இறந்து, பிள்ளையில்லாமல் மனைவியை விட்டுச் சென்றால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.

20 சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.

21 இரண்டாம் சகோதரனும் அவளை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.

22 மூன்றாம் சகோதரனும் அப்படியே. இவ்வாறு எழுவருக்கும் மகப்பேறு இல்லாமல் போயிற்று. எல்லாருக்கும் கடைசியில் அப்பெண்ணும் இறந்தாள்.

23 உயிர்ப்பு நாளில் அவர்கள் உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே" என்று வினவினர்.

24 இயேசு அவர்களிடம், "மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் அன்றோ, இவ்வாறு தவறாக நினைக்கிறீர்கள்?

25 ஏனெனில், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஆனால் வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.

26 இறந்தோர் உயிர்த்தெழுவது குறித்து மோயீசன் ஆகமத்தில் முட்செடியைப் பற்றிய பகுதியில், 'நாம் ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கடவுள் அவருக்குக் கூறியதை நீங்கள் படித்ததில்லையா?

27 அவர் வாழ்வோரின் கடவுளே அன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். நீங்கள் பெரிதும் தவறிவிட்டீர்கள்" என்றார்.

28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்ட மறைநூல் அறிஞருள் ஒருவன் முன்வந்து, அவர் நன்றாக விடையளித்ததைக் கண்டு, "எல்லாவற்றிலும் முதல் கட்டளை எது?" என்று அவரைக் கேட்டான்.

29 இயேசு மறுமொழியாக: "'இஸ்ராயேலே கேள்: நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.

30 ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக' என்பது முதல் கட்டளை.

31 'உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக' என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிடப் பெரிய கட்டளை வேறில்லை" என்றார்.

32 அதற்கு மறைநூல் அறிஞன், "சரிதான், போதகரே, நீர் சொன்னது உண்மையே. கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறொருவரில்லை.

33 அவருக்கு முழு உள்ளத்தோடும் முழு அறிவோடும் மழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் அன்பு செய்வதும், தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது" என்றான்.

34 அவன் அறிவோடு விடை அளித்ததைக் கண்ட இயேசு, "நீ கடவுளுடைய அரசிற்குத் தொலைவில் இல்லை" என்றார். அதுமுதல் ஒருவனும் அவரைக் கேள்விகேட்கத் துணியவில்லை.

35 மேலும், இயேசு கோயிலில் போதித்துக் கொண்டிருந்தபோது, "மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் எப்படிக் கூறலாம்? ஏனெனில்,

36 'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணை யாக்கும்வரை, நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே பரிசுத்த ஆவியின் ஏவுதலால் கூறியிருக்கிறார்.

37 தாவீதே அவரை ஆண்டவரென்று சொல்ல, அவர் எப்படி அவருடைய மகனாக மட்டும் இருத்தல் கூடும்?" என்றார். திரளான மக்கள் அவர் சொல்வதை மனமுவந்து கேட்டு வந்தார்கள்.

38 மீளவும் அவர் போதிக்கையில், "மறைநூல் அறிஞர் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாடவும், பொது இடங்களில் வணக்கம் பெறவும் விரும்புகிறார்கள்.

39 செபக்கூடங்களில் முதலிருக்கைகளும், விருந்துகளில் முதலிடங்களும் தேடுகிறார்கள்.

40 கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.

41 இயேசு காணிக்கைப் பெட்டிகளுக்கு எதிரே அமர்ந்து, மக்கள் அவற்றினுள் காசு போடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். பணக்காரார் பலர் அதிகம் போட்டார்கள்.

42 ஏழைக் கைம்பெண் ஒருத்தி வந்து ஓர் அணா பெறுமானமுள்ள இரண்டு செப்புக் காசுகள் போட்டாள்.

43 இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, "காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

44 ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்" என்றார்.

அதிகாரம் 13

1 அவர் கோயிலை விட்டுப் போகும்பொழுது, அவருடைய சீடருள் ஒருவர் அவரிடம், "போதகரே, இதோ பாரும், எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்" என,

2 இயேசு அவரிடம், "இப்பெரிய கட்டடங்களைப் பார்க்கிறாயே, கல்லின்மேல் கல் நிற்காதபடி எல்லாம் இடிக்கப்படும்" என்றார்.

3 அவர் கோயிலுக்கு எதிரே, ஒலிவ மலைமீது அமர்ந்தபின், இராயப்பர், யாகப்பர், அருளப்பர், பெலவேந்திரர் ஆகியோர் அவரிடம்,

4 "இவை எப்பொழுது நடக்கும்? இவை அனைத்தும் நிறைவேற இருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.

5 இயேசு கூறலானார்: "யாரும் உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

6 பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர்' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.

7 போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுக்களையும் கேட்கும்போது கலங்கவேண்டாம். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இன்னும் இது முடிவன்று.

8 நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் நிலநடுக்கமும் பஞ்சமும் உண்டாகும். இவை வேதனைகளின் தொடக்கமே.

9 "நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள். உங்களை நீதிமன்றங்களுக்குக் கையளிப்பார்கள், செபக்கூடங்களில் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அவர்கள் முன் சாட்சியாய் இருப்பீர்கள்.

10 முதலில் நற்செய்தி எல்லா இனத்தாருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.

11 உங்களைக் கையளிக்கக் கொண்டுபோகும்போது என்ன சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படவேண்டாம். அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படுவதையே சொல்லுங்கள். ஏனெனில், பேசுவது நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியே பேசுவார்.

12 சகோதரன் சகோதரனையும், தந்தை மகனையும் சாவுக்குக் கையளிப்பர். மக்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து அவர்களைச் சாவுக்கு உட்படுத்துவார்கள்.

13 என் பெயரைக்குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைநிற்கிறவன் மீட்புப் பெறுவான்.

14 "ஆனால், 'பாழாக்கும் அருவருப்பு' நிற்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது -- இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -- அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.

15 கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் நுழைந்து எதையும் எடுக்காமலே ஓடட்டும்.

16 வயலிலிருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.

17 அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்! 18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி மன்றாடுங்கள்.

19 ஏனெனில், அவை வேதனையின் நாட்களாயிருக்கும். கடவுள் படைப்பைப் படைத்த தொடக்கத்திலிருந்து இதுவரை இத்தகைய வேதனை இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை.

20 ஆண்டவர் அந்நாட்களைக் குறைக்காவிடில் எவ்வுயிரும் தப்பித்துக் கொள்ளாது. ஆனால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் பொருட்டு அந்நாட்களைக் குறைத்திருக்கிறார்.

21 அப்பொழுது எவனாவது உங்களிடம், 'இதோ! மெசியா இங்கே இருக்கிறார், அதோ! அங்கே இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.

22 போலி மெசியாக்களும் போலித்தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக் கூடிய அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.

23 உங்களுக்கு எல்லாவற்றையும் முன்னதாகவே கூறிவிட்டேன்; எச்சரிக்கையாயிருங்கள்.

24 "ஆனால் அந்நாட்களில் இவ்வேதனைகளுக்குப்பின்னர் கதிரவன் இருண்டு விடுவான்; நிலா ஒளி கெடாது,

25 விண்மீன்கள் வானிலிருந்து விழுந்துகொண்டிருக்கும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.

26 அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகங்களின் மீது வருவதைக் காண்பார்கள்.

27 அப்பொழுது அவர் தம் தூதர்களை அனுப்பி, மண்ணுலகின் கடைமுனை முதல் விண்ணுலகின் கடைமுனைவரை நாற்றிசையிலுமிருந்து தாம் தேர்ந்துகொண்டவர்களைத் திரட்டுவார்.

28 "அத்திமரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையிலுள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.

29 அவ்வாறே நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்பொழுது, அவர் அண்மையிலிருக்கிறார். வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.

30 இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.

31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போகா.

32 அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது.

33 "எச்சரிக்கையாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்பொழுது என்று உங்களுக்குத் தெரியாது.

34 இது எப்படியெனில், வெளியூர் செல்லும் ஒருவன் செய்வது போலாகும். அவன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, ஊழியர்களிடம் எல்லாம் ஒப்படைத்து, அவனவன் வேலையையும் குறிப்பிட்டு விழிப்பாயிருக்கும்படி காவலாளுக்குக் கட்டளையிடுகிறான்.

35 அதுபோல நீங்களும் விழிப்பாயிருங்கள். -- ஏனெனில், வீட்டுத்தலைவர் மாலையிலோ நள்ளிரவிலோ கோழி கூவும் பொழுதோ காலையிலோ எப்பொழுது வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.

36 அவர் திடீரென்று வரும்பொழுது நீங்கள் உறங்கிக் கொண்டு இருப்பதைக் காணலாகாது.

37 உங்களுக்குக் கூறுவதை நான் எல்லாருக்குமே கூறுகிறேன்; விழிப்பாயிருங்கள்."

அதிகாரம் 14

1 பாஸ்காவும், புளியாத அப்பத் திருவிழாவும் வர இரண்டு நாள் இருந்தது. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் சூழ்ச்சியாய் அவரைப் பிடித்துக் கொலைசெய்ய வகைதேடிக் கொண்டிருந்தார்கள்.

2 "திருவிழாவிலே வேண்டாம், ஒருவேளை மக்களிடையே கலகம் உண்டாகலாம்" என்றார்கள்.

3 பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் அவர் இருந்தார். அங்கே பந்தி அமர்ந்திருக்கும்போது, பெண் ஒருத்தி நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழைக் கொண்டுவந்து உடைத்து அவருடைய தலையில் ஊற்றினாள்.

4 அப்போது சிலர் சினந்து, "தைலத்தை இப்படி வீணாக்குவானேன்?

5 இத்தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கும் அதிகமாய் விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு, அவள்மேல் சீறி எழுந்தனர்.

6 இயேசுவோ, "இவளை விடுங்கள்; ஏன் தொந்தரைசெய்கிறீர்கள்? இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.

7 ஏனெனில், ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மைசெய்ய முடியும். நானோ உங்களோடு எப்போதும் இருக்கப்போவதில்லை.

8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என் அடக்கத்தைக்குறித்து முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசினாள்.

9 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதும் எங்கெங்கு நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள் நினைவாகக் கூறப்படும்" என்றார்.

10 பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும்படி தலைமைக்குருக்களிடம் சென்றான்.

11 அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவனும் அவரை எவ்வாறு காட்டிக் கொடுக்கலாம் என வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

12 புளியாத அப்பத் திருவிழாவின் முதல் நாளில் பாஸ்காச் செம்மறியைப் பலியிடுவார்கள். அன்று சீடர் அவரிடம், "நீர் பாஸ்காப் பலியுணவை உண்ண நாங்கள் எங்கே போய் ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்?" என்று கேட்டனர்.

13 அவர் சீடர்களுள் இருவரிடம், "நகருக்குச் செல்லுங்கள். ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன்பின்னே செல்லுங்கள்.

14 அவன் எங்கே செல்லுகிறானோ அந்த வீட்டுத்தலைவனிடம், 'நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே?' என்று போதகர் கேட்கிறார் எனச் சொல்லுங்கள்.

15 இருக்கை முதலியன அமைந்து ஆயத்தமாயுள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான்.

16 அங்கே நமக்கு ஏற்பாடுசெய்யுங்கள்" என்று சொல்லியனுப்பினார். சீடர்களும் போய் நகரை அடைந்து தங்களுக்கு அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.

17 மாலையானதும் அவர் பன்னிருவருடன் வந்தார்.

18 அவர்கள் பந்தியமர்ந்து உண்ணும்பொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

19 அவர்கள் வருத்தப்பட்டு ஒவ்வொருவராக, "நானோ, நானோ" என்று அவரைக் கேட்கத் தொடங்கினார்கள்.

20 அதற்கு அவர், "பன்னிருவருள் ஒருவனே; என்னோடு பாத்திரத்தில் கையிடுபவனே.

21 மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கோ ஐயோ, கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.

22 அவர்கள் உண்ணும்பொழுது, அவர் அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு அவர்களுக்கு அளித்தது, "இதை வாங்கிக்கொள்ளுங்கள்.

23 இது என் உடல்" என்றார். பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி அவர்களுக்கு அளிக்க, அதில் அனைவரும் பருகினர்.

24 அப்போது அவர், "உடன்படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம் இது.

25 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இனிமேல், கடவுளின் அரசில் புதிய இரசம் குடிக்கும் நாள்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்" என்றார்.

26 புகழ்ப்பாடல் பாடிவிட்டு, ஒலிவ மலைக்குச் சென்றனர்.

27 இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், 'மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறிப்போம்' என எழுதியிருக்கிறது.

28 ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்" என்றார்.

29 அதற்கு இராயப்பர், "எல்லாரும் இடறல்பட்டாலும் நான் இடறல்படேன்" என்றார்.

30 இயேசு அவரிடம் "உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி இரு முறை கூவுமுன், என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்றார்.

31 அவரோ, "உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்று வற்புறுத்திச் சொன்னார். அப்படியே அனைவரும் சொன்னார்கள்.

32 பின்பு, கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் சீடர்களிடம், "நான் செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி,

33 இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது திகிலும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,

34 அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது; இங்கே தங்கி விழித்திருங்கள்" என்றார்.

35 சற்று அப்பால் போய்த் தரையில் குப்புற விழுந்து, கூடுமானால் அந்நேரம் தம்மைவிட்டு நீங்கும்படி செபித்தார்.

36 மேலும், "அப்பா, தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். இத்துன்பக் கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆகிலும் நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்" என்றார்.

37 பின்பு வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, இராயப்பரை நோக்கி, "சீமோனே, தூங்குகிறாயா? ஒரு மணி நேரம் விழித்திருக்க உன்னால் முடியவில்லையா?

38 சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான்; ஊன் உடலோ வலுவற்றது" என்றார்.

39 மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி, செபித்தார்.

40 திரும்பவும் வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருக்க கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன. என்ன மறுமொழி சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

41 மூன்றாம் முறையாக அவர்களிடம் வந்து, "இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா! போதும், நேரம் வந்துவிட்டது. இதோ, மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.

42 எழுந்திருங்கள், போவோம், இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்" என்றார்.

43 அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். அவனோடு தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பரும் அனுப்பிய கூட்டமொன்று வாள்களோடும் தடிகளோடும் வந்தது.

44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்" என்று கூறி அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

45 அவன் வந்தவுடனே, அவரை அணுகி, "ராபி" என்று சொல்லி முத்தமிட்டான்.

46 அவர்களோ அவர்மேல் கைபோட்டுப் பிடித்தார்கள்.

47 அருகில் நின்றவர்களுள் ஒருவன் வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனுடைய காதைத் துண்டித்தான்.

48 இயேசு அவர்களிடம், "கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ?

49 நாள்தோறும் கோயிலில் போதித்துக்கொண்டு உங்களிடையே இருந்தும், நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் மறைநூல் கூறுவது இவ்வாறு நிறைவேற வேண்டும்" என்றார்.

50 அப்பொழுது அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.

51 இளைஞன் ஒருவன் வெறும் உடம்பின்மேல் துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றான்.

52 அவனைப் பிடித்தார்கள். அவனோ துப்பட்டியை விட்டுவிட்டு ஆடையின்றி ஓடிப்போனான்.

53 இயேசுவைத் தலைமைக்குருவிடம் கூட்டிச் சென்றனர். தலைமைக்குருக்கள், மூப்பர், மறைநூல் அறிஞர் எல்லாரும் வந்து கூடினர்.

54 இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து, காவலருடன் உட்கார்ந்து அனலில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.

55 தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகச் சான்று தேடியும், ஒன்றுமே கிடைக்கவில்லை.

56 ஏனெனில், பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறியும், அச்சாட்சிகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாதிருந்தன.

57 சிலர் எழுந்து,

58 "கையால் கட்டிய இவ்வாலயத்தை இடித்துக் கையால் கட்டாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டுவேன்' என்று இவன் சொல்ல நாங்கள் கேட்டோம்" என அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறினர்.

59 இதிலுங்கூட அவர்களுடைய சாட்சி ஒவ்வாதிருந்தது.

60 தலைமைக்குரு அவர்கள் நடுவில் எழுந்து, "உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே, மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டார்.

61 அவரோ மறுமொழியாக ஒன்றும் சொல்லாமல் பேசாதிருந்தார். மீண்டும் தலைமைக்குரு, "போற்றுதற்குரிய இறைவனின் மகனான மெசியா நீதானோ?" என்று அவரைக் கேட்டார்.

62 அதற்கு இயேசு, "நான்தான். மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வானமேகங்கள் சூழ வருவதைக் காண்பீர்கள்" என்றார்.

63 தலைமைக்குருவோ தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு? தேவதூஷணம் கேட்டீர்களே. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்றார்.

64 அவர்கள் அனைவரும், "இவன் சாவுக்குரியவன்" என்று தீர்ப்பிட்டார்கள்.

65 அப்போது சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி, அறைந்து, "தீர்க்கதரிசனமாகச் சொல்" என்று கூறவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.

66 இராயப்பர் கீழே முற்றத்தில் இருக்கையில் தலைமைக்குருவின் ஊழியக்காரிகளுள் ஒருத்தி வந்து,

67 இராயப்பர் குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு, அவரை உற்று நோக்கி, "நீயும் நாசரேத்தூர் இயேசுவுடன் இருந்தாய்" என்றாள்.

68 அவரோ அதை மறுத்து, "நீ என்ன சொல்லுகிறாய் என்றே விளங்கவில்லை; எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லிவிட்டு, வெளியே வாசல்மண்டபத்திற்குச் சென்றார்.

69 கோழியும் கூவிற்று. மீண்டும், ஊழியக்காரி அவரைக் கண்டு, அருகே இருந்தவர்களிடம் "இவன் அவர்களுள் ஒருவன்" என்று சொல்லத் தொடங்கினாள்.

70 அவரோ மீண்டும் மறுத்தார். மீளவும் சிறிது நேரத்திற்குப்பின் அங்கு இருந்தவர்கள் இராயப்பரை நோக்கி, "உண்மையாக நீ அவர்களுள் ஒருவன். ஏனெனில், நீ கலிலேயன்" என்றார்கள்.

71 அவரோ, "நீங்கள் சொல்லுகிற அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.

72 உடனே இரண்டாம் முறையும் கோழி கூவிற்று. "இரு முறை கோழி கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று தமக்கு இயேசு சொன்னதை இராயப்பர் நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தி அழலானார்.

அதிகாரம் 15

1 காலையானதும் மூப்பர், மறைநூல் அறிஞர், மற்றத் தலைமைச் சங்கத்தார் இவர்களோடு தலைமைக்குருக்கள் கூடி ஆலோசனைசெய்து இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர்.

2 பிலாத்து, "நீ யூதரின் அரசனோ?" என்று அவரை வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.

3 தலைமைக்குருக்கள் பலவற்றைக் குறித்து, அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.

4 பிலாத்து மீண்டும் அவரிடம், "நீ மறுமொழி ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டு, "இதோ! உன்மேல் இத்தனை குற்றம் சாட்டுகிறார்களே" என்றார்.

5 இயேசுவோ அதன்பின் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. பிலாத்து அதைக் கண்டு வியப்புற்றார்.

6 திருவிழாதோறும் அவர்கள் கோரும் ஒரு கைதியை விடுதலைசெய்வதுண்டு.

7 அப்போது பரபாஸ் என்று கைதி ஒருவன் இருந்தான். ஒரு குழப்பத்தில் கொலை செய்த கலகக்காரருடன் பிடிபட்டவன் அவன்.

8 கூட்டம் வந்து, வழக்கம்போலத் தாங்கள் கோருவதைச் செய்யும்படி பிலாத்தைக் கேட்கத்தொடங்கியது.

9 அதற்கு அவர், "யூதர்களின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டார்.

10 ஏனெனில், தலைமைக்குருக்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்பது அவருக்குத் தெரியும்.

11 பரபாசையே விடுதலைசெய்ய வேண்டும் என்று சொல்லும்படி தலைமைக்குருக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டனர்.

12 பிலாத்து மீண்டும் அவர்களிடம், "அப்படியானால் நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டார்.

13 அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று மீண்டும் கூச்சலிட்டார்கள்.

14 அதற்குப் பிலாத்து, "இவன் செய்த தீங்கு என்ன?" என்று கேட்டார். அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டார்கள்.

15 பிலாத்து அவர்களைத் திருப்திசெய்ய விரும்பிப் பரபாசை விடுதலைசெய்து, இயேசுவைச் சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி கையளித்தார்.

16 படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநரின் மனைக்குள் நடத்திச் சென்று, அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர்.

17 பின்பு அவருக்குச் சிவப்பு ஆடை உடுத்தி முள்முடி ஒன்றைப் பின்னித் தலையில் சூட்டி,

18 "யூதரின் அரசே வாழி" என்று வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.

19 மேலும், அவரைத் தலையில் பிரம்பால் அடித்து, அவர்மேல் துப்பி, முழந்தாளிட்டு வணங்கினர்.

20 இப்படி அவரை எள்ளி நகையாடியபின். சிவப்பு ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை உடுத்தி அவரைச் சிலுவையில் அறைய வெளியே கூட்டிச் சென்றார்கள்.

21 சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவன் நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவன், அலெக்சாந்தர், ரூப்பு என்பவர்களுக்குத் தந்தை. அவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும் படி கட்டாயப்படுத்தினர்.

22 ' மண்டை ஓடு' எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.

23 அங்கே அவர்கள் அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த இரசத்தைக் கொடுத்தனர். அவர் அதை ஏற்கவில்லை.

24 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். 'பின்னர், அவர் ஆடைகளில் எதெது யார் யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போட்டுப் பகிர்ந்துகொண்டார்கள்.

25 அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.

26 அவர்மேல் சாட்டிய குற்றத்தைக் குறிக்கும் பலகையில், 'யூதரின் அரசன்' என்று எழுதியிருந்தது.

27 அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர்.

29 அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி, "ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுபவனே,

30 சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே காப்பாற்றிக்கொள்" என்று சொல்லி அவரைப் பழித்தனர்.

31 அவ்வாறே தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞருடன் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, "பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

32 இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.

33 நண்பகல் தொடங்கி, மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.

34 மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லாமாசபக்தானி" என்று உரக்கக் கூவினார். இதற்கு, "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது பொருள்.

35 அருகிலிருந்தவர்களுள் சிலர் இதைக் கேட்டு, "இதோ! இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.

36 ஒருவன் ஓடிப்போய்க் கடற்காளானைக் காடியில் தேய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து, "பொறுங்கள், எலியாஸ் இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்" என்றான்.

37 இயேசு உரக்கக்கூவி உயிர் நீத்தார்.

38 அப்போது ஆலயத்தின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.

39 எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்தலைவன் இவ்வாறு இவர் உயிர்நீத்ததைக் கண்டு, "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்றான்.

40 பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், சலோமேயும் இருந்தனர்.

41 இயேசு கலிலேயாவிலிருந்தபொழுது இவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்தவர்கள். அவருடன் யெருசலேமுக்கு வந்திருந்த பெண்கள் வேறு பலரும் இருந்தனர்.

42 இதற்குள் மாலைநேரம் ஆகிவிடவே, ஓய்வுநாளுக்கு முந்தின அந்நாள் ஆயத்தநாள்.

43 ஆதலால், அரிமத்தியாவூர் சூசை துணிவுடன் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டார். இவர் தலைமைச்சங்கத்தின் செல்வாக்குடைய ஓர் உறுப்பினர். இருவரும் கடவுளின் அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.

44 இயேசு அதற்குள் இறந்துவிட்டதைப்பற்றிப் பிலாத்து வியப்புற்றார். நூற்றுவர்தலைவனை அழைத்து, "அவன் இதற்குள் இறந்துவிட்டானா?" என்று கேட்டார்.

45 நூற்றுவர் தலைவனிடமிருந்து செய்தியை அறிந்ததும், சடலத்தைச் சூசையிடம் அளித்தார்.

46 சூசை கோடித்துணி வாங்கிவந்து, இயேசுவை இறக்கி, துணியில் சுற்றி, பாறையில் குடைந்த கல்லறையில் வைத்து, அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.

47 மதலேன்மரியாளும் யோசெத்தின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தை பார்த்துக்கொண்டனர்.

அதிகாரம் 16

1 ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும் யாகப்பரின் தாய் மரியாளும் சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்.

2 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் கதிரவன் எழுந்தபின் கல்லறைக்கு வந்தனர்.

3 "கல்லறை வாயிலிலிருந்து, யார் நமக்குக் கல்லைப் புரட்டிவிடுவார்?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.

4 நிமிர்ந்து பார்க்கும்பொழுது கல் புரண்டிருப்பதைக் கண்டனர். அதுவோ மிகப் பெரிய கல்.

5 அவர்கள் கல்லறைக்குள் நுழைந்தபொழுது, வெண்ணாடை அணிந்து வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞனைக் கண்டு திகிலுற்றனர். அவன் அவர்களை நோக்கி, "திகிலுறவேண்டாம்.

6 சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். இங்கே இல்லை. இதோ! அவரை வைத்த இடம்.

7 நீங்கள் போய் அவருடைய சீடர்களிடமும் இராயப்பரிடமும், "உங்களுக்குமுன் அவர் கலிலேயாவிற்குப் போகிறார். அவர் உங்களுக்குக் கூறியவாறு நீங்கள் அவரை அங்கே காண்பீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றான்.

8 அவர்கள் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். ஏனெனில், திகைப்பும் நடுக்கமும் அவர்களை ஆட்கொணடது. அச்சம் மேலிட அவர்கள் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.

9 வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.

10 முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.

11 இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை.

12 அதன்பின் அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.

13 அவர்களும் வந்து மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.

14 இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி, உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத அவர்களுடைய விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.

15 மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.

17 விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,

18 பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.

19 இவ்வாறு அவர்களோடு பேசி முடித்தபின், ஆண்டவர் இயேசு விண்ணேற்படைந்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.

20 அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர். ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து, உடனிகழ்ந்த அருங்குறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்.