அதிகாரம் 01
1 கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கின்ற விசுவாசிகளான எபேசு நகரத்து இறைமக்களுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான சின்னப்பன் யான் எழுதுவது:
2 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் கிறிஸ்துவுக்குள் வானக வாழ்வுக்குரியவையும், தேவ ஆவி தருபவையுமான கொடைகள் அனைத்தும் பொழிந்து, நமக்கு ஆசி அளித்தார்.
4 எவ்வாறெனில், நாம் அவரது திருமுன் பரிசுத்தரும் மாசற்றவருமாய் இருக்குமாறு, உலகம் உருவாகு முன்னரே அவர் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார்.
5 அவர் தம் திருவுள விருப்பத்திற்கேற்ப, தம் அன்பு மகனுக்குள் நமக்கருளியஅருளின் மாட்சிமை புகழ் பெற்று விளங்க,
6 இயேசு கிறிஸ்துவின் வழியாகவே, நம்மைத் தம் பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் நம்மை முன்குறித்து வைத்தார்.
7 அந்த அன்பு மகனாலே, அவருடைய இரத்தத்தின் வழியாய், இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம் மீட்பு அடைகிறோம், குற்றங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறோம்.
8 அந்த அருளை முழுஞானமாகவும் அறிவுத்திறனாகவும், நம்மில் பெருகச் செய்தார்.
9 தம் திருவுளத்தின் மறைவான திட்டத்தை நமக்கு அறிவித்தார். கால நிறைவில் நிறைவேற்ற வேண்டிய ஏற்பாடாக முதலிலிருந்தே கிறிஸ்துவுக்குள் அத்தயவான திட்டத்தை வகுத்து வைத்திருந்தார்.
10 விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவுக்குள் ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே அத்திட்டம்.
11 தம் திருவுளக் கருத்திற்கேற்ப அனைத்தையும் செய்து முடிக்கும் இறைவனின் திட்டப்படி, முன் குறிக்கப்பட்ட நாங்கள் கிறிஸ்துவுக்குள்ளே பங்கு பெற்றுக்கொண்டோம்.
12 இவ்வாறு, கிறிஸ்துவின் மேல் முதன் முதல் நம்பிக்கை வைத்த நாங்கள் தம்முடைய மாட்சிமைக்குப் புகழ்ச்சியாய் விளங்க வேண்டுமென, இறைவன் விரும்பினார்.
13 நீங்களும், உங்கள் மீட்பின் நற்செய்தியாகிய உண்மை வார்த்தையைக் கேட்டு, விசுவாசம் கொண்டு, வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் முத்திரையைக் கிறிஸ்துவுக்குள்ளே பெற்றுக் கொண்டீர்கள்.
14 நாம் மீட்படைந்து, இறைவனது உடைமையாவதற்கென, ஆவியானவரே நம் உரிமைப் பேற்றின் அச்சாரமாய் இருக்கிறார். இவ்வாறே இறைவனுடைய மாட்சிமையின் புகழ் விளங்க வேண்டியிருந்தது.
15 ஆகவே, ஆண்டவராகிய இயேசுவில் உங்களுக்குள்ள விசுவாசத்தையும் இறைமக்களான அனைவரிடமும் நீங்கள் காட்டும் அன்பையும் கேள்வியுற்று.
16 நானும் என் செபங்களில் உங்களைக் குறிப்பிட்டு, உங்களை நினைத்து இடை விடாது நன்றி கூறுகிறேன்.
17 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமை மிக்க தந்தையுமானவர் தேவ ஆவியை உங்களுக்கு கொடுப்பாராக! அந்த ஆவியினால் நீங்கள் உண்மையை வெளிப்படுத்தும் அருளையும் ஞானத்தையும் பெற்று, அவரை முற்றும் அறிந்துகொள்வீர்களாக.
18 இறைவன் உங்களை அழைத்ததால் எத்தகைய நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், இறைமக்களிடையே அவர் உங்களுக்கு அளிக்கும் உரிமைப் பேற்றின் மாட்சிமை எவ்வளவு வளம் மிக்கது என்றும்,
19 விசுவாசிப்போரான நம் பொருட்டு அவர் விளங்கச் செய்யும் வல்லமை எத்துணை பெருமை மிக்கது என்றும் நீங்கள் அறிந்து கொள்ளும்படி உங்கள் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! நமக்காக அவர் காட்டும் இவ்வல்லமை கிறிஸ்துவில் அவர் செயற்படுத்திய அவரது வலிமை மிக்க பேராற்றல் ஆகும்.
20 இறந்தோரிடமிருந்து கிறிஸ்துவை உயிர்ப்பித்து அவரை விண்ணுலகில் தம் வலப்புறத்தில் அமரச்செய்தது இவ்வல்லமையே.
21 ஆம், தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர், வலிமை மிக்கோர், ஆட்சி புரிவோர் ஆகிய தூதர் அனைவருக்கும் மேலாகவும், இவ்வுலகில் மட்டுமன்று மறுவுலகிலும், வேறு எப்பெயர் கொண்டவருக்கும் மேலாகவும், அவரை உயர்த்தினார்.
22 அனைத்தையும் அவருக்கு அடிபணியச்செய்து, அனைத்திற்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாய் ஏற்படுத்தினார்.
23 திருச்சபையோ அவருடைய உடல், எல்லா வகையாலும் எப்பொழுதும் இறைவனால் நிறைவாக்கப்பெறும் கிறிஸ்துவின் நிறைவே அத்திருச்சபை.
அதிகாரம் 02
1 நீங்களோ உங்கள் குற்றங்களாலும் பாவங்களாலும் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
2 ஒரு காலத்தில் வான்வெளியில் தலைவனுக்கு அடங்கி இவ்வுலகப் போக்கின் படி பாவ வழியில் நடந்தீர்கள். இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்பொழுது செயலாற்றும் அந்த ஆவிக்குப் பணிந்து இருந்தீர்கள்.
3 இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இருந்தோம். தம்முடைய ஊனியல்பின் இச்சைகளின்படி வாழ்ந்து, அவ்வியல்பும் அதன் நாட்டங்களும் தூண்டியவாறு நடந்து, மற்றவர்களைப் போல நாமும் இயல்பாக இறைவனின் சினத்திற்கு ஆளாகியிருந்தோம்.
4 ஆனால், கடவுள் இரக்கப் பெருக்கமுள்ளவர், அன்புமிக்கவர், நம் குற்றங்களால் நாம் இறந்தவர்களாய் இருந்தபோதிலும்,
5 அவர் நம்மீது கொண்ட பேரன்பினால் கிறிஸ்துவோடு நாம் உயிர்பெறச் செய்தார்.
6 நீங்கள் மீட்புப் பெற்றிருப்பது அருளாலேயே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் அவரோடு உயிர்த்தெழவும், விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.
7 கிறிஸ்து இயேசுவில் இறைவன் நம்மீது காட்டிய பரிவினாலே தம் அளவற்ற அருள் வளத்தை, வரப்போகும் காலங்களில் காண்பிப்பதற்காகவே இவையெல்லாம் செய்தார்.
8 அந்த அருளாலேயே விசுவாசத்தின் வழியாக மீட்பு அடைந்திருக்கிறீர்கள். இது உங்களால் ஆனதன்று; கடவுளின் நன்கொடையே.
9 இது மனித செயல்களால் ஆனதன்று; எனவே, எவனும் பெருமை பாராட்டிக்கொள்ளலாகாது. ஏனென்றால் நாம் இறைவனின் கைவேலையே.
10 நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் முன்னேற்பாடு செய்த நற்செயல்களில் நாம் ஈடுபடுவதற்கே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் படைக்கப்பட்டோம்.
11 எனவே, உங்கள் முன்னைய நிலையை எண்ணிப் பாருங்கள்: பிறப்பால் புற இனத்தாராகத் தானே இருந்தீர்கள். கையால் செய்த விருத்தசேதனத்தை உடலில் மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் உங்களை விருத்தசேதனம் பெறாதவர்கள் என இகழ்ந்தார்கள்.
12 ஒரு காலத்தில் மெசியாவின்றி, இஸ்ராயேலரின் சமுதாயத்தோடு உறவின்றி இருந்தீர்கள்; வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைகளுக்கு அந்நியராகவும் இருந்தீர்கள். நம்பிக்கையற்றவராய் கடவுள் இல்லாதவராய் இவ்வுலகில் இருந்தீர்கள்.
13 ஒரு காலத்தில் தொலைவில் நின்ற நீங்கள். இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடைய இரத்தத்தினால் அருகே கொணரப்பெற்றீர்கள்.
14 ஏனெனில், கிறிஸ்துவே நம் சமாதானம். அவரே யூத இனத்தையும் புறவினத்தையும் ஒன்றாய் இணைத்தார். தடைச் சுவரென நின்ற பகைமையைத் தம் ஊனுடலில் தகர்த்தெறிந்தார்;
15 இவ்விரு இனத்தாரிலிருந்தும் தமக்குள் புதியதொரு மனுக்குலத்தைப் படைத்துச் சமாதானம் செய்யும்படி, பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை வெறுமையாக்கினார்;
16 சிலுவையினால் பகைமையை ஒழித்து, அதன் வழியாக இவ்விருதிறத்தாரையும் ஒரே உடலில் கடவுளோடு ஒப்புரவாக்கும்படியும் இவ்வாறு செய்தார்.
17 அவர் வந்து, தொலைவில் நின்ற உங்களுக்கும் அருகிலிருந்தவர்களுக்கும் சமாதான நற்செய்தியை அறிவித்தார்.
18 அவர் வழியாகவே இருதிறத்தாராகிய நாம் ஒரே தேவ ஆவியில் தந்தையை அணுகும் பேறு பெற்றோம்.
19 எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
20 அப்போஸ்தலர், இறைவாக்கினர் இவர்களை அடிக்கல்லாகவும். கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமாயிருக்கிறீர்கள்.
21 கட்டடம் முழுவதும் அவரில் இசைவாய்ப் பொருந்தி, பரிசுத்த ஆலயமாக ஆண்டவருக்குள் வளர்ச்சி, பெறுகிறது.
22 நீங்களும் அவருக்குள்ளே கடவுளின் ஒரே உறைவிடமாக, தேவ ஆவிக்குள் கட்டுப்பட்டு வருகிறீர்கள்.
அதிகாரம் 03
1 இவற்றை மனத்திற்கொண்டு புற இனத்தாராகிய உங்களை முன்னிட்டு கிறிஸ்து இயேசுவின் கைதியான சின்னப்பன் யான்...
2 உங்கள் நன்மைக்காகக் கடவுள் எனக்களித்த அருளைப் பற்றிய பொறுப்பைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டுத்தானிருப்பீர்கள்.
3 இறைவெளிப்பாட்டின் வழியாய்த் தான் இறைவனின் மறைபொருள் எனக்கு அறிவிக்கப்பட்டது. இம் மறைபொருளைப் பற்றி உங்களுக்குச் சுருக்கமாக மேலே எழுதியுள்ளேன்.
4 அதைப் படித்தீர்களாயின், நான் கிறிஸ்துவின் மறைபொருளை அறிந்து உணர்ந்திருக்கிறேன் என உங்களுக்கு தெரியவரும்.
5 தேவ ஆவியின் வழியாக இறைவன் தம் பரிசத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினருக்கும் இந்த மறைபொருளை இப்பொழுது வெளியாக்கியது போல முந்தின தலைமுறைகளில் மனுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை.
6 நற்செய்தியின் வழியாக கிறிஸ்து இயேசுவுக்குள் புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப் பேற்றுக்கு வாரிசுகள், ஒரே உடலின் உறுப்பினர், வாக்குறுதியில் பங்கு உடையோர் ஆயினர் என்பதே அம்மறை பொருள்.
7 கடவுள் தம்முடைய வல்லமையைச் செயல்படுத்தி எனக்களித்த அவருடைய அருட்கொடைக் கேற்ப, நான் அந்த நற்செய்தியின் பணியாளன் ஆக்கப்பட்டேன்.
8 கிறிஸ்துவின் அளவிட முடியாத செல்வங்களைப் பற்றிய நற்செய்தியைப் புறவினத்தாருக்கு அறிவிக்கவும்.
9 மறைபொருளான திட்டம் எதுவென்று வெளிப்படுத்தவும், இறைமக்கள் அனைவரிலும் மிகச் சிறியேனாகிய எனக்கு அருள் அளிக்கப்பட்டது. பல்வகையாய்ச் செயல்படும் இறை ஞானமானது, தலைமை ஏற்போர்,
10 அதிகாரம் தாங்குவோர் முதலிய விண்ணகத் தூதருக்குத் திருச்சபையின் வழியாய் இப்பொழுது அறிவிக்கப்பட வேண்டுமென்று அனைத்தும் படைத்த கடவுள் இத்திட்டத்தைத் தமக்குள் ஊழூழியாக மறைத்து வைத்திருந்தார்.
11 இதுவே நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்ற இறைவன் ஊழிக்காலமாகக் கொண்டிருந்த கருத்து.
12 கிறிஸ்துவின்மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நாம் நம்பிக்கையோடு இறைவனை அணுக அவருக்குள் துணிவுகொள்கிறோம்.
13 ஆகையால், உங்களுக்காக நான் படும் வேதனைகளைக் கண்டு மனந்தளர்ந்து போகாதவாறு கேட்டுக்கொள்கிறேன், அவ்வேதனைகள் உங்களுக்கு மகிமையே.
14 இவற்றை மனத்திற்கொண்டு விண்ணிலும்,
15 மண்ணிலும் உள்ள ஒவ்வொரு குலத்தவரும் எத்தந்தையிடமிருந்து இறைவனின் பிள்ளைகள் என்ற பெயரைப் பெறுகின்றார்களோ அவர் திருமுன் நான் மண்டியிட்டு மன்றாடுவதாவது:
16 தம்முடடைய மாட்சியின் வளத்திற்கேற்ப, அவருடைய ஆவியினால், உங்கள் உள் மனத்தில் நீங்கள் வலிமையும் ஆற்றலும் பெறும்படி அருள்வாராக.
17 அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிப்படையுமாக அமைவதாக. இவ்வாறு நீங்கள்,
18 இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக் கெட்டாத இந்த அன்பை அறியும் ஆற்றல் பெறுவீர்களாக;
19 கடவுளுடைய முழு நிறைவையும் அடையும் அளவுக்கு நிரப்பப்படுவீர்களாக.
20 நம்மில் செயலாற்றும் வல்லமைக்கேற்றபடி நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிக மேலாகச் செய்ய வல்ல அவருக்கே,
21 திருச்சபையிலும் கிறிஸ்து இயேசுவிலும், தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
அதிகாரம் 04
1 ஆகவே, ஆண்டவருடைய கைதியாகிய நான், உங்களுக்கு அறிவுறுத்துவதாவது: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்.
2 நிறைவான தாழ்ச்சியும் சாந்தமும் பொறுமையும் உள்ளவர்களாய், நடந்து, அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.
3 தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.
4 ஒரே நம்பிக்கையில் பங்கு பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே நம்பிக்கை இருப்பதுபோல், ஒரே உடலும் ஒரே ஆவியும் உண்டு.
5 அவ்வாறே ஒரே ஆண்டவர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்தானம் உண்டு.
6 எல்லாருக்கும் கடவுளும் தந்தையும் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லாரிலும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
7 ஆனால், கிறிஸ்து கொடுக்க விரும்பிய அளவுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டது.
8 ஆகையால் தான், 'அவர் உள்ளத்திற்கு ஏறிச் சென்றபோது பகைவரைக் கைதியாக்கிக் கொண்டு சென்றார்; மனிதர்களுக்குக் கொடைகளை அருளினார்' என்று எழுதியுள்ளது.
9 "ஏறிச் சென்றார்" என்பதனால் முதலில் மண்ணுலகின் கீழ்ப்பகுதிக்கு இறங்கினார் என்று விளங்குகிறதன்றோ.
10 கீழே இறங்கியவர் தான் ஏழு உலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். இங்ஙனம் சென்றது, அனைத்தும் நிறைவு பெறச் செய்வதற்கே.
11 பின்னர், அவர் தம் 'கொடைகளை' அருளிச் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியின் தூதர்களாகவும் ஆயர்களாகவும் போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
12 கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும், திருப்பணிக்குரிய வேலையை முன்னிட்டு இறைமக்களைப் பக்குவப்படுத்தவும் அக்கொடகைளை அளித்தார்.
13 இவ்வாறு, இறுதியாக நாம் எல்லாரும் கடவுளின் திரு மகனைப் பற்றிய விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை எய்துவோம்; கிறிஸ்துவினுடைய முழுப் பருவத்தின் அளவை அடைந்து முதிர்ச்சிபெற்ற மனிதனாவோம்.
14 ஆகவே, இனி நாம் குழந்தைகளாய் இருத்தலாகாது. மனிதருடைய சூழ்ச்சியையும், கைதேர்ந்த ஏமாற்று வித்தையையும் நம்பி, அவர்களுடைய போதனையாகிய காற்றால், அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது.
15 அன்பினாலே உண்மையைப் பற்றிக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும்.
16 இறுக்கிப் பிணைக்கும் தசை நார்களால் உடல் செயலால் முழுமையும் அவர் ஒன்றாய் இணைந்து, இசைவாய்ப் பொருந்தி இருக்கிறது. அதனால், ஒவ்வொரு உறுப்பும் அதனதன் அலுவலுக்கேற்பச் செயல்படுவதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பினால் கட்டடமாக எழும்புகிறது.
17 எனவே ஆண்டவருக்குள் நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூறுவதாவது. புற இனத்தார் நடப்பதுபோல் இனி நீங்கள் நடக்கலாகாது. அவர்கள் மனத்தில் தோன்றும் எல்லா வீண் எண்ணங்களையும் பின்பற்றி வாழ்கின்றனர்.
18 அவர்களுடைய அறிவு இருளடைந்து உள்ளம் மழுங்கியதால் அவர்களுக்கு ஏற்பட்ட அறியாமையால், கடவுள் தரும் உயிரோடு தொடர்பின்றி வாழ்கின்றனர்.
19 உள்ளம் மரத்துப்போனவர்களாய், தீராத இச்சைக்கு உட்பட்டு, எல்லா வகையான அசத்த செயல்களையும் செய்ய, காமவெறிக்குத் தங்களையே கையளித்துவிட்டனர்.
20 ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு கற்றறியவில்லை.
21 உங்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கப்பட்டதும், போதிக்கப்பட்டதும் அவரில் அடங்கியுள்ள உண்மைக்கு ஏற்ப இருந்ததன்றோ?
22 அதன்படி உங்களுடைய முந்தின நடத்தையை விட்டுவிட்டு, தீய இச்சைகளால் ஏமாந்து பாழ்பட்டுப் போகும் பழைய இயல்பைக் களைந்துவிடுங்கள்;
23 உள்ளத்தின் ஆழத்தில் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்;
24 உண்மையால் ஏற்படும் நீதியிலும் புனிதத்திலும் கடவுள் சாயாலாகப் படைக்கப் பட்ட புதிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.
25 ஆகையால், பொய்யை விலக்கி, ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள். ஏனெனில், நாம் ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.
26 சினம்கொண்டாலும் பாவத்திற்காளாகாதீர்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.
27 அலகைக்கு இடம் கொடாதீர்கள். திருடன் இனித் திருடாமலிருக்கட்டும்.
28 மாறாக, வறியவர்களுக்கு உதவக்கூடிய முறையில், நேர்மையோடு கையால் பாடுபட்டு உழைக்கவேண்டும்.
29 தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும். கேட்போருக்கு அருட் பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளையே சொல்லுங்கள்.
30 கடவுளின் பரிசுத்த ஆவிக்கு வருத்தம் விளைவிக்காதீர்கள். ஏனெனில், அவர் மீட்பின் நாளை முன்னிட்டு உங்களுக்குத் தம் முத்திரையிட்டிருக்கிறார்.
31 மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல், பழிச்சொல் ஆகிய அனைத்தும் உங்களை விட்டொழியட்டும். எல்லா வகையான தீய மனமும் நீங்கட்டும்.
32 ஒருவருக்கொருவர் பரிவும், இரக்கமும் காட்டுங்கள், கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.
அதிகாரம் 05
1 ஆகவே, அன்புப் பிள்ளையாய், நீங்கள் கடவுளைப்போல் ஒழுக முயலுங்கள்.
2 கிறிஸ்து தம்மையே கடவுளுக்கு நறுமணம் வீசும் காணிக்கையும் பலியுமாக நம்மை முன்னிட்டுக் கையளித்து உங்கள் மேல் அன்பு கூர்ந்தது போல், நீங்களும் அன்பு கொண்டு ஒழுகுங்கள்.
3 கெட்ட நடத்தை. அசுத்தம், பொருளாசை முதலியவற்றின் பெயர் முதலாய் உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.
4 நாணங்கெட்ட பேச்சு, மூடச்சொல் பகடித்தனம் முதலியன வேண்டாம். இவையெல்லாம் சரியல்ல; 'நன்றி கூருதலே தகும்.
5 ஏனெனில், கெட்ட நடத்தையுள்ளவன், காமுகன், சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான். இது உங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கட்டும்.
6 வீண் வார்த்தைகளால் யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். எனெனில், இவையே இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்கள் மீது அவருடைய சினத்தை வரவழைக்கின்றன.
7 ஆகவே நீங்கள் அவர்களோடு ஒன்றும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்பொழுது ஆண்டவருக்குள் ஒளியாய் இருக்கிறீர்கள் ஒளியின் மக்களாக நடந்துகொள்ளுங்கள்.
9 ஒளியின் கனிகளோ நன்மை, நீதி, உண்மை.
10 ஆண்டவருக்கு உகந்தது எது என்று உய்த்துணருங்கள்.
11 இருளின் பயனற்ற செயல்களைச் செய்பவர்களோடு சேர வேண்டாம்; அவை தவறெனக் காட்டுங்கள்.
12 மறைவில் அவர்கள் செய்வதெல்லாம் சொல்லக்கூட வெட்கமாயிருக்கிறது.
13 ஒளியானது அவை அனைத்தும் தவறெனக் காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது.
14 அவ்வாறு வெளியாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. எனவேதான், 'தூங்குபவனே எழுந்திரு. இறந்தோரினின்று எழுந்து நில். கிறிஸ்து உன்மேல் ஒளிர்ந்தெழுவார்.' என்றுள்ளது,
15 ஆகையால், உங்கள் நடத்தையைப் பற்றிக் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் நடக்காமல் ஞானிகளாக நடந்து கொள்ளுங்கள்.
16 நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; இது பொல்லாத காலம்.
17 எனவே, அறிவிலிகளாய் இராமல் ஆண்டவருடைய திருவுளம் யாது என அறிந்துணருங்கள்.
18 குடிமயக்கத்திற்கு இடங்கொடாதீர்கள். அதனால் ஒழுக்கக் கேடுதான் விளையும்.
19 தேவ ஆவியிலே நிறைவு பெறுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்கள், புகழ்ப்பாக்கள், பாடல்கள் இவற்றைக் கொண்டு உரையாடி, ஆண்டவருக்கு உளமார இசை பாடிப் புகழுங்கள்.
20 இங்ஙனம், கடவுளும் தந்தையுமானவருக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், அனைத்திற்காகவும் எந்நேரமும் நன்றி கூறுங்கள்.
21 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22 மனைவியரே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல் உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல் கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். 'கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர்.
24 அந்தத் திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல் மனைவியரும் கணவர்க்கு அனைத்திலும் பணிந்திருந்தல் வேண்டும்.
25 கணவர்களே 'கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.
26 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார்.
27 அத்திருச்சபை கறைதிரையோ வேறு எக்குறையோ இன்றி, பரிசுத்தமும் மாசற்றதுமாய்த் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்ய வேண்டுமென்று அவர் திருவார்த்தையாலும் முழுக்கினாலும் அதைத் தூயதாக்கிப் பரிசுத்த மாக்குவதற்குத் தம்மைக் கையளித்தார்.
28 அவ்வாறே கணவர்களும் தம் மனைவியரைத் தம் சொந்த உடலெனக் கருதி அவர்களுக்கு அன்பு செய்யவேண்டும். மனைவிக்கு அன்பு காட்டுபவன் தனக்கே அன்பு காட்டுகிறான்.
29 தன்னுடைய உடலை எவனும் என்றும் வெறுப்பதில்லை; எவனும் அதைப் பேணி வளர்க்கிறான், கிறிஸ்துவும் அவ்வாறே திருச்சபையைப் பேணி வளர்க்கிறார்.
30 எனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.
31 "அதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான், இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள்."
32 இதில் அடங்கியுள்ள மறையுண்மை பெரிது. இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பொருந்தும் என்று நான் சொல்லுகிறேன்.
33 சுருங்கக் கூறின், உங்களுள் ஒவ்வொருவனும் தன் மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவியின்மீது அன்பு காட்டுவானாக. மனைவியும் தன் கணவனுக்கு அஞ்சி நடப்பாளாக.
அதிகாரம் 06
1 பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இதுவே முறை.
2 "தாய் தந்தையைப் போற்று" என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது.
3 "அப்போது மண்ணுலகில் நீ நலம்பெறுவாய், நீடூழி வாழ்வாய்" என்பது அவ்வாக்குறுதி.
4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சினமூட்டாதீர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.
5 அடிமைகளே கிறிஸ்துவுக்கே கீழ்ப்படிவது போல், இவ்வுலகத்தில் உங்கள் தலைவராய் இருப்போருக்கு, அச்ச நடுக்கத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் கீழ்ப்படிந்திருங்கள்.
6 மனிதர்களுக்கு உகந்தவராகலாம் என்று, கண்முன் மட்டும் உழைப்பவர்களாய் இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை நெஞ்சாரா நிறைவேற்றுங்கள்.
7 மனிதருக்குச் செய்வது போலன்றி, கடவுளுக்கே செய்வதுபோல், உற்சாகத்தோடு ஊழியம் செய்யுங்கள்.
8 அடிமையாயினும் உரிமையுள்ளவனாயினும் நன்மை செய்யும் ஒவ்வொருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்; இது உங்களுக்குத் தெரியுமன்றோ?
9 தலைவர்களே, நீங்களும் அடிமைகள் மட்டில் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள், அவர்களை மிரட்டுவதை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தலைவர் வாகனத்தில் இருக்கிறார் என்பதும், அவர் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதும் நீங்கள் அறியாததன்று.
10 இறுதியாக, ஆண்டவரில் அவர் தரும் வலிமைமிக்க ஆற்றலால் உறுதி பெறுங்கள்.
11 அலகையின் வஞ்சகத் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை அணிந்து கொள்ளுங்கள்.
12 ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம்.
13 எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றியடைந்து நிலை நிற்க வலிமை பெறும்படி, கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
14 ஆகையால் உண்மையை உங்கள் இடைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு நீதியை உங்கள் மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள்.
15 சமாதான நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை உங்கள் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
16 எந்நிலையிலும் விசுவாசமாகிய கேடயத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இதைக்கெண்டு நீங்கள் தீயவனின் தீக்கணைகளை அவிக்க முடியும்.
17 மீட்பையே தலைச்சீராவாகத் தாங்கி,கடவுளின் சொல்லைத் தேவ ஆவி தரும் போர்வாளாக ஏந்திக்கொள்ளுங்கள்.
18 செபிப்பதிலும் மன்றாடுவதிலும் நிலையாய் இருங்கள். தேவ ஆவியால் ஏவப்பட்ட எவ்வேளையிலும் செபியுங்கள். இதன்பொருட்டு, சோர்வுறாமல் விழிப்பாய் இருங்கள்.
19 இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் நான் பேசும்போது நற்செய்தியின் மறை பொருளைத் துணிவுடன் வெளிப்படுத்தவதற்கு இறைவன் வார்த்தையை எனக்கு அளிக்கும் படி எனக்காகவும் மன்றாடுங்கள்.
20 இந்த நற்செய்திக்காகவே நான் சிறைப்பட்ட தூதுவனாக இருக்கிறேன். பேச வேண்டிய முறையில், நான் அதைத் துணிவோடு எடுத்துரைக்க எனக்காக வேண்டுங்கள்.
21 என் நிலைமை எப்படி இருக்கிறது என்னும் செய்திகளையெல்லாம் நீங்கள் அறிய விரும்புவீர்கள். எல்லாவற்றையும் அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு உங்களுக்கு அறிவிப்பார். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய பணியாளர்.
22 எங்களைப்பற்றி உங்களுக்கு அறிவித்து உங்களைத் தேற்றுவதற்கென்றே அவரை உங்களிடம் அனுப்பினேன்
23 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் சமாதானமும் சகோதரர்களுக்கு உண்டாகுக!
24 அழியா வாழ்வில் பங்கு பெற்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு செலுத்தும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!