செல்வமாதா (கப்பல் மாதா) ஆலயம்
இடம் : உவரி
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்.
பங்கு : உவரி ( புனித அந்திரேயாஆலயம்)
பங்கின் மொத்த ஆலயங்கள் : 4
திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் : இவோன் அம்புரோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி தோம்னிக் அருள் வளன்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஹிபாகர்.
திருவிழா:
கொடியேற்றம் -
செப்டம்பர் மாத கடைசி வெள்ளி
மாலை ஆராதனை -
அக்டோபர் மாத முதல் சனி
திருவிழா கூட்டு திருப்பலி-
அக்டோபர் மாத முதல் ஞாயிறு
திருப்பலி :
மாதத்தின் இரண்டாம் சனி
காலை 06.00 மணி - திருப்பலி
மாலை 06.30 மணி - மாதா திருஉருவ பவணி + நற்கருணை ஆசீர்
ஜெபமாலை :
தினமும் மாலை 06:00 மணி
வரலாறு:
உவரியில் பங்கு குருவாக பணியாற்றிய பேரருட்திரு அந்தோணி சூசை நாதர் சுவாமிகள் உவரிக்கு ஒரு மாதா சொரூபம் வேண்டுமென்று உரோமைக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடைய உடன் பிறந்த சகோதரி உரோமையில் கன்னியாஸ்திரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரோமையில் ஒரு மாதா சொரூபம் வாங்கி கடல்மார்க்கமாக அனுப்பி வைத்தார். அனுப்பி வைக்கும் போது அந்த சொரூபம் வைக்கப்பட்டிருந்த பேழையில் புனித செல்வ மாதா என்றும் அது உவரிக்கு செல்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அந்தோணி சூசை நாதரின் சகோதரி அனுப்பிவைத்த மாதா சொரூபம் வைக்கப்பட்டு, பேழையை கொண்டு வந்த கப்பல் இந்தப் பகுதிக்கு வரும் பொழுது தற்செயலாக கூடுதாழை மீனவர்களிடம் அப்பேழையானது கிடைக்கிறது. கூடுதாழை மக்கள் அந்த பேழையை திறந்து பார்க்கும் போது அதில் ஒரு மாதா சொரூபம் இருந்தது. அதில் உவரிக்கு செல்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. எனவே கூடுதாழை மக்கள் உடனடியாக உவரி மக்களுக்கு செய்தி அனுப்புகின்றனர். உவரி பங்குத்தந்தை மற்றும் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே உவரியில் புனித அந்திரேயா ஆலயம் மற்றும் புனித அந்தோணியார் ஆலயம் இருப்பதாகவும் அந்த மாதா சொரூபத்தை கொண்டு வந்து எங்கு வைப்பது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ஊரின் கீழக்கரையில் அமைக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரி இல்லத்தில் இருந்து கன்னியர்கள் வந்து அந்த சொரூபத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தாங்கள் கன்னியர் இல்லத்தில் ஒரு பீடம் அமைத்து அந்த சொரூபத்தை வைத்து தினமும் ஜெபமாலை மற்றும் வழிபாடுகள் நடத்துவதாகவும் கூறினர். உடனே ஊர் பெரியவர்கள் அனைவரும் பங்குத்தந்தை தலைமையில் கூடுதாலைக்கு சென்று அந்த சொரூபத்தை கொண்டு வந்து கன்னியர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியர் இல்ல வளாகத்திற்குள் ஒரு சிறிய மலை கெபி அமைத்து கன்னியர்கள் அந்த சொரூபத்தை அங்கு வைத்து தினமும் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
18-09-1919 ஆம் ஆண்டு உவரியின் சரிதையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனித நாள் இந்நாளில் தான் உவரியின் கீழக் கரையில் அமைந்திருந்த கன்னியர் இல்லத்தில் கொலுவீற்றிருந்த அன்னை செல்வ மாதா ஒரு பேரொளி மூலம் புதுமை புரிந்து தனது மகிமையை வெளிப்படுத்த திருவுளம் கொண்டாள். இது பற்றிய குறிப்பு இன்றும் உவரி கன்னியர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேரேட்டில் காணமுடிகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கடல் அரிப்பால் கன்னியர் இல்லம் சிதைவுற ஆரம்பித்தது. எனவே புதியதாக ஒரு கன்னியர் இல்லம் ஊரின் வடக்கு பகுதிக்கு அதாவது இப்பொழுது கன்னியர் இல்லம் இருக்கும் இடத்திற்கு மாற்றம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த மலையை கெபியையும் சொரூபத்தையும் அங்கேயே மக்களின் ஜெப வழிபாட்டிற்காக விட்டு சென்றுவிட்டனர். அந்த கெபி இருந்த இடத்தில் கடலரிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் மாலை 06.00 மணி அளவில் அந்த இடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்வது வழக்கமாகியது. கோயில் கட்டும் பணியைத் தொடங்குவதற்கு ஆலயத்தை எவ்வாறு வடிவமைக்கலாம் என்று ஊர் பெரியவர்கள் ஆலோசித்தார்கள். அப்போது மார்டின் ஆசிரியர் ஒரு வித்தியாசிமான வடிவத்தை கூறினார். அந்த வித்தியாசமான வடிவம் தான் விமானம் தாங்கிய கப்பல் ஆலயம்.
ஏன் இந்த விமானம் தாங்கிய கப்பல் வடிவத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என்று மார்டின் ஆசிரியர் கொடுத்த விளக்கம் அனைவரையும் கவர்ந்தது. அது என்னவென்றால் நாம் அனைவரும் கடல் தொழில் செய்யும் மக்கள் எனவே கீழே இருக்கும் கப்பல் நமது மக்களை குறிப்பதாகும். மேலும் நாம் அனைவரும் மண்ணுலகில் வாழ்கிறோம். எனவே மண்ணுலகை குறிக்க கப்பலையும், விண்ணுலகில் ஆண்டவராகிய கடவுள் இருக்கிறார். விண்ணுலகை குறிக்க விமானத்தையும் அமைத்து இரண்டையும் இணைக்கும் பாலமாக அதாவது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பாலமாக அன்னை மரியாள் இருக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் நடுநாயகமாக ஒரு மாலுமியாக மாதாவின் சொரூபத்தை வைக்க வேண்டும் என்றார். 25-01-1970 -ஆம் ஆண்டு அருட்தந்தை சார்லஸ் பெர்னாண்டோ அவர்கள் பங்கு தந்தையாக இருந்த போது புதிய ஆலயத்திற்கு மேதகு ஆயர் தாமஸ் பெர்னாண்டோ அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலய திருப்பணி நிறைவுற்று 05-02-1974 - ஆம் ஆண்டு அருட்தந்தை பீட்டர் ராயன் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த போது மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.
எறக்குறைய 26 ஆண்டுகளுக்கு பிறகு விமான பகுதி சிறிது சிதைவடைந்த காரணத்தினால் 2000-ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இருதயராஜ் பெர்னாண்டோ அடிகளார் விமான பகுதியை மாற்ற அடிக்கல் நாட்டினார். 2001- ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட விமான பகுதி மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.
இந்த ஆலயம் ஏனைய ஆலய பாணியிலிருந்து விலகி புதிய முறையில் முற்றிலும் வேறுபட்ட வகையில் கப்பலில் ஆகாய விமானம் தாங்கி இருப்பது போல அமைந்தது மக்கள் அனைவரும் தன்பால் ஈர்த்து வருகிறது. எனவே தான் இக்கோவில் கப்பல் கோவில் என்று சுற்றுலாப் பயணிகளும் ஊர் மக்களாலும் அழைக்கப்படுகிறது.