மரியன்னையின் திருக்காட்சிகள் பாகம்-11 ***


குவாதலூப்பே அன்னை திருக்காட்சி நிறைவுப்பகுதி

அடுத்த நாளும் ஆயரிடம் சென்று தனது ஆவலைத் தெரிவிக்குமாறு பணித்தார் அன்னை மரியா. அதேபோல் தியெகோ ஆயரிடம் சென்று சொன்னதும், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு ஆயர் தியெகோவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே தியெகோ அன்னைமரியாவிடம் நடந்தததைச் சொன்னார். அன்னைமரியாவும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் தியெகோவின் மாமா யுவான் பெர்னார்தினோ, திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை.

இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி திருவருட்சாதனம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஒரு குருவை அழைக்கச் சென்றார் தியெகோ. அப்போது அன்னைமரியா, தியெகோவைச் சந்திப்பதற்காக தேபியாக் குன்றின் அடியில் இருந்த சாலையில் தியெகோவுக்கு காட்சியளித்து அவரின் மாமா நலமைடைவார், இறக்கமாட்டார் எனவும், உடனே தான் முன்னர் மூன்று முறை காட்சியளித்த தேபியாக் குன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார்.

இந்தப் பாறைக் குன்றின் உச்சியில் எந்தப் பூக்களும் பூக்க வாய்ப்பில்லை என்பது தியெகோவுக்குத் தெரிந்திருந்தும் அங்குச் சென்றார். அங்கு அழகிய பூந்தோட்டம் இருப்பதைக் கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து வந்து அன்னை மரியாவிடம் கொடுத்தார். அந்தப் பூக்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக்கொடுத்து அதை ஆயரிடம் கொண்டுபோகச் சொன்னார் அன்னை மரியா. ஆயரை நம்ப வைக்க, தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.

தியெகோ அப்போது ஆயராக நியமனம் செய்யப்பட்டிருந்த ஃப்ரே யுவான் தே சுமாராங்காவின் முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அதிலிருந்து மலர்கள் கொட்டின. ஆனால் ஆயர் மற்றும் தியெகோவின் கண்களையே நம்ப முடியாத வகையில் தியெகோவின் மேற்போர்வையில் அழகிய அன்னைமரியாவின் உருவம் பதிந்திருந்தது. தியெகோ எப்படி வருணித்திருந்தாரோ அதேமாதிரியான உருவம் அதில் இருந்தது. அதேநாளில் அன்னை மரியா, தியெகோவின் மாமா யுவான் பெர்னார்தினோவுக்கும் தோன்றி நல்ல சுகம் அளித்தார். பெர்னார்தினோ, தனக்கு நடந்த புதுமையையும் ஆயரிடம் கூறுமாறு அன்னைமரியா சொல்லியிருந்ததை தியெகோவிடம் சொன்னார். அத்துடன் தனது இந்த உருவத்தை “குவாதலூப்பே அன்னை” என்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னைமரியா சொல்லியிருந்தார். 

இன்றளவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அன்னைமரியா, இப்பெயரிலேயே இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்.