இன்றைய புனிதர் - ஜனவரி 12 - புனிதர் பெனடிக்ட் பிஸ்காப் ***


புனிதர் பெனடிக்ட் பிஸ்காப்

(St. Benedict Biscop)

ஆங்கிலோ-சாக்சன் மடாதிபதி மற்றும் நிறுவனர்:

(Anglo-Saxon Abbot and Founder)

பிறப்பு: கி.பி. 628

நார்தும்ப்ரியா

(Northumbria)

இறப்பு: ஜனவரி 12, 690

செயிண்ட் பீட்டர்ஸ், வேர்ல்மவுத் (சுந்தர்லேண்ட்)

(St. Peter's, Wearmouth (Sunderland)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

இங்கிலாந்து திருச்சபை

(Church of England)

மரபுவழி திருச்சபை

(Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜனவரி 12

பாதுகாவல்:

ஆங்கிலேய பெனடிக்டைன்ஸ், இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், சுண்டர்லேண்ட் நகரம், நார்த்தும்பர்லேண்டிலுள்ள புனித பெனடிக்ட் பிஸ்கொ கத்தோலிக்க அகாடமி

"பெனடிக்ட் பிஸ்காப்" (Benedict Biscop) என்றும், "பிஸ்காப் படூசிங்" (Biscop Baducing) என்றும் , அறியப்படும் இப்புனிதர், ஒரு "ஆங்கிலோ ஸாக்ஸன்" மடாதிபதியும் (Anglo-Saxon abbot), இங்கிலாந்து (England) நாட்டின் "நார்தும்ப்ரியா ராச்சியத்திலுள்ள" (Kingdom of Northumbria) "மோன்க்வியர்மவுத்-ஜரோ மடாலய" (Monkwearmouth–Jarrow Abbey) நிறுவனருமாவார்.

நார்தும்பரியன் பிரபுக்கள் குடும்பமொன்றில் பிறந்த பெனடிக்ட், தமது வாழ்நாளில் ஐந்து தடவை ரோம் நகருக்கு திருயாத்திரை சென்றிருக்கிறார். தமது முதல் திருயாத்திரையை தமது 25வது வயதில், தமது நண்பரான "புனிதர் மூத்த வில்ஃபிரிட்" (Saint Wilfrid the Elder) என்பவருடன் சென்றார். எனினும், வழியில், ஃபிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான "லியோனில்" (Lyon) வில்ஃபிரிட் தங்கிவிடவே, பெனடிக்ட் தமது பயணத்தை தனியே தொடர்ந்தார். பெனடிக்ட் இங்கிலாந்துக்கு திரும்பி வருகையில், ஆங்கிலேய திருச்சபையின் நன்மைக்காக ஆர்வமும், உற்சாகமும் நிறைந்திருந்தார்.

சரியாக பன்னிரெண்டு வருடங்கள் கழித்து இரண்டாம் தடவையாக ரோம் பயணித்த பெனடிக்ட், இம்முறை "அரசன் ஓஸ்வியு" (King Oswiu) என்பவரின் மகனான "அல்ச்ஃபிரித்" (Alchfrith of Deira) என்பவரை உடன் அழைத்துச் சென்றார். இந்த தமது பயணத்தில், அவர் "ஹெக்ஸம்" ஆயரும் (Bishop of Hexham), நார்தும்பரியன் புனிதருமான "அக்கா" (Acca of Hexham) என்பவரையும், ஆங்கிலேய ஆயரும் (English Bishop), புனிதருமான "வில்ஃபிரிட்" (Wilfrid) என்பவரையும் சந்தித்தார். இம்முறை, ரோம் நகரிலிருந்து இங்கிலாந்து திரும்பும் பயணத்தின்போது, "புரோவென்ஸ் மத்தியதரைக் கடலோரப் பகுதியின்" (Mediterranean coast of Provence) "லெரின்ஸ்" (Lérins) எனும் துறவியர் தீவில் (Monastic Island) தங்கினார். அங்கே அவர் தங்கியிருந்த கி.பி. 665ம் ஆண்டு முதல் கி.பி. 667ம் ஆண்டு வரையான இரண்டு வருட காலம் போதிப்பதற்கான வழிமுறைகளை கற்றுக்கொண்ட அவர், துறவரத்துக்கான சத்திய பிரமாணங்களை ஏற்றுக்கொண்ட அவர், பெனடிக்ட் என்ற பெயரையும் ஏற்றுக்கொண்டார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெனடிக்ட், "லெரின்ஸ்" (Lérins) தீவிலிருந்தே ரோம் நகருக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்டார். இம்முறை அவர், கி.பி. 669ம் ஆண்டு, "காண்டர்பரி" (Canterbury) திரும்பிச் செல்லும் "பேராயர் தியோடோர்" (Archbishop Theodore of Tarsus) என்பவருடன் துணையாகச் செல்லுமாறு திருத்தந்தையால் பணிக்கப்பட்டார். "காண்டர்பரி" திரும்பியது, பேராயர் அவரை அங்குள்ள "தூய அகுஸ்தினார் மடாலயத்தின்" (St Augustine's Abbey) மடாதிபதியாக நியமித்தார். இப்பதவியில் அவர் இரண்டு வருடங்கள் நீடித்தார்.

புத்தகங்களைப் பெரிதும் விரும்பும் பெனடிக்ட், அவரது பயணத்தின்போது ஒரு நூலகத்துக்கான புத்தகங்களை ஒன்றுதிரட்டினார். ரோமுக்குச் சென்ற இரண்டாவது பயணம் ஒரு புத்தகம் வாங்கிய பயணமாக அமைந்தது. மொத்தத்தில், இந்த சேகரிப்பு கிட்டத்தட்ட 250 தலைப்பிலான புத்தகங்களை -  பெரும்பாலும் சேவை புத்தகங்களைக் கொண்டிருந்தது. இந்நூலகம், இறையியல் மற்றும் பண்டைய இலக்கியம் மற்றும் மதச்சார்பற்ற படைப்புகளை உள்ளடக்கியிருந்தது.

கி.பி. 674ம் ஆண்டு, நார்தும்ப்ரியா அரசனான "எக்ஃபிரித்" (Ecgfrith of Northumbria), துறவு மடாலயம் கட்டுவதற்கான நிலத்தை பெனடிக்டுக்கு வழங்கினார். பெனடிக்ட், தமது நூலகத்துக்கான புத்தகங்களையும், புனிதர்களின் நினைவுச்சின்னங்களையும் கொண்டு வருவதற்காகவும், புதிதாய் கட்டப்படவுள்ள மடாலயத்துக்கான கல் தச்சர், கண்ணாடிப் பணியாளர் ஆகியோரை அழைத்து வருவதாகவும், தமது மடாலயத்துக்கான சில சிறப்பு சலுகைகளை "திருத்தந்தை அகத்தோ" (Pope Agatho) அவர்களிடமிருந்து வாங்குவதற்காகவும், ரோம் நகருக்கான தமது கடைசி மற்றும் ஐந்தாவது திருப்பயணத்தை கி.பி. 679ம் ஆண்டு தொடங்கினார். தாம் தமது ஐந்து வெளிநாட்டுப் பயணங்களில் சேகரித்த அனைத்தையும் தமது நூலகத்தில் இருப்பு வைத்தார்.

பெனடிக்ட், தமது கடைசி மூன்று வருடங்களை நோய்ப்படுக்கையில் கழித்தார். அவர் மிகுந்த பொறுமையுடன் விசுவாசத்துடன் துன்பத்தை அனுபவித்தார். அவர் கி.பி. 690ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12ம் நாளன்று, இறைவனில் மரித்தார்.