அன்னை வேளாங்கன்னி திருக்காட்சி
இயேசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தோன்றிய இடங்களின் பெயரால், லூர்து மாதா, பாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டுதல் செய்யும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார்.
தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
அன்னை மரியா, பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார். வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது. அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார்.
அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்.