காந்தள் குருசடி திருத்தலம்
இடம் : உதகை (ஊட்டி)
மாவட்டம் : நீலகிரி
மறை மாவட்டம் : உதகை.
நிலை : திருத்தலம்
திருத்தல அதிபர் : அருட்பணி அமிர்தராஜ்.
திருப்பலி நேரங்கள் :
சனி, ஞாயிறு : காலை 07.30 மணிக்கு
தினமும் காலை 07.00 மணிக்கு.
வெள்ளிக்கிழமை : காலை 07.30, காலை 10.30 மற்றும் மாலை 06.00 மணி.
திருவிழா : செப்டம்பர் 13 மற்றும் மே 3.
சிறப்பு : இயேசு சுமந்த உண்மையான திருச்சிலுவையின் ஒரு பகுதி இங்கு வைக்கப்பட்டுள்ளது.
வரலாறு :
“தென்னகத்தின் கல்வாரி ஒரு அதிசய ஆலயம்”
நீலகிரியின் ஒரு முக்கியமான ஆன்மீக இடம் "குருசடி" திருத்தலம். உலகத்தில் இந்த இடம் ஒரு முக்கியமான இடம் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.
ஊட்டி நகரில் இருந்து மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் காந்தள் என்ற பகுதியின் கடைக்கோடி இடத்தில் அமைதியான சூழ்நிலையில் குருசடி திருத்தலம் அமைந்துள்ளது .
இந்த திருத்தலத்தின் முக்கியத்துவமே இங்கு வீற்றிருக்கும் பிரமாண்டமான சிலுவையும் மற்றும் இயேசு கல்வாரி மலையில் சுமந்து சென்ற சிலுவையின் ஒரு சிறிய துண்டு இந்த ஆலயத்தில் சிலுவை வடிவில் வைத்திருப்பது தான்.
வருடந்தோறும் மே மாதம் மூன்றாம் தேதி இந்த ஆலயத்தின் திருவிழா மிக சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழா நடத்தப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது .
1939 ஆம் ஆண்டு மே மூன்றாம் நாள் இயேசு சுமந்து சென்ற உண்மையான சிலுவையின் ஒரு பகுதியை வத்திகானின் இந்திய தூதர், இந்த திருத்தலத்தை நிறுவிய குரு பால் கிரேஸாக் என்பவரிடம் ஒப்படைத்து இந்த ஆலயத்தில் கட்டப்பட்ட குகை கோயிலில் ஒரு சிலுவைனுள் பொருத்தி புனித படுத்தி வைத்தனர்.
இந்த சிலுவை தான் இன்றளவும் இறைமக்களால் வணங்கப் பட்டு வருகிறது.
இந்த அதிசய திருத்தலம் முதன்முதலில் அன்றைய செயின்ட் மேரிஸ் ஆலயத்தின், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பங்குத்தந்தை அருட்தந்தை பால் கிரேஸாக் அவர்கள் 1927 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ஐந்து ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பெற்று ஒரு கல்லறை தோட்டத்தை அமைத்தார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆளுயர இயேசுவின் உருவத்துடன் ஒரு சிலுவையை வரவைத்து அதே வருடம் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அன்றைய மைசூர் ஆயர் *மேதகு டௌர்னியர்* என்பவரால் புனிதப் படுத்தி திருச்சிலுவையை ஒரு பாறையின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக பிரான்ஸ் நாட்டில் கல்லறை தோட்டங்களின் நடுப் பகுதில் ஒரு பெரிய சிலுவை வைப்பது வழக்கப். அது போல தான் இந்த சிலுவையும் வைக்கப்பட்டதாம் .
அந்த திருச்சிலுவை அனைத்து மத மக்கள் வந்து ஜெபிக்கும் இடமாக மாறிவிட்டது . காலப்போக்கில் பல புதுமைகள் நடந்ததின் பேரில் நீலகிரி மக்களை மட்டுமல்லாமல் கோவை, மும்பை, கோவா, கேரளா, பெங்களூர் மற்றும் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருக்க, இந்த திருச்சிலுவை அமைந்த கல்லறை தோட்டத்தை அருட்பணி பால் க்ரேசாக் ஒரு புனித திருத்தலமாக மாற்றி அமைத்தார் .
வெள்ளி கிழமைகளில் இந்த சிலுவை இருந்த திருத்தலத்தில் பக்தர்கள் குவிய துவங்கிவிட்டனர்.
1935 ஆம் ஆண்டு மே மூன்றாம் தேதி இந்த அதிசய சிலுவை முன் சிறப்பு திருப்பலியை அருட்பணி பால் கிரேஸாக் நிறைவேற்றினார். அப்பொழுது பத்தாயிரம் பக்தர்கள் நீலகிரி மட்டுமல்லாமல் கீழ்ப்பிரதேசமான கோவை, மைசூர் என்று வருடந்தோறும் குவிய ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த கல்லறை தோட்டமே ஒரு ஆலயமாக உருவாகியது. ஒரு ஆலயம் கட்டப்பட்டு ஒரு தனிப் பங்காக செயல் பட்டு வருகிறது .
இந்த திருத்தலத்தின் வளர்ச்சியினை பிரபலப்படுத்த பங்குத்தந்தை அருட்தந்தை பால் கிரேஸாக் குருசடியின் குரலொலி என்ற மாத இதழை ஆங்கிலத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் இந்த திருத்தலத்தை பற்றி வெளிப்படுத்தினார்.
தமிழிலும் வெளிவந்த அந்த இதழ் நாளடைவில் மறைந்து போனது ஒரு வருத்தமான ஒன்று என்று கூறுகிறார்கள்.
இந்த திருத்தலத்தை நிறுவிய அருட்தந்தை பால்கிரேஸாக் அவர்களை நொண்டி சாமியார் என்று இப் பகுதி மக்கள் அழைத்தனர். காரணம் முதல் உலகப் போர் நடந்த போது இந்த பாதிரியார் தன் தாய் நாடான பிரான்ஸ் நாட்டிற்காக போராடச் சென்று போரில் ஈடுபட்டு, தன் வலது காலை குண்டடியில் இழந்து இந்தியாவிற்கு வந்து சேவை செய்தவர் என்பது குறிப்பிட தக்கது.
அருட்பணி கிரேஸாக் அவர்கள் வயதாகி பெங்களூருவில் ஓய்வில் இருந்து பின் 1964 ல் இறந்து போனார் .
பின்னர் 1984 ஆம் வருடம் அப்பொழுது ஊட்டி ஆயராக இருந்த சென்னை மயிலை பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ் பால் க்ரேசாக்கின் உடலை தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவின் பெயரில் ஊட்டி எடுத்து வந்து குருசடியில் உள்ள அதிசிய சிலுவையின் அடியில் அடக்கம் செய்து வைத்துள்ளார் .
தற்போது இந்த திருத்தலம் உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் தலைமையில் செயல் பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள புனித தெரசா ஆலயத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. பின்னர் சமீபத்தில் குருசடி ஒரு தனிப் பங்காக செயல் பட்டு வருகிறது .
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி அமிர்தராஜ் அவர்கள் கூறியதாவது : “ இந்த அற்புத ஆலய திருத்தலத்தில் பணி புரிவது என்பது ஒரு பெரிய விஷயம் மட்டுமல்லாமல் ஒரு பாக்கியம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து இந்த குருசடி திருத்தலத்திற்கு வந்து போவது உண்டு. அதிலும் என் அப்பா துரைசுவாமி அம்மா பிரேமா என்னை திருவிழாவிற்கு அவசியம் அழைத்து வருவார்கள். அப்பொழுது நிறைய கூட்டம் இருக்கும். சாப்பாடு எல்லாம் செய்து கொண்டு இங்கு வந்து திருப்பலி பார்த்துவிட்டு ஜெபித்தவுடன் உணவு உண்டு மாலை தான் போவோம். நான் வளர்ந்தவுடன் இந்த சிலுவையின் மகிமையை உணர முடிந்தது. நான் ஒரு குருவாக இதே ஆலயத்தில் பணி புரிய வருவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை. பங்கு குருவாக இங்கு வந்தவுடன் யாரோ என்னை கை பிடித்து அழைத்து வந்தது போல உணர்ந்தேன்.
இந்த பெரிய திருச்சிலுவை முன் நின்றபொழுது நான் தான் உன்னை அழைத்து வந்துள்ளேன் உன் பணியை துவங்கு " என்று கூறுவதை உணர்ந்தேன் என்று உணர்ச்சி பூர்வமாக கூறினார் அருட்பணி அமிர்தராஜ் அவர்கள்.
மேலும் " மூன்று அதிசய காரியங்கள் இந்த திருத்தலத்தில் உள்ளது. இது தென்னகத்தின் கல்வாரி" என்று அழைக்க கரணம் இப்படிப்பட்ட ஒரு இடம் ஆளுயர சிலுவையில் இயேசு தன் தோளில் சுமந்து சென்ற ரத்தம் படிந்த உண்மையான சிலுவையின் ஒரு சிறிய துண்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் இருந்து எடுத்து வரப்பட்ட அற்புத கல்வாரி சிலுவை துண்டால் இங்கு பல புதுமைகள் நடந்துள்ளன.
இங்கு இயேசுவின் கெத்சமென் தோட்டத்தில் இயேசு ஜெபிப்பது போல ஒரு சுரூபம் உள்ளது. அங்கும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன . மோயீசன் இஸ்ரேல் மக்களை பாலைவனத்தில் நடத்தி செல்லும்போது மக்களுக்கு தாகம் ஏற்பட, பாறையை தட்டி தண்ணீர் வரவழைத்தார் என்று பைபிளில் படித்துள்ளோம்.
அது போல இங்கும் பாறை சூழ்ந்த பகுதியில் வெள்ளி போல ஜொலிக்கும் தண்ணீர் ஊற்றெடுக்கிறது. இது ஒரு புனித நீர் என்று சொன்னால் மிகையாகாது. இங்கு வருடம் முழுவதும் இறைமக்கள் உலகம் முழுவதும் இருந்து வந்தவண்ணம் இருக்கிறார்கள். வருடந்தோறும் புனித வெள்ளிக்கு முன் நடக்கும் பரிகார பவனி ஒரு சிறப்பான ஒன்று. இந்த வருடம் ஒரு இளைஞர் இயேவை போல வேடமிட்டு சிலுவையை சுமந்து வந்ததை அனைத்து மத மக்களும் பார்த்து பிரமித்தார்கள். அந்த சிலுவை 170 வருடத்தை கடந்த ஒன்று என்றால் ஆச்சிரியமான ஒன்று.
இந்த திருத்தலத்திற்கு அனைத்து மதத்தவர்களும் வந்து வழிபட்டு செல்வதை பார்க்கமுடியும் என்று கூறினார் .
மேலும் இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிலைகளும் மலை மீது சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது.
உலக சமாதானத்திற்காக நம் திருத்தந்தை பிரான்சிஸ் தலைவர்களின் காலில் விழுந்து கேட்டுக்கொண்டதை மறக்காமல், நாமும் அன்பை விதைக்க இந்த தென்னக கல்வாரியில் இருந்து ஒரு புதிய அமைதி அன்பை எடுத்து செல்லுங்கள், என்று ஆசிகூறி அருட்பணி அமிர்தராஜ் அவர்கள் உங்களை இத்திருத்தலத்திற்கு அன்புடன் அழைக்கின்றார்.
மேலும் தகவல்களுக்கு அருட்தந்தை அமிர்தராஜ் அவர்களின் கைப்பேசி எண் : 9488545444