புனிதர் வனத்துச் சின்னப்பர்
(St. Paul of Thebes)
முதல் வனவாச துறவி:
(The First Hermit)
பிறப்பு: கி.பி. 227
எகிப்து (Egypt)
இறப்பு: கி.பி. 342
புனித வனத்து சின்னப்பர் துறவு மடம், எகிப்து
(Monastery of Saint Paul the Anchorite, Egypt)
ஏற்கும் சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)
முக்கிய திருத்தலங்கள்:
புனித வனத்து சின்னப்பர் துறவு மடம், எகிப்து
(Monastery of Saint Paul the Anchorite, Egypt)
நினைவுத் திருவிழா: ஜனவரி 15
சித்தரிக்கப்படும் வகை:
இரண்டு சிங்கம், ஈச்ச மரம், காகம்
பாதுகாவல்:
சென் ஃபேபுலோ நகர், பிலிப்பைன்ஸ்
முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் வனத்து சின்னப்பர், வனவாசம் செய்த முதல் கிறிஸ்தவ துறவி ஆவார். தமது பதினாறு வயது முதல், நூற்றுப் பதின்மூன்று வயதுவரை பாலைவனங்களில் தனிமையில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவராவார்.
இவரது சரித்திரம், புனிதர் ஜெரோம் அவர்களால் கி.பி. சுமார் 375 அல்லது 376ம் ஆண்டுகளில் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது. இவர் எகிப்து நாட்டின் "தெபெய்த்" (Thebaid of Egypt) என்னும் பழங்கால நகரில் பிறந்தவர் ஆவார். இவருக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் திருமணமானவர் ஆவார். இவர்களுடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து போய்விட்டார்கள்.
கி. பி. 250ம் ஆண்டு, அரசர்கள் “தேசியஸ்” (Decius) மற்றும் “வலேரியனஸ்” (Valerianus) ஆகியோர் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேத கலகத்தை தொடங்கியபோது, பவுலின் மைத்துனர் இவரது பங்கு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், இவரை கலகக்காரர்களிடம் காட்டிக்கொடுக்க எண்ணினார்.
இதனை அறிந்துகொண்ட பவுல் தன் உடைமை அனைத்தையும் சகோதரியிடமும் மைத்துனரிடமும் விட்டுவிட்டு "தெபேன்" பாலைவனத்துக்கு (Theban desert) ஓடிப்போனார். அங்கே ஒரு மலைக் குகையில் வாழ்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது இருபத்திரண்டு. அக்குகைக்கு அருகே இருந்த ஈச்ச மரக்கனியை உண்டு, அருகிலிருந்த அருவியில் நீர் அருந்தி வாழ்ந்துவந்தார். அதன் பின்பு ஒரு காகம் கொண்டுவந்த ரொட்டியை தினமும் உண்டு வாழ்ந்தார்.
யாரும் அறியாத ஓர் இடத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் தவம் மேற்கொண்டார். அங்கு அவரை இறைவன் பல வழிகளில் காத்து வந்ததாக பல கதைகள் உண்டு. காட்டில் அவர் வாழ்ந்த குகையிலேயே ஒரு புனிதராக உயிர் துறந்தார்.
புனிதர் ஜெரோம் தனது (Vitae Patrum) என்னும் சரித்திர நூலில் புனித வனத்து சின்னப்பரை அவரது 113ம் வயதில் சந்தித்ததையும், ஒரு பகல், ஒரு இரவு அவருடன் உரையாடியதையும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த முறை சந்திக்க சென்றபோது, இவர் இறந்து போயிருந்ததாகவும், இரு சிங்கங்களின் துணையோடு இவரை அடக்கம் செய்ததையும் குறிப்பிடுகிறார்.
இரண்டு சிங்கம், ஈச்ச மரம் மற்றும் காகம் இவரது சின்னமாக கருதப்படுகின்றன.
கத்தோலிக்கத் திருஅவை, இவரை, புனித வனத்துச் சின்னப்பர் (St. Paul the Hermit) என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கிறது.
இவரது நினைவுத் திருநாள் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.