நம் பாவங்களுக்காக இயேசுவை அவரின் இரத்தத்தால் துவைத்து எடுத்திருந்தார்கள், நம் பாவங்களுக்காக அவர் முகத்தில் உமிழ்ந்திருந்தார்கள். ஏற்கனவே அடிபட்டு நைந்திருந்தது நம் தலைவரின் உடல். இது போதாதென்று அவரின் தலையில் முள்முடியை வைத்து அழுத்தி அதையும் அடித்து வைத்திருந்தார்கள். இதற்கிடையில் தோளிலும், நெஞ்சிலும் இருந்த பாரத்தால் ஒரு முறை தரையில் விழுந்திருந்தார். இப்போது அவர் முகத்தில் புழுதியும் அப்பியிருந்தது. மொத்தத்தில் நம் தலைவர் உருமாறியிருந்தார். அன்று ஆண்டவரின் நெருங்கிய சீடர்கள்( புனித ராயப்பர், யாகப்பர், அருளப்பர்) கண்ட உருமாற்றம் தெய்வீக பிரகாசமான ஒளி வீசிய உருமாற்றம். ஆனால் இப்போது ஜெருசலேம் மக்கள் காண்பதோ ஒளி இழந்து, களை இழந்து, வாடி வதங்கி நமக்காக மாறிய மாறிய உருமாற்றம்.
யாரைப்பார்த்தாலும் புண்ணகை பூத்த முகம், தொழுநோயாளியைக் கூட கட்டித்தழுவி சுகமளித்த முகம், திமிர்வாதக்காரன், முடவர், குருடர், சூம்பிய கை உடையவர், யாராக இருந்தாலும் கருணையோடு புண்ணகை சிந்தி குணமளித்த தெய்வீக முகம். இந்த தெய்வீக முகம் நமக்காக களை இழந்து காட்சி தருகிறது.
“ நான் மட்டும் அங்கிருந்தால் ஓடிச்சென்று என் தெய்வத்தின் முகத்தை துடைத்திருப்பேன் “ என்று இப்போது யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் செய்ய மாட்டோம். ஏனென்றால் உயிருக்கு பயம். படை வீரர்கள் வாள்கள், சாட்டைகள், ஈட்டிகள் வைத்துள்ளார்கள். அவரைப்போல நம்மையும் நையப்புடைத்து விட்டால் என்ன செய்வது.. ம்ம்ம் நான் மாட்டேன்.. ஆனால் “ உச்சு..உச்சு...கொட்டிக்கொண்டே....ச்சே.. பாவம்ல..இயேசு “ என்று சொல்லிக்கொண்டிருப்போம் இதுதான் உண்மை..
அன்றும் சிலர் அதையேதான் செய்தார்கள்.. ஆனால் நம் வெரோனிக்கம்மாளால் அப்படி இருக்க முடியவில்லை. நம் தெய்வத்தின் அந்த கோலத்தைப் பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியவில்லை. என்னை யார் தடுப்பார்கள் பார்க்கலாம்; என்னை யார் அடிப்பார்கள் பார்க்கலாம்; இல்லை அவரோடு சேர்த்து என்னை யார் கொலை செய்வார்கள் பார்க்கலாம்; பகைவர்கள் என்னை வேண்டுமானால் தடுக்கலாம்; ஆனால் நம் தெய்வம் இயேசுவின் மேல் நான் கொண்ட அன்பை யாராலும் தடுக்க முடியாது. அணை போடமுடியாது; தடைபோட முடியாது.
“ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் “ என்ற நம் தமிழ்ப் பழமொழிக்கு ஏற்ப அன்பே அன்று வென்றது. ஆம் வெரோனிக்காவின் அன்பை உடைக்கும் தாழ்கள் அங்கு இல்லை.. ஜெயித்துவிட்டாள் வெரோனிக்காள்.. சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டாள்.. சரித்திரத்தில் இடம்பிடித்ததில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் சரித்திர நாயகரின் மனதில் இடம் பிடித்ததில்தான் அவளுக்கு மகிழ்ச்சி.. இந்த உலக வரலாற்றையே இரண்டாக பிரித்தவர் அல்லவா நம் ஆண்டவர். கிறிஸ்துவுக்கு முன்... கிறிஸ்துவுக்குப் பின்.. ஆண்டவரின் மனதில் இடம் பிடித்ததில் மகிழ்ந்த சிறுமிக்கு வெகுமானமும் கிடைத்தது. தன்னுடைய முகத்தையே அவள் துடைத்த துணியில் ஆட்டோகிராப் போட்டு அனுப்பிவிட்டார் நம் தேவன். அவர்தான் யாரையுமே ஏமாற்ற மாட்டார்.. வெறும் கையராய் அனுப்ப மாட்டார். ஆதலால் அந்த துன்பக்கலத்தில் கூட நம் தூயவரால் அற்புதம் செய்ய முடிந்தது. ஆம் அவரால் முடியாதது எதுவுமில்லை..
நம்மை அப்படியே திரும்பிப் பார்ப்போம்.. சமூக அந்தஸ்தில் இருப்பவர், பணபலம் அல்லது படைபலம் அல்லது நம் சொந்தக்காரர், நமக்கு வேண்டியவர், நம் நண்பர் என்ற காரணத்திற்காக “ அவர் சொல்வது தவறுதான் என்று தெறிந்தாலும் முகத்தாட்சண்யம் பார்த்து அவர் சொல்வதுதான் சரி என்று எத்தனை முறை பிறருக்கு ஜால்ரா போட்டிருப்போம். அவன் அல்லது அவள் நமக்கு எவ்வளவு நெருக்கமாக வேண்டியவராக இருந்தாலும் இல்லை. நீ சொல்வது தப்பு அப்படி செய்யக்கூடாது என்று நாம் என்றாவது யாருக்காகவாவது உண்மைக்கு சான்று பகர்ந்துள்ளோமா ?
உச்சு கொட்டுவதற்கும்.. அய்யோ பாவம் என்று சொல்வதற்கும் நூறு பேர் கிடைப்பார்கள்.. துணிந்து உண்மையை எடுத்துக்கூறுவதற்கும், நன்மை செய்வதற்கும் ஒருவராவது கிடைப்பார்களா?
நம்மோடு சிலுவை சுமந்து நம்மோடு நடந்து வரும் நம் கல்வாரி நாயகன் கேட்பார்.. நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்பார்..
“ நீ என்னைப்போல உண்மைக்கு சாட்சியம் பகர்வாயா? “ என்று,
நம் பதில் என்னவாக இருக்கும் சிந்திப்போம்..
( எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி ... தயவாயிரும்..)
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
தவக்கால சிந்தனைகள் : 16 இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம் : வீரப்பெண் வெரோனிக்கா ***
Posted by
Christopher