இன்றைய புனிதர் - ஜனவரி 16 - கார்பியோ நகர் புனிதர் பெரார்ட் மற்றும் நண்பர்கள் ***


கார்பியோ நகர் புனிதர் பெரார்ட் மற்றும் நண்பர்கள்

(St. Berard of Carbio and Companions)

மறைப்பணியாளர், குரு, மறைசாட்சி:

(Religious, Priest and Martyr)

பிறப்பு: தெரியவில்லை

கார்பியோ, ஊம்ப்ரியா, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Carbio, Umbria, Papal States)

இறப்பு: ஜனவரி 16, 1220

மொரோக்கோ

(Morocco)

ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

புனிதர் பட்டம்: ஆகஸ்ட் 7, 1481

திருத்தந்தை ஆறாம் சிக்ஸ்டஸ்

(Pope Sixtus IV)

முக்கிய திருத்தலம்:

திருச்சிலுவை துறவு மடம், கோய்ம்ப்ரா, போர்ச்சுகல்

(Monastery of the Holy Cross, Coimbra, Portugal)

நினைவுத் திருநாள்: ஜனவரி 16

புனிதர் பெரார்ட் (Berard of Carbio), மற்றும் இவரது நான்கு தோழர்களும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, கிறிஸ்தவ மறையை பரப்பும் தமது முயற்சிக்காக, “வடக்கு ஆபிரிக்காவிலுள்ள” (North Africa) “மொரோக்கோ” (Kingdom of Morocco) அரசில் மறைசாட்சியாக கொல்லப்பட்ட “ஃபிரான்சிஸ்கன் சபையின்” (Franciscan Friars) துறவியர் ஆவர். இவர்களை, ஃபிரான்சிஸ்கன் சபை தமது “முதல் மறைசாட்சியாக” (Protomartyrs) ஏற்றுக்கொண்டது.

பாரம்பரியப்படி, பெரார்ட், இத்தாலியின் இருபது பிராந்தியங்களில் ஒன்றான “ஊம்ப்ரியாவின்” (Umbria) “கார்பியோ” (Carbio) எனுமிடத்தின் வாசி ஆவார். இவர், “லியோபர்டி” (Leopardi) என்றழைக்கப்படும் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

“அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ்” (St. Francis of Assisi) அவர்களால் புதிதாக நிறுவப்பட்ட “ஃபிரான்சிஸ்கன்” சபையில் கி.பி. 1213ம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அரபி மொழி நன்கு அறிந்திருந்த இவர், சொல்திறன் மிக்க வல்லமை வாய்ந்த பிரசங்கியாவார். அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ், இவரையும், “பீட்டர்” (Peter) மற்றும் “ஒத்தோ” (Otho) ஆகிய இரண்டு குருக்களையும், “அக்குர்சியஸ்” (Accursius) மற்றும் “அட்ஜுடஸ்” (Adjutus) ஆகிய இரண்டு பொதுநிலையினரையும், கிழக்கே சமய நம்பிக்கையற்றவர்களுக்கு (Infidels of the East) மறைப்பணியாற்ற தேர்ந்தெடுத்தார்.

கி.பி. 1219ம் ஆண்டு நடந்த ஃபிரான்சிஸ்கன் சபை துறவியரின் இரண்டாம் பொது சங்கத்தின் (Second General Chapter of the Franciscan friars) முடிவில், தமது சபையின் அப்போஸ்தல பணிகளை இத்தாலி தீபகற்பம் மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் பரவச் செய்யும் நேரம் வந்துவிட்டதாக அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் எண்ணினார். ஆகவே, பெரார்ட் மற்றும் அவரது தோழர்கள், மொராக்கோவின் மறைப்பணிகளில் பிரசங்கிக்க வேண்டுமென்ற அவர்களது கோரிக்கையை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டு சம்மதித்தார்.

இத்தாலியிலிருந்து கடல் பயணம் மேற்கொண்ட மறைப்பணியாளர்கள் ஐவரும், “அண்டலூசியாவின் தன்னாட்சி சமூகத்தின்” (Autonomous Community of Andalusia) தலைநகரான “செவில்” (Seville) சென்றடைந்தனர். இஸ்லாமிய ஆட்சி நடந்துகொண்டிருந்த அங்கே, அவர்களது பிரசங்கம் வெற்றிபெறவில்லை. “ஸ்பெயின்” (Spain) மற்றும் “போர்ச்சுகல்” (Portugal) நாடுகளில் சில காலம் தங்கியிருந்த பிறகு, அவர்கள் “மொரோக்கோ அரசுக்கு” (Kingdom of Morocco) பயணித்தனர்.

மறைப்பணியாளர்கள் ஐவரில் பெரார்ட் மட்டுமே அரபி மொழி அறிந்திருந்தாலும், வெளிப்படையாக நற்செய்தியை அவர்கள் அறிவித்த விதமும், இஸ்லாம் மதத்தை கண்டனம் செய்த அவர்களது தைரியமும், விரைவிலேயே அவர்களை பித்துப் பிடித்தவர்களாக பார்க்க வைத்தது. எனினும், அவர்களது பிரசங்கம் வெளிப்படையானதாக இருந்த போதினும், அவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்தவோ, அல்லது ஓடிப்போகவோ இல்லை. அவர்களனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கத்தோலிக்க விசுவாசத்தை கைவிடுமாறு செய்யப்பட்ட வற்புறுத்தல்களும் முயற்சிகளும் வீண்போயின. கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற முஸ்லிம் அரசன், பெரார்ட் உள்ளிட்ட மறைப்பணியாளர்கள் அனைவரையும் தமது கொடுவாளால் (Scimitar) தலையை துண்டித்துக் கொன்றான்.

போர்ச்சுகலுக்கு திரும்ப கொண்டுவரப்பட்ட அவர்களனைவரின் உடல்களும் புனித செயல்முறைகளுடன் அங்கிருந்து “அசிசி” (Assisi) கொண்டுசெல்லப்பட்டன. தமது மடாலயத்திலிருந்து இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளம் குருவானவர், மடாலயத்திலிருந்த பாதுகாப்புகளையும் மீறி, அசிசி (Assisi) பயணித்து ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அவரே, பதுவையின் புனிதர் அந்தோனியார் (St. Anthony of Padua) ஆவார்.