“ என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் இதயம் களி கூறுகின்றது “
லூக்காஸ் 1: 47-47
வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடல். அன்னையின் ஆனந்தப்பாடல். ஆண்டவரை நோக்கி வாழ்த்திப்பாடிய அன்னையின் பாடல். நம் தாய் பாடிய ஒரே பாடல்.
அந்த சூழ்நிலையை நினைத்துப்பார்த்தால் முதலில் அன்னை மரியாள் எலிசபெத்தை வாழ்த்தியதும். எலிசபெத் வயிற்றில் உள்ள குழந்தை துள்ளியது.
எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரப்ப பெற்று அன்னையை வாழ்த்துகிறார்.
“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே....” என்று தொடர்ந்து வாழ்த்திவிட்டு முடிவில்,
“ ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறு பெற்றவளே” என்று உரக்ககூவினாள்.
லூக்காஸ் : 1:42-45
இதில் கவனிக்க வேண்டியது. எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெற்றிருந்ததால் உரக்க கூறுகிறாள். அடுத்த நிமிடத்தில் அன்னையிடமிருந்து இந்த சிறப்பு மிக்க பாடல் வெளிவருகிறது. தூயவர்களின் சங்கமத்தில், உன்னதரின் கைவன்மை ஓங்கிய ஒரு தருணத்தில் தூய்மையான உள்ளத்தில் இருந்து புறப்படுகிறது இந்த இனிமையான பாடல். அனைவரையும் கவரும் பாடல் மட்டுமல்ல அந்த ஆண்டவரையே இறங்கி வர வைத்தபாடல்...
மேலே உள்ள அன்னையின் பாடல் ஆன்ம மகிழ்ச்சியையும், இதய மகிழ்ச்சியையும் கூறுகிறது. அன்னையின் ஆன்மாவும் ஆண்டவர் பக்கம். இதயமும் ஆண்டவர் பக்கம்.
நம் ஆன்மாவின் நிலை, இதயத்தின் நிலை என்ன ?
“ அதை ஏன் கேட்கறீங்க ஆன்மான்னு ஒன்னு இருக்குன்னு நீங்க சொல்லிதான் எனக்கே தெறியும். இதயமா அது என் கிட்ட இல்லையே ?”
அனேக கிறிஸ்தவர்களின் நிலை இதுதான்.
“ ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவிற்கு கேடு விளைத்தால் வரும் லாபம் என்ன? “ இந்த இறைவனின் வார்த்தைதான் உலக மகிழ்ச்சி, புகழ் இவைதான் வாழ்க்கை என்று நினைத்திருந்த புனித சவேரியாரை மாற்றிப்போட்டது. பல ஆயிரம் மயில் நடக்கவைத்தது. லட்சக்கணக்கான ஆன்மாக்களை மனம் திருப்பியது.
பிற சபைகள் ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவதுமில்லை. போதிப்பதும் இல்லை. “ ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கிறார். உங்களை குணமாக்குகிறார். உங்களுக்கு நிறைய கொடுப்பார். நீங்களும் கொடுங்கள் “ என்றுதான் போதிக்கிறதே தவிர, ஆன்ம மீட்பு, சிலுவை இரண்டையும் தொடுவதே இல்லை. மகிழ்ச்சி, ஆசீர்வாதம் இவைகளையே போதிக்கின்றன.
சரி நாம் அவர்கள் நம்பிக்கைக்கு போக வேண்டாம். முதலில் நன் ஆன்மா எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். அது எப்படியிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் நம் ஆன்மா நமக்கு வேண்டும் அதுவும் சுத்தமாக்கப்பட வேண்டும். பாலின் வெண்மையைபோல், வெண்பனியின் வென்மையை போல் மாற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
அதற்குத்தான் ஒரு சுமை தாங்கி இருக்கிறாரே ! ஏற்கனவே நம் பாவங்களை சுமந்தவர் இப்போதும் சுமக்க காத்துக்கொண்டிருக்கிறாரே !. இரு கரம் விரித்தவராய், இதயத்தை திறந்தவராய் எப்போது என்னிடம் வருவாய் என்று காத்துக்கொண்டிருக்கிறாரே !
திமிர்வாதக்காரனை நோக்கி “ எழுந்து உன் படுக்கையை தூக்கிகொண்டு நட “ என்று சொன்னவர் நம்மை நோக்கி சொல்கிறார், “ உன் பாவங்களை தூக்கி எரிந்துவிட்டு என்னோடு நட “
அவருக்கு செவி சாய்ப்போமா ?
ஜெபம் : ஆண்டவராகிய இயேசுவே ! உம் தாயான அன்னை மரியாள் தன் ஆன்மாவையும், இதயத்தையும் உன் வசம் வைத்தாள். நாங்கள் ஆன்மாவை பற்றிய அக்கரை இல்லாமலும், உலகத்தை சார்ந்த அல்லது உடல் சார்ந்த மகிழ்ச்சியையே இதயத்திற்கு கொடுத்தும் பல வேளைகளில் இதயமே இல்லாமலும் வாழ்கிறோம். தகுதி வேண்டும் அய்யா உன் பிறப்பை கொண்டாட. இப்போதே, இந்த நிமிடவே நாங்கள் தகுதியடைய அதற்கான முயற்சியில் இறங்க அருள் தாரும் -ஆமென்