புனித இராஜகன்னி மாதா ஆலயம்
இடம் : கடகுளம்
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்
நிலை : பங்குத்தளம்
கிளைப் பங்கு : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்.
பங்குத்தந்தை அருட்பணி ப்ராக்ரஸ் (Fr. Progress)
குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு
மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 07.00 மணிக்கு புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் மாலை 06.00 மணிக்கு புனித சவேரியார் சிற்றாலயத்தில் திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை 07.00 மணிக்கு புனித இராஜகன்னி மாதா சிற்றாலயத்தில் திருப்பலி நடைபெறும்.
திருவிழா : அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்தந்தை J. எட்வர்ட் .
2. அருட்தந்தை R. அமல்ராஜ் .
3. அருட்தந்தை A. நெல்சன்ராஜ் .
4. அருட்தந்தை ஞான பெப்பின் .
5. அருட்தந்தை G. செல்வராயர் .
6. அருட்தந்தை R. இருதயராஜ் .
7. அருட்தந்தை ஸ்டீபன் ஜாண்சன் .
அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி ஜெயராணி
2. அருட்சகோதரி ஹெலன் கருணா
3. அருட்சகோதரி நான்சி.
சிற்றாலயங்கள்:
1. புனித அந்தோணியார் சிற்றாலயம்
2. புனித சவேரியார் சிற்றாலயம்
3. புனித இராஜகன்னி மாதா சிற்றாலயம்.
வழித்தடம் : தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரப் பேருந்து நிலையங்களிலிருந்து முதலில் திசையன்விளைக்கு வந்துவிட்டு, திசையன்விளையிலிருந்து சாலமோன் சிற்றுந்து அல்லது டாக்ஸி மற்றும் ஆட்டோ மூலம் 20 நிமிடத்தில் கடகுளத்தைச் சென்றடையலாம். திசையன்விளையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் கடகுளம் அமைந்துள்ளது.
வரலாறு :
தென்பாண்டிச் சீமையின் தென்கரையோரத்தில், முத்துக்குளி நகராம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், அரசூர் ஊராட்சியின் தென்பகுதியில்... திசையன்விளை, இடையன்குடி, குட்டம், புத்தன் தருவை, தச்சன்விளை போன்ற ஊர்களுக்கு நடுவில் தென்றலும் கடற் காற்றும் இசைந்தாடும் பகுதியில், தேரியோரக் கரையில் கடகுளம் அமைந்துள்ளது.
ஊரின் மேற்குப் பகுதியில் புஞ்செய் நிலமும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் செம்மணல் தேரியும் (மேட்டுப்பகுதி), வடக்குப் பகுதியில் குளமும் அதுசார்ந்த புஞ்செய், நஞ்செய் நிலங்களும், திரும்பும் திசையெல்லாம் அடர்ந்த பனை மரக்காடுகளும் இருந்தன. மக்கள் அனைவரும் இயற்கை செல்வங்களின் செழிப்பில் வாழ்ந்து வந்தனர். குளத்திற்கு வட பகுதியில் நீர்ப் பாசன வயல்வெளி நிலங்கள் இருந்ததால் மக்களில் பலர் விவசாயம் செய்து வந்தனர்.
குடகு மலைச்சரிவில் பெய்த மழை நீர், நீரோடையாக வந்தடையும் கடைசி குளமாக இந்த குளம் இருந்ததால், இந்தப் பகுதியை கடகுளம் என்று அழைத்து வந்தனர். நாளடைவில் இவ்வூரின் பெயர் கடகுளம் என்று விளங்கிற்று. இலைக்குளம் மற்றும் தருவைக் குளம் என்று பல குளங்கள் இப்பகுதியில் இருந்தாலும் கடகுளத்தில் மட்டும் தான் பாசன வயல்கள் இருந்தன என்பது மிகையாகது.
குளத்துக்கு தென்பகுதியின் மேட்டில் சுமார் கி.பி கி.பி 1650 -ல் புனித இராஜகன்னி மாதா கோயிலைக் கட்டி மக்கள் அனைவரும் வழிபட்டு வந்தனர். ஊருக்கு மேற்குப் பகுதியில் சில பிற சபை கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்த 'ஆச்சரியபுரம்' என்ற ஊரும், பிற சமயத்தினர் வாழ்ந்த 'மறவன்விளை' என்ற ஊரும் இருந்துள்ளன. அவர்கள் வழிபட்ட கோவில்கள் இன்றும் உள்ளன.
காலப்போக்கில் மறவன்விளையில் வாழ்ந்த மக்களில் பலர் கிறிஸ்தவர்களாக மாறினர். இராஜகன்னி மாதா ஆலயத்தைச் சுற்றி வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இங்கே நீடித்து நிலைத்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மும்மாரி மழை பொழிந்து வந்ததால் குளம் பெருகியும், நிலத்தடி நீர் மட்டம் மிக அருகில் இருந்ததால் இராஜகன்னி மாதா ஆலயத்தின் முன்பகுதியில் ஊற்று தோண்டி அதிலிருந்து மக்கள் குடிநீர் எடுத்துள்ளனர். காலப்போக்கில் ஆங்காங்கே விவசாயத்திற்கென கிணறுகள் தோண்டப்பட்டதால், ஆலயத்தின் முன்பு இருந்த ஊற்று கிணறாக தோண்டப்பட்டு 'கோயில் கிணறு' என்று அழைக்கப்பட்டது.
அக்கால வழக்கப்படி பனை ஓலையால் செய்யப்பட்ட தோண்டியை (தண்ணீர் இறைக்க பயன்படும் பனையோலை குடுவை) பயன்படுத்தி மக்கள் கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்தனர். ஊர் வழக்கப்படி திருமணமான மணப்பெண்கள் முதல் குடம் தண்ணீர் எடுக்க கோயில் கிணற்றிற்கு வந்து வெற்றிலை, பாக்கு போன்றவற்றை கிணற்றில் போட்டுவிட்டு தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கமாயிருந்தது. கிணற்றிற்கு அருகாமையில் யாரும் குளிக்கக் கூடாது என்ற ஒரு ஊர்க்கட்டுப்பாடும் இருந்தது.
உபதேசியாரை உபசரிக்கும் விதம்:
கடகுளம் ஊர் மக்கள் பனைத்தொழில் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் ஏறக்குறைய தை மாதம் முதல் தேதியில் மக்கள் அனைவரும் கோயில் உபதேசியாரிடம் சென்று நெற்றியில் சிலுவை அடையாளம் வாங்குவதும், மார்பில் சந்தனக் கலவை பூசச் செய்வதும், உபதேசியார் கையாலே தங்கள் பனைத் தொழில் சாதனங்களை ஆசீர்வதித்து வாங்குவதும் வழக்கமாய் கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்து போனது.
ஊரைச் சுற்றிலும் விவசாயம் நடைபெற்றாலும் மக்களின் பிரதான தொழிலாக பனை மரம் சார்ந்த தொழிலே இருந்தது. இதிலிருந்து கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
மேலும் பனை மரத்திலிருந்துகிடைத்த ஓலை, மரம் மற்றும் தென்னை மர ஓலையிலிருந்து செய்த தட்டி போன்றவற்றால் வீடு கட்டி அதில் வசித்து வந்தனர். புனித இராஜகன்னி மாதா ஆலயம் மட்டுமே கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டிருந்தது. மக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வியாபாரிகள் மட்டுமே சற்று வசதியுடன் காணப்பட்டனர். அவர்களிடம் பணவசதி இருந்த காரணத்தினால் அவர்களில் சிலரும் கல் வீடு கட்டத் தொடங்கினர். 1650 ம் ஆண்டில் கட்டப்பட்ட ஆலயம் மிகவும் பழையதாகிப் போன காரணத்தாலும், மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, பழைய ஆலயத்திற்கு முன்பாக 1880 ம் ஆண்டு புதிதாக பெரிய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினர். சில காரணங்களால் புதிய ஆலய அஸ்திவாரம் போட்டபின் 40 வருடங்கள் வேலை நடக்காமல் அப்படியே கிடந்தது. பின்னர் வேலை தொடங்கி அழகிய புனித இராஜகன்னி மாதா ஆலயம் 1927 ல் கட்டி முடிக்கப்பட்டது. பழைய ஆலயம் இருந்த இடத்தில் தற்போது புதிய சிற்றாலயம் கட்டப் பட்டுள்ளது. 23.09.1928 அன்று தூத்துக்குடி ஆயர் மேதகு ரோச் அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.
ஆரம்ப காலத்தில் இவ்வாலயமானது கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளின் கிளைப் பங்காக இருந்தது.
கத்தோலிக்க கிறிஸ்தவ குருக்கள் சொக்கன் குடியிருப்பு ஊரிலிருந்து இங்கு வந்து மக்களை ஆன்மீக வழியில் நடத்தினர். சொக்கன் குடியிருப்பிலிருந்து மணல் மாதா கோவில், தருவைகுளம் வழியாக வில்வண்டியில் குருக்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை திருவிழாக் காலங்களில் மட்டும் குருக்கள் இங்கு வந்து தங்கி வழிபாடு நடத்தி சென்றுள்ளனர். திருமண காரியங்களுக்கு, மணமக்கள் பங்குத் தலைமையிடமான சொக்கன் குடியிருப்புக்குச் சென்று திருமணம் செய்து வந்துள்ளனர். மணல் மாதா ஆலயம் மணல் புதையலிலிருந்து துவங்கி பிரபலமானதும் இந்த காலக்கட்டத்தில் தான். எனவே கடகுளம் மக்கள் மணல் மாதா கோயிலுக்கு அடிக்கடி பாத யாத்திரையாகச் சென்று மணல் மாதாவை வழிபட்டு வந்துள்ளனர்.
சொக்கன் குடியிருப்பு மிக தொலைவில் இருந்ததாலும் கூடுதாழை மக்கள் அடிக்கடி புனித இராஜகன்னி மாதா கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்று மக்களுடன் நல்ல உறவுடன் வாழ்ந்ததாலும், கூடுதாழையிலிருந்து குருக்கள் கடகுளத்துக்கு வந்து மக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றனர்
ஆலய வழிபாடுகளில் கடகுளம் மக்கள் அதிக அக்கறையுடன் செயல்படுவதைக் கண்ட குருக்கள் கடகுளம் ஊரை தனிப்பங்காக உயர்த்துவதற்கு மக்கள் முயற்சி செய்ய 13.06.1984 அன்று மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி பர்ணபாஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.
தற்போது பங்குத்தந்தை அருட்பணி ப்ராக்ரஸ் அவர்களின் வழிகாட்டுதலில் கடகுளம் இறைசமூகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.