“ இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி ! ஏனெனில் தம் மக்களை தேடி வந்து விடுவித்தருளினார் “
லூக்காஸ் 1 : 68
பாருங்கள்.. கடவுள் தன் மக்களை தேடி வந்து விடுவித்தருளினார். இந்த வசனத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் நாம் கடவுளைத்தேடவில்லை. நாம் பாவத்திலே வாழ்ந்திருந்தும் விடுதலை தாரும் ஆண்டவரே என்று கூட கேட்கவில்லை. கேட்காமலே நம்மை தேடிவந்து விடுதலை கொடுக்கிறார். அதான் கடவுள். அதுதான் நம் கடவுள். கேட்காமலே இவ்வளவு செய்கிறார் என்றால் கேட்டால் எவ்வளவு செய்வார்.
நம்மிடையே பலர் இப்படியெல்லாம் பேசுவதுண்டு,
“ அவள் பேசியிருந்தால் நானும் பேசியிருப்பேன். அவன் மேலதானே தப்பு அதனால் அவன்தான் முதலில் பேச வேண்டும் “
அதே போல் கொடுப்பதிலும் “ அவன் கேட்டால் நான் கொடுத்திருப்பேன் அவன் கேட்கவில்லை நான் கொடுக்க வில்லை “
இப்படி சமாதானம் செய்வதிலும், கொடுப்பதிலும் யார் முன்னே ஒரு கால் எடுத்து வைக்க வேண்டும் என்று நமக்குள் பல ரூல்ஸ் போட்டுக்கொண்டு பேசாமல் மாதக்கணக்காக வருடக்கணக்காக இருப்பதுண்டு.
இப்படி கடவுள் நினைத்திருந்தால்,
“ மனிதனை நான் நன்றாகத்தானே படைத்தேன். என் சாயலாகத்தானே படைத்தேன். பின்பு அவன் ஏன் பாவத்தில் விழ வேண்டும். சாத்தான் சொன்னால் அப்படியே கேட்டுவிடுவதா? நான் சொன்னால் மருந்துக்கு கூட கேட்பதில்லை. சரி அதன் பின்னாவது என்னைத்தேடி மீட்பு வேண்டும் என்று என்னிடம் வருகிறானா? இல்லையே நான் ஏன் அவனைத்தேடி பின்னால் ஓட வேண்டும். எனக்கு என்ன தலையெழுத்தா? “
என்று நினைத்திருந்தால் மீட்பு வந்திருக்குமா? மீட்பர் வந்திருப்பாரா ? இல்ல இந்த உலகம்தான் இன்னும் உருண்டு கொண்டிருக்குமா?
நமக்கு ஒரு ரூல்ஸ், கடவுளுக்கு ஒரு ரூல்ஸா ?
இயேசு பாலன் பிறக்க இன்னும் ஆறு நாட்களே இருக்கிறது. நமது டார்கெட் அவர் நம் உள்ளத்திலும் பிறக்க வேண்டும் என்பது. கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் இரண்டாம் பட்சம்தான். நம் இதயத்தில் பாலன் இயேசுவுக்காக குடில் அமைக்க வேண்டும்.
நம் இதயத்தில் குடில் அமைக்கும் முன் இடத்தை சுத்தம் செய்வது போல் இதயத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அங்கு யார் மேலாவது பகை என்னும் புகை இருந்தால் நம்மால் அவருக்கு குடில் அமைக்க முடியாது.
“ என் சமாதானத்தை உங்களுக்கு அளிக்கின்றேன். அதை போகும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச்செல்லுங்கள் “ என்று சொன்னார் ஆண்டவர்.
கொஞ்சம் சிந்திப்போம். நாம் யார் மேல் கோபமாய் இருக்கிறோம். யாரிடம் முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. நாம் நேசிப்பவர்களிடம் பிரியம் இருந்தும்கூட வரட்டுக்கவுரவத்திற்காக பேசாமல் இருக்கிறோமா?
இந்த லிஸ்ட்டில் கணவன்-மணைவி, மாமியார்-மருமகள், அண்ணன்- தம்பி, அக்காள் தங்கை, தோழர்கள், அலுவலக நண்பர்கள்,உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள் இப்படி எத்தனையோ பேர்களில் நாம் ஒருவராக இருக்கலாம். சமாதானம் செய்ய அவர்கள் வராமல் இருக்கலாம். நம் தேவன் நம்மை தேடி வந்ததுபோல் நாமும் அவர்களை தேடி போவோம். ரிசல்ட் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆண்டவர் இயேசுவுக்காக ஒரு ஸ்டெப் நான் எடுத்து வைத்திருக்கிறேன் என்ற நிம்மதியே போதும்
ஜெபம் : எங்கு சென்றாலும் “ உங்களுக்கு சமாதானம் உண்டாகுக “ என்று மொழிந்த அன்பு தெய்வமே. எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், சமுதாயத்திலும் சமாதானம் இல்லை. ஆனால் உம் சமாதானம் எங்களுக்கு கிடைத்தால் அது ஒரு மேஜிக் செய்து எல்லா இடத்திலும் சமாதானத்தை கொண்டு வந்து விடும்.
ஓ எங்கள் இயேசுவே எங்கள் உள்ளத்தில் உம் சமாதானத்தை தந்து எங்கள் உள்ளத்தில் உள்ள பகையை நீக்கி அருள்புரியும். உம் சமாதானம் கிடைத்த மகிழ்ச்சியில் எங்கள் இதய குடிலில் உம் பிறப்புக்கான வேலையை துவங்க அருள் தாரும்- ஆமென்