திருவிவிலியத்தில் மாதா-1 : ( மீண்டும் திருவிவிலிய வாசக குறிப்புகளோடு) ***

வேதாகமத்தில் மாதா நிறைய இடங்களில் வருகிறார்கள்… சில இடங்களில் மாதாவின் முன்னோடிகள் வருகிறார்கள்… அவற்றுள் சிலவற்றை இப்போது பார்ப்போம்…

1. முதல் பாவம் எப்போது தோன்றியதோ ! அப்போதே பிதாவாகிய சர்வேசுரனின் சிந்தையில் உதித்தவர்கள் நம் தேவ மாதாதான்.

“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; “ ஆதியாகமம் 3 :15 (தொடக்க நூல்)

“ இந்தப் பெண் ஏவாள் என்னை ஏமாற்றிவிட்டாள். பிரமாணிக்கம் தவறிவிட்டாள். கீழ்ப்படியாமல் நடந்துவிட்டாள். நான் செய்யக் கூடாது என்று சொல்லும் செய்து விட்டாள். ஆனால் அவள் அப்படியல்ல. என்னை ஏமாற்ற மாட்டாள். சகலத்திலும் எனக்கு கீழ்ப்படிவாள். ஒரு நொடி கூட பிரமாணிக்கம் தவற மாட்டாள். தன்னையே என்னுடைய சித்தத்திற்காக அர்ப்பணிப்பாள். கேள்வியற்ற கீழ்ப்படிதலைக் கொண்டிருப்பாள். அவள்தான் இவனுக்கு சரியான அடி கொடுப்பாள். இந்த பிசாசின் தலையை மிதிப்பாள். அவள்தான் என் மகள் மரியாள்.” என்று பிதாவாகிய சர்வேசுவரன் நினைத்தார்.

“பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரண தாயே… மேலோனின் உள்ளம்தன்னில் நீ வீற்றிருந்தாயே… “

அலகையில் பொறாமையால் பாவம் நுழைந்தது என்று பார்க்கிறோம். முதல் அமல உற்பவங்களான ஆதாமும், ஏவாளும்  பாவத்திற்கு அடிமையான போது இன்னொரு அமல உற்பவங்கள் வேண்டும் வேண்டும் என்று நினைத்தார். யார் அவர்கள் அதுதான் நம் தேவ மாதாவும், சுதனாகிய சர்வேசுவரனும். மீட்பின் திட்டமும் மீட்பின் திட்டத்திற்கு பயன்படப்போறவர்களான நம் தேவமாதாவும், நம் சேசு கிறீஸ்துவும் அப்போதே நம் பிதாவின் சிந்தையில் உதித்துவிட்டார்கள்…

2. மேலும் மாதா கன்னியும், தாயுமாக இருக்கிறார்கள் என்பதற்கு மோயிசனுக்கு தமத்திருத்துவமான பரிசுத்த தேவன் காட்சி கொடுக்க பயன்படுத்தப்பட்ட எரிகின்ற முட்செடி மாதாவே..

“ ஆண்டவரோ, ஒரு முட்செடியின் நடுவினின்று, நெருப்புக் கொழுந்து உருவத்தில் அவனுக்குக் காட்சியளித்தார். அவன், முட்செடி வெந்து போகாமலே எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.” யாத்திராகமம் 3 :2
(விடுதலைப் பயணம்)

மோயிசனை செருப்புக்காலோடு வரவும் கடவுள் அனுமதிக்கவில்லை, மிக அருகில் வரவும் அனுமதிக்கவில்லை.. ஆனால் வார்த்தையான சவேசுவரன் மாதாவின் வயிற்றில் பத்துமாதம் தங்க வைக்க அனுமதிக்கப்பட்டார். மாதாவின் மடியில் தவழ அனுமதிக்கப்பட்டார்.மாதாவால் பாலூட்ட அனுமதிக்கப்பட்டார். மாதாவால் உணவூட்ட அனுமதிக்கப்பட்டார். மாதாவின் கரம் பற்றி நடக்க அனுமதிக்கப்பட்டார். மாதாவின் தோலில் சுமக்க அனுமதிக்கப்பட்டார். மாதாவால் குளிப்பாட்ட அனுமதிக்கப்பட்டார் அவரால் பராமரிக்க அனுமதிக்கப்பட்டார். தேவமாதாவோடு 30 ஆண்டுகள் வாழ அனுமதிக்கப்பட்டார். மீட்பின் திட்டத்தில் ஆண்டவரோடு பாடுபட அனுமதிக்கப்பட்டார். ஆண்டவரின் திருப்பாடுகளின் இறுதிவரை அவரோடு இருக்க அனுமதிக்கப்பட்டார். ஆண்டவரின் உயிப்பிற்கு பின்னும் திருச்சபை வளரவும்,  நற்செய்திப்பணி அறிவிக்கப்படடவும் சீடர்களுக்கு வழி காட்டியாக இருக்கவும் அனுமதிக்கப்பட்டார்.

(நம்மவர்கள் ஆலயத்தில் செருப்புக்காலோடு செல்ல சிலர் தங்களை அனுமதிக்கிறார்கள். அதே செருப்பை போட்டுக்கொண்டே வரை வாங்க செல்லவும் தங்களை அனுமதிக்கிறார்கள்

சில பிரிவினை சபைகளில் மாதாவின் பெயர் கூட அனுமதிக்கப்படுவதில்லை..  சிலவற்றில் மாதாவை பற்றிய தேவதூசனங்களோடு வாழ்கிறார்கள்… அங்கே எப்படி தன் பிரசன்னத்தை சுதனாகிய சர்வேசுவரன் அனுமதிப்பார் என்று கூட அவர்கள் யோசிப்பதில்லை)

“முப்பொழுதும் அவள் கன்னியம்மா… எப்பொழுதும் நம் அன்னையம்மா..”

ஏற்கனவே இருக்கும் ஞானம்… கடவுள்…சிருஷ்ட்டிக்கப்பட்ட ஞானம் நம் தேவமாதா..

3. பழமொழி ( நீதி மொழிகள்) ஆகமத்தில் மாதா..

“ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டி, ஏழு தூண்களையும் அறுத்து நிறுத்தினது;”

“மாண்புயர் ஏழு தூண்களுமாய்… பலி பீடமுமாய் அலங்கரிதாயே… ஞானம் நிறை கன்னிகையே… நாதனைத் தாங்கிய ஆலயமே…”

தொடரும்…

குறிப்பு : மாதாவின் பெருமைகள், ஜெபமாலையின் இரகசியம், கத்தோலிக்க திருச்சபையின் பெருமைகள் விவிலிய வசனங்களின் அடிப்படை மூலமாக அறிய அதாவது மாதா, கத்தோலிக்க திருச்சபை பற்றிய தியானம் உங்கள் பங்கிலும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள். சகோதரர் தன்ராஜ் ரொட்ரிகஸ், உலகளாவிய வாழும் ஜெபமாலை இயக்கம் (Universal Living Rosary Association) காமராஜபுரம், கிழக்கு தாம்பரம், சென்னை. Phone.9094059059, 9790919203

“இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !