கடவுள் எவ்வளவு நல்லவர். நமக்காக இன்னும் ஒரு ஆண்டை தர இருக்கிறார், புதிது புதிதாக நாட்களைத் தருகிறார். வாரங்களைத் தருகிறார். மாதங்களைத் தருகிறார். ஏன் ஆண்டுகளையே தருகிறார். எனக்கு என்ன வயது இருக்கும்? இத்தனை ஆண்டுகளில் என்னென்ன சாதித்துள்ளேன். எப்படி வாழ்கிறேன் ? என் வாழ்க்கை எப்படி போய்கொண்டு இருக்கிறது? என்னால் யாருக்கும் பயன் இருக்கிறதா? நான் நன்மை செய்து கொண்டு இருக்கிறேனா? அல்லது தீமை செய்து கொண்டிருக்கிறேனா?
எப்படி என்னால் யாருக்காகவும் வாழாமல் எனக்காக மட்டுமே என்னால் வாழ முடிகிறது? அல்லது என் குடும்பத்திற்காக மட்டுமே வாழ முடிகிறது ? சுய நலமாக வாழ்வது மட்டும்தான் என் விருப்பமா? அடுத்தவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கிறேனா? அவர்களுக்கும் ஒரு மனது உள்ளது அவர்களுக்கும் ஒரு விருப்பு, வெறுப்பு உள்ளது என்று நினைக்கிறேனா ? அல்லது தான், தனது என்று வாழ்கிறேனா?
தீயவற்றில் நாட்டம், தீமையானதையே மனது தேடுகிறது. நன்மைதான் நல்லது அதுதான் உண்மை என்று தெறிந்தும் நம் ஆன்மா சாத்தானின் கைப்பாவையாக இருக்கிறதே என்பதை அட்லீஸ்ட் உணர்கிறேனா?
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்னைப் பொறுத்துக்கொண்டு எனக்கு மேலும் மேலும் ஆயுளைத் தருகிறார். சரி என்றாவது நம்மைத் தேடிவருவான், திருந்துவான் என்று அந்த அடிப்படையிலாவது என்றாவது நான் சிந்தித்திருக்கிறேனா?
என் வாழ்வை நான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கடந்து செல்ல இருக்கிற இந்த ஆண்டில் நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டில் எப்படி வாழ இருக்கிறேன். புத்தாண்டில் நான் அப்படி வாழ்வேன், இப்படி வாழ்வேன் என்று சென்ற ஆண்டில் கொடுத்த வாக்குறிதிகள் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டிருக்குமே. இந்த ஆண்டும் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து நம்மையே நாம் ஏமாற்றப் போகிறோமா?
5 தாலந்துகள், 2 தாலந்துகள், ஒரு தாலந்து கொடுக்கப்பட்டவர்களிடம் கணக்கு கேட்கப்பட்டதே அது போல நம்மிடமும் கணக்கு கேட்கப்படும். ஆம் இறைவன் கணக்கு வாத்தியார். அவரை நாம் ஏமாற்றவே முடியாது. நம் கணக்குகள் சரியாக இருக்கிறதா அல்லது திருத்தப்பட வேண்டுமா? என்று பரிசோதிக்கும் நேரமிது…
கூட்டல், கழித்தல் கணக்கு பார்க்கும் நேரமிது, அன்பைக் கூட்டவும், பகையையும், பாவத்தையும் கழிக்கும் நேரமிது. நம் கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நீதி அரசரின் நீதித்தீர்ப்பில் தண்டனைக்கு ஆளாகாமல் விண்ணகத்தை ஆதாயமாக்க பிறக்க இருக்கும் புதுவருடத்திற்கு முன்பே நம்மை தயாரிப்போம்.
மரியே வாழ்க !