இன்றைய புனிதர் - ஜனவரி 20 - புனிதர் ஃபேபியன் ***


புனிதர் ஃபேபியன்

(St. Fabian)

இருபதாம் திருத்தந்தை:

(20th Pope)

பிறப்பு: கி.பி. 200

இறப்பு: ஜனவரி 20, 250

ரோம், ரோம பேரரசு

(Rome, Roman Empire)

நினைவுத் திருநாள்: ஜனவரி 20

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

திருத்தந்தை ஃபேபியன், ரோம் ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 236ம் ஆண்டு, ஜனவரி மாதம், 10ம் நாளிலிருந்து கி.பி. 250ம் ஆண்டு, ஜனவரி மாதம், 20ம் நாள் வரை ஆட்சி செய்தார். "ஃபேபியன்" என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "ஃபேபியுஸ் குடும்பத்தவர்" என்னும் பொருள்தரும்.

வரலாறு:

பண்டைய கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் "யூசேபியுஸ்" (Eusebius of Caesarea) என்பவர் தாம் எழுதிய "திருச்சபை வரலாறு" என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

"ரோம் நகருக்குப் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடினார்கள். அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையோர் பலர் இருந்தார்கள். ஆனால் குருகுலத்தைச் சாராத, பொதுநிலையினராக இருந்த எளிய மனிதரான ஃபேபியன் மீது ஒரு புறா வந்திறங்கியது. உடனே மக்கள் ஒரே குரலாக “ஃபேபியன் திருத்தந்தை ஆக வேண்டும்” என்று குரலெழுப்பினார்கள்."

கி.பி. 244ம் ஆண்டு முதல் கி.பி. 249ம் ஆண்டு வரை ரோமப் பேரரசை ஆண்ட பேரரசன் “அராபிய பிலிப்” (Philip the Arab) என்பவருக்கும், அப்பேரரசரின் மகனுக்கும் ஃபேபியன் திருமுழுக்குக் அளித்து, அவர்களைக் கிறிஸ்தவ மதத்தில் சேர்த்தார் என்று ஒரு மரபுச் செய்தி உள்ளது.

ஃபேபியன் கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டங்களை மேம்படுத்தினார் என்றும், சபை நிர்வாகத்தைச் சீர்ப்படுத்தினார் என்றும், மறைச்சாட்சிகளாக இறந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பதிவுசெய்ய அலுவலர்களை ஏற்படுத்தினார் என்றும் தெரிகிறது.

பிற்கால வரலாற்று ஏடுகள்படி, ரோம மன்னன் 'டேசியஸ்' (Decius) கிறிஸ்தவ சமயத்தைக் கடுமையாகத் துன்புறுத்தியதால் அழிந்துபோகும் நிலையிலிருந்த அச்சமயத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் வண்ணம் ஃபேபியன் இன்றைய ஃபிரான்ஸ் நாட்டுப் பகுதியான கௌளில் (Gaul) கிறிஸ்தவ மறையைப் பரப்புவதற்கு கி.பி. 250ல் மறை போதகர்களை அனுப்பினார்.

ஃபேபியன், பின்வரும் ஆயர்களை ஃபிரான்ஸ் பிராந்தியத்தின் பின்வரும் இடங்களுக்கு மறை பரப்பும் பணிகளுக்காக அனுப்பினார்:

1. புனிதர் கஷியானஸ் (St. Gatianus of Tours)

சென்ற இடம்: டூர்ஸ் (Tours)

2. புனிதர் ட்ராஃபிமஸ் (St. Trophimus of Arles)

சென்ற இடம்: ஆர்ல்ஸ் (Arles)

3. புனிதர் பவுல் (St. Paul of Narbonne)

சென்ற இடம்: நார்போன் (Narbonne)

4. புனிதர் சடுர்னின் (St. Saturnin)

சென்ற இடம்: டௌலோஸ் (Toulouse)

5. புனிதர் டெனிஸ் (St. Denis)

சென்ற இடம்: பாரிஸ் (Paris)

6. புனிதர் ஆஸ்ட்ரோமொய்ன் (St. Austromoine)

சென்ற இடம்: க்ளேர்மோன்ட் (Clermont)

7. புனிதர் மார்ஷல் (St. Martial)

சென்ற இடம்: லிமோஜஸ் (Limoges)

நாடுகடத்தப்பட்டு, சார்தீனியா சுரங்கங்களில் (Sardinian Mines) இறந்த திருத்தந்தை “போன்தியன்” (Pope Pontian) மற்றும் எதிர்த்திருத்தந்தை “இப்போலித்து” (Antipope Hippolytus) ஆகியோரின் உடல்களை அங்கிருந்து ரோமுக்குக் கொண்டுவந்து, கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய ஃபேபியன் ஏற்பாடு செய்தார்.

கிறிஸ்தவம் துன்புறுத்தப்படலும் ஃபேபியன் மறைச்சாட்சியாக இறத்தலும் :

திருத்தந்தை ஃபேபியன், ரோம மன்னன் “டேசியன்” (Decian) ஆட்சியின் போது கொல்லப்பட்டு மறைச்சாட்சியாக உயிர் நீத்தார் (கி.பி. 250ம் ஆண்டு, ஜனவரி மாதம், 20ம் நாள்).

ரோம மன்னன் அராபிய பிலிப்பு காலத்தில் திருச்சபை அமைதியாக செயல்பட்டது. ஆனால் கி.பி. 249ம் ஆண்டு, மன்னன் பிலிப்பின் எதிரியாக இருந்த “டேசியன்” (Decian) என்பவர் பிலிப்பைக் கொன்றுவிட்டு பதவியைக் கைப்பற்றினார். வெளியிலிருந்து படையெடுப்பைத் தடுக்க வேண்டும் என்றால் உள்நாட்டில் மக்கள் ஒரே மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று டேசியன் கருதினார்.

எனவே, ரோம மக்கள் எல்லாரும் மரபுசார்ந்த ரோம மதத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவர்கள் தம் மதத்தைக் கடைப்பிடித்தால் தேசத்துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் மன்னர் அறிவித்தார். ரோமப் பேரரசின் தெய்வங்களுக்குப் பலி ஒப்புக்கொடுத்து, எல்லாக் குடும்பங்களும் ஓர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவேண்டும், அவ்வாறு அடையாள அட்டை பெறாதவர்கள் சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது.

அடையாள அட்டை பெறாதவர்கள் நாட்டுக்கு எதிரிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் கருதப்பட்டனர். இதற்கு கிறிஸ்தவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். சிலர் உயிர் பிழைப்பதற்காக மன்னன் கேட்டபடி பலி செலுத்தி அடையாள அட்டை பெற்றார்கள். வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அரச ஆணையை எதிர்த்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாயினர்.

அரச ஆணையை எதிர்த்தவர்களுள் திருத்தந்தை ஃபேபியன் முக்கியமானவர். அரச அலுவலர்கள் ஃபேபியனைக் கைதுசெய்தனர். துல்லியானோ (Tulliano) சிறையில் அவரை அடைத்தனர். அங்கு அவர் பட்டினியாலும் களைப்பாலும் கி.பி. 250ம் ஆண்டு, ஜனவரி மாதம், 20ம் நாள் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார்.

அடக்கம்:

திருத்தந்தை ஃபேபியனின் உடல் “கலிஸ்டஸ்” கல்லறைத் (catacomb of Callixtus) தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் திருச்சபையால் மறை சாட்சியாகப் போற்றப்படுகிறார்.

ஃபேபியனின் கல்லறை கி.பி. 1850ம் ஆண்டு, அகழ்வாய்வாளர் ஜோவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லெழுத்து கிரேக்க மொழியில் உள்ளது. இப்போது அவரது தலை மீபொருள் புனித செபஸ்தியான் பேராலயத்தில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையர் நூல் தரும் பிற செய்திகள்:

திருத்தந்தை ஃபேபியன் பற்றி "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டில் மேலும் சில செய்திகள் உள்ளன. திருச்சபை பரவியிருந்த பகுதிகளை திருத்தந்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்தார். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு திருத்தொண்டரை (Deacon) பொறுப்பாக நியமித்தார். ஏழு துணைத் திருத்தொண்டர்களையும் (Sub Deacons) ஏற்படுத்தி, அவர்கள் பிற அலுவலர்களோடு சேர்ந்து, மறைச்சாட்சிகளாக உயிர்நீத்த கிறிஸ்தவர்கள் பற்றிய நீதிமன்ற விசாரணைக் குறிப்புகளைச் சேகரித்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

திருமுழுக்கின்போது பயன்படுத்தப்படுகின்ற திருத்தைலத்தை (Chrism) தயாரிக்கும் முறையை இயேசுவே தம் திருத்தூதர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் என்றும், அந்த அறிவு வழிவழியாக வந்துள்ளது என்றும் ஃபேபியன் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்.

பண்டைக்காலக் கிறிஸ்தவ அறிஞர்கள் பலரும் திருத்தந்தை ஃபேபியன் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தார்கள். எடுத்துக்காட்டாக, புனித சிப்ரியான், நோவாசியான் ஆகியோரைக் கூறாலாம். நோவாசியான் ஃபேபியனைப் பற்றிப் பேசும்போது, "அவர் மிகச் சிறப்பு வாய்ந்தவர்" என்றுரைக்கிறார். ஓரிஜென் என்னும் பண்டைக் கிறிஸ்தவ எழுத்தாளரும் ஃபேபியனோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். ஓர் ஆசிரியர், ஃபேபியன் என்னும் பெயரை "ஃப்ளேவியன்" என்று குறிப்பிடுகிறார்.