இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அதிக அறிவீனமானதாக இருக்கும் வார்த்தைகளாகக் கருதப்படுவது அவருடைய சிலுவைமொழிகளில் ஒன்றாகும். (1) இயேசு சிலுவையில் “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?“ என்று கூறினார். (மத். 27.46) உண்மையில் கிறிஸ்தவர்களுக்கும் கூட இயேசுவின் இக்கூற்று அதிக குழப்பதையே ஏற்படுத்தியுள்ளது. தேவனைப் பிதா என்று அழைத்துவந்த இயேசு, சிலுவையில் மரிக்கும்போது மட்டும் ஏன் தேவனே என அழைத்துள்ளார்? தேவனோடு எப்போதும் ஐக்கியப்பட்டிருந்த இயேசு ஏன் தேவனால் கைவிடப்பட்டிருந்தார்? எனும் கேள்விகள் நம் உள்ளத்தில் எழுவது இயற்கையே. இயேசுவின் கூற்றுக்கள் அனைத்தையும்விட இவ்வார்த்தைகள் வித்தியாசமானவையாய் இருப்பதனால், இன்று பலர் இவற்றை இயேசுவின் வாயிலிருந்து வந்தவைகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.(2) அதேசமயம் யெகோவாவின் சாட்சிகள் போன்ற இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் குழுக்கள் தமது உபதேசத்திற்கு ஆதாரமாக இவ்வசனத்தையும் உபயோகித்து வருகின்றனர்.
இயேசுக்கிறிஸ்துவின் இவ்வார்த்தைகள் அவர் பேசிய அரமிக் மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தேயு 27.46 இல் ”ஏலி, ஏலி லாமா சபக்தானி” என்னும் வாக்கியம் எபிரேய மற்றும் அரமிக் மொழிச் சொற்கள் கலந்த ஒரு கூற்றாக உள்ளது. “ஏலி“ எனும் வார்த்தை எபிரேய மொழியில் தேவனை “என் தேவனே“ என அழைப்பதாகும். “லாமா சபக்தானி“ என்பது அரமிக்மொழி வார்த்தைகளாகும். ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று மாற்குவில் அரமிக் மொழியில் மட்டுமே உள்ளது. இதனால்தான் மாற்குவில் ஏலி என்பதற்குப் பதிலாக “எலோயி“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது(3) உண்மையில் எச்சுவிசேஷசத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதையும், எதில் என் தேவனே எனும் வார்த்தை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடியாதுள்ளது. இயேசு அரமிக் மொழியிலேயே பேசியிருக்க வேண்டும் என்றும் மத்தேயுவே தேவன் எனும் வார்த்தையை எபிரேய மொழியில் குறிப்பிட்டிருக்க வேண்டும்“ என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இயேசு எம்மொழியில் பேசியிருந்தாலும் அவரது வார்த்தைகள் புரிந்து கொள்வதற்கு சிரம்மானவைகளாகவே உள்ளன.
இயேசு கிறிஸ்து தேவனால் கைவிடப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் கிறிஸ்தவர்கள் அவரது கூற்றுக்கு பலவிதமான அர்த்தங்களைக் கற்பித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் 22ம் சங்கீதத்தின் ஆரம்ப வார்த்தைகளாக இருப்பதனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் முழுச் சங்கீத்த்தையும் தன் ஜெபமாக ஏறெடுத்திருக்க வேண்டும் எனச் சிலர் விளக்குகின்றனர். சங்கீதத்தின் இறுதிப் பகுதி விடுதலைக்கான மன்றாட்டாய் இருப்பதனால் (சங். 22.21-22) இயேசு உண்மையிலேயே தேவனால் கைவிடப்படவில்லை என்றும், 22ம் சங்கீதத்தை அவர் தன்னுடைய மரண நேரத்தின் தியானமாக்கியுள்ளதோடு அதைத் தன் ஜெபமாக ஏறெடுத்துள்ளார் என்றும் இவர்கள் தர்கிக்கின்றனர். (5) எனினும் மரிக்கும் தருவாயில் இயேசு 31 வசனங்கள் உள்ள “ஒரு சங்கீதத்தை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது பொருத்தமான ஒரு விளக்கமாக இல்லை (6) அத்தோடு இயேசு ஒரு வசனத்தை உபயோகிப்பதை ஆதாரமாகக் கொண்டு அவர் முழு சங்கீதத்தையும் சொன்னார் என முடிவிற்கு வருவது தவறாகும். இயேசு உண்மையில் முழு சங்கீதத்தையும் சிலுவையிலிருக்கும்போது சொல்லியிருந்தால் சுவிஷேச நூலாசிரியர்கள் நிச்சியம் இதுபற்றி குறிப்பிட்டிருப்பார்கள்.(7) மேலும் “இயேசுவின் வார்த்தைகள் பயங்கரமானதொரு கதறலாக இருப்பதனால் அதை எவ்விதத்திலும் ஒரு வேதத் தியானமாகக் கருத முடியாது(8). அதேசமயம் இயேசு 22ம் சங்கீதத்தின் ஆரம்ப வரிகளைத் தான் சிலுவையிலிருக்கும்போது உபயோகித்தார் என உறுதியாக கூறமுடியாது. “அவர் சங்கீதத்தை உபயோகிக்காமல், ஏனைய சிலுவை மொழிகளைப் போல, மரணத் தறுவாயில், தன் அனுபத்தை இவ்வாறு கூறியிருக்கலாம். (9)
சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு தன் வேதனைகளுக்கு மத்தியில், தான் தேவனால் கைவிடப்பட்டவிட்டேன் எனும் தவறான எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருதுகின்றனர். “இயேசு சிலுவையில் தனிமையில் இருந்தமையினால், தேவனும் தன்னைக் கைவிட்டுவிட்டோரோ என்று அவர் கேட்டுள்ளார்“(10) என்பதே இவர்களது விளக்கமாகும். ஆனால் இவர்கள் கூறுவதுபோல தேவனே நீர் என்னைக் கைவிட்டுவிட்டீரா என இயேசு கேட்கவில்லை. மாறாக ஏன் என்னைக் கைவிட்டீர் என்பதே அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகளாகும். “இயேசுவுக்கும் தேவனுக்குமிடையிலான உறவு சிலுவையில் எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்மைவிட இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். (11) இதைப் பற்றி இயேசுவை விட நமக்கு அதிகமாகத் தெரியும் என நம்மால் தர்க்கிக் முடியாது. (12) எனவே, இயேசு தேவனால் கைவிடப்பட்டார் எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாமல், இயேசு தவறுதலாக இவ்வாறு கூறிவிட்டார் எனக் கருதுவது தவறாகும். இயேசுவின் வார்த்தைகள் “அவர் உண்மையிலேயே தேவனால் கைவிடப்பட்டார் என்பதையே அறியத் தருகின்றன. (13)
உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. (14).
சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2). இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (15)
பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (16) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (17) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (18) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக. இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Footnote & Reference
(1) இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில், சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது பேசியவைகள் அவருடைய சிலுவை மொழிகள் என அழைக்கப்படுகின்றன. இயேசுவின் சிலுவை மொழிகள் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிறிஸ்தவ சபை இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமையன்று அவரது ஏழு சிலுவை மொழிகளையும் தியானிப்பது வழமை.
(2) T.R. Glover, The Jesus of History, London 1917, p. 192
(3) இயேசுவின் சிலுவை மொழிகளில் இக்கூற்று மத்தேயுவிலும் மாற்குவிலும் உள்ளதோடு, இக்கூற்று மட்டுமே இவ்விரு சுவிஷேசங்களிலும் காணப்படும் ஒரேயொரு சிலுவை மொழியாக உள்ளது. ஏனைய ஆறு சிலுவை மொழிகளும் லூக்காவிலும் யோவானிலுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
(4) Donald .A. Hagner, Matthew : The World Biblical Commentary, p 844
(5) M.Dibelius, from Tradition to Gospel, London, 1934, p. 193
(6) William Barclay, Mathew Vol. II in Daily Study Bible Edinburgh: St. Andrew Press, pp. 406-407
(7) Leon Morris, The Cross of Jesus Grand Rapids: Eerdmans Publishing Company, 1989, p71
(8) H. Maynard Smith, Atonement, London, 1925, p. 155
(9) Leon Morris, The Gospel According to Mathew, p. 721
(10) Karll Barth, Church Dogmatic IV, The Doctrine of Reconciliation, Edinburgh: 1958, p.168
(11) Leon Morris, The Gospel According to Mathew, p. 721
(12) Leon Morris, The Cross in the New Testament, Carlsle: Paternoster Press, 1995, p. 44
(13) Ibid 45
(14) J. Moltmann, The Crucified God: Cross of Christ as the Foundation of and Criticism of Christian Theology London : Student Christian Movement Press, P 149
(15) Peter. Green, Studies in the Cross, London, 1971, p 101
(16) John. Marsh, The Fullness of Time, London 1952, p 100
(17) Leon. Morris, The Gospel According to Matthew, p. 722
(18) J.V.Langmead. Casserley, Christian Community. London, 1960, p 14