பேதுரு ஆண்டவர் இயேசுவை மூன்று முறை மறுதலித்ததை நாம் பார்த்து ஆண்டவரோடு கூட இருந்த இவர் எப்படி ஆண்டவரை மறுதலிக்க முடிந்தது என்று நாம் கேள்வி எழுப்பலாம்?
அதற்குமேல் ஒரு படி போய் யூதாஸ் இயேசுவை எப்படி காட்டிக்கொடுத்தான்? கடவுளோடு கூட இருந்து உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகியை போல இயேசுவை காட்டிக் கொடுத்து விட்டானே என்று நாம் ஆதங்கப்படுவோம்.
ஆனால் நாம் நமது வாழ்க்கையிலே கடவுளை எத்தனை முறை மறுதலித்திருக்கிறோம்.
கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் நடந்தபோது இயேசுவை மறுதலித்து இருக்கிறோம்.
ஞாயிறு திருப்பலியில் பங்கு கொள்ளாமல் இருந்தபோது இயேசுவை மறுதலித்திருக்கிறோம்.
நமது பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் இருந்தபோது இயேசுவை மறுதலித்திருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நாம் கிறிஸ்துவுக்கு பிடிக்காத செயல்களை செய்து நாம் இயேசுவை எத்தனை முறை காட்டிக் கொடுத்து இருக்கிறோம்.
நம் கண்களுக்கு நமது தவறுகளும் குற்றங்களும் தெரிவதில்லை.
ஆண்டவராகிய கடவுள் நமக்கு நமது நண்பர்கள் மூலமாகவோ, பெற்றோர்கள் மூலமாகவோ, குருக்கள் மூலமாகவோ, நமது பாவ வாழ்க்கையை விட்டு விட எச்சரித்த வண்ணம் இருப்பார் ஆனால் அவற்றை நாம் அசட்டை செய்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உமது திருச்சட்டத்துக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்; வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர்.
நெகேமியா 9:29
எனவே கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே கடவுள் நமக்கு தரும் எச்சரிக்கைகளை புறக்கணிக்காமல், மனம் திரும்பி நற்செய்தியை நம்பி கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம் -ஆமென்