இன்றைய புனிதர் - ஜனவரி 22 - புனிதர் வின்சென்ட் பல்லொட்டி ***


புனிதர் வின்சென்ட் பல்லொட்டி

(St. Vincent Pallotti)

மறைப்பணியாளர், குரு, நிறுவனர்:

(Missionary, Priest, Founder)

பிறப்பு: ஏப்ரல் 21, 1795

ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்

(Rome, Papal States)

இறப்பு: ஜனவரி 22, 1850 (வயது 54)

ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள்

(Rome, Papal States)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜனவரி 22, 1950

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)

புனிதர் பட்டம்: ஜனவரி 20, 1963

திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான்

(Pope John XXIII)

நினைவுத் திருநாள்: ஜனவரி 22

புனிதர் வின்சென்ட் பல்லொட்டி, ஒரு இத்தாலிய குருவும், மறைப்பணியாளரும் ஆவார். “கத்தோலிக்க அப்போஸ்தலிக்க சமூகம்” (Society of the Catholic Apostolate) எனும் சமூகத்தினை நிறுவியவரும் இவரேயாவார். பின்னாளில் இது, “மறைப்பணிகளின் பக்தி சமூகம்” (Pious Society of Missions) (சுருக்கமாக, “பல்லொட்டைன்ஸ்” (The Pallottines) எனும் பெயருடன் விளங்கியது. இதன் அசல் பெயர் கி.பி. 1947ம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது. இவர், கத்தோலிக்க நடவடிக்கைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார்.

கி.பி. 1795ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் தேதி, ரோம் நகரில் பிறந்த புனிதர் விசென்ட் பல்லோட்டியின் தந்தையார் பெயர், “பியெட்ரோ” (Pietro) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மகதலினா” (Magdalena De Rossi Pallotti) ஆகும். இவர், இத்தாலியின் “பெருஜியா” (Perugia) பிராந்தியத்தின் “நார்சியா” (Norcia) எனும் நகரின் “பல்லொட்டி” (Pallotti) மற்றும் ரோம் நகரின் “டி ரொஸ்ஸி” (De Rossi of Rome) ஆகிய உயர் குடும்பங்களைச் சேர்ந்தவர் ஆவார். தமது ஆரம்பக் கல்வியை “சான் பேண்டலோனின் பக்திமார்க்க பள்ளிகளில்” (Pious Schools of San Pantaleone) கற்ற இவர், அங்கிருந்து “ரோமன் கல்லூரிக்கு” (Roman College) சென்றார். பதினாறு வயதில் ஒரு குரு ஆக தீர்மானித்த இவர், கி.பி. 1820ம் ஆண்டு, மே மாதம், பதினாறாம் தேதி, குருத்துவம் பெற்றார். அதன்பின்னர், விரைவிலேயே இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதிக உயரமற்ற இவர், சற்றே குள்ளமானவராகவும், நீலநிற பெரிய கண்களைக் கொண்டவராகவும், கூர்ந்து ஊடுருவும் பார்வையுடன் கண்ணோட்டம் கொண்டவராக விவரிக்கப்படுகின்றார்.

ஆரம்பத்தில், அவர் “சாபியென்சா பல்கலைக்கழகத்தில்” (Sapienza University) உதவி பேராசிரியராகப் பணியாற்றினார். ஆனால் ஆன்மீக மேய்ப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பின்னர் விரைவில் அப்பணியை ராஜினாமா செய்தார். பல்லோட்டி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஏழைகளை கவனித்துக்கொள்வதை தன்னலமின்றி கவனித்தார். இவர், காலணிகள் தைக்கும் தொழிலாளர்கள், தையல்காரர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள், தச்சர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் ஆகியோருக்காக பள்ளிக்கூடங்களை நிறுவி நடத்தினார். இதனால் அவர்கள் தங்களது தொழிலில் சிறப்பாக பணியாற்ற இயன்றது. இளம் விவசாயிகள் மற்றும் தனித்திறன் இல்லாத தொழிலாளர்களுக்காகவும் மாலைநேர பள்ளிகளை நடத்தினார். அவர் விரைவில், "இரண்டாவது புனிதர் பிலிப் நேரி" (Second St. Philip Neri) என்று அறியப்பட்டார்.

கி.பி. 1835ம் ஆண்டு, ஜனவரி மாதம், ஒன்பதாம் தேதி, பல்லொட்டி “கத்தோலிக்க அப்போஸ்தலிக்க ஐக்கியம்” (Union of Catholic Apostolate) என்றொரு அமைப்பினை நிறுவினார். அவர் தனது கருத்துக்களை பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்:-

“கத்தோலிக்க அப்போஸ்தலிக்க ஐக்கியம்” என்பது, ஒரு உலகளாவிய ஐக்கியமாகும். அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவான இந்த அமைப்பிலுள்ளவர்களின் பணியானது, கடவுளின் பெரும் மாட்சிமைக்காகவும், தமது மற்றும் அயலார்களின் இரட்சிப்பிற்காகவும் இருக்கவேண்டும்”

அதே வருடம் ஜூலை மாதம், 11ம் தேதி, திருத்தந்தை “பதினாறாம் கிரகோரி” (Pope Gregory XVI) இவ்வமைப்பிற்கு தமது அங்கீகாரத்தை அளித்தார். இச்சபை, “அப்போஸ்தலர்களின் அரசியான அன்னை மரியாளின்” (Mary, Queen of Apostles) பாதுகாவலின் கீழ் வைக்கப்பட்டது. கி.பி. 1837ம் ஆண்டில் காலரா நோய்த் தாக்கத்தின்போது, பல்லொட்டி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்தார். விசுவாசத்திற்கான மறை பரப்புரையாளர்களுக்கான சமூக அமைப்பின் நகலாக இவ்வமைப்பு இருந்தது என்ற காரணம் காட்டி, கி.பி. 1838ம் ஆண்டு, இதனை கலைக்க உத்தரவிடப்பட்டது. பல்லொட்டி, இந்த கலைப்பு உத்தரவுக்கு எதிராக திருத்தந்தையிடம் மேல்முறையீடு செய்தார். அதன் காரணமாக, கலைப்பு உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

கி.பி. 2003ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 28ம் நாள், “கத்தோலிக்க அப்போஸ்தலிக்க ஐக்கியம்,” “விசுவாசிகளின் சர்வதேச பொதுச் சங்கம்” (International Public Association of the Faithful) என்று “திருத்தந்தையர் ஆலோசனை மன்றத்தால்” பிரகடணம் செய்யப்பட்டது.

கி.பி. 1850ம் ஆண்டு, ஜனவரி மாதம், 22ம் நாள் மரித்த வின்சென்ட் பல்லொட்டி, ரோம் நகரின் “ஓன்டா” எனுமிடத்திலுள்ள “சான் சல்வடோர்” (Church of San Salvatore in Onda) தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவரது நினைவுத் திருநாள், ஜனவரி மாதம், 22ம் நாள் ஆகும்.