தவக்காலச் சிந்தனைகள் 24: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 13-ம் ஸ்தலம்.. ***

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி  நன்றி அறிந்த ஸ்தோஸ்த்திரம் செய்கிறோம். அதனென்றால் அர்ச்சிஷ்ட்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்…

இயேசுவின் திருச்சரீரம் அவர் பரிசுத்த தாயாரின் திருமடியில்…

இரண்டு சாதனைத் திலகங்கள்.. ஒருவர் உடலாலும், மனத்தாலும் (அவமானங்கள், கைவிடப்படல்) சொல்லொன்னா பாடுகள் பட்டு மீட்பின் பணியை முடித்துவிட்டு அவர் தாயாரின் மடியில் ஓய்வு எடுக்கிறார்.. இன்னொருவர் உள்ளத்தால் மட்டுமே மீட்பின் திட்டத்தில் சரிபங்கு பெற்றார் என்று சொல்லமுடியாது.. உடலாலும்தான்..

தன் பிள்ளை கடைசி இராவுனவுக்குப் பின் சாப்பிடவே இல்லை.. பச்சைத்தண்ணீர் கூட குடிக்கவில்லை.. தாயார் சாப்பிட்டிருப்பாரா? நீர் குடித்திருப்பாரா இல்லை… அவரும்தான் பட்டினி கிடந்தார்..

தன் பிள்ளை பூங்காவனத்தில் சொல்லோன்னா கஸ்தியை அனுபவித்தபோது..
தன் ஜெபத்தால் தாங்கினார்.. அவருடைய ஒவ்வொரு அசைவும் வேதனையும் இந்த அன்புத்தாய்க்குத் தெறியும்..

அவர் சாட்டையால் அடிக்கப்பட்டு.. அவர் உடல் கிழிக்கப்பட்டு இரத்தம் ஆறாக ஓடியபோது.. இந்தத் தாயின் உள்ளம் கிழிக்கப்பட்டது உடல் துடிதுடித்தது.. பரிதவித்தது.. உள்ளத்தால் அவருடைய வேதனையைத் தாங்கினார்..

அவர் கரங்களால் வருடப்பட்ட அவர் மகன் திருமுகம் பாவிகளால் துப்பப்பட்டபோது எப்படித் துடித்திருப்பார்..

தன் கரங்களால் கோதிய அவர் திருமகன் தலையை கொடூர முள்முடிதைத்த போது எப்படித் துடித்திருப்பார்..

நல்லதைத் தவிர வேறு ஏதுவுமே செய்யாத.. செய்யத்தெறியாத தன் திருமகனை அவர் யாரை மீட்க வந்தாரோ அந்த மக்களே அவரை ஏளனம் செய்வதையும், எள்ளி நகையாடுவதையும், “ சிலுவையில் அறையும்; சிலுவையில் அறையும் “ என்று கூச்சல் இடுவதையும்.. பார்த்து எப்படித் துடித்திருப்பார்..

எல்லாரும் ஆண்டவர் இயேசு பட்ட அவமானத்தை மட்டும்தான் சிந்திக்கிறீர்கள்.. ஆனால் அத்தனை சூழ்நிலைலும்.. தன்னால் தன் பிள்ளை படும் பாட்டை தாங்க முடியாத சுழ்நிலையிலும் எத்தனை பேர் அவரைவிட்டு ஓடினாலும், நான் இருப்பேன்… நான் அவன் பக்கத்தில் நிற்பேன் என்று அளவில்லா வேதனையிலும் அவரைப் பின் சென்ற அவர் பரிசுத்த தாயாரை அந்த கொலைகாரக் கூட்டம் என்ன பாடு படுத்தியிருக்கும்..

சாதாரனமாக ஒருவனை மிக நோக திட்டவேண்டும் என்றால் அவன் தாயாரைத்தானே திட்டும் இந்த சமூகம்.. தங்களை மீட்க வந்த ஆண்டவரை, மீட்பரை கடவுளின் துரோகி என்று தீர்ப்பிட்டு அவரை சிலுவையில் அறைய இழுத்துச் செல்லும் கூட்டம் அவர் தாயாரை எப்படியெல்லம் திட்டி தீர்த்திருக்கும்.. தள்ளியிருக்கும்.. அடித்திருக்கும்.. அட்லீஸ்ட் ஆண்டவரை விசுவதிக்காத பெண்கள் கையிலாவது அவர் அடிவாங்கியிருப்பாரே..
ஆண்டவர் மேல் வீசப்பட்ட விளக்குமாறு, சாணம், அவர் தாயார் மீதும் வீசபட்டிருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்…

எத்தனையோ இடர்கள் தன்னை வதைத்தாலும்.. வியாகுலங்கள் தன்னைத் தாக்கினாலும் உறுதியான உள்ளத்தோடு தன் குமாரனோடு உறுதுணையாக நின்றாரே..

எல்லாத் துன்பங்களை தூக்கி சாப்பிடும் கொடுந்துன்பம்.. அதுதான் தன் குமாரன் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு.. அப்போது அவர் மகன் மட்டும் அறையப்படவில்லை.. அவரோடு சேர்ந்து அறையப்பட்டது நம் தாயும்தான்..
ஏற்கனவே அடிபட்டு, உதைபட்டு, கிழிபட்டு.. நொந்து நூலாகிப்போய் இருக்கும் என் குமாரனை விட்டு விடுங்கள்.. அதற்கு பதிலாக என்னைச் சிலுவையில் அறைந்துவிடுங்கள் என்று தானே துடித்திருப்பாள்..
அதற்கு நானும் தயாராகத்தான் இருக்கிறேன்..

இந்த மனுக்குலம் மீட்கப்படத்தானே.. பரம பிதாவிடம் ஜெபித்திருந்தேன்… தவித்திருந்தேன்..தவம் செய்திருந்தேன்.. உங்களைப்போல நானும் மீட்பருக்காக காத்திருந்தேன்.. ஏங்கி நின்றேன்.

கடைசியில் எனக்கே கடவுளின் தாயாகும் வாய்ப்பு வந்தபோது.. இந்த மனுக்குலத்திற்காக நான் என்னை முழுவதுமே கொடுத்துவிட்டேன்..
கடவுளின் திட்டத்தில் எதில் நான் ஒத்துழைக்கவில்லை..
இப்போதும் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன்..

இப்போது என் மகனுக்கு துனையாக நின்று..அவன் பாடுகளிலும் பங்கேற்று முதல் கிறிஸ்தவளாக, என் மகனின் முதல் சீடத்தியாக, அவன் தாயாக நின்றேன்..
என் மகன் அதற்கு பிரதி பலனாக இந்த மனுக்குலத்திற்கே தாயாகும் பாக்கியத்தை எனக்கு தந்து விட்டான்.. எனக்கு இப்போது பொறுப்பு கூடிவிட்டது. 

ஓடிப்போன உன் சீடர்களை ஒன்று கூட்டவேண்டுமே.. அவமானத்தாலும் குற்ற உணர்வாலும் ஒளிந்து கொண்டிருக்கும் அவர்களைத் திடப்படுத்த வேண்டுமே.. அவமானத்தாலும், குற்ற உணர்வாலும், பயத்தாலும் ஒளிந்துகொண்டிருக்கும் திருச்சபையின் தலைவர் பாறையை.. மீண்டும் பாறையாக்க வேண்டுமே..அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்..ஆனால்… ஆனால்..

இதுவரை நீ இருந்தாயே எனக்கு துனையாக இப்போது நீயும் என்னோடு இல்லையே.. என் தேவனே என் வியாகுலம் இருக்க இருக்க கூடிக்கொண்டே இருக்கிறதே.. நானும் அவனோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கலாமே.. இப்போது இதை என்னால் தாங்க முடியவில்லையே.. என் பிதாவே.. என் மகன் மீண்டும் வருவான்.. அவன் சொன்னபடியே உயிர்த்தெழுவான்.. ஆனால் அதுவரை.. என்னால் அவன் பிரிவைத் தாங்க முடியவில்லையே.. ஏதோ ஒரு வெற்றிடம் என் உள்ளத்தைத் துளைக்கிறதே.. மீண்டும்.. மீண்டும்.. என் உள்ளத்தை ஏதோ தாக்கிக் கொண்டே இருக்கிறதே.. என் மகனே… என் மகனே.. என் பிதாவே.. எனக்கு ஆறுதல் கூற யாருமே இல்லையே.. என்று கதறியிருப்பாள்..
சில உள்ளத்து ரணங்களை உடல் வேதனைகள் ஈடுகட்டிவிடும் ஆனால் மாதாவின் வியாகுலத்தை யாராலும் ஈடுகட்ட முடியாது..

நம் தேவ மாதாவின் வியாகுலம்.. கொடியது..மிகக் கொடியது.. அவருடைய மகனின் பாடுகளுக்கு இணையானது.. அதனால்தான் கத்தோலிக்க திருச்சபை மாதாவை இனை மீட்பர் என்கிறது..

மாதாவின் அழுகையும்.. வியாகுலமும் நின்ற பாடில்லை.. மகனுக்கு அடைக்கப்பட்ட மோட்சம் இந்த வியாகுலத்தாய்க்கும் அடைக்கப்பட்டுவிட்டதோ.. ஆறுதலின்றி.. அழுகிறாள்.. புலம்புகிறார்.. கதறுகிறாள்..

அன்று மாதாவின் தலைமகன்.. ஆண்டவர் இயேசு.. உயிரோடு இருந்தபோதும்.. உயிர்ப்பிற்கு பின்னும் ஆறுதல் தந்தார்..

ஆனால் இப்போது மாதாவின் மற்ற பிள்ளைகளான
மாதாவின் பிள்ளைகளும், அதுவும் இப்போது எஞ்சிய பிள்ளைகளான நாம் அந்தத் தாய்க்கு ஆறுதலாக இருக்கிறோமா? தாயின் கண்ணீரைத் துடைக்கிறோமா? நாங்கள் இருக்கிறோம் தாயே.. உனக்காக.. உம் குமாரனுக்காக நாங்கள் இருக்கிறோம் தாயே என்று துணிந்து சொல்வோமா?..

அல்லது..
1. உனக்கு சேலை கட்டுவோம் தாயே.. ஆனால் ஜெபமாலை சொல்ல மாட்டோம்..

2. உனக்கு நெக்லஸ், செயின் எல்லாம் செஞ்சு போடுவோம் தாயே ஜெபமாலை சொல்ல மாட்டோம்,

3. தேர் இழுப்போம் தாயே நீ கேட்ட தவம் செய்ய மாட்டோம்..

4. உன்னைப் பற்றி எவனாவது பேசினால் சண்டைக்கு போவோம் தாயே ஆனால்  நீ கேட்ட  பரிகாரம் செய்ய மாட்டோம்.

5. உனக்காக மாலை போடுவோம், நடைபயணம் செய்வோம்.. ஆனால் நீ கேட்கும் ஜெபமாலை, தவம், பரிகாரம் செய்யவே மாட்டோம்..

என்றால் நாம் மாதா பிள்ளைகள் அல்ல.. 

இப்போது கத்தோலிக்கர்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது..

ஜெபமாலை என்ற ஆயுதத்தை கையில் தூக்கியிருக்கிறார்கள்… தூக்காதவர்கள் கூட தூக்கிவிட்டார்கள்..
இப்போது நாங்கள் உம்முடைய உண்மையான பிள்ளைகள்… ஜெபமாலை வீரர்கள்.. அம்மா உங்கள் வியாகுலத்தை போக்க.. உலகம் பாவத்திலிருந்து விடுபட, உலகம் சமாதானம் பெற, உங்கள் போரில் உங்களோடு நிற்கும் படை வீரர்கள்.. அலகையை ஒழித்துக்கட்டும் உன் போரில் உமக்கு துணை நிற்கும்  உண்மையான வீரர்கள்..

இப்போது எம் இந்தியாவிலும், உலகமெங்கும் மக்களை அச்சுறுத்திவரும் கொரோனோ என்று நோய் தீர.. பாதிக்கப்பட்டமக்கள் நோய் நீங்க. பாதிக்கபடாமல் இருக்கும் மக்கள் காப்பாற்றப்பட நாங்கள் தொடர்ந்து.. ஜெபமாலை ஜெபிக்கிறோம்.. இதிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் தாயே..

எங்களுக்காக உம் திருக்குமாரனிடமும், பிதாவிடமும் பரிந்து பேசி.. எங்களுக்கு இதிலிருந்து முழுவிடுதலையை பெற்றுத்தாருங்கள் தாயே..

எங்கள் பெயரில் தயவாயிரும்.. ஸ்வாமி.. தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !