அப்போஸ்தலர் புனிதர் பவுலின் மனமாற்றம்
(Conversion of St. Paul the Apostle)
வேற்று இனத்தவரின் திருத்தூதர்:
(Apostle of the Gentiles)
பிறப்பு: கி.பி. 5
டார்சஸ், சிசிலியா, ரோமப் பேரரசு
(Tarsus, Cilicia, Roman Empire)
இறப்பு: கி.பி. 67
ரோம், ரோமப் பேரரசு
(Rome, Roman Empire)
ஏற்கும் சபை/ சமயம்:
அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்:
மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா, ரோம்
நினைவுத் திருவிழா: ஜனவரி 25
புனித பவுல் (சின்னப்பர்) ஒரு கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 முதல் கி.பி. 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த ரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். டமாஸ்கஸ் (Syrian Damascus) நகரில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு டமாஸ்கஸ் செல்லும் வழியில் ஒளி வடிவில் இயேசு அவர் முன் தோன்றினார்.
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்து எல்லோருக்கும் பொதுவானவர் - யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
மன மாற்றத்துக்கு முன்:
புனித பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ள படி, அவர் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார். இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார்.
அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார். கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது டமாஸ்கஸில் கிறிஸ்தவர் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வரும்படி டமாஸ்கஸுக்கு புறப்பட்டார்.
மனமாற்றம்:
டமாஸ்கஸ் நகர் சமீபித்தபோது, திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. சவுல் தரையிலே விழுந்தார்.
அப்பொழுது, "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்" என்று தன்னுடனே பேசுகிற ஒலியைக் கேட்டார்.
அதற்கு சவுல், "ஆண்டவரே, நீர் யார்?", என்றார்.
அதற்குக் கர்த்தர், "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்." என்றார்.
சவுல் நடுங்கித் திகைத்து, "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்" என்றார்.
அதற்குக் கர்த்தர், "நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்." என்றார்.
அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார். கூட இருந்தவர்கள் சவுலை கைலாகு கொடுத்து, தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார்.
பின்பு கர்த்தர் அன்னியா என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது அன்னியா போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவர்மேல் கையை வைத்து, "சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்" என்றான்.
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் உணவுண்டு பலப்பட்டான். சவுல் டமாஸ்கஸிலுள்ள சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு, எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டு போகும்படி வந்தவன் இவனல்லவா? என்றார்கள்.