29 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை


புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்.

இடம் : தோப்புவிளை

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி.

நிலை : பங்கு தளம்
குடும்பங்கள் : 120
அன்பியங்கள்: 7

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி D. செல்வ ரத்தினம்.

திருவிழா : ஆகஸ்ட் 15 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

நம்பி நதியின் ஓரம் ..வானுயர்ந்த கோபுரங்கள் ...விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணித்த தேவாலயம் ..இதுவே தோப்புவிளையின் தனிப்பெரும் அடையாளம்.

மக்களின் மனங்களை போலவே இதன் மணற்பரப்பும் தூயது.
தொழிலால் பனை ஏறும் பாரம்பரியம் விசுவாசத்தில் லத்தின் ரீதி ரோமன் கத்தோலிக்கர்கள்,  உலக வரை படத்தில் தென் இந்தியாவின் நெல்லை மாவட்ட தென் பகுதியிலும் திருச்சபை வரை படத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட தென் பகுதியில் அமைந்துள்ள சிறிய பங்குகிராமம் தான் தோப்புவிளை.

2000 ம் ஆண்டில்தான் தனிப்பங்கு எனும் உயர்வை கண்டாலும்
இப்பங்கு மக்கள் புனித தோமையார் கால கிறிஸ்தவர்கள் என்பதற்க்கு இப் பங்கு முழுவதும் காணப்படும் இரட்டை சிலுவைகளே சாட்சிகள்.

புனித சவேரியரால் விசுவாச உறுதி பெற்ற மக்கள்.

திருச்சி மறை மாவட்டத்தில் அணைக்கரை பங்கு இருந்த பொழுதே
அதன் கீழ் தோப்புவிளை இருந்ததர்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

இறை மக்கள் திருத்தொண்டர்களாய் வாழ்ந்ததர்கும் பணிபுரிந்ததர்கும் வரலாற்று குறிப்புகள் உண்டு, இவர்களில் குறிப்பிடத்தக்கவர்
1 சந்தாயி
2 .ஞானப்பிரகாசம்.(சந்தாயி கணவர்.)
3 .அருளாயி,(சந்தாயி தங்கை)
4 மதுரேந்திரம் (இவருடைய கல்லறை இரம்மதபுரத்தில் உள்ளது.
5 தோப்புவிளையில் வாழ்ந்த இறை அடியார் அண்ணாவி
(இவர் ஆலயத்தில் உபதேசியராய் பணிசெய்தவர் அல்ல மாறாக ஊர்கள் தோறும் சென்று ஜெபிக்க கற்று கொடுத்தவர்).

அவருடைய கல்லறை இஸ்லாபுரம் காட்டினில் காணப்படுகிறது .
இறைப் பற்று கொண்ட இம்மக்கள் அனைவரும் ஒரு கால கட்டத்தில்
வறுமையினால் புலம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்லலானார்கள்,

அப்படி புலம்பெயர்ந்து சென்ற சாந்தாயி அமர்ந்து உருவாக்கிய இடமே இன்றைய வடக்கன்குளம். அவள் உருவாகியதுதான் திருக்குடும்ப தேவாலயம் . இவ்வாலயத்தில்தான் இந்திய தேசத்தின் முதல் வேதசாட்சி தேவ சகாயம் திருமுழுக்கு பெற்றார். ஞானப்பிரகாசம் அழகப்ப புறத்தில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஆலய வரலாறு

காடாய் கிடந்த இடம்
காய் நெருங்சி பத்திய இடம்
ஊராக்க வருகிறாள் ஒத்தாசை மாதா

இப்பாடல் புழக்கத்தில் இருந்த காலம் 1880 கும் 19930 கும் இடைப்பட்ட காலமே.

இப்பாடல் மூலம் ஆலயம் தோன்றிய காலத்தை கணிக்க முடிகிறது,
ஆதி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் தங்களுக்கென்று நிலமற்றவர்களாகவும் வழிபட ஆலயமும் இன்றி மரத்தடிகளில் கூடி ஜெபிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருந்துள்ளார்கள், குருக்களின் நேரடி பார்வை எட்டாக்கனியாகவே இருந்துள்ளது.

பொது நிலை திருத்தொண்டர்கள் அண்ணாவிகள் என்ற பெயரில் மக்களை வழி நடத்தி வந்துள்ளார்கள் .இக்காலத்தில் தான் அன்னைக்கு ஒரு குடிசை கோயில் ஓன்று அமைக்க முடிவு செய்து தற்போது கொடிமரம் உள்ள இடத்தை தேர்வு செய்து குடிசையில் சில மரியன்னை படங்களை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். ஒத்தாசை மாதா கோயில் என்று அழைத்துள்ளார்கள்.

சிக்கலில் அன்னையின் முதல் அற்புதம்

மேலே சொன்னதுபோல் நிலமற்ற மக்கள் என்பதற்க்கு இதுவே சான்று .

ஆலயம் அமைந்துள்ள இடம் புலிமான் குளத்தின் கிராம நிர்வாக முக்கியஸ்தர்களுக்கு சொந்தமானது, அவர்கள் ஆலய வழிபாட்டிற்கு ஆட்ஷேபனை தெரிவித்தது மட்டுமல்லாமல் ஆலயத்தை சுற்றி முள் வேலி அமைத்து தடை செய்தார்கள். அவர்கள் கண் முன்னாலேயே அன்னை ஓர் அற்புதம் நிகழ்த்தினார்கள்,பெரும் சூறாவளி காற்று வீசச்
செய்து முள் வேலிகளை பறந்து போக செய்தார்கள், இதை கண்ணுற்றவர்கள் திகைத்து நின்று அன்னையின் அற்புதம் இது என்பதை உணர்ந்தார்கள்.

உடனடியாக மக்கள் வழிபட அனுமதி வழங்கி மகிழ்ந்தார்கள். இதுவே அன்னை செய்த முதல் புதுமை ஆகும்.

1962 ல் குடிசை கோயிலை மாற்றி பிரமாண்ட ஆலயம் ஓன்று எழுப்ப முடிவு செய்து நம் முன்னோர்களால் அதற்கென்றே பிரத்தியோக செங்கல் சுள்ளை சுண்ணாம்பு சுள்ளைகள் அமைக்கப்பட்டு அழகிய ஆலயம் கட்டப் பட்டு அதன் பணிகள் நிறைவுபெறும் முன்பே 1971 ல் அர்ச்சிக்கப்பட்டு மேதகு தாமஸ் ஆண்டகை அவர்களால் அப்போதைய அணைக்கரை பங்குத்தந்தை ஹெர்மஸ் அடிகளார் காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. திருப்பலியின் தத்துவத்தை எடுத்தியம்பும் வண்ணம் அதன் பீட வேலைகள் புதுமைப் பொலிவுடன் திகழ்ந்தன.மீண்டும் மக்களின் பெரும் முயற்சியில் 1985 ஆம் ஆண்டு அதன் கோபுரப்பணிகள் செய்யப்பட்டு அழகுற காட்சி தந்தது, சில ஆண்டுகளுக்குப் பின்னர் முன் மண்டபப் பணிகள் முடிக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆனபின்பு ...2004 ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆலயம்கட்ட தீர்மானிக்கப்பட்டு இப்போது நாம் பார்க்கும் ஆலயத்திற்கு வள்ளியூர் மறை மண்டல ஆயர் பதிலாள் மேதகு ஜோசப் சேவியர் அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டு இப்போதைய பங்குத்தந்தை வரை ஒவ்வோரு பணிகளும் நடத்தப்பட்டு நிறைவுறும் தருவாயில் உள்ளது'

விண்ணகமேவிய அன்னை விண்ணில் கண்டது விண்ணகம் அல்ல.எங்கள் மண்ணில் அவள் குடி கொண்ட ஆலயமும் விண்ணகமே .

அன்னையின் பெயர்களில் மாற்றம்

ஒத்தாசை மாதா என்று அழைக்கப்பட்டவள் நவீன தமிழ் என்ற பெயரால் உபகார அன்னை என்று அழைக்கப்பட்டாள். இப்பெயரைதான் கடந்த ஆண்டுவரை நம் மறை மாவட்ட ஆவணங்களில் காண முடிந்தது. இருப்பினும் அன்னையின் நாமம் எப்படி விண்ணேற்பு அன்னையாக மாறியது என்பதையும் குறிப்பிடவேண்டும். உபகார அன்னையின் திருவிழா உலகமெங்கும் செப்டம்பர் 24 ல் கொண்ட்டாடப் படுகிறது,இந்நாள் நல்ல மழை காலங்களில் வருவதால் திருவிழாவை சிறப்பிக்க ஆகஸ்ட் 15ஐ மாற்று நாளாக தேர்வு செய்கிறார்கள்.இது அன்னையின் விண்ணேற்பு பெருவிழா.திருவிழா முறைப்படுத்தப்பட்ட ஆண்டையும் கவனிக்க வேண்டும்.1950 இவ் வான்டில்தான் அன்னையின் விண்ணேற்பு விசுவாச மறை உண்மையாக திருத்தந்தை 23 ஆம் அருளப்பரால் பிரகடனப் படுத்தப்படுகிறது. திருவிழா ஆகஸ்ட் 15 என்பதால் அன்னையின் விண்ணேற்பை மனதில் வைத்து மறையுரைகள் வழங்கப்பட்டதால் பரலோக அன்னை என்றும் விண்ணேற்பு அன்னை என்று தற்போதும் அழைக்கப்படுகிறாள்.