கடவுளுக்கு சொந்தமான பொருள் ஒன்று நம்மிடம் உள்ளது. ஆம் அது கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. அதை நாம் எப்படி வைத்துள்ளோம்?. எப்படி பாதுகாக்கிறோம்? எப்படி பராமரிக்கிறோம்? என்று கடவுள் கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கு சிறிது சேதாரம் என்றாலும் உடனடியாக பாதிக்கப்படுவது கடவுள்தான்.அதுதான் ஆன்மா.
ஆன்மாவிற்கு மரணம் கிடையாது. கடவுளிடமிருந்து வந்தது. திரும்பவும் அது கடவுளிடமே செல்ல வேண்டும். மாறாக அது சாத்தானிடம் ஒப்படைக்கப் பட கூடாது. சரி புத்தாண்டு பிறக்க இருப்பதற்கும் இந்த ஆன்மாவிற்கும் என்ன சம்மந்தம் ? புத்தாண்டை எவ்வளவு ஆர்வமாக, கனவுகளுடன், ஆசையாக எதிர்பார்ப்பது போல் ஆண்டவர் இயேசு ஒவ்வொரு ஆன்மாவையும், தன்னைத் தேடி எப்போது வரும் என்று ஆர்வமுடனும், ஆசையுடனும் காத்துக்கொண்டிருக்கிறார்.
நாம் உலக வாழ்க்கைக்காக, நம்முடைய சந்தோசத்திற்காக மெனக்கெடுவது போல் ஆன்மா விசயத்தில் ஆண்டவருக்காக மெனக்கெடுவது கிடையாது. ஏன் அதைக் கண்டுகொள்வதே கிடையாது. உலகப்போக்கிலே மனம் போவது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதப்பிறவி என்பது ஒரு சாதாரன விசயமல்ல. சவால்கள் நிறைந்தது.
அதே மனிதபிறவி இயேசுவுக்கும் கொடுக்கப்பட்டது. மனிதர்களைவிட அவருக்கு அதிக சவால்கள் கொடுக்கப்பட்டது, சவால்களை சில நேரம் பலவீனங்கள் என்றும் சொல்லலாம். இயேசுவுக்கு பசி என்னும் பலவீனம், துக்கம் என்னும் பலவீனம், கோபம் என்னும் பலவீனம், விரக்தி என்னும் பலவீனம், மரணம் என்னும் பலவீனம், ஏன் பலவீனம் என்னும் பலவீனம் ( சிலுவைப்பாடுகளில்) கூட கொடுக்கப்பட்டது. அத்தனை பலவீனங்களையும் வென்று சாதனை படைத்து சாதனையாளரானார். சாத்தானால் அவரை அசைக்க முடியவில்லை.
நம் நிலமையோ வேறு. ஒரு சிறு பலவீனத்தைக் கூட தாக்குபிடிக்க முடிவதில்லை. ஆன்மா உள்ள அத்தனை பேரும் நெஞ்சில் கைவைத்துப்பார்த்தால் தெறியும். எத்தனை நேரங்களில், எத்தனை விசயங்களில் தவறி இருக்கிறோம். தவறிக்கொண்டிருக்கிறோம் என்பது. நாம் நினைப்பது முற்றிலும் தவறு. தவக்காலம் மட்டும்தான் நம்மை தயாரிக்கும் காலம். அப்போதுதான் ஒருசந்தி இருக்க வேண்டும். ஒருத்தல்கள் செய்ய வேண்டும். ஆண்டவரை அதிகம் தேடவேண்டும் என்கிற விசயம்.
12 மாதங்களில் ஒன்றரை மாதங்கள் மட்டும் கொஞ்சம் உருப்படியாக வாழவா நம்மை படைத்தார் ? நாம் தவக்காலத்தில் மட்டும் கடவுளை கவனித்துக்கொள்ளாலாம் என்று கடவுளை ஏமாற்ற நினைத்தால் நாம்தாம் ஏமாறுவோம். கடவுள் ஏமாறும் கடவுள் அல்ல. அதே போல் கடவுள் வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் மட்டும் நான் உனக்கு உதவி செய்தால் போதுமா என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்.
வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய அல்ல கடவுளுடைய பொருளான நம் ஆன்மா எப்படி இருக்கிறது என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
மாற்றம் என்ற சொல்மட்டும்தான் மாறும். நான் மாற மட்டேன் என்று இறுமாப்புடன் வாழ்ந்தோமானால். நாம் ஏமாற்றுவது கடவுளை அல்ல. கடந்து செல்ல இருக்கும் ஆண்டிற்கும் வர இருக்கின்ற ஆண்டிற்கும் கண்டிப்பாக வித்தியாசம் உண்டு என்றால் அது நாம் புதிதாக துவங்க இருக்கும் வாழ்க்கையைப் பொறுத்தது.
மரியே வாழ்க !