இன்றைய புனிதர் - ஜனவரி 5 - புனிதர் ஜான் நியூமன் ***


புனிதர் ஜான் நியூமன்

( St. John Neumann )

ஃபிலடெல்ஃபியா மாகாண ஆயர்:

(Bishop of Philadelphia)

பிறப்பு : மார்ச் 28, 1811 

ப்ராச்சடிட்ஸ், போமியா அரசு, ஆஸ்டிரியன் பேரரசு

(Prachatitz, Kingdom of Bohemia, Austrian Empire)

இறப்பு: ஜனவரி 5, 1860 (வயது 48)

ஃபிலடெல்ஃபியா, பென்ஸில்வானியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்

(Philadelphia, Pennsylvania, United States)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் செக் குடியரசு) 

(Roman Catholic Church)

(United States and the Czech Republic)

அருளாளர் பட்டம்: அக்டோபர் 13, 1963

திருத்தந்தை ஆறாம் பவுல்

(Pope Paul VI)

புனிதர் பட்டம்: ஜூன் 19, 1977

திருத்தந்தை ஆறாம் பவுல்

(Pope Paul VI)

முக்கிய திருத்தலங்கள்:

புனிதர் ஜான் நியூமன் தேசிய திருத்தலம், ஃபிலடெல்ஃபியா, பென்ஸில்வானியா, 

ஐக்கிய அமெரிக்க நாடுகள்

(National Shrine of Saint John Neumann, Philadelphia, Pennsylvania, United States)

பாதுகாவல்: 

கத்தோலிக்க கல்வி

(Catholic Education)

நினைவுத் திருநாள்: ஜனவரி 5

"ஜான் நெபோமுசீன் நியுமன்" (John Nepomucene Neumann) என்ற இயற்பெயர் கொண்ட புனிதர் ஜான் நியூமன், "போஹேமியா" (Bohemia) நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குரு ஆவார். இவர், கி.பி. 1836ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வந்தார். அங்கே, “மகா பரிசுத்த மீட்பரின் சபையில்” (Congregation of the Most Holy Redeemer) இணைந்த இவர், ஃபிலடெல்ஃபியா மாகாணத்தின் நான்காவது ஆயராக கி.பி. 1852ம் ஆண்டு முதல் கி.பி. 1860ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பணியாற்றினார். புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஆயர் இவரேயாவார். இவர், ஃபிலடெல்ஃபியா மாகாணத்தின் ஆயராக இருந்த காலத்தில்தான் அமெரிக்காவின் முதல் “கத்தோலிக்க ஆயம் கல்வி முறையை” (First Catholic Diocesan School System) நிறுவி அமல்படுத்தினார்.

கி.பி. 1811ம் ஆண்டு, மார்ச் மாதம், 28ம் நாள், அன்றைய “ஆஸ்டிரிய பேரரசுக்கு” (Austrian Empire) உட்பட்ட “பொஹேமியா” (Kingdom of Bohemia) அரசிலுள்ள "ப்ராச்சடிட்ஸ்" (Prachatice) (இன்றைய செக் குடியரசு (Czech Republic) என்ற இடத்தில் பிறந்த ஜான் நியூமன் அவர்களின் தந்தையார் "ஜோஹன் பிலிப் நியூமன்" (Johann Philipp Neumann), ஒரு “காலுறை தயாரிக்கும்” (Stocking knitter) தொழில் செய்தவர் ஆவார். தாயார் "அக்னேஷ் லெபிஸ்ச்" (Agnes Lebisch) ஆவார். 

வானியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றிலும் விருப்பம் கொண்டிருந்த இவர், "பிராக்" (Prague) என்னுமிடத்தில் உள்ள "சார்லஸ் பல்கலையில்" (Charles University) இறையியல் பயின்றார். இருபத்துநாலு வயதிலேயே ஆறு மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கத்தோலிக்க குருவாக குருத்துவ அருட்பொழிவு பெறுவதில் ஆர்வம் மிகக் கொண்டிருந்தார். 1835ம் ஆண்டு, தமது படிப்பு முடிந்ததும் இவர் குருத்துவ சேவைக்காக விண்ணப்பித்தார். ஆனால், அச்சமயம் தேவைக்கு அதிகமான குருக்கள் பணியில் இருந்த காரணத்தால், போஹெமியா ஆயர் அப்போதைக்கு புதிதாக குருத்துவம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார்.

தமது இலட்சியத்தில் ஏமாற்றமடைந்த ஜான், கி.பி. 1836ம் ஆண்டு, குருவாகும் இலக்கை நோக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு பயணித்தார். நியூ யார்க் நகரை அவர் சேர்கையில், அவரிடம் ஒரே ஒரு டாலர் பணமும் உடுத்த ஒரு ஆடையும் மட்டுமே இருந்தன. கி.பி. 1836ம் ஆண்டு, ஜூன் மாதம், நியூ யார்க் நகரின் தற்போதைய "பழைய புனித பேட்ரிக் பேராலயத்தில்" (St. Patrick's Old Cathedral) குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்ற ஜான், அக்காலத்தில் பங்கு ஆலயங்கள் ஏதும் இல்லாத "நயாகரா நீர்வீழ்ச்சி" (Niagara Falls) பிராந்தியத்தில் வசித்து வந்த, ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சேவை செய்ய பணியமர்த்தப்படார்.

குள்ளமான உருவம் கொண்ட தந்தை நியூமன், தமது சேவைகளுக்காக புறநகர்ப் பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் குதிரையில் பயணிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். கால்கள் கூட சரியாக எட்டாத அளவுக்கு குள்ளமான அவரைப் பார்த்து மக்கள் பரிகசித்து சிரிக்கலானார்கள். ஆயினும் அவர் தமது பணியில் குறியாக இருந்தார். நோயாளிகளை கண்டு செபித்து ஆறுதல் கூறினார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மறை கல்வி (Catechism) கற்பித்தார். தாம் இல்லாதபோது கற்பிக்கும் பணிக்காக ஆசிரியர்களை பயிற்றுவித்தார்.

பல்வேறு பங்குகளில் பல்வேறு ஆலயங்களின் கீழ் சேவை புரிந்த தந்தை ஜான் நியூமன், கி.பி. 1852ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 5ம் நாள், ஃபிலடெல்ஃபியா மாகாண ஆயராக நியமிக்கப்பட்டார். அவரது மறைமாவட்டம், மிகவும் விசாலமானதாக இருந்தது. ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் அதிகமாக குடியேறிய பிராந்தியமாக இருந்தது.

ஆயராக தமது சேவை காலத்தில் எந்த சுகமும் அனுபவிக்காத ஜான் நியூமன் அவர்கள், தியாகம் மற்றும் சிக்கனத்தின் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஒரே ஒரு மாற்று உடையையும் காலணிகளையும் தவிர அவரிடம் வேறு கையிருப்போ சொத்து சுகமோ இல்லாதிருந்தார். கருப்பு - வெள்ளை இன வேறுபாடுகொண்ட மக்களின் சண்டை சச்சரவுகள், கத்தோலிக்கத்துக்கு எதிரான கலவரங்கள், கத்தோலிக்க கட்டிடங்கள் தீ வைப்பு ஆகியன அவரை சோர்வுறச் செய்தன.

அவருடைய காலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆலயங்களையும், என்பதுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் கட்டி நிர்வகித்தார்.

கி.பி. 1860ம் ஆண்டு, ஜனவரி மாதம், 5ம் தேதியன்று, நற்செய்தி போதனையில் இருந்த வேளையில், ஃபிலடெல்ஃபியா தெருவொன்றில் நிலைகுழைந்து வீழ்ந்த ஆயர் ஜான் நியூமன் அவர்கள் நித்திய வாழ்வில் புலம்பெயர்ந்தார்கள்.