“ பரிசுத்த ஆவி உன் மீது வருவார். உன்னதரின் வல்லமை உன் மேல் நிழலிடும் “
லூக்காஸ் 1 : 35
இதைவிட நம் தாய்க்கு என்ன அங்கிகாரம் வேண்டும் ? அவளின் தூய்மைக்கு யாருக்கு நாம் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் பரிசுத்த ஆவியும், உன்னதரின் வல்லமையும் யாருக்கு கிடைக்கும். அவர் எப்பேர்பட்டவராக இருப்பார். கடவுளையே பத்து மாதம் தன் வயிற்றில் சுமக்கும் நபர் யாராக இருக்க முடியும். அவருடைய பெற்றோர்கள் (சுவக்கின், அன்னம்மாள்) எப்பேர்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும். இப்பேர்பட்ட ஒரு மாசில்லாக் குழந்தையை பெற்றெடுக்க என்ன தவம் செய்திருக்க வேண்டும்.
ஆம் புனித சுவக்கின், அன்னம்மாளும் தவம் செய்துதான் தன் முதிர்ந்த வயதில் நம் தாயை பெற்றெடுத்தார்கள். என்ன நினைத்து அவர்கள் மாதாவை குழந்தையிலேயே கடவுளுக்கு அர்ப்பணித்தார்களோ தெறியவில்லை. மூன்று வயது முதலே ஆலயம் செல்லவும். ஆலயம் சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபட ஆரம்பித்தாள்.
அன்னையை போல கடவுளுக்காகவும், கடவுள் திட்டத்திற்காகவும் தன்னை முழுவது அர்ப்பணித்தவர்கள் யார் உள்ளார்கள் என்று யாராவது சொல்லுங்கள். அவர் சிந்தனை, சொல், செயல் அத்தனையிலும் கடவுள். மனுமக்களுக்கு அதாவது மீட்பு கிடைக்க அவருக்கு இருந்த ஆர்வம், அக்கரை ஏன்?. அவர்கள் ஏன் எல்லார் மாதிரியுமில்லை. மக்கள் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அக்கரை. யார் கஷ்ட்டப்பட்டாலும் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. யாருக்கும் உதவி தேவையா உடனே ஓடி விட வேண்டும். அவர் உள்ளம் அப்படிபட்டது. அதனால்தான் அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்.
கடவுளின் தாயாகப்போகிறீர் என்று சொல்லியும் அவர் மூலையில் சும்மா இருக்கவில்லை. “ முதிர்ந்த வயதில் எலிசபெத்துக்கு குழந்தை. ஆறு மாத குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். அப்படியென்றால் அவருக்கு உதவி தேவைப்படுமே என்று தன்னை பற்றி கவலைபடாமல் மலை நாட்டுக்கு கால் நடையாக ஓடுகிறாள் உதவி செய்ய. இப்படி
ஓடி வந்து உதவி செய்ய ஒரு தாய் இருந்தும். அவள் உதாசீனப்படுத்தப்படுவதை யாரால் தாங்கிக்கொள்ள முடியும்.
இந்த மேன்மை பொருந்திய முழு அர்ப்பணம் எங்களுக்கு கட்டாயத்தேவை. அழகின் முழுமையான ஆண்டவரின் தாய் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். நாங்கள் அவளை விடப்போவதில்லை. அவளும் எங்களை விடப்போவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவையும் அவர் பிள்ளையிடம் கொண்டு வர அன்று ஓய்வில்லாமல் உழைத்தாள். இன்று ஓய்வில்லாமல் ஜெபிக்கிறாள்.
நம் தாய்க்காக நாம் எதையாவது தியாகம் செய்யலாமா?.
குடி, போதை, சிகரட் இது கண்டிப்பாக தேவையா? அது இல்லாமல் வாழ்க்கை இல்லையா? நமக்கு நம் சந்தோசம்தான் முக்கியமா?
பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடங்குவதைவிட நற்கருணை நாதரில் அடங்கிவிடலாமே..
ஜெபம் : தூய அர்ப்பணமான தாயை எங்களுக்கு அன்னைபரிசாக தந்த இறைவா !. இப்போது குடும்பங்களில் குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் நுழைந்து, குடும்ப நிம்மதியை கெடுத்து அவர்களை எளிதாக அலகையின் பக்கம் அபகரித்து சென்றுவிடுகிறது. தியாகமே உருவான உம் தாயைப்போல நாங்களும், எங்கள் குடும்பம் நலம் விரும்பி அவர்களுக்காக எங்கள் சுய விருப்பங்களை துறந்து தியாகம் செய்து அவர்கள் மகிழ்ச்சியை எங்கள் மகிழ்ச்சியாக கண்டு இந்த திரு வருகை காலத்தில் எங்களையே தயாரிக்க வரம் தாரும் - ஆமென்