இன்றைய புனிதர் - ஜனவரி 6 - புனிதர் ஆண்ட்ரே பெஸ்செட் ***


புனிதர் ஆண்ட்ரே பெஸ்செட்

(St. André Bessette)

தூய திருச்சிலுவை சபையின் பொதுநிலை அருட்சகோதரர்:

(Lay brother of the Congregation of Holy Cross)

பிறப்பு: ஆகஸ்ட் 9, 1845

மாண்ட்-செயின்ட்-க்ரெகொய்ர், க்யூபெக், கனடா

(Mont-Saint-Grégoire, Quebec, Canada)

இறப்பு: ஜனவரி 6, 1937 (வயது 91)

மாண்ட்ரியல், க்யூபெக், கனடா

(Montreal, Quebec, Canada)

ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் திருச்சிலுவை சபை

(Canada and the United States, and the Congregation of Holy Cross)

முக்திபேறு பட்டம்: மே 23, 1982

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 17, 2010

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

(Pope Benedict XVI)

முக்கிய திருத்தலங்கள்:

தூய சூசையப்பர் சிற்றாலயம், மாண்ட்ரியல், க்யூபெக், கனடா

(Saint Joseph's Oratory, Montreal, Quebec, Canada)

நினைவுத் திருநாள்: 

ஜனவரி 6 (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)

ஜனவரி 7 (கனடா)

"ஆல்ஃபிரெட் பெஸ்செட்" (Alfred Bessette) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஆண்ட்ரே பெஸ்செட் ஒரு கத்தோலிக்க புனிதராவார். இவர், "புனித திருச்சிலுவை சபையைச்" (Congregation of Holy Cross) சேர்ந்த குருத்துவம் பெறாத அருட்சகோதரர் ஆவார். ஃபிரெஞ்ச் - கனடிய ரோமன் கத்தோலிக்க மக்களிடையே பிரபலமான முக்கிய நபர் ஆவார். புனித சூசையப்பரின்மீது தமக்குள்ள பக்தியின் வழியாக, ஆயிரக்கணக்கானோரை அதிசயிக்கத்தக்க விதமாக எண்ணெய் மூலம் குணப்படுத்தியதாகவும் வரலாற்று சான்றுகள் உள்ளன.

ஆரம்ப வாழ்க்கை:

மாண்ட்ரியலுக்கு (Montreal) தென்கிழக்கே சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள "மாண்ட்-செயின்ட்-க்ரெகொய்ர்" (Mont-Saint-Grégoire) என்னுமிடத்தில் பிறந்த இவர் தமது பெற்றோருக்கு பிறந்த பன்னிரண்டு குழந்தைகளில் எட்டாவது குழந்தை ஆவார். (நான்கு குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்து போயினர்) இவருடைய தந்தை "ஐசக் பெஸ்செட்" (Isaac Bessette) தச்சுப்பணி மற்றும் மரம் வெட்டும் பணி செய்பவர் ஆவார். இவருடைய தாயாரின் பெயர், "க்லாதில்ட் ஃபாய்ஸி பெஸ்செட்" (Clothilde Foisy Bessette) ஆகும். ஆல்ஃபிரெடுக்கு ஒன்பது வயதாகையில் அவரது தந்தை துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் இறந்து போனார். நாற்பது வயதில் பத்து குழந்தைகளுடன் விதவையாகிப் போன அவரது தாயார் குழந்தைகளை வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டார். மூன்றே வருடங்களில் காச நோயால் அவதிப்பட்ட அவரும் இறந்து போகவே ஆல்ஃபிரெட் அனாதையானார்.

தேவ அழைத்தல்:

ஆல்ஃபிரெடின் அனாவாதரவான, பக்தி மற்றும் தாராளமனப்பான்மையான நிலையைக் கண்ட அங்குள்ள பங்குத்தந்தை, அவரை மாண்ட்ரியலிலுள்ள "புனித திருச்சிலுவை சபையில்” (Congregation of Holy Cross) சேர்க்க விழைந்தார். சபைத் தலைவருக்கு பரிந்துரை செய்து ஒரு கடிதம் எழுதினர். அவரது நலிந்த உடல்நிலையைக் கண்டு முதலில் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தாலும் மாண்ட்ரியல் மறைமாவட்டத்தின் பேராயர் "இக்னேஸ் பௌர்கெட்" (Ignace Bourget) அவர்களின் தலையீட்டால் கி.பி. 1872ம் ஆண்டு, ஆல்ஃபிரெட் "சபையின் துறவறப் புகுநிலையில்" (Novitiate of the Congregation) சேர்த்துக்கொள்ளப்பட்டார். "சகோதரர் ஆண்ட்ரே" (Brother André) என்ற பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். தமது இருபத்தெட்டாம் வயதில் இறுதி பொருத்தனைகளை செய்துகொண்டார்.

ஆல்ஃபிரெடுக்கு "நோட்ரேடாம் கல்லூரியில்" (Notre Dame College) சுமை தூக்கும் பணி கொடுக்கப்பட்டது. அத்துடன், கூடுதல் பணிகளாக, கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள புனிதப் பொருட்களைக் காக்கும் பணி (Sacristan), சலவைப்பணி, மற்றும் செய்தி மற்றும் தபால்களை எடுத்துச் செல்லும் பணி ஆகியன கொடுக்கப்பட்டன.

புனித சூசையப்பர் மீது அவர் கொண்டிருந்த பெரும் நம்பிக்கை மற்றும் பக்தியானது அவரைக் கவர்ந்திழுத்தது. பல்வேறு வழிகளில் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை புனித சூசையப்பரிடம் மன்றாடும்படி தூண்டினார். நோயுற்றோரை காண அவர் சென்றபோதெல்லாம் கல்லூரி ஆலயத்தில் எரியும் விளக்கின் எண்ணெய்யை சிறிதே எடுத்து நோயுற்றோரின் உடலில் தடவி, புனித சூசையப்பரை நோக்கி செபித்து குணப்படுத்தினார். ஒருதடவை, அருகிலுள்ள கல்லூரி ஒன்றில் பரவிய தோற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஆண்ட்ரே முன்னின்றார். நோயால் பாதிக்கப்பட்டோர் ஒருவர்கூட இறந்து போகவில்லை. சகோதரர் ஆண்ட்ரேயின் செபமும் புனித சூசையப்பரின் அருளும் தங்களை குணப்படுத்தியதாக மக்கள் கூறினார். ஆனால், அவர் அதை மறுத்தார். சூசையப்பர் கௌரவிக்கப்படவேண்டும் என்றார். அவருக்கே நன்றி கூற சொன்னார்.

தொடர்ச்சியாக பல நோயாளிகள் இவரைக் காண வந்தபோது கல்லூரியில் பதட்டங்கள் அதிகரித்ததால், சகோதரர் ஆண்ட்ரே இனியும் தனது ஊழியத்தை கல்லூரி வளாகத்துக்குள் தொடரக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. கல்லூரிக்கு பதிலாக, அருகிலுள்ள “டிராம்வே நிலையத்தில்” (Tramway Station) நோயாளிகளைக் காண அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது நற்பெயர் மென்மேலும் பரவியதால் சகோதரர் ஆண்ட்ரே மிகவும் சர்ச்சைக்குரிய நபராக ஆனார். தூய திருச்சிலுவை சபையின் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் பலர் அவரை ஆதரித்தனர். ஆனால் பலர் அவரை எதிர்க்கவும் செய்தனர். பள்ளிக்கூடத்தின் நற்பெயருக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்தானவராக அவரைக் கருதினர். குழந்தைகள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்திய பிறர், தொடர்ந்து சகோதரர் ஆண்ட்ரேயைக் காண கல்லூரிக்கு வரும் நோயாளிகளால் மாணவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படலாம் என அஞ்சினர்.

கி.பி. 1904ம் ஆண்டு, ஆண்ட்ரே புனித சூசையப்பருக்கு ஒரு சிற்றாலயம் கட்டவேண்டி பிரச்சாரம் தொடங்கினார். கி.பி. 1924ம் ஆண்டு, புனித சூசையப்பர் திருத்தல பேராலய (Basilica named Saint Joseph's Oratory) கட்டுமான பணிகள் தொடங்கின.

91 வயதான சகோதரர் ஆண்ட்ரே பெஸ்செட் கி.பி. 1937ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் நாள், இறையாட்சி காண பயணித்தார்.