இரண்டு வேடர்கள் கையில் வலையுடன் ஒரு மலைப்பாங்கான இடத்திற்குச் சென்றார்கள். ஓரிடத்தில் அதிகமான பறவைகள் வட்டமடித்துக் கொண்டிருந்ததால் அங்கு தாங்கள் கொண்டுவந்த வலைகளை விரித்துவிட்டு அவர்கள் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார்கள். அடுத்தநாள் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது நிறையப் பறவைகள் அவர்கள் விரித்த வலையில் சிக்கிக்கொண்டு, தப்பிப்பதற்கு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன.
இதைப் பார்த்த அவர்கள் இருவருக்கும் சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஆனாலும் அதில் ஒருவேடன் இன்னொரு வேடனிடம், “இந்தப் பறவைகள் மிகவும் மெலிந்து காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டுபோய் நாம் சந்தையில் விற்றால் யாரும் வாங்கமாட்டார்கள்” என்றான். அதற்கு இன்னொரு வேடன், “அதற்கு நாம் என்ன செய்வது?” என்று கேட்டான். “இவற்றிற்கு சிறுது நாட்கள் இரைபோடுவோம். நாம் போடும் இரையை உண்ணும் இந்தப் பறவைகள் உடல் பருமன் பெறும். அதன்பின்னர் இவற்றைக் கொண்டுபோய் நாம் சந்தையில் விற்றால், நிறையப் பணம் கிடைக்கும்” என்றான். அந்த வேடன் சொன்ன யோசனை மற்றவனுக்கு சரியெனப் படவே இருவரும் சேர்ந்து வீட்டிலிருந்து தானியங்களைக் கொண்டு வந்து அவற்றிற்கு இரையாகப் போட்டார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல அந்தப் பறவைகள் உடல் பருமன் பெற்றன. ஆனால் ஒரே ஒரு பறவை மட்டும் அவர்கள் போடும் இரை எதுவும் உண்ணாமல் மெலிந்துகொண்டே போனது. குறிப்பிட்ட நாளில் அவர்கள் வலையில் இருந்த பறவைகளைப் பிடித்துக்கொண்டு போவதற்கு முன்னதாகவே மெலிந்த அந்தப் பறவை வலைகளின் ஊடே ஊடுருவி, அங்கிருந்து தப்பித்துச் சென்றது. உண்டு கொழுத்த பறவைகளோ சந்தையில் விற்கப்பட்டு காசக்கப்பட்டது.
கசான்சாகிஸ் என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய இந்த கதை உண்ணாமல் நோன்பிருக்கும்போது நாம் நினைத்த பலனை அடையலாம் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நோன்பிருந்து இறைவனிடத்தில் மன்றாடும்போது நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது உண்மை. ஆனாலும் அதை ‘நாம் நோன்பிருக்கின்றோம்’ என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகச் செய்யும்போது அதனால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் சிலர் இயேசுவிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை” என்று கேட்கின்றனர். அதற்கு ஆண்டவர் இயேசு அவர்களிடம், “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர் நோன்பிருக்க முடியுமா?, மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பிருப்பார்கள்” என்று சொல்லி அவர்களுடைய வாயை அடைகின்றனர்.
இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு கூறும் இந்த பதிலைப் பார்த்துவிட்டு இயேசு நோன்பிருத்தலுக்கு எதிரானவரா? என்று நாம் எண்ணத் தோணலாம். அப்படியில்லை, இயேசுவே நாற்பது நாட்கள் நோன்பிருந்திருக்கிறார் (மத் 4:2). “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்று சொல்லி நோன்பின் வல்லமையைக் குறித்து எடுத்துரைத்திருக்கின்றார் (மத் 17:21). பின் இயேசு எதற்காக அவர்களிடம் அப்படிச் சொல்லவேண்டும் என்று நாம் சிந்திக்கலாம். இயேசு நோன்பினை எதிர்க்கவில்லை, மாறாக நோன்பின் பெயரால் நடக்கும் வெளிவேடங்களைத்தான் சாடுகின்றார்.
யூதர்களுடைய சமய வாழ்வில் இறைவேண்டல், நோன்பிருத்தல், அறச் செயல்கள் செய்தல் ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக அவர்கள் நோன்பிருத்தலுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். Day of Atonement எனப்படும் பாவப் பரிகார நாளில் (ஒவ்வொரு ஆண்டின் ஏழாம் மாதத்தின் பத்தாம் நாள் பாவப் பரிகார நாள் என யூதர்கள் நினைவுகூர்ந்தார்கள் (லேவி 16:29) நோன்பிருந்து ஜெபிக்கும்போது அவர்கள் செய்த பாவம் அனைத்தும் மன்னிக்கப்பட்டதாய் அவர்கள் நம்பினார்கள். இது ஒருபுறமிருக்க பரிசேயர்களோ வாரத்தில் இரண்டு நாட்கள் (திங்கள், வியாழன்) நோன்பிருந்தார்கள். அப்படி அவர்கள் நோன்பிருந்தபோது, தாங்கள் நோன்பிருக்கிறோம் என்பதை மற்றவர்களுகுக் காட்டிக்கொள்ள முகங்களை விகாரமாக வைத்துக்கொண்டார்கள். இப்படி மக்கள் பார்க்கவேண்டும் என்று நோன்பிருந்தவர்கள்தான் இயேசுவிடம், “ஏன் உம்முடைய சீடர்கள் நோன்பிருப்பதில்லை?” என்ற கேள்வியைக் கேட்கின்றனர். இயேசுவோ அவர்களுக்கு சரியான பதிலைச் சொல்லி அவர்களது வாயை அடைக்கின்றார்.
யூத சமூகத்தில் மணமகன் திருமணம் முடிந்தவுடன் தேனிலவுக்குச் (Honey Moon) செல்வது கிடையாது. ஒருவார காலம் மணவீட்டாரோடு உடன் இருப்பார், அப்போது அங்கு வருகின்ற விருந்தினர்களோடு அவர் பேசி மகிழ்ந்திருப்பார். அப்படிப்பட்ட தருணத்தில் மனவீட்டார் யாரும் நோன்பிருப்பதில்லை. காராணம் அதில் மகிழ்ச்சியின் காலம். இயேசு என்னும் மணமகனும் சீடர்களோடு இருக்கும்போது எதற்கு அவர்கள நோன்பிருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் வாதமாக இருக்கின்றது.
ஆகவே நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் நோன்பாக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் அதனை பிறருடைய பாராட்டுக்காகச் செய்யாமல் உள்ளார்ந்த ரீதியல் செய்வோம். அப்போது இறைவன் நமக்கு முடிவில்லா வாழ்வைக் கொடையாகத் தருவார்.