"கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" (மாற்கு 2:7) என்பது அனைவரின் உள்ளத்திலும் எழும் கேள்வி. இறைமகன் இயேசு பாவங்களை மன்னித்ததன் மூலம், பலரும் உடல், உள்ள, ஆன்ம நலன்களைப் பெற்றனர். இயேசுவுடனான சந்திப்பு பலரது வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கியதைக் காண்கிறோம். இயேசு தம்மை நெருக்கமாகப் பின்தொடர்ந்த சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கியதைக் காண்கிறோம்: "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா." (யோவான் 20:23) பாவம் இல்லாமல் உற்பவித்து உலக மீட்பரின் தாயான மரியாளும், இத்தகைய பாவ மன்னிப்பு அதிகாரத்தால் பாவிகள் மீட்படைய உதவுகிறார் என்பதே திருச்சபையின் போதனை.
"மரியாள் உண்மையிலேயே, கிறிஸ்துவின் உறுப்புகளாகிய கிறிஸ்தவர்களுக்கு தாயாகத் திகழ்கின்றார். ஏனெனில், அந்த தலையானவரின் உறுப்புகளாக நம்பிக்கை கொண்டோர் திருச்சபையில் பிறக்கும்படி அன்பினால் அவர் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 53) "என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" (லூக்கா 1:47) என்று பாடிய மரியாள், மக்கள் அனைவரும் மீட்பு பெறுமாறு ஆண்டவரிடம் இடைவிடாது பரிந்துபேசி வருகிறார். "தலைமுறை தலைமுறையாய் இரக்கம் காட்டி வருகிறவர்" (லூக்கா 1:50) என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்த மரியாள், தம்மை நாடி வரும் பாவிகளின் ஈடேற்றத்துக்காக ஆண்டவரின் இரக்கத்தை பெற்றுத் தருகிறார். பாவங்கள் மன்னிக்கப்பட தம் மகனிடம் பரிந்து பேசும் மரியாள், பாவிகளை நல்வழிப்படுத்துவதிலும் தாய்க்குரிய அன்போடு உதவி செய்து வருகிறார்.
ஆகவேதான், "பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், தேர்ந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் நற்பண்புகளின் முன்மாதிரியாக மிளிரும் மரியாளை நோக்கித் தம் கண்களை அவர்கள் உயர்த்துகின்றனர்." (திருச்சபை எண். 65) இயேசுவுக்கு மட்டுமின்றி திருச்சபையின் மக்கள் அனைவருக்கும் தாயாகத் திகழும் மரியாள், இயேசுவைப் போன்று அவரது சகோதர சகோதரிகளான நாம் அனைவரும் நிறைவுள்ளவர்கள் ஆகுமாறு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார்; பாவிகள் அனைவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் அருளும் மீட்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் செயலாற்றி வருகிறார். விண்ணகத்தில் கடவுளின் மாட்சியில் பங்கு பெற்றுள்ள அன்னை மரியாள், பாவிகளுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத்தர சோர்வின்றி பரிந்துபேசி வருவதால் 'பாவிகளுக்கு அடைக்கலம்' என்று அழைக்கப்படுகிறார்.