வரலாற்றுப் பின்னணி
கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள் மூவர், ஏரோது மன்னனிடம் சென்று, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?, அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்று சொன்னதைக் கேட்டதும், அவன் கலங்கினான். அவனோடு சேர்ந்து எருசலேம் நகர் முழுவதும் கலங்கியது. பின்னர் அவன் அவர்களைத் தனியாக அழைத்து, “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்றான். ஆனால் ஞானிகள் மூவரும் ஏரோது மன்னனிடம் போகவேண்டாம் என்று கனவிலே எச்சரிக்கப்பட்டதால் அவர்கள் வேறு வழியாகப் போய்விடுகிறார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோடுகிறான். அப்படி இயேசுவுக்காக, இயேசுவுக்குப் பதிலாகக் கொல்லப்பட்டவர்கள்தான் இந்த மாசில்லா குழந்தைகள் (மத் 2: 1-18).
யூத வரலாற்று ஆசிரியரான பிலாவியுஸ் ஜோசபுஸ் தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் இந்த நிகழ்வைக் குறித்து எங்கும் குறிப்பிடாததால், ஒருவேளை இந்தக் கொடிய நிகழ்வில் நிறையக் குழந்தைகள் இறந்திருக்க மாட்டார்கள் என்று ஒருசிலர் சொல்வர். இன்னும் ஒருசிலர் பெத்லகேமையும் அதன் சுற்றுப்புறத்தையும், அங்கு வாழ்ந்த மக்கள்தொகையையும் வைத்துப் பார்க்கும்போது முப்பதிலிருந்து முப்பத்தைந்து குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்வர். எப்படி இருந்தாலும் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுவோ என்று பயந்து பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் ஈவு இரக்கமற்ற செயல் உண்மையிலே வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
இந்த ஏரோதைக் குறித்து முன்பு சொன்ன அதே வரலாற்று ஆசிரியர் பிலாவியுஸ் ஜோசபுஸ், “ஏரோதுக்கு பிள்ளையாகப் பிறப்பதை விட, அவனுடைய வீட்டில் பன்றியாகப் பிறப்பது நலம்” என்பார். அந்தளவுக்கு ஏரோது தன்னுடைய பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்து தன்னுடைய பிள்ளைகளைக்கூட கொன்றுபோட்ட அரசன். கிமு. 35 ஆம் ஆண்டு தன்னுடைய மருமகனையும், கிமு 34 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரன் ஜோசப்பையும், கிமு 29 ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி மரியம்மையும், அதே ஆண்டில் தன்னுடைய மனைவியின் அன்னை அலெக்ஸாண்ட்ரா என்பவரையும், கிமு 25 ஆம் ஆண்டில் தன்னுடைய இன்னொரு மருமகன் செஸ்டோபர் என்பவரையும், கிமு 4 ஆம் ஆண்டில் மகன் அந்திபத்தார் என்பவரைக் கொன்றுபோட்டான். இப்படியாக ஏரோது மன்னன் தன்னுடைய பதவியைக் காத்துக்கொள்ள, அதற்குத் தடையாக இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொன்றுபோடும் அரக்கனாக இருந்தான். இப்படிப்பட்டவன் இயேசுவைக் கொல்வதற்காக இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்குழந்தைகளைக் கொன்றுபோட்டதில் வியப்பேதும் இல்லை.
ஏரோது நிகழ்த்திய இந்தக் கொடிய நிகழ்வு பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாரவோன் மன்னன் மோசேயைக் கொல்வதற்காக ஏனைய யூதக் குழந்தைகளைக் கொன்றுபோட்டதை நியாபகப்படுத்துகின்றது (விப 1:22). ஆனால் மோசே எப்படி பாரவோனின் கையிலிருந்து தப்பித்தாரோ அதுபோன்று குழந்தை இயேசுவும் அவருடைய தாய் மரியாவும் ஏரோதின் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் யோசேப்பு வந்த கனவில் மூலம் எச்சரிக்கப்பட்டு எகிப்துக்கு தப்பி ஓடுகிறார்கள். அவன் இறந்தபிறகே தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றார்கள்.
இயேசுவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்த மாசற்ற குழந்தைகளுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கப்பட்டது என்று அறிய முற்படும்போதும் முதல் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். பீட்டர் கிறிசோஸ்லோகுஸ் என்பவர் தான் இதனைத் தொடங்கினார். தூய அகுஸ்தினாரோ “மாசற்ற குழந்தைகளின் இறப்பை விண்ணில் மொட்டுகள் மலருகின்றன” என்பார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மாசற்ற குழந்தைகளின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. குழந்தைகளைப் பேணுவோம்
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்துள்ளார்களே தவிர, உங்களில் இருந்து அல்ல. உங்களுடனேயே இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர, உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் அவர்களுக்கான சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் தேகங்களுக்கு ஒரு இல்லத்தை நீங்கள் வழங்கி இருக்கலாம்; ஆன்மாக்களுக்கு அல்ல” என்பான் லெபனான் நாட்டுக் கவிஞன் கலீல் கிப்ரான். குழந்தைகள் கடவுளால் அனுப்பட்டவர்கள்; அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எனவே அவர்கள்மீது நம்முடைய சிந்தனையைத் திணிக்காமல் அவர்களை அவர்களாகவே வாழவிட வேண்டும் என்பதுதான் கவிஞர் கூறும் செய்தியாக இருக்கின்றது.
இன்றைக்கு குடும்பங்களில், சமூக வெளியில் குழந்தைகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அதைவிடவும் இந்த சமூகத்தில் நடைபெறும் பெரும்பாலான வன்முறைகள் குழந்தைகளுக்கு எதிராகக் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள், குழந்தைத் தொழிலாளர் முறை இவையும், இன்ன பிறவும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் ஆகும். இவற்றிற்கு எதிராக பெரியவர்களாகிய (?) நாம் அணிதிரல்வதோடு மட்டுமல்லாமல், நம்மோடு வாழக்கூடிய குழந்தைகளின் நலன்களைப் பேணுவதும் நம்முடைய கடமையாகும். ஏனென்றால் எழுத்தாளர் திரு. சி.எம்.செந்தில்குமார் சொல்வது போன்று, “ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அந்தச் சமூகம் குழந்தைகளைப் பராமரிக்கின்றது என்பதில் அடங்கியிருக்கின்றது”.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்த குழந்தைகளைத் தடுத்த சீடர்களைக் கடிந்துகொள்கிறார்; சிறு குழந்தைகளைகளுக்கு இடரலாக இருப்போரின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் ஆழ்த்துவது நலம் என்று சொல்கிறார் (மத் 18: 6). இதைவிட மேலாக “சிறுபிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர் என்கிறார் (மத் 18:4). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளின் நலனைப் பேணுகின்றவர்களாகவும் அவர்களுக்கு தகுந்த மதிப்புத் தருகின்றவர்களாகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாகவும் வாழ முயற்சி எடுக்கவேண்டும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெர்மனியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் மாணவர்களைத் தலைதாழ்த்தி வணங்குவார். இவ்வழக்கம் நீண்ட நாட்களாக தொடர்ந்துகொண்டிருந்தது. இதனைக் கூர்ந்து கவனித்து வந்த ஒரு பணியாளர் அந்த ஆசிரியரிடம், “ஐயா! வழக்கமாக மாணவர்கள் தானே ஆசிரியர்களைத் தலைதாழ்த்தி வணங்குவார், ஆனால் நீங்களோ மாணவர்களைத் தலைதாழ்த்தி வணங்குகிறீர்களே, அது ஏன்?” என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், “இந்த மாணவர்களிடமிருந்து பிற்காலத்தில் பெரிய பெரிய தலைவர்கள் தோன்றலாம். அப்போது அவர்களை வணங்குவதற்கு நான் உயிரோடு இருக்கிறேனா என்று தெரியவில்லை, அதனால்தான் நான் இப்போதே வணங்குகிறேன்” என்றார்.
அந்த ஆசிரியர் சொன்னதுபோன்று அந்த வகுப்பறையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆளுமை தோன்றினார். அவர் வேறுயாருமல்ல திருச்சபையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த மார்டின் லூதர்.
இன்றைய குழந்தைகள், நாளைய உலகின் தலைவர்கள் என்பது எவ்வளவு உண்மை. அதைத் தான் மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.
ஆகவே, மாசில்லாக் குழந்தைகளின் விழாவை கொண்டாடும் நாம் நாம் வாழும் இந்த சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகளைத் தடுக்க அணியமாவோம்; நம்மோடு வாழும் குழந்தைகளின் நலன் பேணுவோம்; குழந்தை உள்ளம் கொண்டு வாழுவோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.