“ நீங்கள் தவஞ்செய்யாவிடில் எல்லோரும்.. கெட்டுப்போவீர்கள் “ என்கிறார் நம் ஆண்டவர்.. (லூக்.13:3)
நாளை ஒரு சந்தி சுத்த போஜனம் அனுசரிப்போம்.
ஆண்டவர் இயேசு சுவாமி நம்மிடம் கேட்ட விசயங்களே முதல் வெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகள். நம் இயேசு தெய்வத்தின் இருதயமும், மாதாவின் மாசில்லாத இருதயம் நாம் செய்யும், இந்த உலகத்தினர் செய்யும், கடவுள் நம்பிக்கையற்றவர் செய்யும் பாவ துரோகங்கள் மற்றும் நிந்தைகளால் மிகவும் நொந்துபோய் இருக்கின்றன. அவர்கள் இருதயங்களுக்கு நாம் தரும் ஆறுதலே இந்த தலைவெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகள்.
“ நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று புனித மார்கரெட் மரியம்மாளிடம் நம் இயேசு தெய்வம் கேட்டார். அதே போல் பாத்திமா சிறுமி லூசியாவிடம் நம் தேவ மாதா, தன் குமாரன் இயேசுவின் பனிரெண்டு வயது தோற்றத்துடன் தோன்றி “ நீயாவது எங்களுக்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று கேட்டார்கள்.
தலை வெள்ளி :
17- ஆம் நூற்றாண்டில் அதாவது 1675-ம் ஆண்டு திவ்ய நற்கருணைத் திருநாளுக்கு அடுத்த வார வெள்ளிக்
கிழமையன்று தேவ நற்கருணைக்கு முன், ஜெபத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்.மார்கரீத் மரியம்மாளுக்கு நமதாண்டவர் தமது திருஇருதயத்தை திறந்து காட்டினார். அக்கினி சுவாலையின் மத்தியில் தோன்றிய அவ்விருதயத்தைச் சுற்றி முள்முடியும் அதன் மேல் சிலுவையும் காணப்பட்டன.
சேசு அவளிடம், “ இதோ மனுமக்களை அளவற்றவிதமாய் நேசிக்கும் இருதயத்தைப்பார்! தனக்கென ஒன்றும் வைக்காது தன்னையே வெறுமையாக்கிய இருதயம் தன் அன்பை வெளிப்படுத்த உயிரையே அர்ப்பணித்த இருதயம். அதற்கு கைமாறாக கிடைப்பது என்ன/ பெரும்பாலும் நன்றிகெட்டதனமும் நிந்தை அவமானமும் தேவதுரோகமுமே.. எனக்கென தங்களை நேர்ந்து கொண்டவர்களே இவ்வாறு துன்பம் தருகின்றனர் என்பதே என் இருதயத்திற்கு மிகுதியான வேதனை தருகிறது. இந்த நன்றி
கெட்டதனத்திற்கு நீயாவது பரீகாரம் செய்யமாட்டாயா?” என்று இரக்கத்தோடு கேட்டார்..
நம் அன்பு தெய்வத்திற்கு நம் பதில் என்ன?
முதல் வெள்ளி அன்று ஒருசந்தி, சுத்தபோஜனம், சில ஒறுத்தல் முயற்சிகள் தவிர நம் தெய்வத்தின் திருப்பாடுகளை அதிகமாக தியானிக்க வேண்டும். துக்க தேவரகசியம் ஜெபமாலையில் தியானிக்க வேண்டும். சிலுவைப்பாதை செய்ய வேண்டும். திருஇருதய ஜெபமாலை அல்லது இரக்கத்தின் ஜெபமாலை ஜெபித்தல் போன்ற பக்தி முயற்சிகள் செய்வோம். மேலும் அன்றைய தினம் நாம் சுமக்கும் அத்தனை சிலுவைகளையும் நம் தெய்வத்தின் திருஇருதய நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்...
முதல் சனி : அன்று குறிப்பாக நமதன்னையின் வியாகுலங்களை தியானிக்க வேண்டும். அன்று சந்தோச, துக்க, ஒளி, மகிமை தேவ இரகசியங்களில் மாதா சம்பந்தபட்ட நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றை மாதாவோடு தியானித்து ஜெபமாலை ஜெபித்து மாதாவோடு தங்கியிருத்தல் வேண்டும்..அன்று வியாகுல ஜெபமாலை ஜெபிக்கலாம்.
முக்கியமாக நம் இயேசு தெய்வத்தின் திருப்பாடுகளின் போது நம் அன்புத்தாய் அனுபவித்த பாடுகளையும், அவர்களின் பரிசுத்த வியாகுலங்களையும் தியானிப்போம்.
( மேலும் விவரங்கள் தனிப்பதிவில் உள்ளன )
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !