"நான் ஆண்டவரின் அடிமை" (லூக்கா 1:38) என்று கூறிய சாதாரணப் பெண் மரியாளை, கத்தோலிக்கர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது ஏன்?
"நான் ஆண்டவரின் அடிமை" என்று கூறும் முன்பே, மரியாள் உலக மீட்பரின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவராக இருந்தார். "ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன் நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தையாம் கடவுள் ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப் பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்தமுறையில் நிறைவேறுகின்றது." (திருச்சபை எண்.56).
"கிறிஸ்துவின் பிறப்பு மரியாளுக்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, கடவுளின் வாக்குறுதிகளும் தயாரிப்புகளும் நிறைவேறுகின்ற 'காலத்தின் நிறைவு' தொடங்குகிறது. இறைத் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் குடிகொண்டிருக்கிற இயேசுவைக் கருத்தாங்க மரியாள் அழைப்பு பெற்றார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 484) "கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானத்தூதர் 'அருள் நிறைந்த மரியே’ (லூக்கா 1:28) என்று வாழ்த்துகின்றார். இக்கன்னியும், 'நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார்." (திருச்சபை எண்.56)
"வானதூதர் தூது சொன்னதும் கன்னி மரியாள் தம் உடலிலும் உள்ளத்திலும் கடவுளின் வார்த்தையை ஏற்று, உலகிற்கு வாழ்வை வழங்கினார்." (திருச்சபை எண். 53) "இவ்வாறு கடவுளின் வாக்குக்கு இசைவு அளித்ததால், ஆதாமின் மகளான மரியாள் இயேசுவின் தாயானார். புனித இரேனெயு கூறுவதுபோல, 'மரியாள் தம் கீழ்ப்படிதலால் தாமும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்.' இவரோடு வேறுபல பழங்காலத் தந்தையரும் பின்வருமாறு கூறுகின்றனர்: 'ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாளின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டது; நம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியாள் அவிழ்த்துவிட்டார்.' ஏவாளோடு ஒப்பிட்டு, மரியாளை 'வாழ்வோரின் தாய்' எனவும் அவர்கள் அழைக்கின்றனர்.'' (திருச்சபை எண்.56) இவ்வாறு பேறுபெற்றவராகத் திகழும் மீட்பரின் தாய் மரியாளை, கத்தோலிக்கர்கள் கொண்டாடுவதில் தவறு என்ன இருக்கிறது?