முன்பொரு காலத்தில் குரோசுஸ் என்றோர் அரசர் இருந்தார். அவர் பெரிய பணக்காரர். அவர் மிகப்பெரிய மெய்யியல் அறிஞரான தேல்ஸ் என்பவரிடம், “கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்?” என்ற கேள்வியைக் கேட்டார். தேல்ஸ் அவரிடம், “இதற்கான பதிலை நான் நாளை சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
மறுநாள் வந்தது. குரோசு தேல்சை அழைத்து, “நான் கேட்ட கேள்விக்கான பதிலைச் சொல்லும்” என்று சொன்னபொழுது, “நாளை சொல்கிறேன்” என்றார். இப்படி ஒவ்வொருநாளும் குரோசுஸ் தேல்ஸிடம் கேட்டபொழுதும், தேல்ஸ், “நாளை சொல்கிறேன்... நாளை சொல்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். இதற்கிடையில் தேல்ஸ், குரோசுஸ் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை.
தேல்ஸ் தனக்குப் பதில் சொல்வதற்குக் காலம் தாழ்த்துவதை அறிந்த குரோசுஸ் ஒருநாள் பொறுமையிழந்து தேல்சைக் கூப்பிட்டு, “தேல்ஸ்! நீ மிகப்பெரிய அறிஞர் என்று நினைத்துதான் உன்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டேன். இதற்கான பதில்தான் என்ன?” என்று கேட்டார். தேல்ஸோ மிகவும் வருத்தத்தோடு, “அரசே! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இத்தனை நாள்களும் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்வதற்குத்தான் நான் முயன்றுகொண்டிருக்கின்றேன்; என்னால் முடியவில்லை” என்றார்.
மிகப்பெரிய மெய்யியல் அறிஞரான தேல்சிற்கு வேண்டுமானால் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? போன்றே கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கிறிஸ்தவர்களாக நமக்குத் தெரியும். கடவுள் என்பவர் இரக்கமுள்ளவர்; அவர் நம்மோடு இருப்பவர் என்று. இன்றைய முதல் வாசகம், கடவுளை இம்மானுவேலனாய், நம்மோடு இருப்பவராகச் சுட்டிக்காட்டுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
ஆண்டவரில் நம்பிக்கை வைக்காத ஆகாசு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘இம்மானுவேலனாய்’ இருக்கும் இயேசுவின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பைச் செய்தியை வாசிக்கின்றோம். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இந்த முன்னறிவிப்புச் செய்தி, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
கிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதேயாவை ஆகாசு என்ற அரசன் ஆட்சி செய்து செய்தான். இவன் யூதேயாவின் கடைசி அரசனாகிய எசேக்கியாவிற்குத் தந்தை. இவனுக்கு சிரியா நாட்டினரிடமிருந்து ஆபத்து வந்தது. இத்தகைய சமயத்தில் இவன் இறை உதவியை நாடியிருக்கவேண்டும்; ஆனால், இவனோ இறை உதவியை நாடாமல், அசிரியர்களின் உதவியை நாடினான். மட்டுமல்லாமல், அவர்களுடைய சடங்குகளை எருசலேம் திருக்கோவிலில் புகுத்தினான். இதனால் ஆண்டவரின் சினம் இவன்மீது பொங்கி எழுந்தது.
இது ஒருபக்கம் இருந்தாலும், ஆண்டவரின் வாக்கு ஆகாசு அரசனுக்கு மீண்டுமாக அருளப்பட்டது. அந்த வாக்கு, ஓர் அடையாளத்தை ஆண்டவரிடம் கேட்குமாறு சொன்னது. இதற்கு இவன் என்ன செய்தான் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
அடையாளத்தை அருளும் ஆண்டவர்
ஆகாசு அரசனிடம் ஆண்டவர், ஓர் அடையாளத்தைக் கேளும் என்று கேட்கின்றபொழுது, அவனோ, நான் ஆண்டவரிடம் அடையாளமும் கேட்கமாட்டேன்; அவரைச் சோதிக்கவும் மாட்டேன் என்கிறான். இதனால் ஆண்டவரே ஓர் அடையாளத்தைத் தருகின்றார். ஆம், “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ எனப் பெயரிடுவார்” என்ற வார்த்தைகளில் ஆண்டவர் ஓர் அடையாளத்தைத் தருகின்றார்.
ஆண்டவர் ஆகாசு மன்னருக்குத் தருகின்ற இந்த வாக்குறுதி அல்லது அடையாளம் இயேசுவில் நிறைவேறுகின்றது. மரியின் வயிற்றில் பிறந்த மெசியாவாம் இயேசு, இம்மானுவேலனாய்; நம்மோடு இருப்பவராய் விளங்குகின்றார். ஆண்டவராகிய கடவுள் ஆகாசு அரசனுக்குத் தந்த வாக்குறுதி நமக்கொரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. அது என்ன என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
வாக்குறுதியை நிறைவேற்றும் இறைவன்
ஆண்டவர் ஆகாசு அரசனிடம் தருகின்ற வாக்குறுதி இயேசுவில் நிறைவேறுகின்றது. இது ஆண்டவர் வாக்குறுதி மாறாதவர் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் புரிவதாக வாக்குறுதி தந்தார்கள் (யோசு 24: 24); ஆனால், அவர்களும் சரி ஆகாசு அரசனும் சரி கடவுளுக்குத் தந்த வாக்குறுதியை மீறிச் செயல்பட்டார்கள். இதனாலேயே அவர்கள் அழிவுக்கு மேல் அழிவைச் சந்தித்தார்கள்.
இறைவன்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு மட்டுமே ஊழியம் புரிய அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவற்றின்படி நடக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இதோ உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்’ (மத் 28:20) என்று சொல்லி நம்மோடு இருக்கின்ற, இருக்க வருகின்ற மெசியாவாம் இயேசுவின்மீது நாம் நம்பிக்கைகொண்டு, அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.