இரக்கத்தின் அரசியாம் அன்னை மரியாள்மீது நாம் வைக்கும் நம்பிக்கை பெரிதாக இருக்க வேண்டும். மகன் ஓர் அரசன் என்றால், அவரைப் பெற்றெடுத்த அன்னை அரசி என்னும் ஆட்சிக்குரியவள் என்றும் நியாயப்படியும் உண்மையிலும் கருதப்பட தக்கவரே என்று புனித அத்தனாசியார் கூறுகிறார். திருச்சபையும் அன்னையை அரசி என்ற உன்னதப் பெயரால் மகிமைப்படுத்துகிறது. புவிகளை மன்னிப்பதில் மட்டுமல்ல துன்ப துயர வேளைகளில் அவளது அருளையும் துணையையும் வேண்டும்போது பரிவுடன் ஏற்றுஅரவணைத்து காத்து வருவதால் இரக்கத்தின் அரசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறாள். கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல அனைத்துமக்களுக்கும் அவள்தாயாக விளங்குகிறாள். சிலுவையடியில் தூயயோவானுக்கு இதோ உன் தாய் என்று கூறிய நேரமுதலே எல்லா மனிதருக்கும் தாய் ஆனாள். இதோ இந்நாள் முதல் எல்லா தலைமுறையினரும் என்னை பேறுடையாள் என்று போற்றுமே என்றுமரியா கூறியது நிறைவேறிக்கொண்டேயிருக்கிறது.
சகாய அன்னையின் திருநாள் திருத்தந்தை 7ம் பயஸ் (7ம்பத்திநாதர்) என்பவரால் தொடங்கப்பட்டது. அதன் வரலாறு பின்வருமாறு நிகழ்ந்தது. அன்று மேல்திசை நாடுகள் எல்லாம் நடுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தன. மக்கள் அழிவின் வாசலிலே தாங்கள் நிற்பதாக எண்ணி கொலை நடுக்கம் கொண்டனர். கிறிஸ்தவ நகரமே ஆட்டங்கண்டது. ஆம் துருக்கியரின் படையெடுப்பாலும் அவர்களது போர் திறமையாலும் வெற்றிமேல் வெற்றிச்சூடி நாடுகளையெல்லாம் சூறையாடி தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்ததால் அவைகளை கண்டவர்கள் நிலைகுலைந்து விட்டனர். கடலிலே கப்பலோடு கப்பல் மோதின. கடும் போர், லெப்பாந்தோ கடலில் தொன் ஜூவான் தளபதியின் படைகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் பெரும் போர் மூளவே யாருக்கு வெற்றி என்ற தவிப்பும், எதிரியின் எண்ணற்ற வீரர்களையும் அவர்களின் பலத்தையும் கண்ட கிறிஸ்துவ உலகத்தினர் சொல்லொண்ணா துன்பம் அடைய கண்ணீர் கண்களிலே மல்க கன்னிமரியின் அபயம் தேடி கைவிரித்து வேண்டினர்.
அந்த அவல நேரத்தில் கன்னிமரி அபயம் அளித்தாள். எதிரிகளுக்கு சாதகமாக வீசிய காற்று திடீரென அற்புதவிதமாக கிறிஸ்தவ போர் வீரர்களுக்குத் துணையாக திசைமாறி வீச கப்பல்கள் மோதி சிதறின.தீப்பற்றியெரிந்தன. கிறிஸ்துவ படை துருக்கியரை துரத்தி முறியடித்து வெற்றி வாகை சூடியது. காப்பாற்றிய தாய்மரியை புகழ்ந்தேற்றினர்.
பரிசுத்த திருத்தந்தை 5ம் பத்திநாதரோ தாய்மரி செய்த தன்னிகரற்ற செயலுக்கு நன்றியறிதலாக கிறிஸ்தவர்களின் சகாயமானபுனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வேண்டுதலால் 'லொரெட்டோ' மன்றாட்டு மாலையில் சேர்த்து மகிழ்ந்தார். இவையனைத்தும் கி.பி. 1571ம் ஆண்டிலே நிகழ்ந்தன. ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் மேல்நாட்டின் வரலாற்றிலே மாபெரும் மாற்றம். மக்களுக்கோ பெரும் ஏமாற்றம் நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நெப்போலியனின் காலடிகளிலே விழுந்தன. ஐரோப்பா கண்டத்தையே ஆட்டிப்படைத்தான். அன்று திருமறைத் தலைவராக விளங்கிய 7ம்பத்திநாதரை தன் கைப்பாவையாக்க முனைந்தான். தன்னை ஐரோப்பிய பேரரசனாக பிரகடணப்படுத்தினான். நெப்போலியனின் ஆணைக்கிணங்க திருத்தந்தை 7ம்பத்திநாதரை ஜீலை 5 1808 அன்று கைது செய்து மூன்று வருடகாலமாக சவோனா என்னுமிடத்தில் சிறையில் அடைத்து வைத்திருந்தான். 1814ம் ஆண்டு ஜனவரி மாதம் லேபிஸ் போருக்குப் பிறகு அவரை சவோனாவின் பாதுகாவலியான இரக்கத்தின் அன்னையின் திருவிழா நாளான மார்ச் 17ம் தேதி அன்று விடுதலை செய்தார்கள்.
அங்கிருந்து திருத்தந்தை ரோமிற்கு வெற்றி பயணம் மேற்கொண்டார். அவர் திருச்சபையின் பல இன்னல்களுக்கு பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியை பறைச்சாற்றும் விதமாக அவர் செல்லும் வழிகள் தோறும் இருந்த தேவ அன்னையின் திரு உருவ சுருபங்களுக்கு கிரீடங்கள் அணிவித்தார். நெப்போலியனை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிப்பெற்ற திருத்தந்தையைக் காண மக்கள் திரளாக வீதிகளில் கூடினர். மே 24 ,1814 அன்று ரோம் நகரத்தினுள் வந்த தந்தையை உற்சாகமாக வரவேற்றனர். தானும், திருச்சபையிலுள்ள மற்றவர்களும் அடைந்த துன்பத்தை நினைவுக்கூறும் வகையில் வியாகுல அன்னை திருவிழாவை செப்டம்பர் 18, 1814ம் ஆண்டு கொண்டாடினர். கடவுளுக்கும் அன்னை மரியாவுக்கும் நன்றி செலுத்தும் விதமாக செப்டம்பர் 15ம் நாள் 1815அன்று ரோம் நகரத்தில் சகாயஅன்னையின் திருநாளை மே 24ம் நாள் அன்று கொண்டாடவேண்டும் என்று உறுதிப்படுத்தினார்.
புனித தொன் போஸ்கோ உருவாக்கிய சலேசிய சபையின் தலைவியும் பாதுகாவலியுமான கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் பக்தி முயற்சிகளும் மரியாளின் மீது விசுவாசமும் 345ம் ஆண்டிலிருந்தே பின்பற்றி வருகிறது. saint John Chrysostom என்பவர் முதன் முதலில் மரியாளின் பக்தியை கிறிஸ்தவர்களின் சகாயியான மரியாள் என்ற பெயரில் ஆரம்பித்தார். இதனையே புனித தொன் போஸ்கோ அவர்களும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை என உலகிற்கு பறைசாற்றினார். அதுமட்டுமல்லாமல் இத்தாலியின் தூரின் நகரத்திலே கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்கு பேராலயம் ஒன்றை கட்டினார்.