மரியாள் பேறுடையாள் ***

அத்தியாயம் : - 01

    ஆதியிலே பெண்ணால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க தேர்ந்தெடுக்கப்பட்டவள் தான், ஜென்ம பாவமில்ல இந்த கன்னி மரியாள்.ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் மரியாள். வாக்கு மாமிசமாகியது அவள் திருவயிற்றில் சுமந்து பெற்றுதந்தாள் நமக்காக, சிலுவை சுமக்க! பலியாக!! 'அவர் சொல்வதைச் செய்யுங்கள் ' என்று சொல்லி, தன் விசுவாசத்தின் ஆழத்தை நமக்கு அளித்தவள் இம்மரியாள் தான். உயிர்தெழுந்த இயேசு விண்ணகம் சென்றபின், அப்போஸ்தலர்களை போதனைக்கு பக்குவப்படுத்தியதும் இப்பரமனின் தாயே. இயேசு உருவாக்கிய திருச்சபையின் முதல் சீடர் கன்னிமரி என்றால் அது மிகையாகாது. இன்றும் என்றும், நமக்கும் திருச்சபைக்கும், தாயாக திகழும் அன்னைமரி லூர்து, வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்கள் வழியாக, ஏராளமான மக்களை தன் மகனின் வழிக்கு அழைத்து வருகிறாள் என்பதும் கண்கூடாக காண்பதே.

   அன்னை மரியாள் உண்மையிலே பேறுபெற்றவள் என்பதை அவளுடைய வாழ்வில் நாம் காணலாம். மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் கூறியுள்ளபடி அந்த எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெறுகின்றன. எனவே அன்னை மரியாளை பேறுடையாள் என்று சொல்வது அன்னைக்கு முற்றிலும் பொருந்தும். அன்னையின் உறவினரான எலிசபெத்தின் வழியாக புனித லூக்காஸ் நற்செய்தியாளர் " ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் " ( லூக் 1 : 45 ) என்று கூறிய வார்த்தைகள் அதற்கு சான்று பகர்கின்றன. மரியாளின் வாழ்வில் இந்த எட்டு பேறுகளும் எவ்வாறு முழுமை பெற்றன என்பதை காண்போம்.

எளிய மனத்தோர் பேறு பெற்றோர்(மத் 5:3)

    இந்த பேறு மரியாளுக்கே முதன்மையாகவும், முழுமையாககவும் உரியதாகும். ஏனெனில் தன்நிலையை நன்கு உணர்ந்து தன்னைத்தாழ்த்தி மரியாள் கூறுகின்றாள் " அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் " ( லூக் 1 : 48 ) என்று, ஆம், மரியாள் தன் நிலை மிக மிக தாழ்ந்து ; அது ஒரு அடிமைக்கு ஒப்பானது என்பதை நன்கு உணர்ந்தே இவ்வாறு கூறுகின்றாள். அதே நேரத்தில் இறைவன் நல்லவர், வல்லவர், அவரால் ஆகாதது எதுவுமில்லை ; அவரை அண்டினோர்க்கு அவர் அனைத்தும் செய்வார் என்றும் முழுமையாக நம்புகின்றாள். எனவே, அந்த இறைவனுக்கே தன்னை  அர்பணித்து அடிமையாகின்றாள். அந்த இறைவனுடைய வார்த்தைகளுக்கே முழுமையாக பணிகின்றாள். " நான் ஆண்டவரின் அடிமை ; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் " ( லூக் 1 : 38 ). இவ்வாறு அன்னை மரியாள் முழுமையாக இறைவனைச்சார்ந்து விடுவதால் இறைவன் அவளில் வல்லமையுடன் செயலாற்றுகின்றார். இறைமைந்தன் இயேசுவுக்கு அவளைத் தாயாக்குகின்றார். " வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் " ( லூக் 1 : 49 ). இவ்வாறு எளிய மனங்கொண்ட அன்னை மரியாள் பேறுடையாள் ஆகின்றாள்.


அத்தியாயம் : - 02
 
   அன்னை மரியாள் மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளையும் முழுமையாக நிறைவு செய்கின்றார். அது எவ்வாறு என்பதை ஒவ்வொன்றாக அலசி பார்ப்போம். கடந்த அத்தியாயத்தில் " எளிய மனத்தோர் பேறு பெற்றோர் " என்பதை அன்னை மரியாள் எவ்வாறு முழுமை செய்தார் என்று பார்த்தோம். இனி வருவது....

   துயருறுவோர் பேறு பெற்றோர் { மத் 5:4}
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

   மரியாளின் துயரைப்பற்றி சொல்லுவதோ, எழுதுவதோ எந்த மொழியிலும், யாராலும் இயலாத ஒன்று. கடல் போன்ற அவளது துயரம் கடல் அலைகள் போன்று தொடர்ந்து கொண்டே இருந்தது. இயேசு, மரியாளின் திருவயிற்றில் கருவாக உருவான நேரம் முதல் அவரது உயிரற்ற உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நேரம் வரை அவளது துயரம் கூடிக்கொண்டே சென்றது. எனவே தான் மரியாளை " வியாகுலத்தாயே " என்று அழைக்கின்றோம். இந்த துயரமே அவளுக்கு பெரும் பேறாகின்றது. ஏனெனில் இத்துயரத்தின் மூலம் அன்னை மரியாள் இயேசுவின் பாடுகளிலும், அவரது மீட்புச் செயலிலும் பங்கேற்கின்றாள். அந்த மீட்பின் முதல் கனியுமாகிறாள். இவ்வாறு அன்னை மரியாள் தன் துயரால் பேறுடையாள் ஆகின்றாள்.

கனிவுடையோர் பெறு பெற்றோர் {மத் 5:5}
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

   அன்னை மரியாள் சாந்தமே உருவானவள். அவளது சாந்த குணத்துக்கு சவாலாக அவளது வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அத்தனையும் ' மரியாள் ' என்றால் ' சாந்தம் (கனிவு) ' என்று சொல்லுமளவிற்கு அவளுக்கு வெற்றியையே அளித்தன.  வாழ்க்கை முழுவதையும் இங்கே ஆராய்ந்து பார்க்க முடியாது. ஆயினும் அவளது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையாவது இங்கு சிறிது அலசி பார்ப்போம்.

    இயேசுவுக்கு பன்னிரெண்டு வயது நடந்து கொண்டிருக்கும்போது, எருசலேம் நகர் ஆலயத்திற்கு அவர் அன்னை மரியாளோடும் தந்தை யோசேப்போடும் (சூசை) செல்கின்றார். ஆலய விழா நிறைவு பெற்றதும் அனைவரும் தங்களது ஊர்களுக்குச் செல்கின்றனர். அக்காலத்தில் எல்லோரும் கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களும் தனித்தனி கூட்டமாகச் செல்வது வழக்கம். சிறுவர்கள் எந்த கூட்டத்திலும் செல்வார்கள். மாலையில் அனைவரும் குடும்பத்தோடு ஓய்வு கொள்வர். மறுநாள் காலையில் பயணம் தொடரும்.

  இவ்வாறு மரியாள், யோசேப்பு (சூசை) பயணம் தொடங்கியது. மாலை நேரம் வந்தது மரியாளும் யோசேப்பும் ஒருவரையொருவர் சந்தித்தனர். அப்போது இயேசு இல்லாததைக் கண்டு கலங்கினர். உடனே இயேசுவைத் தேடத் தொடங்கினர். அமைதியாக ஒவ்வொரு கூட்டமாகச் சென்று இயேசுவைத் தேடுகின்றனர். அன்று எருசலேமை விட்டு புறப்பட்ட எந்த கூட்டத்திலும் இயேசு இல்லை என்பதை தெரிந்து கொண்டதும் சோகமாக அந்த இரவை கழிக்கின்றனர். பொழுது புலர்ந்ததும் எருசலேமை நோக்கி திரும்புகின்றனர். இரண்டாம் நாள் மாலை அவர்கள் எருசலேமை அடைகின்றனர். அங்கு தங்கள் உறவினர்களிடையே நண்பர்களிடையே தேடுகின்றனர். இயேசுவை அன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் துயரம் அதிகரிக்கின்றது மிகுந்த கவலையோடு அன்றைய இரவை கழிக்கின்றனர். மூன்றாம் நாள் சூரியன் உதித்ததும் எருசலேம் ஆலயம் நோக்கிச் செல்கின்றனர். இயேசுவை அங்கே போதகர்கள் நடுவே காண்கின்றனர். இயேசுவை அங்கே கண்டதும் மரியாள் உணர்ச்சி பொங்க அவரை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாளா? அல்லது ஆத்திரப்பட்டு அவர்மீது கோபங்கொண்டு திட்டினாளா? அல்லது அவர்மீது குற்றம் சாட்டி தனது வேதனையைத் தணித்துக் கொண்டாளா? இல்லவே இல்லை.

   அன்னை மரியாள் தன் மகனைக்கண்டு மகிழ்ந்து, மலைத்து நின்றாள். மதபோதனை முடியும் வரை மௌனமாக காத்து நின்றாள். பின் அமைதியாகத் தன்  மைந்தனிடம் சென்று " மகனே ஏன் இப்படி செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே " [ லூக் 2:48] என்று தன் துயரத்தைச் சொல்லி விளக்கம் கேட்கிறாள். அதற்கு இயேசு சொன்ன பதிலோ அவளுக்கு புரியும்படியாக இல்லை. என்றாலும் அதற்கு மேல் எதுவும் கேளாமல் அதை தன் உள்ளத்தில் இருத்தி மரியாள் சிந்திக்கத் தொடங்குகின்றாள். இதுவேதான் சாந்த (கனிவு) குணத்தின் இயல்பு. அன்னை மரியாள் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் வருகின்றன. அத்தனையும் அன்னையின் சாந்த குணத்திற்குச் சான்று பகர்ந்து அவளை பேறுடையாள் ஆக்குகின்றன.



அத்தியாயம் : - 03
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெருகின்றன. இவை எவ்வாறு மரியாள் முழுமையாக நிறைவு செய்கின்றார் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த அத்தியாயங்களில், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளில் மூன்று பேறுகளைப் பார்த்துவிட்டோம் இனி அடுத்து வருவது இதோ....

நீதிநிலைநாட்டும் வேட்கை
*******************************
கொண்டோர் பேறுபெற்றோர்(மத் 5:6)
*******************************
( " நீதியின்பால் பசிதாகமுள்ளோர் பேறு பெற்றோர் ")

    மனித குலத்தின் மீட்புப் பணி நிறைவு பெற தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தவே இயேசு " தாகமாயிருக்கிறது " ( யோவா 19 :  28 ) என்று சொல்கின்றார். மரியாளிடம் இத்தகைய ஆர்வம் இருந்ததா? நிறைவாக இருந்தது. இறைவன் மீது அன்னை மரியாள் பசி தாகம் கொண்டிருந்தாள். இறைவனும் அவளைத் தன் அருளாளல் நிரப்பி அவளுடைய பசி தாகத்தைத் தீர்க்கின்றார். இதனாலன்றோ, வானதூதர்  கபிரியேல் மரியாளை " அருள்மிகப் பெற்றவரே வாழ்க " ( லூக் 1 : 28 ) என்று கூறி வாழ்த்துகின்றார். அன்னை மரியாளும் தன் பசியையும் தன் நிறைவையும் உணர்ந்து, மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறி, " பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் " ( லூக் 1 : 53 ) என்று பண் பாடுகின்றாள்.

   இயேசுவின் மீது அன்னை மரியாள் கொண்டிருந்த அன்பு, ஆர்வம், பற்றுதல் எல்லோருக்கும் தெரிந்ததே. பன்னிரெண்டு வயது இயேசுவுக்கு நடக்கும் போது, எருசலேம் விழாவின் போது, அவரைப் பிரிந்து மூன்று நாட்கள் இருந்தபோது, அன்னை மரியாள் எத்தனை ஆர்வத்தோடு அவரைத் தேடுகின்றாள். ஆலயத்தில் அவரைக் கண்டபோது " உன் தந்தையும் நானும் மிகுந்த கவலையோடு (ஏக்கத்தோடு) தேடிக்கொண்டிருந்தோமே " (லூக் 2 : 48 ) என்று கூறுகின்றாள். " கவலையோடு" என்பதின் பொருள் என்ன? நெருப்புப் போன்று பற்றி எரியும் ஆர்வத்தோடு என்பதல்லவா? ஆம், அன்னை மரியாள் இறைவன் மீதும், இறைமைந்தன் இயேசு மீதும், இறை அருள் மீதும் என்றும் குன்றா அக்கினி போன்ற ஆர்வம் கொண்டிருந்தாள். பசியால் சாகின்றவன் ஆர்வமாய் உணவை நாடுவது போன்று, தாகத்தால் துடிப்பவன் தீவிரமாய் தண்ணீரைத் தேடுவது போன்று மரியாள் எப்போதும் இறைவனையே ஆர்வமாய் நாடினாள் ; இறை அருளையே தீவிரமாய்த் தேடினாள். எனவே இறைவன் அவளை அருளாள் நிரப்பினார். இறை இயேசுவுக்கு தாயாக்கினார்.

   அன்னை மரியாள், இறைவன் விருப்பத்திற்குப் பணிவதிலும் ஆர்வமிக்கவளாயிருந்தாள். எனவேதான், இறைவன் விருப்பத்தை வானதூதர் மூலம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டவுடன் " நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1:38) என்றுரைத்து இறுதிவரை இறைவனின் விருப்பத்தையே நிறைவேற்றுகின்றாள். இதனாலன்றோ அன்னை மரியாள் பேறுபெற்றவளாகின்றாள்.

மரியாள் பேறுடையாள் தொடரும்.....

மரியாள் பேறுடையாள்
***************************
அத்தியாயம் : - 04
°°°°°°°°°°°°°°°°°°°°°°°

   மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெருகின்றன. இவை எவ்வாறு மரியாள் முழுமையாக நிறைவு செய்கின்றார் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த அத்தியாயங்களில், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளில் நான்கு  பேறுகளைப் பார்த்துவிட்டோம் இனி அடுத்து வருவது இதோ....

இரக்கமுடையோர் பேறுபெற்றோர் (மத் 5 : 7 )
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

      இந்த உலகம் இன்று வரை நிலைத்து இருப்பதற்கு ஒரே காரணம் இறைவனின் எல்லையற்ற இரக்கமே. ஆம்,  அன்பினால் இறைவன் இவ்வுலகைப் படைத்தார். அவரின் இரக்கமே இன்று உலகை காத்துவருகின்றன. " கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது " ( லூக் 1 : 79). உலக மீட்பராக தோன்றிய இறைமைந்தன் இயேசுவும் இறைவனை இரக்கமிக்க தந்தையாகவே வெளிப்படுத்துகின்றார். மேலும் இயேசு இறை இரக்கத்தின் வெளிப்பாடாகவே காட்சியளிக்கின்றார்.

   இரக்கத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இரக்கமே உருவான இயேசுவின் போதனைகளையும், சாதனைகளையும் சிறிது சிந்தித்துப் பார்த்தாலே போதும். பிறரில் உள்புகுந்து அவர்களின் உண்மை நிலையை அவர்கள் உணர்வது போல உணர்வதுதான் இரக்கத்தின் நிலை. அன்னை மரியாளும் இந்த நிலையை உணர்ந்து, தானாகவே பிறரின் மனம் துன்பபடக்கூடாது என்று எண்ணி அவர்கள் மேல் இரக்கம் கொள்கிறார்.

   அன்னை மரியாளின் இரக்கத்தை யோவான் நற்செய்தியாளர் 2 : 1 - 11 ல் மிகத் தெளிவான முறையில் கானாவூர் திருமண நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துகின்றார். கானாவூர் திருமண விழாவுக்கு மரியாள் மகிழ்வோடு செல்கின்றாள். அன்னை மரியளோடு மகன் இயேசுவும் தம் சீடர்களோடு அத்திருமண விழாவில் கலந்து கொள்கின்றார். திருமண விருந்து நடைபெறுகின்றது. விருந்தின் முக்கிய பானமான திராட்சை இரசம் விரைவாக தீர்ந்து விடுகிறது. இதனை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. திருமண தம்பதியரோ, தம்பதியரின் தாய்தந்தையரோ, பந்தியின் மேற்பார்வையாளரோ திராட்சை இரசம் தீர்ந்து விட்டதை தெரிந்து கொள்ளவில்லை.

   ஆனால் மரியாள் மட்டும் இதனை கண்டு கொள்கின்றாள். திராட்சை இரசம் தீர்ந்து விட்டதனால் வரவிருக்கும் விளைவையும் மரியாள் உடனே புரிந்து கொள்கின்றாள். எந்த அளவுக்கு இக்குறையானது திருமண விழாவைப் பாழ்படுத்தும் தம்பதியரின் மாண்பைப் பாதிக்கும் என்பதையும் அவள் தெளிவாக தெரிந்து கொள்கின்றாள். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட மரியாள் சும்மா இருக்கவில்லை. இக்குறையானது தனக்கே, தன் குடும்பத்திற்கே வந்ததாக கருதுகிறாள். உடனே இக்குறையை எந்த விதத்தில் நீக்க வேண்டுமென்று தீர்மானிக்கின்றாள். இத்தீர்மானத்தோடு தன் மகன் இயேசுவை அணுகி " மகனே திராட்சை இரசம் தீர்ந்து விட்டது " என்று கூறி மறைமுகமாக தன் மகன் இக்குறையை களைய வேண்டுமென்று தன் விருப்பத்தை தெரிவிக்கின்றாள்.  அதற்கு இயேசு அளித்த பதில் உற்சாக மூட்டுவதாக இல்லாதிருந்தபோதிலும், தன் மகன் மீது நம்பிக்கை வைத்து " அவர் சொல்லுவதெல்லாம் செய்யுங்கள் " என்று வேலையாட்களிடம் சொல்கின்றாள். விளைவு என்ன? தண்ணீர் திராட்சை இரசமாக மாறுகின்றது! விருந்து தடையின்றி நடைபெறுகின்றது. திருமணத்தின் புனிதமும், தம்பதியரின் மாண்பும் காப்பாற்றப்படுகின்றது. அத்தனை பேரும் மரியாளை நன்றியுணர்வோடு பார்க்கின்றனர். இயேசுவை வியப்போடு பார்க்கின்றனர். இதனால் ஏற்கனவே இருந்த உறவு உயர்வடைகின்றது. இல்லாத உறவு உதயமாகின்றது. அனைத்துக்கும் மேலாக இயேசுவின் மீது எல்லோரும் விசுவாசம் கொள்கின்றனர். இதனால் எல்லா உறவுகளுக்கும் மேலான விசுவாச உறவும் இங்கே உதிக்கின்றது.

   இரக்க செயல் புரிவோர் அனைவருக்கும் இறைவன் அளிக்கும் பேற்றினை அன்னை மரியாள் இந்நிகழ்சியின் மூலமாக நிறைவு செய்கின்றாள். நாம் ஒவ்வொருவரும் இரக்கமுடையவர்களாக இருப்போம். இரக்கமற்றவர்களுக்கு ஆண்டவர் அளிப்பதோ நரக தண்டனை என்பதையும் மறக்க வேண்டாம். எனவே " உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள் " ( லூக் 6 : 36)  என்ற ஆண்டவர் இயேசுவின் அறிவுரையை அனுதின வாழ்வில் கடைபிடிப்போம். இறைமைந்தன் இயேசுவின் பேறுகளைப் பெற முயற்ச்சி செய்வோம்.

மரியாள் பேறுடையாள்
***************************
அத்தியாயம் : - 05
°°°°°°°°°°°°°°°°°°°°°°
   மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெருகின்றன. இவை எவ்வாறு மரியாள் முழுமையாக நிறைவு செய்கின்றார் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த அத்தியாயங்களில், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளில் ஐந்து பேறுகளைப் பார்த்துவிட்டோம் இனி அடுத்து வருவது இதோ....

தூய்மையான உள்ளத்தோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 பேறுபெற்றோர் (மத் 5:8)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

   இதயம் உணர்ச்சிகளின் இருப்பிடம். புத்தி அறிவின் பிறப்பிடம். மனது உறுதியான தீர்மானங்கள் உற்பத்தியாகுமிடம். இம்மூன்றையும் ஒன்றாக இணைத்துக் கூறப்படுவதுதான் ' உள்ளம் ' என்பது. எனவே மனிதனின் இதயம், புத்தி, மனது மூன்றும் தூய்மையாக இருந்தால்தான் அவன் கடவுளைக் காணும் பேறு பெறமுடியும். தூய உள்ளத்தோர் எப்போதும் நிறைவுள்ளவராக இருப்பர். மரியாள் தூய உள்ளமுடையவளாக இருந்தாள். எனவே வானதூதர் " அருள்மிகப் பெற்றவரே வாழ்க " ( லூக் 1:28 ) என்று வாழ்த்தினார்.

   இறைவனை அடைய வேண்டும் என்ற ஒன்றினையே தன் வாழ்வின் ஒரே இலட்சியமாகக் கொண்டு, அந்த இலட்சியத்துக்கு தன்னையே முழுமையாக அர்பணித்து, அதே இலட்சியத்துக்காக அல்லும் பகலும் அயராது உண்மையாய் உழைப்பவன் நிச்சயம் அந்த இறைவனைக் கண்டடைவான். அந்த இறைவனோடு ஒன்றாவான். இதுவே மிக உன்னதமான புனிதநிலை. இதில் நூற்றுக்கு நூறு வெற்றிபெற்றவள், புனிதத்தின் சிகரத்தை அடைந்தவள் மரியாள் மட்டுமே. " அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் " ( லூக் 1 : 28 ) ஆம், மரியாளுடன் ஆண்டவர் இருந்தார். எப்போதும் இருந்தார். தனது உற்பவத்திலிருந்தே இறைவனோடு என்றும் இணைந்து இருந்தவள் அன்னை மரியாள் மட்டுமே.

   அன்னை மரியாள் கடவுளைக் ' கண்டவள் ' என்பதைவிட ' கொண்டவள் ' என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆம் மனுவான இறைமைந்தன் இயேசுவை தன்திருவயிற்றின் கனியாகக் கொண்டிருந்த மரியாள் இறைவனை என்றும் தன் உள்ளத்தில் கொண்டிருந்தாள். இதற்கு மேலான புனிதநிலை எதுவுமில்லை. எனவே மரியாள் எல்லா புனிதருக்கும், எல்லா வானதூதருக்கும் மேலான புனிதநிலையில் என்றும் இருந்தாள். எனவேதான் அவள் இறைவனுக்கே தாயாக முடிந்தது. எல்லா தலைமுறைகளும் அவளை ' பேறுடையாள் ' என்று போற்றுகின்றது.

   மரியாள் புனிதத்தின் சிகரத்தில் என்றும் வாழ்ந்திட கையாண்டவழி ' ஆகட்டும் '(நிகழட்டும்) என்பதே. " நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் " ( லூக் 1 : 38 ) கன்னியான அவள் மனுவாகும் கடவுளுக்கு தாயாக வேண்டும் என்று இறைவன் தன் விருப்பத்தை தெரிவித்தபோது அவள் கூறியது ஆகட்டும் (நிகழட்டும்) என்பதே நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது தன் பெயரைப் பதிவு செய்ய கடின பயணம் மேற்கொண்டு பெத்லேகம் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போதும் அவள் கூறியது ' ஆகட்டும் ' என்பதே. இறைமகனை ஈன்றெடுத்க பெத்லேகம் ஊரில் சத்திரத்தில் கூட இடமின்றி மாட்டுக் குடிலுக்குச் செல்ல நேர்ந்தபோதும் அவள் கூறியது ' ஆகட்டும் ' என்பதே. குழந்தையை கொல்ல ஏரோது எண்ணிய போது அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஒடும்படி வானதூதர் மூலம் இறைவன் பணித்தபோது அவள் கூறியது ' ஆகட்டும் ' என்பதே. குழந்தையை ஆலயத்தில் காணிக்கையாக்கியபோது சிமியோன் இறைவாக்கினர் " உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் " ( லூக் 2 : 35 ) என்று சொன்னபோது அவள் கூறியது " ஆகட்டும் " என்பதே. இயேசுவுக்கு 12 வயது நடக்கும்போது எருசலேம் ஆலயம் சென்று திரும்புகையில் அவரைக் காணாது தவித்தபோதும் அவள் கூறியது " ஆகட்டும் " என்பதே.

   தான் அன்புடன் வளர்த்த மகன் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்து மக்களுக்கு பணியாற்ற சென்ற போதும் அன்னை கூறியது " ஆகட்டும் " என்பதே. அந்த அன்பு மகனைப் பற்றி பலர் பலவிதமாய் பேசியபோதும் அவள் கூறியது " ஆகட்டும் " என்பதே. இறுதியாக அந்த அன்பு மகன், இறைதந்தையின் விருப்பத்தின்படி கல்வாரிமலையில் சிலுவையில் பலியாக தொங்கியபோது அந்த சிலுவையின் அடியில் நின்று அவள் கூறியதும் " ஆகட்டும் " என்பதே. இவ்வாறு மரியாள் ஒரு கணம்கூட இருமனமின்றி இறைவனோடு என்றும் ஒருமனப்பட்டிருந்தாள். இறைவன் விருப்பத்தை நிறைவேற்றுவதையே தன் வாழ்வின் ஒரே இலட்சியமாகக் கொண்டு முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்தி, உண்மையாக உழைத்து நூற்றுக்கு நூறு வெற்றியும் பெற்றாள். புனிதத்தின் சிகரத்தை அடைந்தாள். புனிதமுடைய மரியாளின் இந்த வழியைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனும் தன் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் ஏன் இவ்வழியைப் பின்பற்றக்கூடாது.

மரியாள் பேறுடையாள்
***************************
அத்தியாயம் : - 06
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
   மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெருகின்றன. இவை எவ்வாறு மரியாள் முழுமையாக நிறைவு செய்கின்றார் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த அத்தியாயங்களில், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளில் ஆறு பேறுகளைப் பார்த்துவிட்டோம் இனி அடுத்து வருவது இதோ....

அமைதி ஏற்படுத்துவோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பேறுபெற்றோர் (மத் 5:9 )
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

   இன்று உலகில் அதிகம் பேசப்படுகின்ற ஒன்று " சமாதானம் " (அமைதி). உலக மக்கள் அனைவரும் ஆர்வமாக தேடுவதும், அடைய விரும்புவதும் சமாதானமே. ஆனால் எல்லோருக்கும் எட்டா கனியாக இருப்பதும் இந்த சமாதானம் தான்.

   " அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் ; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி போன்றது அல்ல " (யோவா 14:27) இயேசு சொன்ன வார்த்தைகள் இவை. ' என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன் ' என்று அவர் கூறுகின்றார். இயேசு தரும் சமாதானம்(அமைதி) எப்படி இருக்கும்? ' உலகம் அளிக்கும் சமாதானம் போல் அன்று ' என்றும் அவரே கூறுகின்றார். ஆம் இயேசு அளிக்கும் சமாதானம் இந்த உலகம் அளிக்கும் சமாதானத்தினின்று வேறுபட்டது. இயேசு அளிக்கும் சமாதானமே உண்மையானது ; என்றும் நிலைத்து நிற்கக்கூடியது.

   இறைமைந்தன் இயேசு சிலுவையில் சமாதானப் பலியை நிறைவேற்றியபோது, அதே சிலுவையின் அடியினின்று, தன் திருமகனோடு அந்தச் சமாதானப் பலியை நிறைவேற்றியவள் மரியாள். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே உடைந்த உறவை மீண்டும் தன் திருமகனோடு இணைந்து நிலைநிறுத்தியவள் மரியாள். மனிதர் அனைவரையும் தன் அன்புக்குழந்தைகளாக ஏற்று, அவர்களிடையே அன்புறவை ஏற்படுத்தி, அனைவரையும் சகோதர சகோதரிகளாக, சமாதானமாக வாழவைத்தவள் அன்னை மரியாள். இறைவனின் அளப்பரிய அருட் செல்வங்களையும், ஏன்? இவ்வுலகச் செல்வங்களையும் ஒவ்வொருவரின் தேவைகளுக்கேற்ப இறைவனிடம் பரிந்துபேசி பகிர்ந்தளிப்பவளும் அன்னை மரியாள் தான். எனவே தான் அன்னை மரியாள் " சமாதானத்தின் அன்னை " என்றும். " சமாதானத்தின் அரசி " என்றும் அனைவராலும் ஒருமனதாய் போற்றப்படுகின்றாள். சமாதானத்தின் அரசர் இயேசுவோடும், சமாதானத்தின் அரசி மரியாளோடும் இணைந்து, சமாதானத்தை இவ்வுலகிலே இறையரசில் ஏற்படுத்த, நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.

   எல்லா புனிதர்களுக்கும், வேதசாட்சிகளுக்கும் மேலாக விண்ணில் மகிமை அடைந்தவள் மரியாளே. " வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது ; பெண் ஒருவர் காணப்பட்டார் ; அவர் கதிரவனை ஆடையாக  அணிந்திருந்தார் ; நிலா அவருடைய காலடியில் இருந்தது ; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார் " (திரு 12:1). மரியாள் தான் இப்பெண் என்று சொல்லவும் வேண்டுமோ? இதனால் அன்றோ " இதோ இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே " என்று மரியாள் இறைவாக்குறைத்தாள். ஆம் மரியாள் உண்மையாகவே பேறுடையாள்.

   தாயாகிய மரியாளைப் பின்பற்றும் அவளுடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் அவளைப்போன்று பேறு அடைய சிறிதேனும் முயற்ச்சி செய்வோம்.

மரியாள் பேறுடையாள்
***************************
அத்தியாயம் : - 07
°°°°°°°°°°°°°°°°°°°°°°

   மத்தேயு நற்செய்தி 5 : 3 - 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளுமே அன்னை மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவு பெருகின்றன. இவை எவ்வாறு மரியாள் முழுமையாக நிறைவு செய்கின்றார் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த அத்தியாயங்களில், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேறுகளில் ஏழு பேறுகளைப் பார்த்துவிட்டோம் இனி அடுத்து வருவது எட்டாவதுபேறு இதோ....

நீதியின் பொருட்டுத்
************************
துன்புறுத்தப்படுவோர்
*************************
பேறுபெற்றோர்( மத்தேயு 5:10 )
***********************************

   மனித வரலாற்றில் துன்பம் ஒரு மறை பொருளாகவே இருந்து வந்தது எத்தனையோ ஞானிகள் இதுபற்றி ஆராய்ந்தனர் . என்றாலும் ! முடிவான முழுமையான விடை கண்டாரில்லை . இறுதியில் இயேசுவின் சிலுவையில்தான் இதற்கு முடிவான முழுமையான விடை கிடைத்தது .துன்பம் முடிவல்ல . முடிவில்லா பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழியே துன்பம் .

   மரியாள் மாசுமறுவற்றவள் . அமல உற்பவி . எந்த வகையிலும் துன்பம் அவளை அனுகி இருக்கக்கூடாது . என்றாலும் எல்லா துன்பங்களுக்கும் ஆளானார் அன்னை மரியாள் . " உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் " ( லூக் 2:35 ) என்ற இறைவனின் வார்த்தைக்கு ' ஆகட்டும் ' என்று அவள் சொன்ன நேரத்திலிருந்து அவள் துன்பம் ஆரம்பித்து விடுகிறது . அது தினமும் பெருகிப் பெருகி பெரும் கடலாகின்றது . கல்வாரி மலையில் மரியன்னை அத்துன்பக் கடலிலே முழுமையாக மூழ்கி விடுகின்றாள் .சிலுவையடியிலே அவள் நின்றபோது , மைந்தனின் உயிரற்ற உடலையும் இழந்து மூன்று நாட்கள் அவள் தனித்திருந்து தவித்தபோது , அவள் அனுபவித்த துன்பத்தை , துயரத்தை யார் தான் உணர முடியும் ? யார் தான் உரைக்க முடியும் ? .

   " இவ்வழியாய்க் செல்வோரே ! உங்களுக்கு கவலை இல்லையா ? அனைவரும் உற்றுப் பாருங்கள் ! எனக்கு வந்துள்ள துயர் போல வேறேதும் துயர் உண்டோ ? " ( புலம்பல் 1 : 12 ) இந்தப் புலம்பல் மரியாளின் துயரத்தைப் பற்றியதன்றோ ! எந்த ஒரு பெண்ணையும் " வியாகுலத்தாய் " என்று இந்த உலகம் அழைத்தது கிடையாது . அன்னை மரியாளை மட்டுமே " வியாகுலத்தாய் " என்று வேதனையோடு அழைக்கின்றது . எவ்வளவுதான் எழுதினாலும் மரியாளின் துன்பம் துயரங்களை ஒரு துளி கூட எழுதிவிட யாராலும் முடியாது .

   அன்னை மரியாவுக்கு ஏன் இத்துன்பங்கள் ? பாடுகள் பட்ட தன் மகன் இயேசுவோடு மரியாள் என்றும் இணைந்து இருந்தாள் . இயேசுவின் மீட்புப் பணியில் மரியாள் முழூமையாகப் பங்கேற்றார் . இயேசுவின் பாடுகளையும் உயிர்ப்பையும் உள்ளடக்கியது தான் கிறிஸ்துவின்  மீட்பு பணி . மரியாள் தனது துன்ப துயரங்கள் மூலமே இயேசுவின் பாடுகளில் பங்கேற்றார் . இவ்வாறு இயேசுவின் பாடுகளில் பங்கேற்றார் மரியாள் , அதே இயேசுவின் உயிர்ப்பிலும் , மகிமையிலும் முதன்மையான பங்கு பெறுகின்றாள் . இயேசுவின் மீட்புப் பணியின் முதல் கனி மரியாள்தான் . எனவே தான் அவள் அமல உற்பவியானாள் . முப்பொழூதும் கன்னிகையானாள் ; கடவுளின் தாயானாள் ; ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்துக்கு ஆரோகணமானாள் ; விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாக முடிபுனைந்தாள் . " நீதியின் பொருட்டும் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் "

   இந்த எட்டு பேறுகளுமே மரியாளின் வாழ்வில் முழூமையாக நிறைவு பெறுகின்றன .

மரியாள் பேறுடையாள் நிறைவு பெற்றது .