விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது (மத்தேயு 28 : 18 ) இது இயேசு திருவாய் மலர்ந்து சொன்னது. விண்ணிலும் மண்ணிலும் அதிகாரமுள்ள ஒருவன் எவனோ அவனே இறைவன். இதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அப்படிபட்ட ஒருவனின் தாய் பற்றி தகுதியற்றவர்களாயினும், அந்த தாயைப் பற்றி பேச உரிமை பெற்றுள்ளோம்.
விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவன் தான் படைத்த அனைத்திலும் குறிப்பாக மனிதனை தன் சாயலில் படைத்தான். அந்த படைப்பின் மீது தான் கொண்ட அன்பால் தன் மேன்மை, மகிமைதுறந்து நம்மைப்போல் ஊனியல்பின் சாயல் ஏற்று தன் உயிர் உட்பட அனைத்தையும் சிலுவைச் சாவில் மொத்தமாக தந்து தன் அன்பின் மேன்மையை மனித பிறவிக்கு புலப்படுத்தும் தருணம், அவன் நினைவிற்கு வந்த கடைசி விஷயம் இன்னும் என் அன்பை இம்மானிட பிறவிக்கு புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பேன். எனக்கு மட்டுமே உரிமையான ஒன்று உண்டு அது என் உயிரினும் மேலான என் தாய் மரியா, அவளையும் உங்களுக்கு தாரைவர்த்துக் கொடுப்பேன். ஆக இறுதியாக இயேசு கொடுத்த மாபெரும் கொடை நம் அன்னை மரியாள்.
அன்பின் வெளிப்பாடு அவர் தாயான மரியாளை " இதோ உன் தாய் " என்று தாரைவார்த்து இவ்வுலக மக்களுக்கு கொடுத்தது. அவளும் தன் மகன் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு தன்ஏக மகன் இயேசுவின் சாவின் மூலம் இவ்வுலக மக்களை இயேசுவுக்குள் பிறவியெடுக்கச் செய்தாள். அந்த தருணம் முதல் நாமும் அன்னை மரியாளின் சொந்தப் பிள்ளைகள் என்ற மதிப்பை பெற்று இயேசுவுக்கு மரியாளிடம் என்னனென்ன உரிமையுள்ளதோ, அதே உரிமைகளை நாமும் பெற்றுள்ளோம். எனவே நம் தாயைப் பற்றி நாம் பேசாமல் யார் பேசுவது ? அவள் அன்பையும், மகிமையையும் நாம் எடுத்துரைக்காமல் யார் எடுத்துரைப்பது ?.
இதோ நம் தாயைப் பற்றி.
®®®®®®®®®®®®®®®®®®
அன்னை மரியாளை நாம் வாழ்த்துவது தவறென்றால், அந்த தவறை முதலில் செய்தது "பிதாவாகிய சர்வேசுரன் தான் " ஆம் அவனே முதலில் தன் வானதூதர் கபிரியேலை அவளிடம் அனுப்பி " அருள் மிகப் பெற்றவரே வாழ்க " (லூக் 1 : 28 ) என்று வாழ்தினான். அன்னை மரியாளோடு நாம் ஐக்கியமாவது தவறென்றால் அந்த தவறை முதலில் செய்தது தூய ஆவியான சர்வேசுரன் தான். படைப்பின் துவக்கம் தோன்றுமுன்னே நீரின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பேற்பட்ட ஆவியானவர் மரியாளின் தூய்மையோடு தூய்மையாய் ஐக்கியமானதும் அதைத் தொடர்ந்து அவள் கருவுற்றதும் உலகறிந்த உண்மை.
அன்னை மரியாளை நாம் வணங்குவது தவறென்றால் இன்று நாம் கொண்டுள்ள அனைத்து வகையான நம்பிக்கையும் வீணே, ஆம் மனித கையால் உண்டான சதாரண அப்பம் பலிபீட புனித நேரத்தில் இயேசுவின் திருவுடலாகிறது என்ற நம்பிக்கையில் அதை மேன்மையாய் தாங்கி நிற்கும் நற்கருணை பேழையின் முன் நாம் தலை வணங்குவதில்லையா? அப்படியெனில் இயேசுவை மரியாள் கருத்தாங்கிய அந்த தருணம் முதல் நித்தியத்திற்கும் நிலையான இயேசுவை தாங்கும் பேழையாக திகழும் மரியாளின் முன் மண்டியிட்டு வணங்குதல் என்பது எவ்வகையிலும் தவறல்ல. இங்கே ஒன்றை புரிதல் வேண்டும் " வணங்குதல் " என்பது இயேசுவை மையமாக கொண்டே நிகழ்கிறது. அதையே அன்னை மரியாளும்எடுத்துரைக்கும்வண்ணம் கானாவூர் திருமணத்தில் " அவர் உங்களுக்கு சொல்வதையெல்லாம்செய்யுங்கள் " என்று கூறினாள். அவள் எப்பொழுதுமே தன்னை மேன்மைபடுத்தியதில்லை பிறரிடம் என்னைப் பற்றி கூறுங்கள் என்று கூறியதுமில்லை. அவள் கூறுவதெல்லாம் " என் மகனை நம்புங்கள், அன்பு செய்யுங்கள், அவன் சொல்வதை கேளுங்கள் " இந்த உண்மையை இல்லையென்று கூறுவோர் இத்தரணி மீதுண்டோ ? இப்பேற்பட்ட தியாகத் தாயைப் பற்றி தனயன் பேசாமல் இருக்க முடியுமோ? இயேசுவை இறைமகன் என்றும், அவர் இறைவனாய் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால்அன்னை மரியா " இறைவனின் தாய்" என்பதை நாம் எவ்வாறு மறுக்க முடியும்.
நாட்டையாளும் அரசனுக்கு நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் உரிமை உண்டென்றால் அந்த அரசன் மீதும் அவன் அரசின் மீதும் அந்த தாய்க்கு உரிமை உண்டல்லவா ? இப்போது சற்று சிந்தியுங்கள், மரியாளின் மகிமையைப் பற்றி.மானிடர்களே ! இயேசுவின் திருப்பாடுகளின்போது அவர் உடலில்ஏற்பட்ட காயங்கள் எத்தனை ? அவர் சிந்திய இரத்த துளிகள் எத்தனை ? அவர் இவ்வுலகில் வாழ்ந்த நாளில் செய்த புதுமைகள்எத்தனை ? அவர் இறையாட்சி நிமித்தம் சுற்றி திரிந்த ஊர்கள்எத்தனை ? அவருடைய சீடர்கள் எத்தனை ? அவர் வாழ்ந்த நாட்கள்எத்தனை ? இவ்வாறு இயேசுவைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் தெரிந்த நமக்கு, அவரைப் பற்றி தெரியாத எத்தனையோ? கேள்விகளுக்கு விடை தெரிந்தவள் அன்னை மரியாள்.
அன்னை மரியாளை விட அதிகமாக இயேசுவை அன்பு செய்த, அன்பு செய்ய முடிந்த ஒருவர் மார்தட்டி சொல்ல யாரேனும் உள்ளாரோ ?ஒரு மனிதனின் உடலில் அவன் பெற்றோரின் அணுக்களும், இரத்தமும் கலந்துள்ளது என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமெனில், இயேசுவின் உடலிலும் மரியாளின் அணுக்களும், இரத்தமும் கலந்துள்ளது. அப்பெடியெனில் சிலுவை சாவின் போது வழிந்தோடியது இயேசுவின் இரத்தத்தோடு கலந்துள்ள மரியாளின் இரத்தமும் சேர்ந்துதான். மீட்பின் மறைபொருள் இதுவே. இயேசு இன்றி மரியாள் இல்லை, மரியாள் இன்றி இயேசு இல்லை.
மரியே வாழ்க !!! இயேசுவின் இரத்தம் ஜெயம் !!!