நாம் பங்கெடுக்கும் ஒவ்வொரு திருப்பலியும் இயேசுவின் சீடர்கள் எம்மாவு செல்லும் போது கிடைத்த அனுபவத்தை நினைவு படுத்துகிறது!
நாம் முதலில் வருகைப் பாடல் பாடியபடி திருப்பலி கொண்டாட்டத்திற்க்கு பயணமாகிறோம்...
இந்நிகழ்வு, சீடர்கள் எம்மாவு நோக்கி பயணமானதை நினைவு படுத்துகிறது...
"அதே நாளில், சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏரத்தால பதினோரு கிலோமீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு..."
~ லூக்காஸ் 24:13
திருப்பலியில் அடுத்ததாக, "என் பாவமே, என் பாவமே...’’ என மார்பில் அடித்து கடவுளிடம் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டுகிறோம்...
இயேசுவின் கொடூர மரணத்தின் நினைவுகளோடு நடை பயணம் செய்த சீடர்களின் பேச்சில் நிச்சயமாக வேதனையோடு மனஸ்தாபமும் கலந்திருக்கும்...
ஒரு பாவமும் செய்யாத இயேசு சுவாமியை சிலுவை சாவிலிருந்து காப்பாற்ற முடியாத பாவிகள் ஆகிவிட்டோமே, என்ற குற்ற உணர்ச்சி இருந்திருக்கும். அதற்காக மனஸ்தாபப் பட்டிருப்பார்கள்...
"அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடி கொண்டேசென்றார்கள்."
~ லூக்காஸ் 24:14
அடுத்ததாக நாம் திருப்பலியில் இறைவார்த்தையை கேட்டு தியானிக்கிறோம்...
எம்மாவு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சீடர்களோடு, உயிர்த்த இயேசு சுவாமி தோன்றி, மறைநூலைப் பற்றி விளக்குகிறார்...
"இயேசு அவர்களை நோக்கி, அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களை படவேண்டுமல்லவா!’ என்றார்.
மேலும், மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மை குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்..."
~ லூக்காஸ்24:25-27
அடுத்ததாக திருப்பலியில் நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கேற்கிறோம்...
தங்களோடு பயணம் செய்து, தங்களுக்கு மறைநூலை போதித்து கொண்டிருந்த இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள இயலாத சீடர்கள், இயேசு அப்பத்தை பிட்டு கடவுளை போற்றி அவர்களுக்கு கொடுத்த போது அடையாளம் கண்டுகொள்கிறார்கள்; மறைக்கபட்டிருந்த அவர்களின் கண்கள் திறக்கபடுகின்றன.
"அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளை போற்றி, பிட்டு, அவர்களுக்கு கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன; அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்!"
~ லூக்காஸ் 24:3௦,31
இயேசுவின் மரணத்தினால் நிலைகுலைந்த சீடர்கள், எருசலேமில் இருக்க மனமில்லாமல் எம்மாவு நோக்கி சென்ற சீடர்கள் ஆண்டவரின் பிரசன்னத்தை கண்டதால் புது பெலன் அடைந்தவர்களாக, மீண்டும் எருசலேமுக்கே திரும்பி போனார்கள்!
பலவித வேதனைகளோடு நொறுங்குண்ட நெஞ்சத்தினராய் சோர்ந்துபோய் திருப்பலி கொண்டாட்டத்திற்கு வந்த நாம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தை தரிசித்தவுடன் புதுபெலன் அடைந்தவர்களாய் மகிழ்வோடு திரும்பிசெல்கிறோம்!
"அந்நேரம் அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி போனார்கள்!"
~ லூக்காஸ்24:33
திருப்பலியில் ஆண்டவரின் உண்மை பிரசன்னத்தை கண்டு அனுபவிப்பவர்களுக்கு தான் இதன் அர்த்தம் புரியும். வெறுமனே கடமைக்காக திருப்பலிக்கு சென்று வருபவர்களுக்கு இந்த செய்தி கேலிகூத்தாக தெரியும்.
உங்களின் திருப்பலி கொண்டாட்ட அனுபவம் எப்படி???
உண்மையிலேயே ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்து அனுபவிக்கிறீர்களா???
திருப்பலியின் முடிவில் உங்களில் புதுபெலன் ஏற்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா???
உங்களின் கவலைகள், சோர்வுகள் அனைத்தும் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்திற்கு பிறகு பனிபோல் உருகி போனதை உணர முடிகிறதா??
இந்த கேள்விகளுக்கு இல்லை என்றே பதில் சொல்லுகிறீர்கள் என்றால், நீங்கள் இதுவரையில் திருப்பலியில் வெறும் பார்வையாளராகவே கலந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.
இனி வரும் நாட்களிலாவது, அர்த்தம் உள்ள விதத்தில் திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுத்து நற்கருணைநாதரின் அருட்பொழிவை எல்லையில்லாமல் பெற்றுச் செல்லுவோம்!!!