விண்ணக வாழ்வின் ஏணி செபமாலை ***


விண்ணக வாழ்வின் ஏணி செபமாலை என்றவுடனே போத்துக்கல் நாட்டிலுள்ள பாத்திமா பதி, பிரான்ஸ் நாட்டிலுள்ள லூர்து பதி மற்றும் மருதமடு, வேளாங்கன்னி, மெஜுகோரி, குவாட்டலுப்பே என அன்னையின் திருத்தலங்களை நாம் வரிசைப்படுத்தலாம்.

பாத்திமா தரிசன வேளையிலும், லூர்து பதியிலும், தேவ அன்னை மரியா செபமாலை செபித்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது உலகறிந்த உண்மை என்பதனை எவராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது என்பது எனது பணிவான அபிப்பிராயம். 

பிரிவினைச் சபைகள் வாதிடுவது போன்று, எதற்காக செபமாலை செபிக்க வேண்டும்? அல்லது இறை உண்மைகளை தியானிக்க தேவ அன்னையின் (அருள் நிறை மரியே) செபத்தை எதற்காக சொல்ல வேண்டும்? என்ற கேள்வி எம்மில் பலருக்கு இயற்கை யாகவே எழும்பி, குழப்பங்களை உருவாக்கும் சூழலில், கத்தோலிக்க விசுவாசிகளான நாம் செபமாலை செபித்தலைக் குறித்து தெளிவான கருத்தோடு இருப்பது முக்கியமாகும்.

செபமாலையில் உள்ள ஒவ்வொரு மணியும் நாம் தேவ அன்னைக் குச் சமர்ப்பிக்கின்ற ஒரு ரோஜா மொட்டு என்பதனை உணர்ந்திருக் கிறோமா? செபமாலை செபித்தல் எனப்படுவது எமக்கு மிகச்சிறிய முயற்சியாகத் தென்பட்டாலும், செபமாலையின் மணி ஒவ்வொன் றும் எம்மை விண்ணக வாழ்விற்கு உயர்த்துகிற ஏணி என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

செபமாலையில் அடங்கியுள்ள செபங்கள் நற்செய்தியின் சுருக்கம் என்பது கத்தோலிக்க இறையியல் வல்லுனர்கள் கருத்தாகும். செபமாலையின் ஒவ்வொரு மணியையும் – பரலோக மந்திரத் தையும் – அருள்நிறைந்த மந்திரத்தையும் உணர்ந்து தியானித்து செபிப்போமானல், எமது கரங்களில் அழகியரோஜா மலர் மாலையாக அது விரியும் என்பதை எமது கண்களால் உணர முடியுமென செபமாலைப் பக்தர்கள் பலர் கருதுகின்றனர். 

அன்னை மரியா மீது நமக்குள்ள அன்பை வெளிப்படுத்த செபமாலை செபிக்கும்போது தியானிக்கும் தேவ இரகசியங்கள் ஒவ்வொன்றும் நமது மீட்பரும், இரட்சகருமான, இயேசுவின் பிறப்பின் அறிவிப்பு முதல் அவர் பரலோகத்திற்கு எழுந்தருளியது வரை இணைக்கப்பட்டதாக தொகுக்கப்பட்டு அன்னையாம் திரு அவையால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

செபமாலை செபித்தல் முறையை நாம் ஆழமாக உற்றுநோக்கு வோமாயின், மகிழ்ச்சி மறை உண்மைகள், ஒளியின் மறை உண்மைகள், துயர் நிறை மறை உண்மைகள் மற்றும் மகிமை நிறை மறை உண்மைகள் என இருபது மறை உண்மைகளில் நான்காவது மறை உண்மையான மகிமை நிறை மறை உண்மை யின் இறுதியில் இரண்டு தேவ இரகசியங்கள் மட்டுமே அன்னை மரியாளைப் பற்றியதாகும். 

நமது மீட்பரும், இரட்சகருமான இறைமகன் இயேசுவின் பிறப்பு, அவரது பணிவாழ்வு, திருப்பாடுகள் மற்றும் மகிமையான உத்தானம் மாட்சிமையோடு விண்ணேற்படைதல் என மனித குல மீட்பின் உன்னத வரலாறுகள், மகிமை நிறை மறை உண்மையின் இறுதி இரண்டு தேவ இரகசியங்கள் தவிர்ந்த ஏனைய பதினெட்டு மறை உண்மைகளிலும் தியாணிக்கப்படுவதனை நாம் அவதானிக்கலாம். 

மகிமை நிறை தேவ இரகசியத்தில் இறுதி இரண்டு தேவ இரகசி யங்கள் மட்டுமே மனித குலத்தின் மீட்பில் எல்லாம் வல்ல இறைவனால் அன்னை மரியாவின் பங்களிப்பை உறுதி செய்யும் விதத்தினில், அன்னை மரியாளின் மேன்மையான நிலையை உறுதிப்படுத்துவதாக அன்னையாம் திரு அவை வடிவமைத் துள்ளதனால், மனித குலத்தின் மீட்பில் பங்குபெறும் அனைவரும் உறுதியாக உன்னத நிலையை அடைவார்கள் என்பதை எல்லாம் வல்ல இறைவன் உணர்த்துவதாக நாம் கருத இடமுண்டென எவரும் வாய்கூசாது கூறலாம். 

விண்ணக வாழ்வின் ஏணியான செபமாலை மகிழ்வின் மறை உண்மை, துயர மறை உண்மை, மகிமை மறை உண்மை என பதினைந்து தேவ இரகசியங்களைக் கொண்டதாகவே அமைக்கப் பட்டிருந்தது. திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பரால் அக்டோபர் 2002ல்( Pope John Paul II, in his apostolic letter Rosarium Virginis Mariae (October 2002), recommended an additional set called the Luminous Mysteries (or the "Mysteries of Light"). The Baptism of Jesus in the Jordan. ஒளியின் மறை உண்மைகளும் இணைப்பட்டு இருபது மறை உண்மைகளாக தியாணிப்பட்டு வருகிறது.

எல்லாம் வல்ல இறைவனுக்குப் பிரியமான எதனைச் செய்தாலும் சாத்தான் பல்வேறு வழிகளில் இடையூறு செய்வான் என்பதனை நமதாண்டவர் இயேசுவின் பாலைநில அனுபவம் மட்டுமல்ல, நமக்கு முன்னர் வாழ்ந்த பல்வேறு புனிதர்களது வரலாறுகளும் தெரிவிப்பதனை எம்மால் மறுக்கமுடியுமா? இவ்வாறான சோதனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறவே சாத்தானின் தலையை நசுக்கிய புதிய ஏவாளாம் தேவ அன்னையின் உதவி வேண்டி அருள் நிறை மரியே செபத்தை செபிக்கிறோம் என்று சொன்னால் அது தவறாகுமா?

தேவ அன்னைக்கு மிகவும் பிடித்தமான செபமாலையின் மகிமை இவ்வாறு இருக்கும்போது எமது மத்தியில் நடப்பதென்ன? எமது ஆலயங்களில் பல சூழல்களில் செபமாலை செபித்தல் திருப்பலி வழிபாடுகளில் பக்தர்கள் வந்து சேர்வற்கு முன்னர் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரால் செய்யப்படும் சடங்காக மாற்றப்பட்டு இல்லையா? 

செபமாலை வழிபாட்டில் குறைவானவர்கள் பங்கெடுப்பது, அல்லது செபமாலை செபிக்கும் போது வேறு பணிகளை மேற்கொள்வது அல்லது அவ்வேளையில் இருவர், மூவர் சேர்ந்து கதைத்தல் என்பன செபமாலை வழிபாட்டிற்கு நாம் செய்யும் அவசங்கை என்பதை உணர்கிறோமா?

நற்செய்தியின் இரத்தினச் சுருக்கமான செபமாலை நமதாண்டவர் இயேசுவின் பாஸ்கா மறைபொருளைத் தன்னுள்ளே மிகப்பெரிய செல்வமாகக் கொண்டிருப்பதனாலேயே, தேவ அன்னை மரியாள் தனது பாத்திமா தரிசனத்தில் அழிந்து கொண்டிருக்கும் இவ்வுலகைக் காப்பாற்ற அனுதினமும் செபமாலை செபித்திட எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாம் விண்ணகம் செல்வதற்கான ஏணியான செபமாலையை இறுகப்பிடிப்பது மட்டுமல்ல அனுதினமும் செபித்து விண்ணக மகிமையை அடைந்திட முன்வருவோம் – ஆமென்.