விண்ணை நோக்கி உயர்ந்த கைகள்:
‘Knox Club Lectures’ என்கிற நூலில், அந்நூலின் ஆசிரியரான பார்டோலி (Bartoli) தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஒருமுறை பாரிசில் ஓர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பார்டோலி, கண்காட்சில் இடம்பெற்றிருந்த ஒவ்வோர் ஓவியமாகப் பார்த்துக்கொண்டே வந்தார். அப்பொழுது ஓர் ஓவியம் அவரை மிகவும் கவர்ந்தது. அவரைக் கவர்ந்த அந்த ஓவியத்தில் ஆண்கள், பெண்கள், கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று பலருடைய கைகள் இடம்பெற்றிருந்தன. அந்தக் கைகள் எல்லாம் விண்ணை நோக்கி உயர்ந்த வண்ணமாய் இருந்தன. அதற்கு மேலே ஒரு பெரிய கை, ஒளிக் கற்றைகளின் பின்புலத்தில், கீழே இருந்த எல்லாக் கைகளுக்கும் –எல்லாருக்கும் - ஆசி வழங்குவது போன்று இருந்தது. இந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு அவர் கடவுள் எல்லாரிலும் பெரியவர்; அவர் எல்லாருக்கும் ஆசி வழங்குபவர் என்ற உண்மையை உணர்ந்தவராய் வீடு திரும்பினார்.
ஆம், கடவுள் எல்லாரிலும் பெரியவர். அவர் தன் திருமலையிலிருந்து அல்லது விண்ணகத்திலிருந்து ஆசி வழங்கக்கூடியவர் என்பதை இந்த நிகழ்வும் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
சீயோன் திருப்பயணப் பாடலான திருப்பாடல் 48, ஆண்டவர் தம் திருநகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்குரியவர் என்பதையும், அவர் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. கி.மு. 701 ஆம் ஆண்டு சனகெரிபு என்பவன் இஸ்ரயேலின்மீது படையெடுத்து வந்தபொழுது, வீழ்த்தப்பட்டான். அதனால், கடவுள் தம் திருநகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார் என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர்.
திருமலையாம் சீயோன் மலைமீது எருசலேம் திருநகர் இருந்தது. அந்த நகர் ஆண்டவரின் நகர் என்பதால் அது எந்நாளும் நிலைத்திருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். இன்னும் ஒருசிலர் விண்ணகத்தைத்தான் திருநகர் என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுவதாகச் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் ஆண்டவர் தன் நகரையும் தன் மக்களையும் எதிரிகளிடமிருந்து காத்திடுவார் என்பது உறுதி.
சிந்தனைக்கு:
நாம் கடவுள் குடியிருக்கும் திரு நகராக, கோயிலாகத் திகழ்கின்றோமா?
(1 கொரி 3: 16).
கடவுள் எல்லாம் வல்லவர், அனைத்துலகிற்கும் அரசர் என்பதை உணர்ந்திருக்கின்றோமா?
ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்; அவர் நம் வலப்பக்கத்தில் உள்ளார் (திபா 121: 5).
இறைவாக்கு:
‘ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார் (திபா 145: 20) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நம்மைப் பாதுகாக்கின்ற ஆண்டவரிடம் பற்றுக்கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.