அன்னை கித்தேரியம்மாள்ஸ்பெயின் நாட்டில் கபிலியா மாகாணத்தில் பிறந்தார் .தந்தை பெயர் காயூஸ் அட்டிபிசியூஸ் ( சீர்காயன் ) ; தாய் பெயர் செல்சியா ( தொங்கலெசியாள் ) என்பவர்களின் ஒன்பது மகள்களில் ஒருவர் புனித கித்தேரியம்மாள்.புனித கித்தேரியம்மாளைதிருமணம் முடிக்க நினைத்தவன் செர்மன் ( சேர்மான் ) என்பவன் .அன்னை கித்தேரியம்மாள்உதவியால் மெய்மறை தழுவிய குறுநில மன்னன் புரோசன் ( லேசியான்) என்பவன் .முதன் முதலில் அரண்மனையை விட்டு வெளியேறி பைரன்னிஸ் என்னும் இடத்திலிருந்த காசு கெயின் என்னும் பள்ளத்தாக்கில் மறைபணியாற்றினார் .வீரமாமுனிவர் எழுதிய கித்தேரியம்மாள்அம்மானையின்படி , புனித கித்தேரியம்மாள்பொம்பேர் மலையில் இறைநாமத்தின் பொருட்டு உயிர் துறந்த காலம் கி. பி . 130ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாளாகும் . செர்மன் ( சேர்மான் ) என்பவனால் சிரம் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் .அக்காலத்தில் அஞ்ஞானிகளின் ஆதிக்கம் நிலை பெற்றிருந்ததாலும் , அவளது திருநாமம் அவ்வளவாக விளங்கப்படாது மறைந்து கிடந்தது .இறைவனால் குறிக்கப்பட்ட காலம் வரவே , அவள் மரித்த பொம்பேர் மலையுச்சியில் 1716ஆம் ஆண்டு முதல் அநேக அற்புதங்கள் நடைபெற்றன . இவை உண்மையென நிர்மாணிக்கப்பட்டதால் அவ்வாண்டே அப்போது இருந்த " திருத்தந்தை 11ஆம் கிளமெண்ட் " என்பவரால் கன்னிகை கித்தேரிக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது . அத்துடன் அவள் வாழ்ந்து மரித்து அடக்கமான அவ்விடமானது புனித தலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது .அவரது புகழ் போர்ச்சுகல் , பிரான்ஸ் , மணிலா , ஸ்பெயின் , இந்தியா மற்றும் பல நாடுகளில் பரவியது .புனித கித்தேரியம்மாள்அம்மானை கி. பி. 1732ஆம் ஆண்டு வீரமாமுனிவரால் ( கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ) இயற்றப்பட்டது .இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டம் , இராதாபுரம் தாலுகாவில் உள்ள கூத்தன்குழி கிராமத்தில் அன்னை கித்தேரியம்மாளுக்கு ஆலயம் அமைந்துள்ளது . இவ்வூரின் பாதுகாவலியாகவும் இருந்து அன்னை கித்தேரியம்மாள்அருள் ஒளி வீசுகின்றார்கள்.புனித கித்தேரியம்மாள்வெறிநாய்க் கடியின் பாதுகாவலராகவும்இருக்கின்றார் .
புனித கித்தேரியம்மாள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு :- புனித கித்தேரியம்மாள் இந்தியாவிற்கு எப்படி அறிமுகப்படுத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றிய சிறிய விளக்கம்.
18 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் துன்பங்களுக்கு ஆளாகிய தஞ்சையில் வாழ்ந்த கத்தோலிக்க மக்கள் தங்கள் வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி, அரியலூர் சிற்றரசனுக்கு சொந்தமான வறட்சியான பகுதியான ஏலக்குறிச்சியில் குடியேறினர். அங்கு அம்மக்கள் மத்தியில் மிகுந்த வறுமை, சோதனை, பிறமதத்தினரின் தீய போதனைகளால் அவர்கள் உள்ளத்தில் இருந்த கத்தோலிக்க விசுவாசம் காலப்போக்கில் தத்தளிக்கலாயிற்று.இவ்வேளையில் கத்தோலிக்க மதத்தை பரப்ப இந்தியா வந்த இத்தாலி நாட்டவரான வீரமாமுனிவர்(கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி) தமிழ் மொழியை நன்கு கற்று சிறந்த தமிழ் அறிஞராக விளங்கிய அவர்.திருமறையை பரப்ப ஏலக்குறிச்சி வந்து சேர்ந்தார்.கவலையில் கலங்கும் உள்ளங்களுக்கு கருணை உள்ளம் கொண்ட கடவுளே நம்பிக்கை என்பதை உணர்ந்த வீரமாமுனிவர் அந்த ஆண்டவனுக்கு புவியில் தேவதாயின் திருநாமம் துலங்க சிற்றாலயம் ஒன்றை அமைத்தார். அதன் அருகில் மடம் ஒன்றை கட்டி அந்த இடத்திற்கு திருக்காவலூர் என்னும் பெயர் சூட்டி அங்கேயே வாழ்ந்தார்.வீரமாமுனிவர் திருக்காவலூர் பகுதியில் திருமறை தொண்டு செய்து வந்த காலத்தில் இலுசுத்தானியா(போர்த்துக்கல்) நாட்டிலுள்ள பொம்பேர் மலையில் வீற்றிருந்து அற்புதங்கள்செய்து வந்த புனித கித்தேரியம்மாள்மீது மிகுந்த பக்தி கொண்ட வீரமாமுனிவர், திருக்காவலூர் அடைக்கலமாதா ஆலயத்தில் புனித கித்தேரியம்மாளுக்கு தனிப்பீடம் அமைத்து மக்கள் வழிபடச் செய்தார்.இயேசுவின் மீதும் தேவதாயின் மீதும் எத்தகைய பற்றுடையவர்களாகவும், விசுவாசமுள்ளவர்களாய் வாழ வேண்டும் என்பதற்கு புனித கித்தேரியம்மாளின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாய் விளக்க எண்ணம் கொண்ட வீரமாமுனிவர், அவர் வரலாற்று குறிப்புகளைக் கொண்டும், அப்புனிதவதியைப்பற்றி தான் அறிந்த கதையின் குறிப்புகளைக் கொண்டும், தமிழ் மரபைத் தழுவி சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த புனித கித்தேரியம்மாள்அம்மனையை கி.பி.1738 ஆம் ஆண்டில் பாடி மகிழ்ந்தார்.
திருக்காவலூர் அடைக்க அன்னை ஆலயத்தில் எழுந்தருளிய புனித கித்தேரியம்மாளுக்கு தென்தமிழகத்தின் கடலோரபகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி மறைமாவட்டத்தை சேர்ந்த கூத்தன்குழியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே தனிக் கோவில் அமைத்து வழிப்பட்டு வருகிறார்கள். அம்மக்களை பல துன்பங்களில் இருந்தும் கொள்ளை நோயிலிருந்தும் காப்பாற்றி வருகிறாள் கித்தேரி அன்னை, இவ்வூரின் சிறப்பு பாதுகாவலியாகவும் விளங்குகின்றார்புனித கித்தேரியம்மாள்.வீரமாமுனிவரால் எழுதப்பட்ட 110 பாக்கள் கொண்ட கித்தேரியம்மாள்அம்மனையின் கருத்தை ஆதாரமாகக் கொண்டு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் கூத்தன்குழியை சேர்ந்த கித்தேரியான் உபதேசியார் என்பவரும் சுமார் 145 ஆண்டுகளுக்கு முன் கித்தேரியான் பூபாலராயர் என்பவரும் பொருள் வளம் மாற்றமில்லாது சொல் வளத்தை மாற்றி வெவ்வேறு பாணியில் நீண்டதொரு கவிதை நாடகம் இயற்றியுள்ளனர்.புனித கித்தேரியம்மாளை சிறப்பு பாதுகாவலியாக கொண்ட கூத்தன்குழி மக்கள் அப்புனிதவதி மீது கொண்ட தனிப் பற்றுதலால் தம் முன்னோர்கள் எழுதிய நாடகத்தை பக்தி நிகழ்ச்சியாக கொண்டு ஆண்டுதோறும் இலக்கியநடையில் நடத்தி வந்தனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் சிலகாலமாக நடைபெறவில்லை . ஆனால் மீண்டும் புனித கித்தேரி அன்னையின் மறைசாட்சி காவியத்தின் நாடகம் இவ்வூர் மக்கள் ஒற்றுமையுடன் நடத்த இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் .
புனித கித்தேரியம்மாள்
((())))((((())))))((()))(((()))))
குறிப்பு :-இந்த அன்னையின் பிறப்பை பற்றி எமது முன்னோர்கள் எழுதிய கவிதை நாடகத்தின் சுருக்கமாக கத்தோலிக்க மக்கள் மற்றும் பிறமதத்தினர் தெரிந்து கொள்வதற்காக கதை வடிவில் இதோ உங்களுக்கு தெரிவிக்கின்றேன். இதை படித்து அன்னையின் அருளாசிரை பெற உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அத்தியாயம் :- 01
********************
புனித கித்தேரியம்மாளின் பிறப்பு :-
ஐரோப்பியா கண்டத்தில் மிக சிறப்போடு விளங்கிய நாடு போர்த்துக்கல்.இந்த நாடு பன்னெடுங் காலத்திற்கு முன் இலுசுத்தானியா என்று அழைக்கப்பட்டது.இங்கு மாதம் மும்மாரி பெய்த காரணத்தால் வற்றாத தாகு நதி பாய்கிறது.இதனால் இந்த நாடு பசும்சோலைவனமாக,எல்லா வளமும் பெற்று மக்கள் அனைவரும் ஒற்றையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர்.
இந்த இலுசுத்தானியா நாட்டை(போர்த்துக்கல்) சீரோடும் சிறப்போடும் சீர்மிகு நகரமாம் பிராகத்தை தலைநகரமாம் கொண்டு ஆட்சி புரிந்த மன்னன் "காயன்" ஆவார். இவரே புனித கித்தேரியம்மாளின் தந்தையாவார்.தாயாரின் பெயர்"செல்ஸியா"ஆகும்.
இறைமகன் இயேசு பெருமான் பிறந்த இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலுசுத்தானியா நாட்டை ஆண்டு வந்த மாமன்னன் காயனின் மனைவி கி.பி.100 முதல் 120க்குட்பட்ட காலத்தில்கர்பிணியானாள்.குறிப்பிட்ட காலம் நிறைவுறவே சீமாட்டி செல்ஸியாள் ஒரே பிரசவத்தில் ஒன்பது பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாள்.இறைவனின் திட்டம் இதுவாக இருக்க, முன்னொரு சமயம் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்ணொருத்தி கணவனை இழந்து ஆதரவற்ற நிலையில் அரணமனையை நாடிவந்து நின்றாள்.அரசியார் செல்ஸியாள் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் இப்பெண் என்பதை அறிந்து அவளது கற்பிற்க்கு களங்கம் உண்டாக்கி நகைத்தாள்.தனது கற்புக்கு அரசியாள் ஏற்பட்ட கலங்கத்தை எண்ணி மனதிற்குள்ளேயே அழுது ஆண்டவனிடம் முறையிட்டாள் அப்பெண். தன்வினை தன்னைச்சுடும் என்பதைப் போல் அன்று ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்ணை ஏளனம் செய்தோமே ஆனால் இன்று தனக்கு ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறந்துவிட்டதே என அரசி மனம் நொந்து அழுதாள். பிரசவ வேதனையை காட்டிலும் பன்மடங்கு வேதனையில் அழுதாள் அரசியாள்.இதை பார்த்து பிரசவகாலத்தில் துணை நின்றவர்களே திகைத்து நின்றனர்.
நாட்டு மக்கள் அறிந்தால் ஏளனம் செய்வார்களே என அஞ்சிய அரசி செல்ஸியாள் மனதில் தீய எண்ணங்கள் கொழுந்து விட்டு எரிந்தது. இரவோடு இரவாக நடந்தவற்றை மறைக்க தீர்மானித்தாள்.இந்த செயலை செய்ய தகுதியான நபர் சீலதியே என முடிவு செய்தாள் அரசி செல்ஸியாள்.உடனேயே சீலயியை அழைத்து பாவி நான், ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றுள்ளேன் என்ற பழியை சுமந்து கொள்ள என் மனம் இடம் கொடாதபடியால் இவ்வொன்பது குழந்தைகளையும் கொண்டு போய் உலகத்தார் யாரும் அறியாவண்ணம் நீர் நிறைந்து ஓடும் ஆற்றில் எறிந்திடுக. இது இரகசியமாய் இருக்கட்டும். இது என் ஆணை என்றாள் அரசி.
அரசியின் ஆணையை கேட்ட சீலதி திகைத்து நின்றாள். அரசியின் ஆணையை மறுக்க முடியாத காரணத்தால் அவ்வொன்பது குழந்தைகளையும் வெள்ளை துணியால் போர்த்தி எடுத்துக் கொண்டு, எங்கும் இருள் மயமான அந்த நள்ளிரவு வேளையில் அரண்மணையை விட்டகன்றாள்.
மீண்டும் சந்திப்போம்(தொடரும்)
புனித கித்தேரியம்மாள்
*****************************
புனித கித்தேரியம்மாள்வரலாற்றின் தொடர்ச்சி
அத்தியாயம் :-02
----------------------------
சீலதி(ராணியின் முதன்மை தோழி) அரண்மனை கோட்டை வாயிலையும்,நகர் வீதிகளையும் யாரும் அறியா வண்ணம் ஒன்பது குழந்தைகளையும் கொண்டு கடந்து சென்று திக்கு தெரியாமல் அடர்ந்த காட்டு பகுதியில் நடந்தது சென்றாள். சீலதி திருமறையை அறிந்தவள் இல்லை. ஆயினும் திருமறையின் கொள்கைகளையும், தேவதாயின் இரக்கத்தையும் சிறிது அறிந்து இருந்தாள் எனவே தான் குழந்தைகளை கொல்ல மனமில்லாது தேவதாயை நோக்கி "அனைவருக்கும் அடைக்கலம் தருகின்ற அடைக்கல மாதவே ! தீய எண்ணம் கொண்ட பசாசின் வஞ்சக வலையில் விழுந்த ராணியின் கட்டளைக்கு அடிபணிந்து புலியின் கையில்அகப்பட்ட பாலகனைப் போல் , பாவத்திற்க்கு அஞ்சி நிற்க்கிறேன் .இந்த இக்கட்டான வேளையில் இந்த பச்சிளங்குழந்தைகள் மீது இரக்கம் வைத்து சீக்கிரம் வந்து உதவு தாயே!" என கண்ணீர் வழிந்தோட வேண்டி நின்றாள்.சீலதி கண்களை திறந்ததும் தன்முன் ஒர் ஒளி நிற்பதைக் கண்டு நடுங்கினாள்.ஒளிமயமாய் தோன்றி நின்றவர் தன்னை வானதூதர் என அறிமுகம் செய்து கொண்டு முன்னே நடந்து செல்ல சீலதி பின் தொடர்ந்தாள்.ஒளிமறைந்து செல்ல தன்முன் ஒர் ஆலயமும், அதன் அருகில் ஒர் ஆசீரமும் இருப்பதைக் கண்டு அக மகிழ்ந்தாள்.தேவதாய் தன் மன்றாட்டை கேட்டு அருள் புரிந்துள்ளாள் என மகிழ்ந்த சீலதி ஆலயத்தின் உள்ளே சென்றாள்.அங்கு தேவதாயின் திருவுருவம் கண்டு களிப்புற்று, அந்த ஒன்பது குழந்தைகளை தேவதாயின் திருவடியில் ஒப்புவித்து வேண்டி நின்றாள். அதன் பின் அருகில் அமைந்திருந்த ஆசீரமத்தின் உள்ளே மேதகு ஆயர் அவர்களை சந்தித்தாள்.
ஆயரை சந்தித்த சீலதி " வணக்கம் ஆண்டவரே! வருந்தி சுமை சுமந்து வந்திருக்கிறேன்.என் வாட்டம் போக்கிடுங்கள் பால் மணம் அறியா இந்த பச்சிளங்குழந்தைகள். இந்த ஒன்பது பேரும் வாழ்ந்திட நல்வழி கூறுங்கள்". என ஆயரிடம் மன்றாடினாள்.ஆயர் சீலதியிடம் இந்த குழந்தைகள் யாருடையது என வினவினார். அதற்கு சீலதி இந்த நாட்டையாளும் ராணி செல்ஸியாளின் குழந்தைகள். ஒன்பதும் பெண்பிள்ளைகள் என்ற காரணத்தால் இவர்களை கொலை செய்யும்படி என்னிடம் ஒப்படைத்தாள். இவர்களை கொலை செய்ய மனமில்லா காரணத்தால் இங்கு கொண்டு வந்தேன் என்று கூறினாள்.ஆயர் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.ஆயரிடம் குழந்தைகளை ஒப்படைத்த சீலதி குழந்தைகள் உயிரோடு இருக்கும் இரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்டாள்.ஆயர் குழந்தைகளை தேவதாயின் திருவடி பாத மலர்களிள் வைத்து இறைவனை நோக்கி மன்றாடி அவர்களுக்கு திருநீராட்டு கொடுக்கதயார் ஆனார்.புனித நீரை குழந்தைகள் மீது தெளித்து" அன்பு மலர்களே ! இந்த திருநீர் உங்கள் உடம்பில் பட்டு நீங்கள் பிறந்த பாவத்தின் கறைகளை கழுவியது . இது முதல் நீங்கள் தூயவர் ஆனீர்".என்றுரைத்து ஒன்பது குழந்தைகளுக்கும் பெயரிட்டார். அவர்கள் பெயர்கள் முறையே " கித்தேரி, பாசிலி,செனவுரியா, விற்றோறி, எப்பேமி, விபிராத்தை, செருமானி, மாரீனை, மார்சீயாள். ஆகியன இவர்களது திருநாமங்கள் ஆகும்.
மீண்டும் சந்திப்போம். .....
புனித கித்தேரியம்மாள்
***************************
புனித கித்தேரியம்மாள்வரலாற்றின் தொடர்ச்சி
அத்தியாயம்:-03
--------------------------
பெற்ற தாயையும், தந்தையையும், அரண்மனையையும் இழந்து அன்னைமாமரியை தாயாகவும் இறைமகன் இயேசுவை தந்தையாகவும், மேதகு ஆயரை வளர்ப்பு தந்தையாகவும் கொண்டு ஒன்பது கன்னியர்களும் மகிழ்வுடன் வாழ்ர்தனர்.இளமையின் காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலாட்டுப்பருவம், சப்பாணிப் பருவம், முத்துப் பருவம், வாரனைப் பருவம், அம்புலிப் பருவம், அபிடேகப் பருவம், அம்மானைப் பருவம், ஊசல் பருவம், ஆகிய பத்து பருவங்களிலும் முறையே, இறைவனின் பத்துக் கட்டளைகளையும், இயேசுவின் வரலாற்றையும்கற்று இறையொளி பெருக இன்புற்று வாழ்ந்தனர். இயேசு பெருமானின் திருநாமத்தையே நாளும் தவறாது புகழ்ந்தனர்.
மலையடிவாரத்தில் அமைந்திருந்த ஆயர் இல்லத்தில் வளர்த்து வந்த கன்னிகைகள், அதன் சுற்றுப்புறச் சோலைகளில் உலாவி அங்கே காணப்பட்ட இயற்க்கை அழகை கண்டு மகிழ்ந்தனர்.குழல் இனிது யாழ் இனிது இன் கனிச்செய்ய வாய் மழலையர் குரலும் என்பர். கூடிவரும் அன்புகொண்ட தேவன் புகழ்பாடுவதும் பேரின்பமாகத்தான் இருக்கிறது என அகமகிழ்ந்தனர்.பாவம் நிறைந்த மனிதர்கள் வாழும் இவ்வுலகில், இறைவன் இத்தகைய இன்பம் தரும் கட்டழகுக் காட்சிகளைப் படைத்தாரெனின், அவர் தன் வான் வீட்டில் எத்தகைய கட்டழகுக் காட்சிகளைப் படைத்துள்ளாரோ, என காணத் துடித்தனர்.
எப்போதும் இறைவனின் மகிமையையே எண்ணி மகிழ்ந்து வாழ்ந்து வந்த அக்காலத்தில் தவத்தில் சிறந்த முனிவர் ஒருவர் ஆயர் இல்லம் வருகை தந்தார்.அவரைக் கன்னியர்கள் ஒன்பது பேரும் அவரை வரவேற்று "அருளேந்தும் முனிவரே வருக ! தவச்செல்வரே தங்கள் வரவால் அகமகிழ்ந்தோம்.வளர்க நும் புகழ். வணங்கினோம் உம்மை, இனிது வாழ்த்துக எம்மை"என வரவேற்று வணக்கம் செய்தனர். இதை புன்னகையோடு ஏற்றுக் கொண்ட முனிவர்"பூவுலகம் மணக்க வந்த புண்ணியவதிகளே! தேவுலகம் வாழ்த்த வளரும் தெய்வப் பெண்களே! பொய்க்கடவுள் மறந்தீர் மெய்க்கடவுள் அறிந்தீர்.உலக இருள் உங்களை அண்டாது.உத்தமன்இயேசுவைப் பணிந்து உயர்ந்திட வருவீர் துணிந்து. துயர் விடுக.துள்ளியாடி மகிழ்க.தூயவன் காப்பான்" என்று வாழ்த்தினார்.அந்த உத்தமன் பேர் பாட நான் ஒருவன் மட்டும் போதாது என்று தானே நீங்கள் ஒன்பது பேரும் ஒரே நேரத்தில் ஒரே கர்ப்பத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.உடனேகன்னியர்கள் ஒரே வயிற்றில் ஒரே சூலிலா? பிறந்தோம் என ஆச்சரியப்பட்டனர். அப்படியானால் நாங்கள் ஒன்பது பேரும் ஒன்றானவர்களா? என்று வினவினர்.ஆமாம் தாயே என்று கூறினார்.அப்படியா எங்கள் தாய் தந்தையர் பற்றி உங்களுக்கு தெரியுமா? எனக் கேட்டனர்.இந்த நாட்டையாளும் மன்னன் காயனின் புத்திரிகள் என்று கூறினார், எங்கள் ஒன்பது பேருக்கும் உயிர் கொடுக்கும் உத்தமியை எப்போது காண்பது. எப்படி நன்றி கூறுவது தாய் தந்தையை மறந்து தரணியாளும் தகுதியைத் துறந்து விண்ணாளும் தேவனை எந்நாளும் எண்ணி வாழும் இந்தப் புனித வாழ்வே என்றும் இனிது.உடனே முனிவர் ஏசுவழி, நேசவழி, பாசவழியில் செல்வோரைக் கூசாமல் கொன்று குவிக்கின்றான் உங்கள் தந்தை. தந்தை மனத்தைத் திருத்தி அவனைத் தவ வழிப்படுத்துவதுஉங்கள் பொறுப்பு என்று முனிவர் கூறினார். உடனே கன்னியர்கள் எங்களை வாழ்த்துங்கள் முனிவரே என்று கூறினார்கள். சித்தம் நிறைவேறும், நல்வழி சென்றிடுக தினந்தோறும் என ஆசீர்வதித்தார் முனிவர்.
மீண்டும் சந்திப்போம்....
புனித கித்தேரியம்மாள்
புனித கித்தேரியம்மாள்வரலாற்றின் தொடர்ச்சி
அத்தியாயம் :-04
®®®®®®®®®®®®®
ஆயர் இல்லத்தில் வளர்ந்த நவ கன்னியர்களும் தக்க வலிமைபெற்று இலுசுத்தானியா நாட்டின் பல இடங்களுக்கு சென்று"படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" எனநமதாண்டவர் கூறியவாறு ; தாங்கள் தெரிந்தது கொண்ட திருமறை உண்மைகளை இன்முகத்துடன் மக்களிடையே தெரிவித்தனர்.இவர்களது மெய்யறிவு போதனைகளைக் கேட்டு பலர் இவர்களை புகழ்ந்து பாடினர். பொறாமைதனத்தால் தீய குணம் கொண்டோர் இவர்கள் கூறிய மெய்யுரையை பழித்துக் கூறினர். இவ்வாறு கன்னியர்கள் கூறிய மெய்யுரையை நல்லவர்கள் போல் கேட்டு நின்ற பொல்லாதவர்கள் பலர் தாம் கொண்ட தீய எண்ணத்தால் அரச சபையை அடைந்து தாம் கண்டதையும் கேட்டதையும் நயமாகத் திரித்துக் கூறினர்.
திருமறையையும், திருமறைபோதகம் செய்வோரையும் அழித்திட எண்ணம் கொண்ட மன்னன் காயன், திருமறைபோதகம் செய்யும் நவகன்னியர்களின் செய்தியறிந்து இவர்கள் என்னுடைய நாட்டில் எப்படி நுழைந்தார்கள் ? நான் மறுத்த நீசமறை ஏற்று, நான் ஏந்தும் செங்கோல் மறுத்த அக்கன்னியர்களை,இப்பொழுதே விரைந்து சென்று என் முன் கொண்டு வருக என. படைவீரர்களுக்குகட்டளையிட்டான். படைவீரர்கள் விரைந்து சென்று நவகன்னியர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.ஆயினும் அவர்கள் கலக்கமுறாமல் படைவீரர்களுடன் மகிழ்சியுடன் சென்றனர்.அரச சபைக்கு கொண்டு வரப்பட்டனர். நவகன்னியர்களை பார்த்த அரசன் புலிகுகைக்குள் நுழைந்து புது வேதம் பாடவந்த புள்ளி மான்களே வருக வருக, பல தலைமுறையாய் நாங்கள் வழிப்பட்டு வரும் தெய்வங்களுக்கு புறம்பாக, நான் வெறுக்கும் நீசமறையுறைகளை பரப்பி என் நாட்டு மக்களை குழப்பம் அடையச் செய்தது உண்மைதானா ? என கோபத்துடன் வினவினான்.
எம் வானக தந்தை இயேசுபிரானின் மெய்யுரைகளைக் கேட்டு அதன்படி மகிழ்ச்சியுடன் வாழும் நாங்கள். அதை மற்றவர்களும் கேட்டு அவர்கள் ஏற்றமுடன் வாழவேண்டும் என்பது இறைமகனின் அன்பு கட்டளை.எங்கள் மனம் விரும்பும் இறைவனின் மாண்புகளை மக்களின் குணம் விரும்ப செய்வது எப்படி தவறாகும் மன்னா ? என்று கூறினர். நான் ஆளும் நாட்டில் வாழும் நீங்கள் நானும் நானாளும் நாடும் வணங்கும் தெய்வங்களை வணங்காமல் வேறு தெய்வங்களை வணங்குவது தவறல்லவா ?, நல்லது கெட்டது அறிய இளம் பேதைகள் நீங்கள் தேவ குணத்தின் உள்ளாற்றலையும்,வேத நூல்களின் மெய்யுரையும் எவ்வாறு கற்றீர்கள் ? என சீற்றத்துடன் கேட்டான் மன்னன்.
மன்னா, கிறிஸ்துவின் வரலாற்றை சாத்திரங்கள் பல கல்லாதார் எழுதியதாக இருந்தாலும், கற்றாரும் கல்லாதரும் எல்லோருமே தங்கள் மெய்யறிவால் உணர முடியுமே எனக்கூறினர்.அப்படியானால் உங்கள் கடவுளின் மெய்திறத்தை சொல்லுங்கள் என அமைதியாக கூறினான் மன்னன்.உடனே கித்தேரி இறையோனின் தன்மையையும். வல்லமையும் எடுத்துக் கூறினாள்; "ஆதியும், அந்தமுமிலான், சரீரமிலான், எப்பொருளும் ஒதாமல் ஆய்ந்தறிவான்.ஒர் பொருளாய் எப்பொருளிலும் நிறைந்திருக்கின்றான். ஞானம், அருள், நீதித்திறம் ஆகிய நற்குணங்கள் ஒன்றாக திகழ்கின்றான்.உலகம் அதில் உள்ளவைகளையெல்லாம் படைத்து காத்துவரும் எம் இறைவனே, மனித அவதாரம் எடுத்து, மனுக்குலம் மீட்படைய மெய்வழி மார்க்கத்தை தந்தார்". என்று தெளிந்த குரலில் கூறினாள்.நீசனாம் இயேசுமீது பாசம் வைத்து பேசும் பெண்களே உங்களை பெற்றவன் பெருமை அடையமாட்டான் யாரவன் என்று கேட்டான் மன்னன்.
கித்தேரி இவ்வாறு கூறினாள்
" மதிமாறிய தந்தையால் தான் நாங்கள் மாதவச் செல்வியர் ஆனோம்"என்றாள்.நாங்கள் ஒன்பது பேரும் ஒரே சூலில் பெண்ணாக பிறந்த காரணத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டோம்.அவர் வேறுயாருமல்ல இந்த நாட்டையாளும் அரசன். அவர்தான் எங்கள் தந்தை என்றாள். இதைக்கேட்ட அரசன் நீங்கள் எனுடைய புதல்விகளா ? எனக்கேட்டு வியந்து நின்றான்.மகிழ்ச்சி கொண்டான்.உடனே காவலர்களை அழைத்து யான்பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறட்டும்.என்றுசொல்லி மகாராணியை அழைத்தான்.
மீண்டும் சந்திப்போம்....
புனித கித்தேரியம்மாள்
((((((((((()))))))))))((((()))))))
புனித கித்தேரியம்மாள்வரலாற்றின் தொடர்ச்சி
அத்தியாயம் :- 05
®®®®®®®®®®
ஈன்ற பொழுது உலகத்தார் எள்ளி நகைப்பர், வீண்சொல் பேசுவார்கள் என்றெண்ணி சேயன்பு இல்லாது நீர் நிறைந்து ஒடும் ஆற்றில் எறிந்திட ஆணையிட்ட தாய், தான் பெற்றெடுத்த நவகன்னியர்களை தந்தையுடன் கண்டதும் அன்புடையவளாய் அழுதாள். அவளது கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தோடியது.தன் கை சிறைக்குள் அவர்களை சேர்த்து தன் மார்போடு அணைத்து கொண்டாள். வாரி அணைத்து முத்தமிட்டாள்.
உடனே மன்னன் காயன் தன் மனைவியாகிய ராணியைப் பார்த்து " தேவி குழந்தைகள் கொண்ட கோலத்தை மாற்று எழில் கோலம் போட்டுஅவர்களை இன்ப தொட்டிலிட்டு ஆட்டு. நமது நாடெங்கும் இன்று முதல் மகிழ்ந்து ஆடட்டும்" என்று கூறினான்.ராணி அவர்களை அழைத்துச் சென்று மலர்களால் நீராட்டி, வண்ணமிகு பட்டாடை மேலுடுத்தி, அவர்களின் கூந்தலுக்கு நறுமண தைலம் பூசி, பார்ப்பவர்கள் கண்கள் கூசும் வண்ணம் தங்கம் வைடூரியம் போன்ற அழகு மிகு ஆபரணங்கள் அணிவித்து மகிழ்ந்தாள் ராணி.
இவ்விதம் சிலநாட்கள் திருவிழா கோலம் பூண்டதாய் அனைவரும் மகிழ்ந்திருக்க,நவ கன்னியர்கள் மட்டும் நடப்பவற்றை அறிந்து துன்புற்று அதை வெளியில் காட்டாது இறைநாமம் மனதில் துதித்தே அரண்மணையை சிறையெனக் கருதி காலம் கழித்து வந்தனர்.நாட்கள் சில கடந்த பின் காயன் தன்பிள்ளைகளை (நவ கன்னியர்கள் ) கொலு மண்டபத்திற்கு அழைத்து, உங்களை நான் கண்டு கொண்டாமையால் தரணியோடு நானும் மகிழ தந்தையானேன். நீங்களும் என்னோடு சேர்ந்து நாடு, நகரம், செல்வம் சுகபோக வாழ்வை பெற்றுள்ளீர்கள். நான் மறுத்த நீசமறையை நீங்களும்மறுத்து, நம் முன்னோர்களின் தேவனையும் தேவதைகளையும் வணங்குங்கள் என சொல் உரைத்தான்.காயனின் சொல் கேட்டு துயருற்ற கன்னியர்கள், தந்தையே அனைவருக்கும் தந்தையாம் இறைமகன் கிறிஸ்து பெருமான் தந்த பணியை மட்டுமே செய்வோம் அதைவிட்டு விலக மாட்டோம், மண்ணரசைஇழப்பினும் விண்ணரசை இழக்குமாறு மெய்மறையை இழக்கமாட்டோம். ஆகவே தாங்கள் மீண்டும் இதைப்பற்றி எங்களிடம் பேச வேண்டாம் என்று நவ கன்னியர்களும் கூறினார்கள்.
தந்தையும் இந்த நாட்டின் வேந்தனுமாம் என் சொல்லை கேட்கவிட்டால், என் கடும் கோபத்திற்கு ஆளாகி சிறைப்பட்டு,காவலர்களால் அவமானபடுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவீர்கள் என சீற்றமுடன் கூறினான். இதைக் கேட்ட நவ கன்னியர்கள் உம் காவலர்களால் துன்புற்று உமது முன்னிலையில் எங்கள் உயிரை மாய்த்திடுவோமேயன்றி, எங்கள் உயிராம் மெய்க்கடவுளை மறுக்க மாட்டோம் என கூறினர்.தந்தையின் கடுங்கோபத்திற்கு அஞ்சாமல் துணிந்து பேசிய கன்னியர்களை அணைத்து, நாடாளும் மன்னனாம் உங்கள் தந்தையின் சினம் தனிய, அவர் சொல் கேட்டு உங்கள் நீச மறையை மறுத்திடுக என தாய் பரிவுடன் வேண்டி நின்றாள்.
தாயின் உரைகேட்ட கன்னியர்கள், அன்று எமை ஈன்ற போது இரக்கமின்றி அழிக்க ஆணையிட்ட தாங்கள், இன்று எம் அருள் ஒளியை அழிக்கவா ஆசையுரை கூறுகின்றீர்கள்என தாய் வெட்கப்படும்படிகூறினர்.இவர்களை மாற்றம் செய்ய முடியாது என உறுதியாய் உணர்ந்த மன்னன் காயன், இவர்களை சிறையிடுக என சீற்றமுடன் தன் காவலர்களுக்கு ஆணையிட்டு அகன்று சென்றான்.மன்னன் ஆணை பிறந்ததும் காவலர்கள் சுற்றி வளைக்க நவ கன்னியர்களும் சிறைக்கூடம் நோக்கி நடந்தனர். அப்போது அந்நிலை கண்டு அங்கிருந்தோர் அனைவருமே கண்ணீர் விட்டு அழுதனர். கன்னியர்கள் அங்கே அழுது நின்றோர்க்கு ஆறுதல் கூறி கொண்டே சிறைக்கூடத்தை அடைந்தனர். சிறைவாயிலும் பூட்பப்பட்டது.காவலர்கள் கண் விழித்து காத்து நின்றனர்.
மீண்டும் சந்திப்போம்..........
புனித கித்தேரியம்மாள்
புனித கித்தேரியம்மாள்வரலாற்றின் தொடர்ச்சி
அத்தியாயம்:- 06
®®®®®®®®®®®®
கன்னியர்கள் சிறை புகுந்த நிலை கண்டு இயற்கை அன்னை, அங்கே கூடி நின்றோர் துன்புற, கன்னியர்களோ முகம் மலர்ந்து ஆனந்தம் கொண்டார்கள். ஆண்டவனின் திருவடி சேர்ந்திடுவோம் என ஆவல் கொண்டார்கள். சிறையை அவர்கள் கோயிலாக்கிக் கொண்டார்கள். இனிய தேவ கானம் இசைத்து கிறிஸ்து பெருமானை மகிழ்ச்சியுடன் வழிபட்டு நின்றார்கள். சிறைப்படுத்தியவர் சினம் கொள்ள சிறைப்பட்டோர் சிறப்புக் கொண்டார்கள். நெருப்பிலிட்ட புழுவாக காயன் துடித்திட, கன்னியர்கள் தேவன் திருநாமம் பாடி மேன்மையுற்றார்கள.இருள் நிறைந்த இரவு வேளையில் காயன் கொடுமையின் உருவமாக படுத்துறங்க, அருள் நிறைந்த வானரசர் இவர்கள் மீது அன்பு கொண்டார்.
நள்ளிரவில் கன்னியர்கள் கிறிஸ்துவின் புகழ்பாடி மகிழ்ச்சியுற்றிருந்த அவ்வேளையில், கன்னியர் உளம் ஒளிர்ந்திட, காடு மலர்ந்து வாசனை வீச, தென்றல் காற்றுக் காலம் வந்தன போல் ஆகாயத்தில் பயணம் செய்யும் சூரியனை ஒத்த செங்கதிர் ஒளி கொண்டு வானவர் தோன்றினார்.
சிறைக் கூடம் முழுவதுமே ஒளி நிறைந்து விளங்கிற்று. வந்து நின்ற வானவர், " இருள் செறிந்த இரவு பிறந்த அருள் நிறைந்தவனை சிறையிலிருந்து கும்பிடும் தவச் செல்வியரே வாழ்க ! சிறையிலிருந்து உங்களை மீட்க கிறிஸ்து பெருமான் அனுப்பிய இறைதூதன் நான்.என் பெயர் மிக்கேல் என்பதாகும் " என்றுரைத்தார் வானவர்.வான தூதரின் உரை கேட்ட கன்னியர்கள் "மண்ணுயிர்க்காகத் தன்னுயிர் ஈந்த எம்பெருமானுக்காக, இங்கு நாங்களும் எமது உயிரைத் துறந்து அளித்தல் ஆகாதோ?" என கண்ணீர் வடித்து கூறினார்கள். இதைக் கேட்ட வான தூதர் " திருமறையின் பொருட்டுஉயிர் தந்து இறக்கும் காலம் உங்களுக்கு இன்னும் வரவில்லை " என்று ஆறுதல் கூறினார். "அன்னையே அழுவதற்கு நேரமில்ல இது ! அருமறையைப் பரப்புவதற்காக ஆருயிரை விடத்துடிக்கும்அன்பரசிகளே! காவலர்கள் விழிப்பதற்கு முன் நாம் புறப்படுவோம்" என்றுரைத்தார் மிக்கேல் தூதர்.
கன்னியர்கள்வானதூதர் பின் செல்ல சிறைக்கதவு தானாகவே திறந்தது.சிறைக்கதவை விட்டு வெளியே வந்தவர்கள் அரண்மணையின் கோட்டை கொத்தளங்களைக் தாண்டி, நகர் வீதி கடந்து, நகரின் வெளியே வந்து நின்றார்கள் "பாரில் எங்கும் பரமன் புகழை ஏத்திப்பாடுவீர். உத்தமனுக்காய் உங்கள் உயிரைத் தந்து இறந்திடுவீர்.தேவன் சித்தமானால் என் உரை கேட்டு தயங்கிடாதீர். சற்றேனும் கலக்கமின்றி, தயக்கமின்றி இனிமேல் வெவ்வேறாய், வெவ்வேறு திசைக்கு பிரிந்து சென்றிடுவீர் ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு வானதூதர் துணையாக வருவார்கள் நலமாய் சென்று வாருங்கள் " என மிக்கேல்தூதர் சொல்லுரைத்தார்.
மீண்டும் சந்திப்போம்...........
புனித கித்தேரியம்மாள்
புனித கித்தேரியம்மாள்வரலாற்றின் தொடர்ச்சி
®®®®®®®®®®®®®®®®®®®®®®®
அத்தியாயம்:- 07
®®®®®®®®®®®®
மெய்மறைமேல் கொண்ட பகைத் தீ பற்றி எரிய, தன்னுடைய பிள்ளைகள் மெய்மறையை விடவில்லை என்றால் அவர்களை கொன்று விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான் மன்னன் காயன். அந்த காலை பொழுதில் அங்கு தோன்றிய காவலன் மன்னன் பாதம் பணிந்து, "மன்னா ! சிறையில் அடைக்கப்பட்ட நவமாதரும் சிறையில் இருந்து தப்பிவிட்டார்கள்" என்று பதற்றமுடன் கூறினான். கை, கால்களோடு நாவும் நடுங்கக் கூறி நின்ற காவலனின் சொல் கேட்ட மன்னன் காயன், மிக கடுமையான சீற்றத்துடன் "காவலர்கள் அனைவரையும் அழைத்து வருக" என ஆணையிட்டான். மன்னன் முன் நிற்க அஞ்சிய காவலர்கள் மன்னன் முன் அடிபணிந்து "வேந்தே ! விந்தையிலும் விந்தை ! நொந்து உள்ளம் கலங்குகின்றோம்;இரவெல்லாம் கண் விழித்திருந்தோம். எப்படியோ சிறை அகன்று விட்டார்கள் கன்னியர்கள். மன்னர்க்கும மன்னாவா ! மன்னிக்க வேண்டும்" எனக் கூறி தலை குனிந்து நின்றனர்
காவலர்களின் உரை கேட்ட மன்னன் தனியாத சீற்றமுடன் "நமது நாடு நகரமெங்கும், காடு மலைகள் அனைத்து இடத்திலும் அவர்களை தேடி கொண்டு வருக " என ஆணையிட்டான். காவலர்கள் பறந்தோடினர். எங்குமே கன்னியர்கள் சிக்கவில்லை. வெறுமையுடன் காவலர்கள் மன்னன் முன் நடுக்கததுடன் நின்றனர். மன்னன் காவலர்களைப் பார்த்து " எப்படியேனும் அவர்களை பிடித்து வருக இல்லையென்றால் உங்கள் சிரங்களை வெட்டி எறிந்து விடுவேன் " என சிங்கமாய் கர்ஜித்தான்.மன்னவனின் ஆணை பிறந்ததும் காவலர்கள் பதறியடித்துக் கொண்டு எல்லா திசைகளிலும் கன்னியர்களை தேடி கிடைக்காத காரணத்தால் உயிருக்கு பயந்து நடுக்கம் மிகுந்தவர்களாய்நடைதளர்ந்து செய்வதறியாது திரும்பிக் கொண்டிருந்தனர் வரும் வழியில் அழகும் மணமும் நிறைந்த மலர்கள் பூத்துக் குலுங்கிய வனமதில் ஆனந்தமாய் இறைதுதி பாடிக் கொண்டு அன்னமென உலாவி கொண்டிருந்தாள் ஏந்திழை கித்தேரி.கித்தேரியைக் கண்ட காவலர் கூட்டம் ஆர்பரித்து பாய்ந்து சென்றனர்.
இவர்களைக் கண்ட கித்தேரி சிறிதும் கலங்காதுஎதிரில் வந்த காவலர்களை நோக்கி, " மாமன்னர் காயன் படைவீரர்களோ நீங்கள் மான் வேட்டைக்கென இந்த கானகம் புகுந்தீர்களோ ?" என வினவினார். உடனே காவலர்கள் "எம் வேந்தனும் உம் தந்தையுமான காயனவர் இட்ட கட்டளையால் உம்மையே தேடி வந்தோம். கன்னியே எங்களுடன் வா, இல்லையென்றால் உம் தந்தையின் கோபத்திற்கு நாங்கள் அனைவரும் பலியாகிவிடுவோம் " என்றுரைத்தனர் காவலர்கள். இன்முகத்துடன் கித்தேரி காவலர்களுடன் வீர நடைபோட்டு, காவலர் கூட்டத்திற்கு வழிகாட்டுபவள் போல் அவர்கள் முன்னேநடந்தாள்.
காவலர்கள் மன்னன் காயன் முன் பணிந்து ஒப்படைத்தனர் கித்தேரியை.மன்னன் காயன் கித்தேரியை நோக்கி " அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து எப்படி தப்பித்துச் சென்றீர்கள் ? மற்ற எட்டுபேரையும் எங்கே ? நீ மட்டும் தனியாக எப்படி அகப்பட்டாய் ? விவரமாய் கூறிடுக" என காயன் கனிவுடன் கேட்டான்.இறையொளி நிறைந்து நின்ற கித்தேரி " மனித குலத்திற்காக மனுவுருவாகி, தன்னுயிரை ஈந்தளித்த தேவன், தன் தெய்வீக ஒளியால் என்னை மட்டும் காண்பித்து, மற்ற எட்டுபேரையும் காத்து மறைத்துக் கொண்டார். உம்முடைய அடங்கா கோபத்திற்குண்டான ஆக்கினைகளை, நான் ஒருத்தியேயாயினும், அதை அஞ்சாது ஏற்றுக்கொள்வேன்." என துணிவுடன் கூறினாள்.இவ்வுரைக் கேட்ட காயன் உள்ளம் நாணி , வெட்கித்து, கடுஞ்சினத்தைக் கடுகளவும் காட்டாது நெஞ்சுள்ளே மறைத்து நின்றான் வஞ்சகன். அவன் தன்னை இரக்கமிகுந்தவனைப் போல் காட்டி அமைதியாய் நின்ற கித்தேரியைக் கட்டித் தழுவி " என் எட்டு மக்களையும் இழந்து, கலங்கி நிற்கும் என் உள்ளம் மகிழ்வுற, தனிமகளாய் என்னுடனே இருப்பாய். நீ உணர்ந்து கொண்ட நின் மறையையும் தேவனையும் எண்ணி வாழ, பாவி நான் குறுக்கிடேன்" என மனம் வேறாய் நாவேறாய்க் கூறினான்.
மீண்டும் சந்திப்போம்....
அத்தியாயம் :- 08
®®®®®®®®®®®®
தந்தையின் வஞ்சம் நிறைந்த கெஞ்சலான சொல் கேட்டு நின்ற மாது கித்தேரி ' என்ன நிகழுமோ ?' என அஞ்சினாள். நெஞ்சுறுத்தும் துன்பம் நீங்க, குறைவிலா இயேசு பெருமானை இறைஞ்சி நின்றாள்.
" தாதையும் நீ ; தாயும் நீ ; தயாபரனும் நீ ; பேதை எனக்கு நல்வழி காட்டும் பாதையும் நீ ; எல்லாம் நீயே எனக்கு. மெய்யறியேன் ; பொய்யறியேன் ; பொறுப்போடு என்னைக்காத்த உன் புகழறியேன் ; புவிமேல் இவை தவிர வேறு பொருளறியேன் ; என் சிந்தை களிக்க தந்தை உரைத்ததெல்லாம் வஞ்சமோ? வளர்பாதையோ? வெஞ்சினத்து வாளுக்கும், விரைந்து வரும் வேலுக்கும் வில்லுக்கும் அஞ்சேன். உன் சேவடி பிரிவதற்கு அஞ்சுகிறேன்.தஞ்சம் அடைந்த எந்தன் நெஞ்சம் குளிர்ந்திடத்தின்னொளி புரிந்திடு விண்ணொளியே !" என பலவாறு இறைவனை இறைஞ்சி உள்ளம் உருகி நின்றாள். இரக்கத்தின் இறைவனும் அவளது மன்றாட்டைக் கேட்டு மனமிரங்கி அவள் முன் தோன்றி"பெண்மணியே ! பெரிய தவம் புரிந்து வரும் கண்மணியே ! உன் பெருமை இவ்வுலகு அறியும். அதன் பிறகே உந்தன் உயிர் எந்தன்மனத்தை அடையும். அதற்கு முன் உனக்கு சோதனைகள் பெருகி வரும். போதனையாள் மாற்று, சாதனையைக் கூட்டு. தூயவை தரும் துன்பத்தை துணிவுடன் போற்று. மண்ணரசன் மாளிகையில் விண்ணரசன் செய்த தவம் போல் வீற்றிருந்து விரைந்து வந்து என்னைச் சேர்வாயாக ! வாழ்க ! பிறவிப் பெருங்கடலைத் தவத்தோணி கொண்டு நீந்தி விரைவில் என்னை வந்தடைவாயாக ! வருகிறேன்" என்றுரைத்து இயேசு மறைகிறார்.
கித்தேரியவள் இயேசுவின் காட்சியைக் கண்டு நன்றி கூறி தன்னை மறந்து நிற்கின்றாள்.தன் தந்தையின் ஆசை வலையினுள் சிக்காது அகப்பட்டிடாது கண்ணும் கருத்துமாயிருந்த கன்னி கித்தேரி அரண்மணையில் அமைந்திருந்த ஆடம்பர வாழ்வை விரும்பாதவளாய் திகழ்ந்தாள்.விண்ணக வாழ்வையே தம் வாழ்வென வாழ்ந்திருந்தாள். ஊன் உடலுக்கு இன்பம் தரும் அனைத்தும் மனதிற்கு வெம்மை தருவன என அஞ்சி, அமலன் திருக்கரமே அடைக்கலமென, தன் கரங்களை தலையணையாகக் கொண்டு மண்படுக்கையில் சாய்ந்து துயில் கொண்டாள்.
மண் அரசர் வாழும் மண் வீட்டில், விண் அரசர் வாழும் வான் வீட்டையே நோக்கி வாழ்ந்தாள். உடன் பிறந்த சகோதரிகளை பிரிந்து தனிமையில் தவித்திருந்தாள் எனினும் கித்தேரிக்கு உடனிருந்து வேலை செய்தவற்கு பணிப்பெண்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் கித்தேரியின் மேன்மையுறு வாழ்வைக் கண்டு வியந்தனர். அவள்தன் மெய்யுரையைக் கேட்டு தெளிந்த மனதுடையவர்களாய் ஆண்டவனின் அருள் ஒளியைப் பெற்றுக் கொண்டனர் பணிப்பெண்கள்.
மீண்டும் சந்திப்போம்...........
அத்தியாயம் :- 09
®®®®®®®®®®®®®
காமனை வென்ற கித்தேரி:-கன்னிகை கித்தேரி தன்னோடு என்றும் எப்போதும் துணையிருந்த தோழியர்களுடன் அரண்மனையில் சில நாள் வாழ்ந்து வந்தாள். பசும் சோலையை பாலைவனமாகச் செய்யும் கடும் வெயிலின் தாக்கத்தைப் போல் கன்னிகை கித்தேரியும் வாட்டமுடன் துன்புறும் நாள் வரவே, காயனின் வஞ்சனைகள் செயல் படத்தொடங்கியது.அரச குடும்பத்தைச் சேர்ந்த முறை மாப்பிள்ளையான சேர்மானுககு மாலை சூட ஏற்பாடு செய்துவிட்டால்,அதில் மயங்கி, தன் நீசமறையை மறுத்து தன் அரண்மனையில் தங்கிவிடுவாள் என்று நினைத்தான் மன்னன் காயன்.
கித்தேரியுடன் இருந்த தோழியர்களை அழைத்த மன்னன் காயன், " நீங்கள் என் மகள் கித்தேரியை அணுகி எப்படியேனும் அவள் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க செய்யுங்கள் இது அரச ஆணை" என ஆணையிட்டான். தோழியர்கள் அரசனின் ஆணையை நிறைவேற்றாவிட்டால் என்ன துன்பம் ஏற்படுமோ என அஞ்சி நடுங்கினர். " இல்லறத்தில் விருப்பமில்லாத வாடாத தவத்தின் அரசியாய் விளங்கும் நம் இளவரசி, நாம் திருமணம் செய்துக் கொள்ளச் சொன்னால் கோபம் கொள்வாளோ அல்லது தன்னுயிர் வெறுத்திடுவாளோ என்ன செய்வது" என மனம் கலங்கி அலை மோதினர்.தோழியருள் மென்மையான நயப்பு மொழியுடையாள் ஒருத்தி இவளை வெற்றி கொள்வதென்றால் ஒர் வழியுண்டு அது தப்பினால் வேறு வழியில்லையே எனக் கூறினாள்.
செய்வதறியாது திகைத்து நின்ற மற்றவர்கள், அந்த வழியை சொல் நாம் வெற்றி பெறுவொம் என்றார்கள். ஐவகை மலர் பானங்களை அருந்தும் மன்மதனை அழைத்து வந்து அவளை வெல்வோம் என கூறினாள். தோழிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே மன்மதன் அவர்கள் முன் தோன்றினான். மன்னன் இட்ட ஆணையையும். கித்தேரியின் தெய்வீகத் தவ வாழ்வையும் தோழியர்கள் கூறிட, மன்மதன் கேட்டறிந்து இது எனக்கரிதோ? என எள்ளி நகையாடினான். " புவி போற்றும் வேந்தர்களும், பாவணங்கும் பாணர்களும், போர் வணங்கும் வேலுடையோரும், பூலகும் வணங்கும் தேவர்களும் நான் தொடுத்த கணை வணங்கி எனக்குட்பட்டவராய் அஞ்சியிருக்க இவளை வெல்வது மிகவும் கடினமான வெற்றி என்கின்றீர்களோ ! அவமானம், என் வலிமைக்கே பேரிழுக்காகும்" எனக் கூறி " நீங்கள் கூறும் தெய்வீக மங்கை இன்றே இப்போதே என்கணை வணங்கி, என் மங்கையவள். என் கணையதனால் அவள் மயங்கி, காம வேதனையால் கதறி அழும் குரல் கேட்டு என் கணையின் வீர நலம் உணர்வீர் " என வீர உரையாற்றி நின்றான்.
கன்னிகை கித்தேரியவள் இருப்பிடம் அடைந்து, ஆனதெல்லாம் செய்து முயன்று, சோர்ந்து நின்றான் மன்மதன். அப்போது தெய்வீக ஒளிமிகுந்த கித்தேரி, தன் கடைக்கண் பார்வையால் மன்மதனை நோக்கினாள். அவளது விழிகளிலிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஒளிக்கு தாங்காதவனாய் கூச்சலிட்டான்.காமனாகிய சேர்மான் கூச்சல் கேட்டு காது அதிர்ந்து, மனம் கலங்கி என்ன நிகழ்ந்ததோ ? என ஏவியவர்கள் நடுங்கி நின்றனர். உடல் முழுவதும் காந்தல் கொண்டு கதறி அழுது துடித்து ஒடோடி வந்து, அவனை அழைத்து வந்து ஏவிய தோழியர் முன் விழுந்து புரண்டான், இவள் மாது அன்று; பூத்த பூவும் அன்று; அனைத்தையும் அழிக்கும் தீ என்று அலறினான். எவ்வுலகும் வென்ற என்னை , இங்கே இவள் வென்றுவிட்டாள்." இவள் எவ்வுலகிற்கும் இணையில்லா அற்புத பெண்மணி " எனக் கூறி, திறன் இழந்து நின்ற அக்காமன் தோழிகள் முன் நிற்க நாணம் கொண்டு ஒடி ஒளித்து விட்டான். இவ்வாறு காமனை வென்றுகாமத்தீயால் வெந்து துன்புறும் கன்னியிளம் பருவத்தினரின் கலங்கரைச் சுடராய் ஒளிர்ந்து நிற்கின்றாள் புனித கித்தேரி.
மீண்டும் சந்திப்போம்....
அத்தியாயம்:- 10
®®®®®®®®®®®®®
தோழியரும் கித்தேரியும் :-
காமனின் தோல்வியறிந்து எள்ளி நகைத்து நின்ற தோழியர், பொன்மகள் கித்தேரியவளால் நமக்கு எத்தகைய தோல்வியோ என அஞ்சினர். ஆயினும் அரசன் இட்ட ஆணைப்படி செய்யாவிடில் காயன் நம்மை கொன்றுவிடுவானோ என பயந்து நடுங்கினர். அவள் மனத்திறனை மேலும் மாற்றக் கருதி, தோழியர் அனைவரும் ஒன்று சேர்ந்து மிகுந்த இசையொழி எழுப்பும் இனிமை மிகுந்த ஒசை தரும் வீணைகளையும், பல்வேறு ஆபாரணங்களையும் பூட்டி, திங்களைச் சூழ்ந்த நட்சத்திரங்களைப் போல் திங்கள் முகமுடையாள் கித்தேரியைச் சூழ்ந்து நின்றார்கள். இருவர் வெண்சாமரைகள் வீசினர். காதிற்கினிய ஒசை தரும் வீணைகளை இயக்கினார்கள் சிலர். வீணையின் இனிய இசைக்கு ஒத்தவாறு நடனம் ஆடினர் சிலர்.
இத்தனை சீர் சிறப்புகளையும் கண்டுணர்ந்த சீர்மிகு கித்தேரி, தன் முகத்தினை தன் இரு கைகளால் மூடினாள் " அழுகிப் போகும் உடலைப் பேண இத்தனையும் இருக்க, வெந்தழியும் என் மனதைத் தேற்றிட இப்பூலகில் யாரும் இல்லையே " எனக் கூறி விம்மி விம்மி அழுதாள். உடனே தோழியர்கள் " உம் குறையை நாங்கள் போக்கிடுவோம். இல்லையேல்உம்மோடு நாங்களும் சேர்ந்தழுவோம்.என தோழியர் ஆறுதல் மொழிகூறி நின்றனர். தோழியரின் உரை கேட்ட கித்தேரி "அழகுமிகு தோழியரே ! நான் ஆசைகொள்ளும் அத்தனையும் மெய்வழியொன்றே என்பதனை, நீங்கள் அறிந்து கொள்வீர் " எனக் கூறினாள். வேல் போன்ற கூர்மையான கண்ணுடைய அத்தோழியர் " நீர்ச்சுழி நீரின் ஆழம் காட்டுவன போல், உம் தந்தைவழி உந்தனுக்கு வாழ்வளிக்கும். உம் தந்தை மட்டில் அன்பு கொண்டு வாழ்ந்திடுக " எனக் கூறினர்.
என் தந்தை ( இறைவனைக் குறித்து) வழி அல்லாமல் வேறொரு வழி எனக்கேதும் உண்டோ ? இல்லையே. அவர் சிந்தை கொண்டு அருள் செய்ய இன்னமும் தகுந்த காலம் வந்து சேர்ந்ததில்லையே" என கித்தேரி துயருடன் கூறினாள். கூற்றின் உண்மைப் பொருள் தெரிந்து கொள்ள ஆற்றலில்லாதத் தோழியர் "பூமகளே ! புனிதமானஉங்கள் இதயத்தில் இடம் பெற்ற அந்த மனிதர் யாரென்று கூறுங்கள். கொண்டு வந்து நிறுத்துகிறோம்.கொஞ்சியாடிப் பாடுங்கள்" என மகிழ்ச்சி ததும்பக் கூறினர்.
தோழியரின் பேச்சைக் கேட்டு கித்தேரி கோபமுற்றாள் " என் அன்பின் துணைவர் இயேசு கிறிஸ்து ஒருவரே, மற்றவர் என் மரணத்தின் துன்பத்தில் துணையாவாரே ஏற்றிய வில் நாணிற்று அற்றுப் போயினதால் எதிர் மாறித்தாக்கினும், சாற்றிய சொல்மாற்றாதவள் நான். நீங்கள் போய் உங்கள் மன்னனிடம் கூறுவீர்களாக " என தன் கடின குரலால் கூறி முடித்தாள்.
மீண்டும் சந்திப்போம் ........
அத்தியாயம் :- 11
®®®®®®®®®®®®®®
மன்னன் காயன் இருப்பிடம் அடைந்த தோழியர்கள் அவரடி பணிந்து " வீரத்திருவுருவே! வேல் வேந்தே ! வாழ்க நின் கொற்றம் . வணக்கம் மன்னவா ! இனியும் திருமணம் செய்ய வற்புறுத்தினால்பட்டிறப்பாள் நம் பூங்கொடியாள் " எனக்கூறினர் .தோழியரின் சொல்கேட்டு ஆர்த்தெழுந்த காயன் கடும் கோபத்துடன் " கித்தேரியை இங்கு அழைத்து வருக " என ஆணையிட்டான. தோழியர்கள் விரைந்து சென்று கன்னி கித்தேரியை அணுகி " அறம் படைக்க வந்தவளே ! திறம் படைத்த வேந்தன் உங்களின் குறை தீர்க்க கூப்பிடுகிறார் புறப்படுங்கள் " எனக் கூறினர். தோழியரின் வழிவிடப்பட்ட ஆணையை ஏற்று நின்ற கித்தேரி அஞ்சினாளெனினும்தேறிக் கொண்டாள். " குறைவிலா கருணை மிகுந்த ஆண்டவனே நின் சேவடியே எனக்கு துணையாகட்டும் " என இறைவனை நோக்கி வேண்டி , மன்னன் அவை வந்து நின்றாள்.
இறுமாப்புற்று விளங்கிய மன்னன் காயன் " சுடுகாட்டு மாலையென, பொய் வேதம் சேர்ந்த நீ, படுகாட்டு நிந்தைபட்டு அழிந்து போகத் துணிந்தாயோ ? தந்தையும் மன்னனுமாகிய என் சொல் கேளாது,உன் சிந்தனையில் பொய் வேதத்தின் கற்பனைக் கூற்றைக் எண்ணியிருப்பது முறையாகுமோ ? தீவினை கண்டு அஞ்சும் உனக்கு, தந்தை என் சொல் மறுத்தல் நல்வினையாகுமோ ? எதற்கும் அஞ்சாத, என் பேச்சைக் கேளாத உன்னை எதற்காகப் பெற்றேனோ அதற்காக இப்பொழுது தான் வருந்துகிறேன் " என அடுக்கடுக்காய் கூறினான்.
மன்னவரின் கூற்றைக் கேட்ட கன்னி கித்தேரி , வெற்றி மாலை சூடிய கோமகனே அன்புகூர்ந்து பேதையென் கருத்துரையைக் கேட்டறிந்து பின் கோபம் கொள்வது நீதியாகுமோ ? என வேண்டி தன் உரையைத் தொடர்ந்தாள்.
"தாய் கொண்ட பகையால் தந்தை முகம் கூட பார்க்க முடியாது விட்டெறியப்பட்டநான், அனைவருக்குமே தந்தையாய் விளங்கும்வானுலக இறைவனால் கைக்கொள்ளப்பட்டு காத்து வரப்படுகின்றேன். அந்நாளில் முற்றும் எனைக் காத்து ஆதரித்த நாயகன் அவருக்கே, என் உயிர் உடலைக் கையளித்து விட்டேன். இறைவன் கைக்கொண்ட என்னை , இவ்வுலகில், யார்தான் கைபிடித்துக் கொள்ள இயலும் ? இயலாதே. கொண்டவற்றை அவனும் விடான். நானும் எவர்க்கும் கைகொடேன். நீதி வழங்கும் வேந்தே இது நீதியாகாதோ ? " எனக் கூறினாள் கித்தேரி.
இதைக் கேட்ட மன்னன் காயன் வெகுண்டெழுந்து " உனது தந்தையாகிய என் சொல் கேட்காவிட்டால்,நானே உனக்கு பகையாகி, பலவித துன்பங்களைத் தந்து உன்னை கொடுமைப்படுத்துவேன். நான் தந்த உயிரை நானே பறித்திடுவேன். நீ வணங்கும் நாயகனை மறுத்து, நான் கூறும் நாயகனை ( சேர்மானை ) மணந்து கொண்டால்புவியோர் வணங்கும் என் மகளாவாய், மறுத்தால் என் வாளுக்கு பலியாவாய் " என கடும் சீற்றத்துடன் கூறினான் மன்னன் காயன்.
தந்தையின் சொல் கேட்டு அதிர்ச்சி கொள்ளாத கன்னிகை கித்தேரி, " என்னுயிராம் இறையேசு நாயகனையும், என் கன்னிமையையும் என்றும் எப்போதும், எந்நிலையிலேயினும் ஒழியேன் " என திடமாய் கூறினாள்.
கன்னிகை கித்தேரியின் அஞ்சா நெஞ்சத்தையும், மனவலிமையையும் தெளிவாய் தெரிந்து கொண்ட காயன், கடும் சீற்றம் கொண்டு , இடியைப்போன்ற தன்னுடைய வன்குரலால்"உனக்கு இறப்பு உறுதியாக வரும் " என்று சொல்லி காவலர்களை அழைத்து " அறுபடாச் சங்கிலியால் அங்கமெல்லாம கட்டி , இவளை விடுபடாப் பாதாளச் சிறையில் தள்ளுங்கள். செத்தொழியட்டும். அடங்காத மகளாக பிறந்தாள். உறங்காமல் கிடந்து சிறையில் இறந்தாள் என்று எல்லோரும் இவளைத் தூற்றட்டும். எனக்கூறி சபையைவிட்டு அகன்றான். அப்போது கித்தேரி "அப்பா ! சிறைவாழ்வு என் குறை போக்கும். என்னைக் கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய்ச் சேர்க்கும். நன்றி தந்தையே. மன்னன் தன் மகளுக்கு அமைத்து கொடுத்த மணமேடைக்கு போகிறேன் ". என்றுரைத்து சற்றேனும் சிந்தை கலங்காது விளங்கிட்ட கன்னிகை கித்தேரி . நீங்கா இன்பந்தரும் வான் மணவறை இது என சிறையறை புகுந்தாள்.
மீண்டும் சந்திப்போம் .........
அத்தியாயம் :- 12
®®®®®®®®®®®®®®
காயன் படைவீரர்கள் கன்னியர்களைப் பிடிக்க பின் தொடர்தல்:-கித்தேரியும் அவளது தோழிகளும் சிறையை விட்டு அகன்று சென்றார்கள் . சிறையில் நடந்தவற்றை கேட்டறிந்த மன்னன் காயன் கடுஞ்சீற்றம் கொண்டு வெகுண்டெழுந்தான். கித்தேரியையும்,அவளது தோழிகளையும் போகவிடாமல் தடுத்து வழிமறித்து பிடிக்க விரைவாக காவலர்களை அனுப்பினான். விரைந்து சென்ற காவலர்கள், சூரியனின் ஒளி ஈர்ந்திடாததால் எங்கும் இருள் படர்ந்திருந்தது. நள்ளிரவு வேளையில் அடர்ந்த புதர் வழியே இடறி விழுந்தது தடுமாறி சென்றனர். வழி தெரியாது கித்தேரியையும்,தோழியர்களையும் கண்டு கொள்ள முடியாமல் காவலர் கூட்டம், தோல்வியுடன் அரண்மணை வந்தனர். இவ்விதம் ஆண்டவர் கித்தேரியையும்,உடன் சென்ற முப்பது தோழியர்களையும் அற்புதமாய் காத்தருளினார்.
இறைவனின் விருப்பப்படி , அற்புத அருளால் மறைத்து காக்கப்பட்ட கன்னியர்கள், வானவர்கள் முன் செல்ல துன்பத்தில் மனம்வருந்தி அழுவோர்க்கு இறைவன் அருள் செய்யும் இன்ப நிலையை எண்ணி புகழ்பாக்கள் பாடிக் கொண்டே வானவர் பின்னே நடந்து சென்றார்கள். தாமரை, முல்லை, நீலம், அசோகு, மல்லிகை என ஐவகை மலர்ச் சோலைகளையும், இன்னும் பல அதிசய காட்சிகளையும் கண்டு களித்து கடந்து சென்றார்கள். தேனருவி பாயும் மலை. மான்கள் கொஞ்சி விளையாடும் மலை, மலையருவி வீழுகிறது ! மாங்குயில்கள் பாடுகிறது. அதன் இசைக்கு மயில்கள ஆடுகிறது ! குவிந்திருக்கும் பூக்களின் மணமோ கமழ்ந்திடும் நெடுந்தொலைவு. இவ்வளவு அதிசயங்களையும்கண்டு மகிழ்ச்சி கொண்டார்கள். வானவர் இவர்களிடம் " பூமகள் சேர்த்து வைத்த செல்வத்தை பொம்பேரு மலையில் தான் போட்டு வைத்துக் காத்திருக்கிறாள், என்று அதைக் காணுவோர் சொல்வார்கள். இச்செல்வ மலை உச்சியில் நீ மெச்சிடும் கோயில் ஒன்று இருக்கிறது. சென்று காண்போம் " என வானவர் உரைத்தார். உடனே கைநிறைய மலர்களை பறித்து கொண்டு கோயில் நோக்கி சென்றார்கள்.
அங்கே புனித இராயப்பர் திருநாமம் கொண்ட ஆலயம் இருப்பதைக் கண்டு அளவில்லா ஆனந்தம் கொண்டு, ஆலயத்தை மும்முறை வலம் வந்து, அன்பின் அடையாளமாக பூமலர்கள் ஏராளம் சாற்றி ;
காரிருள் வெல்லும் சுடரே வருக!காலம் கடந்த இறையே வருக!இறையுரு மறைத்த சுதனே வருக!மனுவுரு எடுத்த இறையே வருக!எமதுளம் ஆள இறைவா வருக!எம்மில் ஒளியாய் எழுந்தே வருக!அருள்சேர் பரம அன்பே வருக!அனைவரும் உய்யும் உணவே வருக!உழன்றயெம் நெஞ்சில் உனையே தருக!உன்னடி சேரும் உயர்வைத் தருக!அருளே பேணும் பலமே தருக!அன்புடன் வாழும் வரமே தருக!அனைத்தின் தலைவா பணிந்தோம் உனையே!அன்பின் தலைவா அண்டினோம் உனையே!பாரோர் வேந்தே பாடுவோம் உனையே!பாங்குடன் வாழ்த்தி புகழ்வோம் உனையே!என பலவாறு இறைவனை நோக்கி மது நாணுறதேன் மொழியால், குயில் நாணுற தம் தீங்குரலால் பாடி நின்றனர்.
மீண்டும் சந்திப்போம்...........
அத்தியாயம் :- 13
®®®®®®®®®®®®®®®®
கித்தேரியும், அவரது தோழிகளும் அங்கே அமைந்திருந்த ஆலயத்தின் அருகே மரக்கிளைகளாலும், இலைகளாளும் ஒரு குடில் அமைத்து அங்கே கிடைத்த காய்கனிகள், கிழங்குகளை உண்டு வாழ்ந்தனர். எவ்வித தீமைகளும் தங்களிடம் நுழையாதவாறு புலனடக்கம் எனும் வேலியமைத்து, நல்லொழுக்கம் எனும் நீர் இறைத்து, வான் உலகத்தார் விரும்பி வந்து உலாவும் பூங்கா என, தம் வாழ்வை அமைத்து வந்தனர். ஆதரவற்ற குழந்தைகள், உள்ளம் வருந்தி அழுவோர், கொடிய நோயால் துன்புறுவோர், பரமரிப்பற்ற முதியோர், ஆகியோர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இத்தகைய பணிகளையே இறைவனுக்குகந்த மேலான அன்புப் பணி என்றெண்ணி அவைகளையே தங்களது முதன்மையான செயல்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
கித்தேரியின் போதனைப் பணி :-
கன்னிகை கித்தேரியும், அவரது தோழிகளும் சேர்ந்து நற்பணிகள் செய்து வாழ்ந்து வந்த அந்த பகுதியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த போதும், தேவனின் ஆனந்தமான வான்லோக வாழ்வில் பற்றற்றவராய் வாழ்ந்தனர். இவ்வுலக வாழ்வில் மட்டுமே பற்றுடையவர்களாகவிளங்கினர். இத்தகைய மக்களை ஒன்றுகூட்டி ஞானம் நிறைந்த உரைகளை ஆற்றி, அம்மக்களை நல்வழிப்படுத்த எண்ணம் கொண்டாள். கித்தேரியவள் கீழ்கண்டவாறு உரையாற்றினார்.
பொம்பேர் மலை வாழும் அன்பர்களே ! அழிந்து போகும் இவ்வுடலுக்கு வேண்டியதை நாடாமல் என்றும் அழியாது நிலைத்து வாழும் நல்லுயிர்க்கு வேண்டியதை தேடி நாடி வாழ்ந்திடுவீர்.பாவ நோய்க்கு அஞ்சியவராய் , விண்வழிவரும், நிலைத்த இன்பங்களைத் தரும் புண்ணிய காரியங்களில் அஞ்சாது வாழ்ந்திடுவீர்.ஓயாத்தீ நரக வேதனையை நாளும் எண்ணி அஞ்சியவராய் வாழ்ந்திடுவீர்.
ஆசைவழி வந்த கதைகளை மெய்மறையெனக் கொள்ளாது, கடவுள் தன் திருப்பலியால் உண்டாக்கிய திருமறையை மெய்மறையெனக் கொண்டு அதன் வழி நின்று வாழ்ந்திடுவீர்.தீயோரைத் தேவன் என கைகூப்பி வணங்கி வாழ்ந்திடாது, அனைத்திற்கும் அனைத்துமாய் விளங்கும் இறையவன் கிறிஸ்து பெருமானையே தேவன் என கைகூப்பி வணங்கிடுவீர்.கர்த்தரின் கருணை பெறும் கற்பு நெறியில் வாழ்ந்து, காலமெலாம் பேரின்பத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முயன்றிடுவீர்.
தான் எனும் அகந்தையால் பழிபாவங்கள் செய்து தன்னையே அழித்திடும் ஆங்கார குணத்தை விட்டு, தாழ்மை காத்து, பிறர் நலம் பேணி, அன்பெனும் இறையொளி கொண்டு விளங்கடுவீர்.இவ்வாறு அருள் நிறைந்த ஞான உரைகளையும், இறைவனின் இயல்புகளையும் இறைவனை மன்றாடும் விதங்களையும் நயமுடன் எடுத்து கூறினார். அம் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய ஜெபங்களையும், சிறியோர் முதல் பெரியோர் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தனர். நாள்தோறும் இயேசுவின் நாமத்தை நாலா திசைக்கும் சென்று பறைசாற்றினர்.
ஓருநாள் மாலைவேளையில் கித்தேரி இறைவனைத் தியானித்துக் கொண்டிருந்தாள் . அப்போது, அங்கு வந்தடைந்த கிராமத்து மக்கள், பேரரசன் காயனுக்கு உட்பட்ட குறுநில மன்னனான புரோசன் (லேசியான் ) என்பான், வேதஞானிகளின் உரைகேட்டு மெய்வேதம் கொண்டு, இயேசுவின் வழி நின்று , சீர் ஒழுக்கத்தில்சிறந்தவனாய் வாழ்ந்து வந்தான். இந்நாளில் மீண்டும் உலகின் ஆசை வலையில் அகப்பட்டு பாவசேற்றில் அமிழ்ந்து, தன் பேரரசன் காயனுக்கு நல்லவனாக நடக்க வேண்டுமென்ற காரணத்தால் மெய்வேதம் மறுத்து, பொய் வேதம் ஏற்று, மெய்வழி நின்றாரை தேடிப்பிடித்து துன்புறுத்துகின்றான் என்ற செய்தியை அறிவித்தனர். இச் செய்தியை கேள்வியுற்ற கன்னிகை கித்தேரி உண்ணாமல் உறங்காமல் வேதனையில் நொந்து இறைவனை வேண்டினாள்.
அருட்கடல்சூல் அன்பு இறையோனே உன் குருதி பெற்று உனது அடியானாய் வாழ்ந்தவன், நின் குருதி நிந்தை பெற நின்றாண்டால் அது உந்தனுக்கு நிறைவாகுமோ ?மெய்வருந்தி உண்டாக்கிய மெய்மறை மறுத்து பேய்வினையில் மயங்கி மாண்டிடல் நன்றாகுமோ உந்தனுக்கு ?அனைத்து திறனும் நீ கொண்டிருக்க , நீ எண்ணினால் இம்மன்னவன் வஞ்சக உள்ளத்தை மாற்றிட அரிதாகுமோஉந்தனுக்கு ?யாம் வாழ நீ இறந்து நலன் நல்கிய உந்தனுக்கு, பேயினங்கள் வாழ்ந்து வாழ்த்து பெறல் நலமாகுமோ உந்தனுக்கு ?நமது ஆலயத்தை யாதொருவன் கறைப்படுத்தினால் அவனைச் சிதறடிப்போம் என்று கூறிய இறையோனே உமது ஆலயமாய் விளங்கிய இம் மன்னனின் ஆன்மாவை கறைபடுத்திய சாத்தானை சிதறடித்து , மீண்டும் அவனது ஆன்மாவை ஆலயமாய் விளங்கிட அருள் புரிவாய்
பாவிகளின் அடைக்கலமான கன்னித்தாயே பாவசேற்றில் முழ்கி கிடக்கின்ற இம்மன்னனை அடைக்கலமாக ஏற்று மீண்டும் அவன் சத்திய மறையில் வந்து சேர உமது திருக்குமாரனை. மன்றாடுவீராகில்மெய்யொளிபெற்று நல்மகனாய் விளங்கிட மாட்டானோ உந்தனுக்கு.என பலவாறு இறைவனையும் தேவதாயையும் நோக்கி மன்றாடினாள். இறைவனின் அருளால் புரோசன் (லேசியான் )சத்திய மறையில் வந்து சேரவேண்டும். இல்லையேல் அவன் கையாலே அவ்விடமே மடிந்திடல் வேண்டும். இறைவா நீயே அருள்புரிந்திடுவாய் என இறவனிடம் கையேந்தினாள். இறைவனிடம் கையேந்தி நின்ற கன்னிகை கித்தேரிக்கு அருள் பாலித்த இறைவன் " உன் ஆசைப்படியே ஆகுக ஆயினும் நீ போய் உறுதியுடன் அங்கு உரையப்பாய், அவன் சினம் கொண்டு பேசினாலும் அஞ்சாதே காத்தருள்வோம் யாம் " என வாக்களித்தார்.
மீண்டும் சந்திப்போம் ...........................
அத்தியாயம் :- 14
®®®®®®®®®®®®®
இறைவனின் வாக்குரையைப் பெற்றுக் கொண்ட கன்னிகை கித்தேரியின் உள்ளத்தில் ஊக்க உணர்ச்சிகள் மிகுந்தெழுந்தது. காலைச் சுடரென களித்தெழுந்தது.மாலைச் சுடரென கன்னியர் முப்பதின்மாருடன் சேர்ந்து, சபை நாண துணிவுடன், கலீச நாடாள் வேந்தன் புரோசன் அரண்மணை அடைந்தாள். அங்கே அரச சபை வந்து மன்னவனை வணங்கி நின்றாள். தன் அருளொளி வீசும் கண்களால் கூடியிருந்த அனைவரையும் பார்த்துக் கொண்ட அவள், அனைவருமே கேட்டுணரத் தன் உரையைத் தொடங்கினாள்.
" செங்கோல் வேந்தே ! அறவாணரும் தவமாதரும் முக்காலம் உணர்ந்த முனிவரும் மூவாசை வெறுத்த ஞானிகளும் நின் நாட்டில் நிறைந்திட ஆண்டு மாட்சி பெற்றாய். இன்று நாட்டில் அறம் பெருகவில்லை அருகம்புல் படருகிறது. நெருஞ்சி கை நீட்டி நெருங்கி வருகிறது. சிந்தனைத் திறம் இழந்து மனிதர்கள் சிறுத்தைகளாய் மாறி வருகிறார்கள். மாதவர் நோன்புக்கும் , மடவர் கற்புக்கும், மாசறியாக் கிறித்துவ மக்களுக்கும் காவலனே உனதுக் கவனக் குறைவால் சோதனைகள் நிறைந்துவிட்டன.உன் குடைக் கீழ் வாழும் மக்களுக்கு, உன்னால், பிறரால், பெரிய விலங்கால், கள்வரால், பகைவரால் ஒரு தீங்கும் வராமல் தடுப்பது உன் பொறுப்பு அதை மறந்து நீயே நெடுவாளை ஏந்தி உயிர்களை அறுவடை செய்யப் புறப்பட்டு விட்டாயே ! வேலியே பயிரை மேய்ந்தால்.நல்வினை வீட்டிற்கு வராது மன்னா. கொலையுதிர் காலத்தைக் கொற்றவன் உண்டாக்கலாமா ? எண்ணிப்பார். பொருள் பெற்றாய், புகழ் பெற்றாய், புவியாளும் புலமை பெற்றாய். இவையெல்லாம் இயேசுவின் அருளால் பெற்றேன் என இன்புற்றாய் அன்று. இன்று காற்றடித்தால் சாய்ந்தொழுகும் காற்றாடி போலக் கயவர்கள் வழி செல்லும் கலையைத் தான் பெரிதாகக் கற்றாய். பெண்கள் தங்கள் சேலையை அடிக்கடி மாற்றுவது போல, பெரியவனே நீ உன் சிந்தையை அடிக்கடி மாற்றலாமா ? கையில் பிடித்த விளக்கோடு காட்டுக் கிணற்றுக்குள் வீழ்ந்து விட வேண்டாம். மன்னவன் இயேசுவை உண்மை கடவுள் என்று மதி மனந்திரும்பி மீண்டும் எங்கள் பக்கம் வந்திடு, திருச்சபையை வணங்க வா. இல்லையேல் தாங்கள் செத்த பிணமாகும் படி எங்களைக் கொல்லவா. இரண்டில் ஒன்றை இப்போதே செய் ". என பலவிதமாய் அடுக்கடுக்காய் கலங்கிய கண்களோடு வீறு கொண்டு கூறி நிற்றாள். அங்கிருந்த அனைவருமே தன்னிலை மறந்து, இமை இமைக்காது கேட்டிருந்தனர்.
உள்ளத்தில் அச்சமில்லாது கித்தேரியவள் கூறிய சொற்கள் புரோசனின் உள்ளத்தை உறுத்தியது. அவனின் அறியாமையை வெளிக்காட்டியது. கூர்மையற்ற அவனது அறிவாற்றலை வெளிக் கொணர்ந்தது. எந்த பதிலும் கூற இயலாது, வெட்கப்பட்ட அவன், சபையிருந்த அனைவரும் அதிர்ச்சியுற, அவனது உள்ளத்தில் மிகுந்த கோபம் எழுந்ததால் உடைவாளை எடுத்து கித்தேரியை வெட்ட ஒங்கினான். அங்கே அவனருகே அமர்ந்திருந்த பிரதான அமைச்சர் சட்டென விரைந்து தடுத்து "மன்னவா தகாது இது, அரச சபையில் வைத்து ஒர் பெண்ணை வெட்டி வீழ்த்துவது, அரச பாரம்பரியத்திற்கே பேரிழுக்கு. நிலமகளும் நிலை கொள்ளாள்.பெண்ணானதினால் இவளையும் நீர் மன்னிக்க வேண்டும்".என வேண்டிக் கொண்டான். தனியாத கோபத்துடன் இருந்த புரோசன், " கன்னியவள் கித்தேரியுடன், வந்துள்ள கன்னியர்கள் அனைவரையும் ஒருசேர பிடித்து சிறை செய்க " என ஆணையிட்டான். காவலர்களும் மன்னன் ஆணையை பணிந்து நிறைவேற்றினர். கன்னிகை கித்தேரி மூன்றாம் முறையாக சிறையிலடைக்கப்பட்டாள் .
கன்னிகை கித்தேரி அடைபட்ட சிறைக்கு சென்ற பலர் தேன் மொழியாள் வாய்மொழி கேட்டு, மகிழ்ந்து , மனம் தெளிந்து, தன்னுள் கறைபடிந்த மாசுகளை நீக்கி கைகூப்பி வணங்கி நின்றனர். கித்தேரியின் தெய்வீக ஆற்றல் , செய்தியாக எல்லா இடமும் பரவியது. அதனைக் கேள்வியுற்ற, பிறவியிலே முடமான ஒருவன் தானும் அத்தகைய அருள் நிறைந்த அக்கன்னியை அணுகி வேண்டி நின்றால் , குணம் கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன்,பிறர் உதவியினால் கன்னிகையவள் சிறையிருந்த இடம் சென்று கித்தேரியை வாழ்த்தி வணங்கி நின்றான். அவனது வேண்டுதலுக்கு இரங்கி அவளும், தன் பிரான் இயேசு பெருமானை மன்றாடி முடவனை நோக்கி, " அன்று முடவர்களை நடப்பித்த இயேசுவின் நாமத்தால் நான் உணக்கு ஆணையிடுகிறேன் எழுந்து நடந்திடுக " என கட்டளையிட்டாள்.அவன் பெலத்துடன் எழுந்து, இறைநாமம் துதித்து, சிறைக் கூண்டினுள் நின்ற கித்தேரி முன் சென்று மண்டியிட்டு வணங்கி நின்றான்.
இவ்வாறே பிறவியிலே பார்வையில்லாத ஒருவன் கித்தேரியின் வல்லமையைக் கேள்வியுற்று, அப்புனிதவதியின்அருள் உதவியால் நானும் கண்ணொளி பெற்று, இப்பூலகை கண்டு மகிழ்ந்திடுவேன்என்ற திடநம்பிக்கையுடன் தேவலோக நங்கையாம் கித்தேரியை அண்டி வந்து வணங்கினான். இரக்கத்தின் ஊற்றான கித்தேரி அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை நோக்கி நகைக் காட்டினாள் அவனும் அவள் காட்டிய நகைதனைதான் கண்டு மகிழ்ந்தான் கண்ணொளி பெற்றுக் கொண்ட ஆனந்தத்தால் துள்ளி எழுந்து, தேவன் துதிபாடி, அவள் தன் திருவடிகளைப் போற்றி வணங்கிச் சென்றான்.
கித்தேரி சிறையிலிருந்த வேளையில் நோயாளர் பலர் குணம் பெற்றனர். முடவர்களும், குருடர்களும், செவிடர்கள் மற்றும்பல நோயாளிகள் குணம் பெற்றனர். மனிதர்களை பிடித்திருந்த கெட்ட அலகைகள் நடுங்கி ஓடின. இவைகளை கண்டவரும், கேட்டவரும் வியந்தனர். தெளிந்து தேவமறை சேர்ந்தனர். மாநகரமே குற்றம் நீங்கி இறைவனின் மெய்யொளி பெற்று சிறந்து விளங்கின்று.
மீண்டும் சந்திப்போம்......................
அத்தியாயம் :- 15
®®®®®®®®®®®®®®
சிறையிலிருந்த கித்தேரியின் அருளுரையைக் கேட்டும் , அவள் செய்த புதுமைகளைக் கண்டும் , திரளான மக்கள் தம் பொய்மறை மறுத்து, மெய்மறை ஏற்று இயேசுவின் புகழ்பாடி மகிழ்ந்து வாழ்ந்தனர் . இதையறிந்த மன்னன் புரோசன் , சிறையில் கித்தேரி செய்வதெல்லாம் மாயவித்தை என தன் சொல்வன்மையால்கூறினாலும் இவளை விட்டுவைத்தால் நம் உயிருக்கே ஆபத்து உண்டாகும் . நாடு , நகரம் , சுகபோக வாழ்வணைத்தையும்இழக்க வேண்டியது வரும் என்றெண்ணி, அந்த கன்னியர்கள் மெய் வளியே இரத்தம் சிந்த வெட்டுவேன் நான் நாளை என , உறுதி கொண்டு உறங்கச் சென்றான் .
அன்றிரவு வேளையில் , கன்னிகை கித்தேரியும் , மற்றுமுள்ள கன்னியர்களும் திரியேக தேவன் தூய ஆவியை நோக்கி
"தேவ தூய ஆவியேதேற்றுவீர்
இக்கோமகனை
தேவுலக வாழ்வதை
தேசம் முழுவதும்
துலக்கிட விரைவீர்
தூய ஆவியேநிறைவாய்
அளிப்பீர் வரமதை
இவ்வுல வாழ்வினில்
இனியும் யாங்கள் நிலையாது
இறைவா உந்தன்
வீட்டினில் இன்றே
எம்மை ஏற்றிடுவீர் ( விரைவீர் )"
என புரோசனுக்காகவும் தங்களுக்காகவும்மன்றாடினார்கள்.
இறைவனும் அவர்களது வேண்டுதலைக் கேட்டிரங்கினார். சிறை காத்த காவலர்கள் கண்டு மகிழ , நடுச்சாமவேளையில் இருள் நீத்திடும் செங்கதிரோன் வடிவில் பூமாரி பெய்திட, கதிர் பொன்மாரி மேனியுடன் , வானவர் பாமாரி பெய்திட எப்பொழுதும் ஒளிமயம் காட்டி நின்ற தேவன் தூய ஆவியானவரின் தன்மையைக் கண்டு , கன்னியர்கள் தெய்வீக நடுக்கம் கொண்டனர்.
இறங்கி நின்ற தேவன் "அஞ்சாதீர் ஊன் விரும்பும் மேலுடைய வேந்தனின் பகை நீங்கி , உம் மலையையே நோக்கி மீண்டும் செல்க" எனக் கூறினார்.இறைவனுக்காக தன்னுயிரை விட சித்தமாயிருந்த கித்தேரி , செங்கதிர் வடிவில் தோன்றி நின்ற தூயோனைநோக்கி , "மன்னன் மெய்மறை திரும்ப வேண்டும் . இல்லையேல் அவன் கையால் நான் சாகவேண்டுமம் " என்று கூறி நின்றாள்.
அதைக் கேட்ட தூயோன் " பரம தந்தையின் சித்தம் இதுவே மனிதருள் மாண்புடையோளே இங்கேநீ இறைஞ்சி கேட்டவரம் பொம்பேர் இடத்து ஏறிப் போனபின் ஆகுக "எனக் கூறினார் . சிறைக்கதவு தானே திறக்க , வானவர் புடைசூழ நின்ற தூய ஆவியானவர் அகன்று சென்றார். இறைசித்தம் பணிந்த கன்னியர்கள் ஒருங்கிணைந்து , சிறையகன்று , இறைவனின் ஆணைப்படி மீண்டும் பொம்பேர் மலையுச்சி அடைந்தனர்.
அன்றிரவு , சிறைக்கூடத்தில்நடந்தனவற்றையெல்லாம் நேர்முகமாகக் கண்ணுற்று காவலர்களும் , இத்தகு நன்னலம் வாய்த்த்த மறையன்றோ மெய்மறை . இத்தகு வேதமல்லால் ஈங்கில்லை ஈடேற்றம் தரும் மற்றொரு வேதம் எனத் தெளிந்து , முன் தாம் தொழுத பொய்த் தேவரையெல்லாம் மறுத்தனர் . முன் தாம் கொண்ட பாவங்கள் அனைத்தும் ஒழிந்திட , மனம் நொந்து இறைவனை வேண்டி மெய்யொளி பெற்று விளங்கினர்.
சிறையிலிருந்த கன்னியர்கள் அனைவரும் , தப்பி விட்டனர் . என்ற செய்தியறிந்த மன்னன் , மிகுந்த சினம் கொண்டான் . ஆத்திரத்தால் துடித்தான் . வலை நீங்கி ஓடிய மானைத் துரத்திச் செல்லும் வேடனைப் போல் , காற்றென வேத்தில் , கான்நிறை வெள்ளம் என , சினம் மிகுந்த தன் படைகளோடு விரைந்து சென்றான் , பொம்பேர் மலையடைந்து அதன் அடிவாரம்தனில் அடி எடுத்து வைக்கும் அத்தருணமதில் கண்பார்வையிழந்து குருடனானான் . காலிரண்டும் கையிரண்டும் குழைந்திட நிலையிழந்து , வேலிரண்டுதைத்து விழும் வேங்கையென மண்மீது துவண்டு வீழ்ந்தான்.தன்னிலையிழந்த புரோசன் அங்கமெல்லாம் துடித்தது , பதறியது . கண் தெரியாக் குருடனானானே பிறர் உதவியின்றி எட்டு எடுத்து வைக்க கால்கள் இல்லையே . வாள் பிடிக்க , சோறுண்ண கையில்லையே என அலறித் துடித்தான் .
தன் காவலர்களை நோக்கி , "கன்னிகை கித்தேரியைக் கண்டபடி திட்டினேன் . தன்னெறியால் அவளைத் தொலைக்க நான் எண்ணியிருந்தேன். மெய்யொளி இல்லையென்று மறுத்து நின்றேன் .இதற்கெல்லாம் தண்டனையாக , ஆண்டவன் இத்தகைய தண்டனையைத் தந்துள்ளான் எனக்கு . நீங்கள் என்னை கன்னிகை கித்தேரியிடம் கொண்டு சேர்த்தால் அங்கே அவளிடம் அழுது மன்றாடி மன்னிப்பு கேட்பேன் . அவளும் எனக்காக இயேசு பெருமானை மன்றாடி, அருள் பெற்று, என் கை கால்கள் செயல்பட வைப்பாள் " என ஆணை பிறப்பிக்க வேண்டிய மன்னன் பணிந்து வேண்டினான் .
மீண்டும் சந்திப்போம் .....................
அத்தியாயம் :-16
®®®®®®®®®®®®
முடமாய் கிடந்த மன்னன் வேண்டுகோளுக்கிணங்கி , உடன் வந்த வீரர்கள் அவனைத் தூக்கி பொம்பேர் மலையுச்சியடைந்து , அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் அவர்களுக்காகவே மன்றாடி மாட்சியுடன் நின்ற கன்னிகை கித்தேரியின் பொற்பாதத்தில் கிடத்தி , அவளை வணங்கி நின்றார்கள் . நடந்தவற்றையெல்லாம் விவரமாய் கூறினார்கள் . மண்மீது பிணம் போல் கிடந்த மன்னன்புரோசன் , " மங்கையர் குல திலகமே ! மாமணியே ! மாதவிவின் துணையே ! உன்னைப் பகைத்தேன் , விண்ணைப் பகைத்தேன் என்று , என் மகளே ! என்னைப் பகைத்து விடாதே தாயே ! உன் சொல்லைக் கேட்காத இந்த உடல் சிதைந்து விட்டதம்மா ! உன் பொன்னடியில் வீழ்ந்து அழுதிட ஆசை ஆனால் காலுக்கு வலுவில்லை . கன்னிகையே ! கடவுளே ! உன்னைக் கைகூப்பி கும்பிடத் துடிக்கிறேன், கைகளுக்கு உரமில்லையே தாயே ! விண்ணொளியே ! உன் பொன்னொளி காணத் தவிக்கிறேன் . ஆனால் என் கண்களுக்கு ஒளியில்லை . பொன்னே ! பூவே ! புனிதவதியே ! உன்னை வாழ்த்த வாயுண்டு . நினைக்க மட நெஞ்சுண்டு . தாழ்த்த தலையுண்டு . அதனால் எனக்கு தனி மகிழ்ச்சி மிகவுண்டு . கித்தேரியம்மா.....இன்று முதல் நான் மனம் மாறினேன் . குணம் மாறினேன் , மதமும் மாறினேன் . மங்கையே ! நீ மட்டும் பிழை பொறுத்து மனம் ஆறினால் , நான் கொண்ட நோயோ , குறையோ , எனைப் பிடித்த பேயோ அத்தணையும் போயொழியும் . மலர்க் கொடியே ! உன் பூங்கரம் பட்டால் நான் புனித உடல் பெறுவேன் . அருள்புரி அமலி அம்மா ! உன் அகம் விரும்பும் அத்துணையும் நான் தருவேன் " என கன்னிகை கித்தேரியின் முன் அழுது புரண்டான் .
கன்னிகை கித்தேரியவள் மன்னனை நோக்கி " மன்னா ! நாம் படுந்துன்பங்களுக்கெல்லாம் செய்கிற தீவினைகள் தான் மூலவேர் . பாவத்தைக் குறைத்தால் படுகின்ற நோயும் குறையும். மனம் வருந்தி அழுதால் துன்ப நோய் மறையும் . அழுவது தான் பாவநோய் நீக்கும் ஆற்றல் வாய்ந்த மருந்து . இயேசுவின் அருளால் தங்களைப் பிடித்த நோய் நீங்கும் " என்று கூறிவிட்டு தன் கரங்களை குவித்து , வானிறையோன் திருநாமம் ஓதி , இறைஞ்சி மன்றாடினாள் ." புவியாண்டவனே! பொற்புயத்தவனே! எழுந்திரு ! என்னைப் பார் " என்று மன்னனைப் பார்த்து கூறினாள் .
துன்பமெல்லாம் நீங்கியெழுந்த மன்னன் புரோசன் , கன்னிகை கித்தேரியின் தாள் பணிந்து , " தாயே உன் கைமருந்தாம் ஜெபத்தால் இதோ மீண்டெழுந்தேன் பாவி நான் . பாவி நான் செய்யும் கைமாறு யாதோ ? " என பணிந்து கேட்டான் ." எளிய தவ வாழ்க்கை மேற்கொண்டு , ஏழை எளியோர்க்கு தான தர்மங்கள் செய்து, அதை நீங்கது நாளும் பேணி வாழ்வீரே . இறைவன் உம்மீது காட்டியருளிய இணையில்லா இரக்கத்திற்கு இதுவே நீர் செய்யும் மேலான கைமாறு எனக் கொண்டு விளங்கிடுவீர் " என கூறினாள் கித்தேரி .
பாவங்கள் பல செய்த என்னை இறைவன் மன்னிப்பானோ ? கண்டறிந்த மெய்மறையை இடையில் வெறுத்தேன். கர்த்தர் புகழ் சொன்னவரைக் கண் மூடி ஒழித்தேன் . பாவியாய் நின்று பாவிகளைப் பெருக்கினேன் . பொன்விளக்கே ! நீ பொறுத்துக் கொண்டாய் ! அந்தப் பொற்பரன் பொறுப்பானோ ? வெறுப்பானோ ? பொங்கிவரும் கோபத்தால் என்னை ஒறுப்பானோ ? யானறியேன் . என கண்ணீர் ஆறாய் பெருக கலங்கி நின்றான் .
" வருந்தி சுமப்போரின் சுமையை வாங்கி வருத்தம் போக்கும் வள்ளல் இயேசு . செய்த குற்றத்திற்காக அழுது திருந்திய மன்னா , மாமரியின் மகன் உனக்கு மன்னிப்பு அருள்வார் . மனம் கலங்காதே ! இன்றைக்குப் பத்தாம் நாள் நம்மிருவருக்கும் இனிய நாள் . இயேசுவின் திருவடி காணும் இன்ப நாள் . பத்தாவது நாளில் நாமிருவரும் இப்புவியில் இறந்து பொன்னுலகம் கண்டு சிறப்போம் பரமன் கொடுத்த கொடைக்காக பலருக்கும் கொடுக்கும் கொடையை நீ போற்று . பெறுவோர் இல்லாத நிலையை மாற்று . சென்று வருக! " என்று கன்னிகை கித்தேரி கூறினாள் .உடல் நலமும் , மகிழ்ச்சியும கொண்ட மன்னன் புரோசனும் , அங்கே கூடிநின்ற படைவீரர்கள் அனைவரும் இறைவனை வாழ்த்தி இருள் நீங்கி , ஒளியேந்தி , மனம் தெளிந்து " நீதிபரன் கிறிஸ்துவைக் கண்டு இறைஞ்ச துணையாய் நின்ற கன்னிகையே தாயே உம்மைக் கொண்டு அடியேனும் , எந்நாட்டவர் அனைவருமே முக்தி பெற்றிட நீயும் எம்முடன் வருவாயே " என வேண்டினர் . "மன்னவா பேரரசன் காயன் அவர் ஏவலினால் , இங்கெனக்கு போர்களமும் , புனித முடியும் ஆகும் என்பதால் நீ போய் வா மன்னவா ! " எனப் பரிவுடன் விடையளித்தாள் கன்னிகை கித்தேரி.
கன்னிகை கித்தேரியையும் , அவளுடன் வந்த மற்ற கன்னியர்களையும்அழிக்க வந்த மன்னன் புரோசனும் , அவனது பெரும்படையும் , கித்தேரியை தாள் வணங்கி , வானோர் எண்ணி மகிழ இருளகற்றி மெய்யொளி ஏந்தி , தேவ கீதங்கள் பல பாடி தன்னாடு போய்ச் சேர்ந்தனர் .
மீண்டும் சந்திப்போம் ...........................
அத்தியாயம் :- 17
®®®®®®®®®®®®®®
புரோசன் மன்னன் , தாமரை இதழ்கள் போன்ற மெல்லடியாள் கித்தேரியின் அருள் மிகு உரையினைத் தன் நெஞ்சிலிருத்தி , தனதூர் சேர்ந்து அந்தநாள் முதலே திருமறை வாழ்வின் பணிகளைத் தொடங்கினான் . முன்பிருந்த இறைவனின் பொற்கோவில் பேணி , திருவழிபாடு நிறைவேற்ற மேற்கொண்ட ஏற்பாடுகள் முன்பைவிட பன்மடங்காக இருந்தது .பொய்வழி தேவதைகளுக்கான பூடகங்களை தகர்த்தெறிந்தான் . பற்றற்ற தவமுடையோனாய் , தம்மிடமிருந்த செல்வங்கள் அனைத்தையும் இறைநாமத்தின் பொருட்டு , வானகத்தோர் கண்டு வியக்க, வையகத்தோர் கொண்டு உவந்திட, குறைவிலாது வாரி வழங்கும் வள்ளலாய் திகழ்ந்தான். தன் தவவலியாலும் , தானத்தின் திறத்தாலும் , இறைவனின் கருணையையும் , அருளையும் பெற்றுணர்ந்த மக்கள் களிப்புடன் இறை புகழ்பாடி மகிழ்ந்து வாழ்ந்தனர்.
புரோசனும் , அவனது படைவீரர்களும் தாம் பெற்ற அருள் ஒளியாலும் , செய்த தவவலியாலும் , கொடை திறத்தாலும் அந்நாடுநகரம் பரவலாக பிரகாசித்தது . இந்நிலையை பேரரசன் காயன் , பிறர் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டான் . எனக் கடங்கும் நாட்டான் சிறிதேனும் அச்சமிலாது , என் தேவர் மறுத்து , எனக்கடங்கும் அந்நாடு ஒருசேர கெட்டழியுமாறு மீண்டும் நீசர் மறை தழுவியுள்ளான் . இவையெல்லாம் நடக்க நிகழ்ந்த மாயைகள் யாதோ ? எனத் தன் சபையில் நாகம் சீற்றமுடன் படமெடுத்து ஆடுவது போல் நின்றான் . அங்கே அரசசபையில் வீற்றிருந்த ஒருவன் மன்னவருக்கும் மன்னவா !"இவையெல்லாம் உம்மகள் மாயையினால் ஆயினதே" எனக் கூறினான் . அது கேட்ட மன்னன் காயன் " என் மகளா ! என் மகள் கித்தேரியா எங்கே அவள் ? விளக்கமாய் கூறிடுவீர் " என துடிதுடித்து நின்றான் . ' வேந்தே உம்மகள் கித்தேரியே தான் . முன்பொரு நாள் அரசு அலுவலாக கலீச நாடு சென்று , அங்கேயிருந்த போது நான் நடந்தவை எல்லாவற்றையும் நேர்முகமாகக் கண்டேன் முன்பு நம் அரண்மணையில் காணாதொழிந்த முப்பது தோழியருடன் ஒருங்கிணைந்து, உயர்ந்த பொம்பேர் மலையுச்சியில் சிறந்த தவத்தை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றாள் . படிப்பறியா பாமரமக்களைத் தன் பக்கம் ஈர்ந்து வருகின்றாள் . புரோசனின்அவையேகி காட்டிய கண்மருட்டும் வித்தைகளைக் கண்டு வேந்தனின் உள்ளமும் மருண்டு விட்டது . நேற்று முளைத்த அந்த நீச மறைக்கு மீண்டும் அவள் அவனை ஈர்ந்து கொண்டாள் ' என நயமாக புணைந்துரைகள் மிகுந்திடக் கூறினான் அவன் .
மிகுந்த கோபத்துடன் நின்ற காயன் " சிறு பேதையிவள் என் திறத்திற்கு ஒரு பழியாய் இரையாவாளோ ? " எனக் கடிந்து கூறி முன்னாளில் கித்தேரியவளுக்கு திருமணம் செய்து கொள்ளக் குறித்த காளையவன் சேர்மான் என்பவனை வெகுச் சீக்கிரமாக அழைத்து வர ஆணையிட்டான் . காவலர்களும் அரசரடி பணிந்து விரைந்து சென்று சேர்மானை அழைத்து வந்து அரசர் முன் நின்றனர் .
தன் முன் வந்து நின்ற சேர்மானை நோக்கி , " மலைப்புறா மாவீரா ! நான் வணங்கும் தேவர் மறுத்து , நான் வணங்கா நீசத் தேவனை வழிப்பட்டு , என் சொல் பிழைத்து , எனக்கடங்கா குறுநிலத்தான் புரோசனவன் தலைதனை , தாமரை இதழ் நாளை மலரும் முன் அறுத்தெறிய பலரை அனுப்பி , உனக்குத் துணைவியாகி , இன்புற்று நீ வாழமறுத்து நின்ற பேதை , என் மகள் கித்தேரியவள் இன்னுயிரைப் பருகிட இன்றே படையுடன் புறப்பட்டு பொம்பேர் சென்று , உன் பழியும் , என் பழியும் ஒன்றாய்த் தீர்ந்திட, எவ்விடத்தும் நம் பேர் தொனிக்க, நமக்கு வந்த தொல்லைகள் நீங்கிட, விரைவாய் நீ விரைந்திடுவாயே " என ஆணையிட்டான் மன்னன் காயன் .
பொம்பேர் மலையிருந்த தவத்தரசி கித்தேரியாள் , தன் தவ வன்மையால் தீ முகத்தான் காயன் இட்ட ஆணையையும் , நாளை நடக்கவிருக்கும்போர்க்களம் தனையும் தெளிந்துணர்ந்துகொண்டாள். தன்னுடனிருந்த தவமாதர்கள் உளம் தேறும் வண்ணம் "மானிடர் நாம் மீட்புறுவண்ணம் பார் நடுங்க தான் நடுங்காது, தன்னுயிர் ஈந்த இயேசு பெருமானுக்கு கை மாறாக, நாம் நமது இன்னுயிரை ஈந்து , வானுலகில் பொன் மகுடம் வாய்ந்திலங்க, அவர் நாமம் தொனிக்க நம் பெயர் வெற்றி பெற, நாளை நடைபெறும் வெம்போரில் நாம் மாய்ந்திடுவோம் , நீர் முகத்தில் காணப்படும் புன்னுரையென நம்துயர் முகத்தில் நீங்கி , மேல்திறந்த பொன்னுலகம் காண்போம் . குறை நிறைந்த இப்புவியினின்றுயர்ந்து , நாதனவர் வீடடைந்து , தேவனருள் பூண்டணியும் நன்னாளின் சிறப்பே , நாளை நடைபெறும் வெம்போர். ஆக்கிய பொருளெல்லாம் அழிவுற்றேயாக வேண்டும் . பிறப்பென்றால் மகிழ்வார்கள் , இறப்பென்றால் அழுவார்கள் . இருந்தாலோ இகழ்வார்கள் . வானவர் முதலாய் காணமுடியா நிமலன்அவர் வடிவம் காண ஈனோர் நமக்கு அவர் தயை செய்யும் நாள் நாளையாகுமே " என பலவாறு தேற்றுரை கூறினாள் . மங்கை கித்தேரியவள் மதிவாயுரைக் கேட்ட கன்னியர்கள் , வெண்மதியின் கதிரை உண்டு மலரும் காவின் மலர் என கண்களை இமைக்காது உள் உருகி , ஊன் துறந்து , உறக்கமின்றி , இறைதுதிபாடி மதிமுகமென ஒளிபெற்றிலங்கியகித்தேரியைச் சூழ்ந்து நின்றார்கள் .
மீண்டும் சந்திப்போம் ......................
அத்தியாயம் :- 18
®®®®®®®®®®®®®®
மாதர்கள் அனைவருமே மரணத்தை எதிர் நோக்கி , மரணத்தினால் தாம் அடையப்போகும் மேண்மையினை எண்ணி மகிழ்ச்சி கொண்டு , இறைவனின் புகழ்ச்சி கீதங்கள் பல பாடி நின்றார்கள் . அன்றுஇறைமகன் தான் மனிதனாகிய மட்டும் தனக்கு ஏற்படப்போகும் கொடிய மரணத்தை எண்ணி வேதனை கொண்டார் . அதேபோல் கன்னியர்கள் இவர்களும் தமது மரணத்தால் கிடைக்கப் போகும் மகிமையை எண்ணி மகிழ்ந்தார்கள் எனினும் , நிகழப்போகும் கொடிய மரணத்தை எண்ணி நடுங்கினார்கள் . தங்களுக்கு மன ஆறுதலும் மன தைரியமும் கிடைக்கும் படியாக இறைவனை நோக்கி:-
ஓ இயேசுவே ! எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும் .பயங்கரமான இந்த நேரத்தில் , உமது திரு இரத்தத்தை எங்கள் மீது தெளிந்து , எங்களுக்கு வேண்டிய மனதிடத்தைத் தாரும் .ஓ பரம தேவனே ! அன்று உமது சீடர்களுக்கு அக்கினி நா வடிவில் வந்து ஆறுதல் அளித்ததுபோல் , எங்களுக்கு ஏற்படவிருக்கும் மரணத்தை எண்ணி ஏற்பட்டுள்ள நடுக்கத்தை நீக்கி , ஆறுதல் தர வாரும் .
கிறிஸ்து பெருமானே ! உமது இரக்கத்தால் மீட்படைவோம் என, நம்பிருக்கும் உமது அடியார்களாகிய எம்மை , உமது வான் வீட்டில் ஏற்றருளும் .என பலவாறு மன்றாடினார் .
அதன்பின் இறைவனின் தாயும் , இரக்கத்தின் தாயுமாகிய அன்னை மரியாளை நோக்கி :-
இரக்கம் மிகுந்த அன்னையே ! எம் அரசியே ! ஆதித்தாயின் கொடுமையால், பேரின்ப நாட்டையிழந்த மக்களாகிய யாம் , கண்ணீர் சிந்தி உம்மை கூவி அழைக்கின்றோம் . அன்புடன் எம்மையும் , உமது , கடைக்கண் பார்வையால் காத்தருள்வாயே ! .தாய்மையின் கனிவே ! இம்மை வாழ்வின் இறுதியில் இருக்கும் எங்களுக்கு , உமது திருமகனாம் கிறிஸ்துவைக் காட்டி ஆறுதல்தந்திடுவாயே . !என தங்களது கொடிய மரணத்தை இம்மையின் இறுதியை நினைத்து மிகுந்த வியாகுலத்துடன் வேண்டி நின்றனர் .
அந்த சமயத்தில் வானவர்கள் வானழகு காட்டி அங்கே தோன்றி நின்றனர் . " இப்புவியில் வான்லோக மாட்சி கொண்டிடுவீர் . நாளைய தினமே வெற்றி மாலை சூடி , உயர்வானுலகில் உயர்ந்து மகிழ்ந்திடிவீர். அங்கு உம்மோடு அவரைப் புகழ்ந்தேத்திட வந்தோம் . ஆண்டவர் தம் திறத்தால் வெற்றி நலம் தந்து முடி சூடுவார் , எப்பகையையும் எளிதாய் வென்றிடுவீர்" எனக் கூறிநின்ற வானவர்கள் , இறுதி அர்ச்சனைப் பாக்களைத் தொடங்கினார்.
கன்னியர்களும் வானவருடன் சேர்ந்து பாக்களைப் பாடினர் .
அந்த நாள் இரவு முழுவதும் ஒளித்திரளும் பா இசையும் , உள் மகிழ்வும் , வாழ்த்துத் திறனும் , களித்திறனும் கொண்டிலங்கும் விண்ணகத்தை , மண்ணகத்தோடு கண்டு களித்தனர் .இரவு முழுவதும் போனபின் , செங்கதிரோன் எழுந்து தன் தேர் ஏறி வருவதைக் கண்டனர் . கன்னியர்கள் தம் போர் காண மலையுச்சி நீங்கி , கித்தேரி முன் நடக்க உடன் வாழ்ந்த முப்பது கன்னியரும் பின் நடந்தனர் . கன்னியர்கள் அவர்களுக்கு நிகழப்போகும் கொடுமைகளை எண்ணி
மீண்டும் சந்திப்போம் .....................
அத்தியாயம் :-19
®®®®®®®®®®®®®
தினை மறுத்து கிள்ளை அழுதது . தேனை மறுத்து தும்பி அழுதது. தனை மறந்து தோகை மயில் அழுதது . தாய் மறந்து மான் குட்டிகள் அழுதன . ஓடு புனல் ஏங்கி அழுதது . காகமெல்லாம் என்று இனி இவர்களைக் காண்பமோ ? என அழுதது . ஆடும் இலைகள் விம்மி அழுதன . மேகமெலாம் புகழ்ந்தேத்தியது. இந்நிலையில் கித்தேரியும் முப்பது கன்னியரும் மலையடிவாரம் இறங்கி வருகையிலே , எதிரே தம் பகைவீரர் பேரணியாய் விரைந்து வரக் கண்டு , முப்பதின்மாரும்கித்தேரியவளுடன்
ஒருங்கிணைந்து நின்றார்கள் . மானினங்கண்ட வேடர்களைப் போல் முன் நின்ற முப்பது கன்னியர்களையும் படைவீரர்கள் தம் கரங்களில் ஏந்தி வந்த நீண்ட வாள்களால் தேன் கொடிக் காடு ஈர்ந்தனர் போல் வெட்டி வீழ்த்தினர் .
திருமணம் கொள்ள முன்பு குறித்த காளையவன் சேர்மான் , பாயும் புலியென பாய்ந்து சென்று , வலை நீங்கி ஓடிய மான் மீண்டும் பிடிபட்டதென, வானரசின் குணமாய் சிலையென நின்ற கித்தேரியை நோக்கி , இன்னுயிர்க்கு காவலனாய் எனை ஏற்க அன்று நீ மறுத்தாய் . உன்னுயிர்க்குக்காதகனாய் உற்றேன் நான் இன்று எனக் கூறிக் கொண்டே வான் கூச தான் கூசாது , மண் அதிர தான் அதிராது , கன்னிகை கித்தேரியின் பூஞ்சிரமதைத் தன் கைவாள் கொண்டு , இயேசுபிரான் பிறந்து 130 ஆண்டு வைகாசி திங்கள் மே மாதம் 21 ஆம் நாளன்று சூரியன் இடபராசியில் நின்று தன் தேர் செலுத்த, சந்திரன் அசுவதி நட்சத்திர வீட்டில் நின்ற அச்சமயம் தனிலே ஓங்கி வெட்டினான் .
விண்ணோரும் மண்ணோரும் வியக்க, ஞானம் நிறை மாண்புடையோர் கேட்டு உவப்ப, வேலேந்தும் படைவீரர் அதிர்ந்து நடுங்க, பூவினங்கள் சோர்ந்து உதிர, புள்ளினங்கள் குரலதிர, கானகம் வாழ் விலங்கினங்கள் சூழ்ந்து துடிக்க, கல்லினங்கள் கசிந்துருக, வளமார்ந்த உலகம் காணாப் புதுமைகள் , கண்ணுற, வாள்வலியால் வீழ்ந்த தம் சிரமதை , தான் கொண்ட இறைவலியால் விரைந்தே தான் எடுத்து தூய கரம் ஏந்தினாள் . விரி செந்தாமரை வான் சுடரை ஏந்தல் போல் , அவள் தன் விரிகரங்களில் ஏந்திய பூஞ்சிரம் சூழ இறையொளி வில் வீசிற்று . முகம் கமலம் என கண் குவளை மலர் என , மூக்கு செண்பக மலர் என பல் முத்தான முல்லை மலர் என , வாய் ஆம்பல் மலர் எனப் பூத்து குலுங்கிற்று . அருளால் மலர்ந்த முகத்தில் இன்பமெனும் தேனொழுக, மருளால் தன்னைக் கொல்லத் துணிந்த சேர்மானின் முகத்தை நோக்கினாள் . அவள் கண்ணொளி நுண்ணுயிராய் அவன் உள் நுழைந்திட, உளம் உருகி மனம் தெளிந்து மங்கையடி மண்டியிட்டு வணங்கினான் . மனம் நொந்து அழுது புலம்பி நின்ற சேர்மானை ஆண்டவரும் ஆட்கொண்டு அருளொளியை வழங்கிட, அஞ்ஞானம் நீக்கி மெஞ்ஞானம் ஏற்று விளங்கினான் .
தன்னுயிர் உண்டவன் மெய்யுயிர் பெறலே தன்னுயிரினும் மேல் என்றுணர்ந்த கித்தேரி , வெட்டுண்ட தன் தலையாலே தன் உறைவிடத்தின் வழி பார்த்து , ஒளியேந்தும் பொற்தேராகிய, சூரியன் உதய கிரியாகிய பூமியின் அடிவாரத்திலிருந்து புறப்படுவது போல் , கித்தேரியும் அடிவாரத்திலிருந்து மலையுச்சி புறப்பட்டாள் .
மென்மையான பசிய கொடிகளும் , பூத்துக் குலுங்கிய நீள் கொடிகளும் முன்னே வந்து மண்டியிட, பூவிலுள்ள வண்டினங்கள் தன் பொற்குழலால் இனிய இசையொலி எழுப்பிட, காவிலுள்ள பறவையினங்கள் பாடல் பல பாடிட, கண்கவர் காட்சியுடைய தோகை மயில் கூட்டங்கள் உல்லாசமாய் முன்னே ஆடிவர, மானினங்கள் சேவகர்கள் போல் சூழ்ந்து வர மணம் பொருந்திய கஸ்தூரி விலங்கினங்கள் தீம்புகை வாசனையிட, பூத்த மலர்கள் பன்னீர் எனத்தேன் துளிகள் தெளிக்க, பூத்த மரங்கள் குடைகள் என விரிந்து நிற்க, அலை உவப்ப, மேல் எழும்பும் ஆழீயின் தேர் வேந்தன் என , மலை உவப்ப அன்று வான் மடந்தை கித்தேரி மலை மடந்தையாய் நடந்தேகினாள் .
வானினத்தைச் சேர்ந்தவள் என வான்குடியோர் பலர் அங்குத் தோன்றி ...
மீண்டும் சந்திப்போம் , அடுத்த அத்தியாயத்துடன்நிறைவு பெறுகிறது ...............
அத்தியாயம் :- 20
®®®®®®®®®®®®®®
வானினத்தைச் சேர்ந்தவள் என வான்குடியார் பலர் அங்கு தோன்றி , வானோர் இராக வழியில் தேன் வழங்கும் இன்னிசையில் , காமனையும் தம் ஜம் பொறிகளால் வென்றவள் , அச்சமின்றி இல்லறத்தை மறுத்த மாண்புடையாள் , தாழ்ச்சியினால் ஆங்காரப் பேய்களை வென்றவள் , காமம் , வெகுளி , மயக்கம் ஆகிய முப்பகையும் வென்றவள் எனப் பலவாறு பாவையவள் வெற்றிச் சிறப்புகளைப் பாடி வந்தனர் இவையனைத்தையும் கண்டு இன்புற்று கண்ணுடையவளாய் , துன்பம் நீக்கும் இனியன கூறும்வாயுடையோளாய் , வானோர் இசைத்த நிமலன் புகழ் கேட்டு உவகையுற்று , தானும் இறைபுகழ்ச்சி கீதங்கள் பாடியவாறே நடந்து மலையுச்சி வந்தடைந்தாள் .
கரமேந்திய சிரமுடன் ஐந்து மைல் தூரத்தை ஐந்து நாழிகையளவாக நடந்து, மலையுச்சியடைந்து அங்கே அமைந்திருந்த கோயில் முன் வந்து நின்றாள் . இறைவனைத் தெண்டனிட்டு அவர் புகழ் பாடி , அவர்க்கு தான் அளிக்கும் காணிக்கை பொருளென குருதி வடிந்த தன் சிரமதனை வைத்து , கொய்த மலரோடு கொடி வீழ்ந்தாற் போல் , கொய்த தலையோடு உடலும் வீழ்ந்திடப் பேருயிர் துறந்தனள் கன்னிகை கித்தேரி .
அப்போது தானே , காயனவர் காய் சினத்துப் , படைவீரர்களுக்குப் பலியான, தன்னுடன் வாழ்ந்த கன்னியர் முப்பதின்மரையும் , மற்றொரு படைப் பிரிவினரால் வெட்டி வீழ்த்தப்பட்ட மன்னன் புரோசனையும் தானளித்து அனுப்பிய வாக்குப்படி தன்னுடன் சேர்த்து பெரும்படையென வானவர் படை சூழ, விண்ணரசைப் பற்றிக் கொண்டாள் .
மின்னலையொத்த வாழ்வினையுடைய கன்னிகை கித்தேரி தன் துன்பம் தீர்த்து , தரணி விட்டு மேலேறியபின் , தாங்கி நின்ற வான் கோபம் ஓங்கிட எங்கும் இருள் நிறைந்து மழை மேகம் சூழ்ந்திட பொங்கு மழை பெய்தது . மின்னலொளி வாள் வீசிட, பேரிடியும் முழங்கிட, புயல் வீசி காற்றதிர எங்கணும் புற்பூண்டு முதலாய் மறைந்தது . கொடுங்கொலைக்கு அமைந்து , அன்று அங்கேகிய வீரர்படை படுகொலைக்கு அஞ்சி பயந்து நடுங்கி பாய்ந்தெங்கும் ஓடினர் . ஆயினும் தாழ்ந்து வீழ்ந்திட்ட இடிவாய்ப்பட்டு எரிந்து சாம்பலாய் போயினர் பெரும்பகுதியினர் . எஞ்சிய சிலர் உண்மையை உணர்ந்தார்கள் .உத்தமி கித்தேரியை உருக்கமுடன் வேண்டி நின்று தம் நாடு போய்ச் சேர்ந்தனர் .
அக்காலத்தில் அக்கானகத்தே சிறந்த தவவாழ்வை மேற்கொண்டு , முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார் .இறைதூதன் அவருக்கு தோன்றி உரைத்தபடி , அருகிலுள்ள கிராமத்து மக்களில் சிலரை தமக்கு துணையாக கொண்டு , மலையடிவரத்தே உடல்களை தேடி எடுத்து , செய்முறைகளை முறையாகச் செய்து , குருதி வீழ்ந்திட்ட பாதை வழிச் சென்றே , அங்கே குன்றின் உச்சியில் அமைந்திருந்த கற்கோயில் வாயிலில் , நீர் தவழும்தாமரை நீர் நீங்கி அறுபட்டுக் கிடந்தன போல சிரம் வேறு , உடல் வேறாய் கிடந்த திருமேனி கண்டு , வரமேந்து கித்தேரியாளின் மாண்புறு திருமேனி இதுவெனக் கண்டு , வணங்கி அவ்விடத்தில் தானே ஆழமானதோர் குழி வெட்டி , இறைநாமம் துதித்து கித்தேரியின் பூவுடலை பல்வரம் கொண்டவள் என்பதைக் குறிக்க, பன்னிறப் பூக்களை மேல் பரப்பி, நல்வரமே காய்ந்திடுக என மண்மூடி நல்லடக்கம் செய்தார் .
பின்னொரு காலத்தில் , வான் வாழும் கித்தேரி வானிலிருந்து இறங்கி இப்புவிக்கு அருள் பொழிவேன் என்பவளாய் , தன் புனித உடலைத் தரணிக்குத் தந்துள்ளாள் எனத் தரணியோர் புகழ் பாடிய அவ்வேளையில் , அவளது பூவுடல் அமைந்திருந்த குழியின்மேற்பரப்பில் விந்தையாய் தேன் சிந்தும் மணங்கமழ் பூமலர் பூத்து குலுங்கியது .
நிறைவு பெற்றது .
குறிப்பு :- இனி தொடர்ச்சியாக அன்னை கித்தேரியம்மாள்செய்த புதுமைகள் பற்றி சொல்கிறேன் .
நன்றி !!!
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
புனித கித்தேரியம்மாள் ***
Posted by
Christopher