தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார் *** மறையுரை சிந்தனைகள்


பிள்ளைகளுக்கு மிகுந்த செல்லம் கொடுக்கும் பெற்றோர்:

பக்கத்துப் பக்கத்துக்கு வீட்டில் இருந்த ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் தங்களுடைய வீட்டில் பூச்செடிகளை வளர்த்து வந்தார்கள். இளைஞன் ஒவ்வொரு நாளும் பூச்செடிகளுக்கு உரமிடுவதும், தண்ணீர் விடுவதுமாய் இருந்தான். முதியவரோ அவ்வப்பொழுதுதான் உரமிட்டும் தண்ணீரிட்டும் வந்தார். இதனால் இளைஞன் வளர்த்த செடிகள் செழிப்பாய் வளர்ந்தன; முதியவர் வளர்த்த செடிகள் மிகவும் சாதாரணமாக வளர்ந்தன.

ஒருநாள் நள்ளிரவில் சூறாவளியுடன்கூடிய பலத்த மழைபெய்தது. அதில் இளைஞன் வளர்த்த செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டன. முதியவர் வளர்த்த செடிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. இதைக்கண்டு அதிர்ந்துபோன இளைஞன் முதியவரிடம், “ஒவ்வொரு நாளும் உரமிட்டும், தண்ணீரிட்டும் வளர்த்த என்னுடைய செடிகள் பிடுங்கி எறியப்பட்டிருக்க, உங்களுடைய செடிகள் உறுதியாக இருக்கின்றனவே! அது எப்படி?” என்றான். அதற்கு முதியவர் அவனிடம், “நான் அவ்வப்பொழுது செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்ததால், தண்ணீரைத் தேடி வேர்கள் நிலத்திற்குள் ஆழமாகச் சென்று பதிந்தன. நீ வளர்த்த செடிகள் அப்படியில்லை. அவற்றிற்கு தண்ணீர் தாராளமாய்க் கிடைத்ததால், அதன் வேர்கள் ஆழமாகப் பதியவில்லை அதனால்தான் நேற்றுப் பெய்த மழையில் அவை வேரோடு பிடுங்கப்பட்டன” என்றார்.

பெரியவர் சொன்ன வார்த்தைகள் இளைஞனுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொருந்தும். இன்றைக்குப் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தண்டித்தால், அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்று அஞ்சி, அவர்களைத் தண்டிக்காமல் மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்து வருகின்றார்கள். இதனால் பிள்ளைகள் யாருக்கும் கீழ்ப்படியாமல் வளர்ந்துவருகின்றார்கள். இந்நிலையில் கடவுள் நம்மைத் தண்டிக்கும்பொழுது அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது என்பதைப் பற்றிக் கூறும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

கடவுள் நம்மீது பேரன்புகொண்டவர். அவர் பேரன்புகொண்டவர் என்பதற்காக நாம் செய்யும் குற்றங்களைக் கண்டும் காணாமலும் இருப்பார் என்று பொருள் இல்லை. இஸ்ரயேல் மக்கள் தன்னை மறந்து வேற்று தெய்வங்களை வழிபட்டபொழுதும் முறைகேடாக நடந்தபொழுதும் கடவுள் அவர்களைக் கண்டித்துத் திருத்தினார். இது குறித்து நீதிமொழிகள் நூலில், “ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளிவிடாதே” (நீமொ 3: 11-12) என்று வாசிக்கின்றோம். அதே கருத்தினைத்தான் எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆகவே, ஆண்டவர் நம்மீது பேரன்பு கொண்டு கண்டித்துத் திருத்துவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் நம்மைத் தண்டித்துத் திருத்துவது இப்பொழுது துன்பமாக இருந்தாலும், பிறகு அது மகிழ்ச்சியைத் தரும்

 பிரம்பைக் கையாளதவர் தன் மகனை நேசிக்காதவர் (நீமொ 13: 34).

 கண்டிப்பதும் கருணைகொள்வதும் கடவுளுக்கே உரிய தனிச்சிறப்புகள்

இறைவாக்கு:

‘கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்’ (நீமொ 12: 1) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, கடவுள் நம்மைக் கண்டிக்கும்பொழுது மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, அவருக்கு உகந்த வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.