அர்சிஷ்ட்ட சாமிநாதர் (St.Dominic) கார்காசோன் என்ற இடத்திற்கருகில் ஜெபமாலையைப் போதிக்கையில், பேய் பிடித்த ஒரு ஆல்பிஜென்ஸிய பதிதனை அவரிடம் கொண்டு வந்தார்கள். பெரும் கூட்டமான மக்கள் கூடியிருக்க, சாமி நாதர் பேயோட்டும் சடங்கை செய்தார். அவர் பிரசங்கத்தைக்கேட்க பன்னீராயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு கூடியிருந்தார்கள்.
அவனைப்பிடித்திருந்த பேய்கள் அர்ச்.சாமிநாதர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற கட்டாயப்படுத்தப்பட்டதால் வேண்டா வெறுப்புடன் பதில் கூறின. அவை கூறிய உண்மைகள்:
அம்மனிதனுடைய உடலில் பதினையாயிரம் பேய்கள் இருப்பதாக அவைகள் வாக்குமூலம் கூறின. அதற்குக்காரணம் அம்மனிதன் ஜெபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் தாக்கி வந்தான்.
புனித சாமிநாதர் ஜெபமாலையை பிரசிங்கித்து வருவதால் நரகத்தின் அடி ஆழம் வரையிலும் பயத்தையும். நடுக்கத்தையும் புகுத்தி விட்டார். உலகத்திலேயே பசாசுகள் மிகவும் பகைத்த மனிதன் அவர்தான். ஏனென்றால் ஜெபமாலைப் பக்தியால் அவர் ஆன்மாக்களை பசாசின் பிடியிலிருந்து இழுத்து விடுவித்துக் கொண்டு போய்விடுகிறார்!.
இன்னும் பலவற்றையும் அவைகள் வெளியிட்டன. அர்ச்.சாமிநாதர் ஒரு ஜெபமாலையை அந்த ஆல்பிஜென்ஸியன் கழுத்தில் போட்டார். போட்டுவிட்டு அந்தப்பேய்களிடம்;
“ மோட்சத்திலுள்ள சகல அர்சிஷ்ட்டவர்களிலும் யாரைக்கண்டு அவை அதிகம் பயப்படுகின்றன, அதன் காரணத்தால் மனிதர்களால் அதிகமாய் நேசிக்கப்படவும், வணங்கப்படவும் தகுந்த அர்சிஷ்ட்டவர் யார் ? “ என்று கேட்டார்.
இப்படிக்கேட்டதும் அப்பேய்கள் உலகில் கேட்டிராத எவ்வளவு கடும் கூச்சல் போட்டனவென்றால், அங்கு நின்ற மக்களில் பெரும்பாலோனோர் அச்சத்தால் மருண்டுவிழுந்தனர். அதன்பின் அப்பேய்கள் பதில் கூறாமல் தப்பிக்க மிகத்தந்திரமாய் அழத்துவங்கின. பரிதாபமாக அவைகள் ஒப்பாரி வைத்து அழுதன. எவ்வளவிற்கென்றால் அங்கு நின்ற மக்களும் இயற்கையாகவே எழும் இரக்கச்சிந்தையால் அம்மனிதனுடன் சேர்ந்து அழத்தொடங்கினார்கள். அப்பேய்கள் அப்பதிதனின் மூலமாக கேட்போர் இருதயம் உருகுமளவு இரங்கி இரந்து பேசின.
“ சாமிநாதரே! ஐயா! எங்களுக்கு இரங்க வேண்டும். உமக்கு ஒரு போதும் ஒரு தீங்கும் நாங்கள் செய்யமாட்டோம். பாவிகளுக்கும், இன்னல்களில் அகப்பட்டிருப்பவர்களுக்கும் எப்போதும் நீர் பரிவு காட்டி வருகின்றீர். எங்களுக்கும் இரங்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் மிகவும் இன்னல்படுகிறோம். ஏற்கனவே நாங்கள் எவ்வளவோ வேதனைப்படுகிறோம். எங்கள் வேதனைகளை இன்னும் அதிகரிப்பதில் உமக்கு என்ன நன்மையுள்ளது. நாங்கள் அனுபவிக்கும் வேதனைகளே எங்களுக்குப்போதாதா? அவைகளை இன்னும் அதிகரிக்க வேண்டுமா? எங்களுக்கு இரக்கம் காட்டவேண்டும் ஐயா! “ என்று கெஞ்சின.
இந்நிர்பாக்கிய அரூபிகளின் பரிதாபக்குரலைக்கேட்டு சாமிநாதர் இம்மியும் அசையவில்லை. தன் கேள்விகளுக்கு அவை பதில் கூறும்வரை அவற்றை சும்மா விடுவதில்லை என்று அவர் கூறிவிட்டார்.
அவர் காதில் அவைகள் மெதுவாகக் கூறுவதாக கூறின. ஆனால் சாமிநாதரோ, பதில் கூறுவது சத்தமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். உடனே பேய்கள் மவுனமாகி விட்டன. எனவே அர்ச். சாமிநாதர் முழங்காலில் விழுந்து தேவ அன்னையைப்பார்த்து இவ்வாறு மன்றாடினார்.
“ சர்வ சக்தியுள்ள ஆச்சரியத்திற்குறிய கன்னி மரியாயே! உந்நத திருச்ஜெபமாலையின் வல்லமையால் உம்மிடம் மன்றாடுகிறேன், மனுக்குலத்தின் பகைவர்களான இப்பசாசுகள் என் கேள்விகளுக்கு பதில் சொல்லுமாறு பணித்தருளும். “
இந்த ஜெபம் சொல்லி முடிந்தும் முடியா முன்பே அந்த ஆல்ப்ஜென்ஸியனின் காதுகள் வழியாகவும், நாசிகள் வழியாகவும் எரியும் நெருப்புச் சுவாலை வெளி வந்தது. ஆனால் அந்நெருப்பு யாரையும் சுடவில்லை. அப்பேய்கள் மீண்டும் கதறின; “ சாமி நாதரே! சேசு கிறிஸ்துவின் பாடுகளினாலும், அவருடைய திருத்தாய், அர்ச்சிஷ்ட்டவர்கள் இவர்களின் பேறுபலன்களினாலும் உம்மை மன்றாடுகிறோம். நாங்கள் ஒன்றும் பேசாமல் இம்மனிதனை விட்டுப்போய்விடுகிறோம். உம்முடைய கேள்விகளுக்கு நீர் விரும்பியபோது சம்மனசுக்கள் பதில் கூறுவார்கள். மேலும் எப்படியிருந்தாலும் நாங்கள் பொய்யர்கள்தானே? எங்கள் சொல்லை நீர் ஏன் நம்ப வேண்டும். தயவு செய்து இதற்கு மேல் எங்களை வதைக்க வேண்டாம்” என்று கூறின.
அர்ச்.சாமிநாதர் அவைகளைப் பார்த்து; நிர்ப்பாக்கிய அரூபிகளே உங்களுக்கு ஐயோ கேடு! உங்கள் பேச்சை நான் கேட்க நீங்கள் தகுதியல்ல” என்று கூறிவிட்டு மீண்டும் முழந்தாளிட்டு தேவ அன்னையிடம்;
“ ஓ ஞானமாகிய கிறிஸ்துவுக்கு மிகவும் தகுதியுள்ள மாதாவே! இங்கு கூடி நிற்கும் மக்களுக்காக நான் மன்றாடுகிறேன். அவர்கள் உங்கள் மங்கள மொழியை நன்கு சொல்ல அறிந்துள்ளனர். இந்த உமது எதிரிகள் முழு உண்மையை, பொய் கலவாத உண்மையை இங்கே இப்பொழுதே இக்கூட்டத்திற்கு முன்பாக கூறும்படி கட்டாயப்படுத்தும் தாயே” என்று மன்றாடினார்.
இச்செபம் முடியவும் பெருந்திரளான சம்மனசுக்கள் புடை சூழ தேவ அன்னை அவர் அருகில் தோன்றி, தன் கரத்தில் ஏந்தியிருந்த பொற்கோலால் பேய் பிடித்திருந்த மனிதனைத் தட்டி, “ என் ஊழியனான சாமிநாதனுக்கு உடனே பதில் கூறுங்கள்” என்றார்கள். உடனே பசாசுக்கள் ஊளையிடத்தொடங்கின.
“ ஓ! நீ எங்கள் எதிரியல்லவா! எங்கள் வீழ்ச்சியும், அழிவும், நீயல்லவா! மோட்சத்திலிருந்து எங்களை இப்படி கொடுமையாய் வதைப்பதற்கென்று நீ இங்கு வந்தாய். ஓ பாவிகளுக்காக பரிந்து பேசுபவளே! மோட்சம் செல்ல நிச்சய வழியாயிருப்பவளே! எங்களுக்கு சிறிது விருப்பமில்லாதிருந்தும் எங்கள் வெட்கத்திற்கும் அழிவுக்கும் காரணம் யார் என்று முழு உண்மையையும் எல்லோருக்கும் முன்பாக சொல்லவேண்டுமா? இருளின் தலைவர்களான எங்களுக்கு ஐயோ கேடு!-சரி.
“கிறிஸ்தவர்களே! நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். சேசு கிறிஸ்துவின் தாய் எல்லாம் வல்லவள். தன் ஊழியர்கள் நரகத்தில் விழாமல் காப்பாற்ற அவளால் கூடும். இருளாகிய எங்கள் தந்திர மாயைகளை அளிக்கும் சூரியன் அவள். மறைவிலிருக்கும் எங்கள் சதித்திட்டங்களை வெளிப்படுத்துகிறவள் அவளே. நாங்கள் வைக்கும் கண்ணிகளை அறுப்பவள் அவளே!. நாங்கள் கொடுக்கும் சோதனைகளை வலுவிழந்து வீணாகச் செய்வதும் அவளே!
“ எங்களுக்கு மனமில்லாவிட்டாலும் இதச்சொல்லியே தீர வேண்டியுள்ளது. அவளுடைய ஊழியத்தில் நிலைத்திருந்த எந்த ஒரு ஆன்மாவும் எங்களோடு ஆக்கினை அடையவில்லை. அவள் பரிசுத்த திருத்துவத்தை நோக்கி விடும் ஒரு பெருமூச்சு எல்லா அர்ச்சிஷ்ட்டவர்களுடைய ஜெபங்கள், விருப்பங்கள் நல்லுணர்வுகளியெல்லாம் விட அதிக விலையுள்ளதாய் இருக்கிறது.
மோட்சத்திலுள்ள அர்ச்சிஷ்ட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் அஞ்சுவதைவிட இவளுக்கு நாங்கள் அஞ்சுகிறோம். அவளுடைய உண்மையுள்ள ஊழியர்களிடம் நாங்கள் வெற்றி பெறவே முடியாது, எங்கள் சாதாரண கணக்குப்படி நரகத்தீர்ப்பு அடைய வேண்டிய பாவிகள், மரண நேரத்தில் அவளைக் கூவியழைத்தால், அவளுடைய மன்றாட்டால் இரட்சிப்படைகிறார்கள்.
( மேலும் கோபத்துடன் பேய்கள் தேவ அன்னையைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டன)
“ இந்த மரியாள் என்பவள் மட்டும் தன் வல்லமையை எங்கள் சக்திக்கு எதிராக கொண்டுவராவிட்டால், இவள் மட்டும் எங்கள் திட்டங்களைக் கவிழ்க்காவிட்டால், எப்பொழுதோ நாங்கள் திருச்சபையை மேற்கொண்டு அதை அழித்திருப்போம். திருச்சபையின் துறவற சபைகள் எல்லாம் தப்பரைக்குள் விழும்படி செய்திருப்போம்.
நாங்கள் பேசும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால் இதையும் கூற வேண்டியுள்ளது. ஜெபமாலை சொல்வதில் நிலைத்திருப்பவர்கள் யாரும் நரகத்தீர்ப்படைய மாட்டார்கள். ஏனென்றால் அவள் தன் ஊழியர்கள் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்படும் வரத்தை பெற்றுக்கொடுக்கிறாள். இதனால் அவர்கள் இறைவனின் மன்னிப்பையும், இரக்கத்தையும் அடைந்துகொள்கிறார்கள்.”
இதன்பின் அங்கிருந்த எல்லா மக்களும் ஜெபமாலை செய்யும்படி அர்ச்.சாமிநாதர் கூற அவர்கள் மெதுவாகவும், பக்தியுடனும் அதைச்செய்தார்கள். அப்பொழுது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி நடந்தது.
அவர்களும், சாமிநாதரும் சேர்ந்து ஒவ்வொரு அருள்நிறைமந்திரமும் சொல்லச்சொல்ல ஒரு பெரும் கூட்டமான பேய்கள் எரிகின்ற சிவந்த நிலக்கரி போன்ற தணல்போல் அம்மனிதனை விட்டு வெளியேறின.
எல்லாப் பேய்களும் துரத்தப்பட்டு அந்தப் பதிதன் விடுதலை அடைந்ததும் தேவ அன்னை அங்கு குழுமியிருந்தவர்களுக்கு ஆசீரளிக்க, இதன் காரணமாக அவர்கள் எல்லோரும் மகிழ்வால் நிரப்பப்பட்டார்கள்.
இப்புதுமையால் அநேக பதிதர்கள் மனந்திரும்பினார்கள். மனந்திருந்தி மிகப் புனித ஜெபமாலைப் பக்தி சபையில் சேர்ந்தார்கள்.
நன்றி : அர்ச்.லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய “ ஜெபமாலையின் இரகசியம்” என்ற நூல்.
குறிப்பு : வாழும் ஜெபமாலை இயக்க தியானத்திற்கும், ஜெபமாலை இரகசியம் நூல் தேவைப்படுவோரும் தொடர்பு கொள்ள. சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், Ph :9094059059, 9790919203, காமராஜர்புரம், கிழக்கு தாம்பரம் அருகில், சென்னை.
இயேசுவுக்கே புகழ் ! அருள் நிறைந்த மரியாயே வாழ்க !
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பரிசுத்த தேவ அன்னையை பற்றி பேய்கள் சொன்ன சாட்சியங்கள் ***
Posted by
Christopher