வில்லியம் பூத்தின் வெற்றிக் காரணம்:
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய மறைப்போதகர் வில்லியம் பூத் (William Booth 1829-1912). ஒருமுறை செய்தியாளர் ஒருவர் இவரிடம், “மறைப்பரப்புப் பணியில் உங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு வில்லியம் பூத் அவரிடம், “மனிதர்களின் உதவியை நம்பியிருந்த வரைக்கும் என்னால் மறைப்பரப்புப் பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை. எப்பொழுது நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தேனோ, அப்பொழுது என்னால் மறைப்பரப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது. அதனாலேயே எனது வெற்றிக் காரணம், ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்ததே என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது” என்றார்.
ஆண்டவரின் அடைக்கலம் புகுந்த மறைப்போதகரான வில்லியம் பூத்தால் மறைபோதகப் பணியை மிகச் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடல், ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவோர்க்கு அவர் தரும் நன்மைகள் மிகுதியாக இருக்கும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
புகழ்ப்பா வகையைச் சார்ந்த திருப்பாடல் 31, கடவுள் தனக்கு அஞ்சி நடப்பவர்களையும், தன்மீது நம்பிக்கை கொண்டவர்களையும், தன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களையும், தன்மீது பற்றுறுதி கொண்டோரையும் எப்படியெல்லாம் காக்கின்றார் என்பதை எடுத்துச் சொல்கின்றது.
தாவீது மன்னர் இத்திருப்பாடலை எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் இருக்கின்றது. ஏனெனில், அவருக்கு எதிரிகளிடமிருந்தும் (1 சாமு 23: 1-15), அவருடைய மகன்களிடமிருந்தும் (2 சாமு 15-18) எதிர்ப்புகள் வந்த வண்ணமாய் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் அவர் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, அவரிடம் அடைக்கலம் புகுந்தார். ஆண்டவரும் அவருக்கு நன்மையானதைச் செய்து, எதிரிகளிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.
சிந்தனைக்கு:
ஆண்டவர் நம் உயிருக்கு அடைக்கலமாக இருக்கும்போது, யாருக்கு நாம் அஞ்சி நடுங்கவேண்டும்? (திபா 27: 1)
ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல நம்மோடு இருக்கின்றார் (எரே 20: 11) என்பதை நமது வாழ்வில் நாம் உணர்ந்திருக்கின்றோமா?
நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான் (எசாயா 28: 16). நாம் பதற்றமடைகிறோம் எனில், நம்மிடம் நம்பிக்கை இல்லை என்பதுதானே பொருள்.
ஆன்றோர் வாக்கு:
‘பணிவும் கடவுளில் நம்பிக்கை வைப்பதும் அக அமைதிக்கு இட்டுச் செல்கின்றன’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் ஆண்டவரில் நம்பிக்கை நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.