எனக்கேதும் குறையில்லை *** மறையுரை சிந்தனைகள்


கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்:

ஒரு தாய்க்குரிய பாசத்தோடு எல்லாரோடும் பழகியவர் திருத்தந்தை புனித இருபத்து மூன்றாம் யோவான். ஒருநாள் அவரைச் சந்திக்க, புதிதாகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் ஒருவர் வந்திருந்தார். ஆயரோடு அவர் பேசிக்கொண்டிருக்கையில் ஆயர் அவரிடம், “ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டதிலிருந்தே மறைமாவட்டத்தை எப்படி வழிநடத்துவது என்று ஒரே கவலையா௧ இருப்பதால் எனக்கு இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லை” என்றார்.

உடனே திருத்தந்தை அவரிடம், “நான் திருத்தந்தையான புதிதில் எனக்கும் உங்களைப் போன்று திருஅவையை எப்படி வழிநடத்துவது என்று ஒரே கவலை! இதனால் எனக்குச் சரியாகத் தூக்கம் வரவில்லை. இப்படியிருக்கையில் ஒருநாள் என்னுடைய காவல்தூதர் என்னிடம், ‘கியோவன்னி! திருஅவையை எப்படி வழிநடத்துவது என்று ஏன் மிகவும் கவலைப்பட்டுத் தூக்கம் இழக்கின்றாய்! இது ஆண்டவருடைய திருஅவை. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். நீ நிம்மதியாகத் தூங்கு’ என்றார். அதன்பிறகு நான் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டேன். இப்பொழுது நான் நிம்மதியாகத் தூங்குகின்றேன்” என்றார். வந்திருந்த ஆயருக்கு உண்மை புரிந்தது. அதனால் அவரும் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கினார்.

ஆம், ஆண்டவர் ஓர் ஆயராக இருந்து, எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்பொழுது எதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டும்! இந்த உண்மையைத்தான் மேலே உள்ள நிகழ்வும், இன்றும் நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தாவீதின் புகழ்ப்பா வகையைச் சார்ந்த திருப்பாடல் 23, தாவீது மன்னர் தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய தருணத்தில் பாடிய ஒரு திருப்பாடல் என்று சொல்லப்படுகின்றது. இத்திருப்பாடலில் தாவீது ஆண்டவரை ஆயராகவும், தன்னை ஓர் ஆடாகவும் பாவிக்கின்ற அதே வேளையில், ஆண்டவரிடத்தில் நாம் நம்மையே ஒப்புக்கொடுத்து வாழ்ந்தால், நமக்கு எந்தவொரு குறையும் இருக்காது, எத்தீங்கும் நேரிடாது என்ற உண்மையை உரக்கச் சொல்கின்றார். தாவீதுக்கு ஆபத்துகள் வந்ததுபோன்று, நமது வாழ்விலும் ஆபத்துகள், சவால்கள் வரலாம். இத்தகைய தருணங்களில் நாம் நம்மை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து வாழ்ந்தால், எக்குறையும் இல்லாமல் வாழலாம் என்பது உறுதி.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் ஆயராய் இருக்கையில், அவர் நம்மை நல்வழியில் வழிநடத்துவதற்கு, அவரிடம் நாம் நம்மை ஒப்படைத்திருக்கின்றோமா?

 ஆடுகளுக்கு அழகு ஆயரின் குரல் கேட்பது; நமக்கு அழகு ஆண்டவரின் குரல் கேட்டு நடப்பது

 நல்லாயர் யார் என்பதையும், கூலிக்கு மேய்ப்பவர் யார் என்பதையும் நாம் அறிந்துகொள்வது நல்லது

இறைவாக்கு:

‘நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்’ (எசே 34: 11) என்பார் ஆண்டவர். எனவே, நம்மைப் பேணிக் காக்கின்ற நல்ல ஆயாராம் இயேசுவின் கைகளில் நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.