உண்மையான மனமாற்றம் அடைந்த குடிகாரர்:
பெருங்குடிகாரர் ஒருவர் இருந்தார். இவர் குடியிலிருந்து விடுதலை பெற விரும்பினார். அதற்காக இவர் சிகிச்சை பெற்றுக்கொண்டார். சிகிச்சையின்பொழுது இவருக்கு ஒரு மூலிகை மருந்து பரிந்துரைக்கப்பட்டது. அதை இவர் தொடர்ந்து உண்டு வந்ததால் இவருக்குக் குடிக்கவேண்டும் என்ற எண்ணமே அடியோடு நின்றது.
இப்படி இருக்கையில் ஒருநாள் இவர் கடைத்தெருவிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு இவர் ஒரு மதுபானக் கடையைக் கடந்து செல்லும்பொழுது, மதுபானத்தின் வாசனை இவரை மயக்க, இவருக்குள் குடிக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ‘குடியிலிருந்து விடுதலையடைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் குடிப்பது சரியா?’ என்று எண்ணமும் இவருக்குள் ஏற்பட்டது. இதனால் இவர் என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கு ஒரு விளம்பரப் பலகை இருந்தது. அதில், ‘எவ்வளவு வேண்டுமானாலும் மோர் குடிக்கலாம்; பத்து உரூபாய்தான்’ என்றிருந்தது. உடனே இவர் மோர்க்கடைக்குள் சென்று வயிறு முட்டக் குடித்தார். இதனால் இவருக்கு மதுபானம் குடிக்கவேண்டும் எண்ணமே மறைந்தது. இந்த நிகழ்விற்குப் பிறகு இவர் மதுபானக் கடை பக்கம்கூட போகக்கூடாது என்று முடிவுசெய்துகொண்டு முழுமையாகக் குடியிலிருந்து விடுதலை அடைந்தார்.
ஆம், குடியிலிருந்து விடுதலையடைய விரும்பிய இந்தக் குடிகாரர், முழுமையாக விடுதலையடைந்து உண்மையான மனமாற்றம் அடைந்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றுகின்றார்கள். இது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவரது சீடர்கள், அவர் தங்களுக்குப் பணித்தவாறே, மக்கள் மனம்மாற வேண்டும் என்று பறைசாற்றுகின்றார்கள். மக்கள் ஏன் மனம்மாறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் நகராம் விண்ணக எருசலேமைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த விண்ணக எருசலேம் அல்லது இறையாட்சிக்குள் ஒருவர் நுழைய வேண்டும் என்றால், அவர் மனம்மாறுவது, நற்செய்தியை நம்புவது தேவையான ஒன்றாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள் அறிவித்த விண்ணரசு அல்லது இறையாட்சியை பற்றிய நற்செய்தியைக் கேட்டு மக்கள் மனம்மாறி இருப்பார்கள். நாமும் ஆண்டவரின் நற்செய்தியைக் கேட்டு, மனம்மாறி வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டால் மட்டுமே, நம்பிக்கை ஏற்படும், மனம்மாற்றமும் ஏற்படும் (உரோ 10: 17).
கடவுளின் நகராம் விண்ணக எருசலேமிற்குள் செல்வதற்கான கடவுச் சீட்டுதான் மனமாற்றம்.
மக்கள் மனம்மாறவேண்டும் என்று விண்ணரசு பற்றிய நற்செய்தியை நாம் அறிவிப்பது எப்பொழுது?
ஆன்றோர் வாக்கு:
‘ஒவ்வொருவருக்கும் மனம்மாறுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என்பார் லைலா கிப்டி அகிதா என்ற எழுத்தாளர். எனவே, நாம் ஒவ்வொருவரும் மனம்மாறுவதற்காகக் கடவுள் கொடுத்திருக்கும் நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு உகந்தவர்களாவோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.