அனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள்
நிகழ்வு
கடைத்தெருவிலிருந்து கையில் பொட்டலத்தோடு நடந்து வந்துகொண்டிருந்த முகிலனைப் பார்த்து, அவனுடைய நண்பன் அகிலன், “கையில் என்ன பொட்டலம்...?” என்றான். “அதுவா... மனைவிக்காக வாங்கியிருக்கும் மல்லிகைப் பூ பொட்டலம்” என்றான் முகிலன். உடனே அகிலன் சிரித்துக்கொண்டே, “மனைவியின்மீது அவ்வளவு பிரியமா...? மல்லிகைப் பூவெல்லாம் வாங்கிக்கொண்டு போகிறாய்...?” என்றான். “என் மனைவி என்னுடைய வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றாள். அப்படிப்பட்டவள்மீது பிரியமில்லாமலா இருக்கும்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் அகிலன்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அகிலன், “உன்னுடைய வெற்றிக்கு மட்டுமல்ல... பலருடைய வெற்றிக்கும் அவர்களுடைய மனைவியே காரணமாக இருந்திருக்கின்றார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன்ட்ரு ஜான்சனுக்கு திருமணத்திற்கு முன்பாக எழுதப் படிக்கத் தெரியாது. அவருடைய மனைவிதான் அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்து, அவருக்கு அமெரிக்க அதிபராகும் தகுதியை உருவாக்கித் தந்தார்... மோட்டார் மன்னர் ஹென்றி போர்ட் தெரியுமல்லவா... அவர் தன்னுடைய தொழிலில் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுவந்தார். இப்படிப்பட்ட சமயத்தில் அவரோடு இருந்த எல்லாரும் அவரை விட்டுப் போய்விட்டார்கள்; அவருடைய மனைவிதான் அவரோடு இருந்து, அவருக்குப் புதுத் தெம்பூட்டி, உற்சாகப்படுத்தி அவரைத் தொழிலில் வெற்றிபெறச் செய்தார். இப்படிப் பலருடைய வெற்றிக்கும் அவர்களுடைய மனைவிதான் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள்” என்றான்.
இப்படிச் சொல்லிவிட்டு அகிலன் முகிலனிடம், “அது சரி நண்பா! உன்னுடைய வெற்றிக்கு உன்னுடைய மனைவி எந்த விதத்தில் காரணமாக இருந்தாள்” என்றான். “ஓர் அருமையான நாவலை எழுதுவதற்குக் காரணமாக இருந்தாள்” என்றான் முகிலன். “அது எப்படி?” என்று மீண்டுமாக அகிலன் கேள்வி கேட்டபோது, “ம்ம்ம் நாவலை எழுதி முடிக்கும் வரைக்கும் என் மனைவி அவளுடைய அம்மா வீட்டில் இருந்தாள்” என்றான் முகிலன். இதைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அகிலன்.
குடும்பங்களில் ஒருசிலர் அருகில் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்; ஒருசிலர் அருகில் இல்லாமல் இருந்ததால்தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உண்மையை வேடிக்கையாக பதிவுசெய்யும் இந்த நிகழ்வு நமது சிந்தைக்குரியது. இன்று நாம் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்சிகின்றோம். இந்த மகிழ்வான தருணத்தில், நம்முடைய குடும்பத்தை, திருக்குடும்பமாகக் கட்டியெழுப்ப இன்றைய இறைவார்த்தை என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
பெற்றோரின் கடமை
ஒரு குடும்பத்தின் இருபெரும் தூண்கள், அக்குடும்பத்தில் இருக்கும் தாயும் தந்தையும்தான். அவர்கள் இருவரும் கடவுளுக்கு ஏற்ற வழியில் நடந்து, கடவுள் தங்களுக்குக் கொடுக்கும் குழந்தையையும் கடவுளுக்கு ஏற்ற வழியில் நடத்தினால் அந்தக் குடும்பத்தை விட மகிழ்ச்சியான குடும்பம் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
திருக்குடும்பத்தில் உள்ள யோசேப்பும் மரியாவும் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய திருவுளத்தின்படி வாழ்ந்துவந்தார்கள். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டால், யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளத்தின்படியே நடந்தது, குழந்தை இயேசுவுக்கும் மரியாவிற்கும் பாதுகாப்பளித்து, அரணாக இருந்தார். இன்றைய நற்செய்தியில் ஏரோது மன்னன் குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோது, அவர் குழந்தையையும் அதன் தாய் மரியாவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகின்றார். இவ்வாறு யோசேப்பு இறைத்திருவுளத்தின்படி நடந்து, ஓர் எடுத்துக்காட்டான தந்தையாய் மிளிர்ந்தார். மரியாவும் அப்படியே இறைத்திருவுளத்தின்படி நடந்து ஓர் எடுத்துக்காட்டன தாயாய் மிளிர்ந்தார். இதனாலேயே இயேசுவும் இறைத்திருவுளத்தின் நடப்பவராக விளங்கினார். அப்படியானால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்து வளர்கின்ற அவர்களுடைய பிள்ளைகளும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வார்கள்.
நிறையக் குடும்பங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குமுன் எடுத்துக்காட்டன வாழ்க்கை வாழாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பது போல, தங்களுடைய நடத்தையாலும் சொல்லாலும் எரிச்சல் மூட்டக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதனாலேயே பிள்ளைகளும் தவறான வழியில் செல்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் யோசேப்பு, மரியாவைப் போன்று தங்களுடைய பிள்ளைகளுக்குமுன் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வது இன்றியமையாதது.
கணவன் மனைவின் கடமை
ஒரு குடும்பத்தின் இருபெரும் தூண்களாக இருக்கும் தாயும் தந்தையும் எப்படி எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவேண்டும் என்பது பற்றிச் சிந்தித்த நாம், அந்த தாயும் தந்தையும் அல்லது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக அறிந்துகொள்வோம்.
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், மனைவி தன்னுடைய கணவருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும் கணவர் தன்னுடைய மனைவியை அன்பு செய்யவேண்டும் என்றும் கூறுகின்றார். இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, மனைவிதான் கணவருக்குப் பணியவேண்டும், கணவர்தான் மனைவியை அன்பு செய்யவேண்டும் என்று இல்லை. கணவன் தன்னுடைய மனைவிக்குப் பணிந்திருக்கவேண்டும்; அதேபோல் மனைவி தன்னுடைய தன்னுடைய கணவரை அன்பு செய்யவேண்டும். இப்படி ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடந்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்ந்தால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், நிறையக் குடும்பங்களில் இத்தகைய பணிவும் அன்பும் இல்லை. அதனால்தான் பல குடும்பங்கள் சிதைந்து கிடக்கின்றன.
ஒரு குடும்பத்தில் மனைவி தன் கணவரோடு கோபித்துக்கொண்டு பெட்டி படுக்கையைத் தூக்கி, அவளுடைய அம்மா வீட்டுக்குக் கிளம்பினாள். அதைப் பார்த்து அவளுடைய கணவனும் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்கொண்டு அவனுடைய வீட்டுக்குக் கிளம்பினான். தன் கணவன் இப்படி நடந்துகொள்வான் என்று சிறிதும் எதிர்பார்த்திராத மனைவி அவனிடம், “இப்படி இருவரும் நம்முடைய அம்மா வீட்டிற்குக் கிளம்பிப் போய்விட்டால், பிள்ளைகள் எங்கே போவார்கள்...?” என்றாள். அதற்கு அவளுடைய கணவன், “வேறு எங்கு போவார்கள்...? நடுத்தெருவிற்குத்தான் போவார்கள்” என்றான். உடனே அவள் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே இருக்கத் தொடங்கினாள்.
இப்படித்தான் நிறையக் குடும்பங்கள் அன்பில்லாமலும் பணிவில்லாமலும் சிதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பம் திருக்குடும்பமாக மாற, ஒருவர் மற்றவர்மீது அன்பு காட்டி, ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடப்பது நல்லது.
பிள்ளையின் கடமை
பெற்றோர், கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும், அவர்களுடைய கடமை என்ன என்பன பற்றி சிந்தித்த நாம், பிள்ளைகளின் கடமை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பிள்ளைகள் தங்களுடைய தாய், தந்தையை மதித்து வாழவேண்டும் என்றும் அவர்களை மேன்மைப்படுத்தவேண்டும் என்றும் அப்படிச் செய்தால், அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும்; மகிழ்ச்சி கிட்டும்; இன்னபிற ஆசியும் கிடைக்கும் என்று எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் பல பிள்ளைகள் தங்களை ஏற்றிய ஏணிகளாகிய பெற்றோர்களை மதிக்காமலும் அவர்களை மேன்மைப்படுத்தாலும் புறக்கணிப்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது. ஆண்டவர் இயேசு, தான் இறந்தபிறகு தன் தாய் மரியா தனித்துவிடப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரை யோவானிடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் தன் தாய்மீது அக்கறையாய் இருந்தார். அவரைப் போன்று ஒவ்வொரு மகனும் மகளும் தன்னுடைய பெற்றோருக்கு மதிப்பளித்து, அவர்களுடைய கடைசிக் காலத்தில் கைநெகிழ்ந்து விடாமல், கண்ணும் கருத்துமாய்க் காத்திடல் வேண்டும். அப்படிக் செய்தால், அவர்கள் கடவுளின் ஆசியைப் பெறுவது உறுதி.
ஆகையால், இந்தத் திருக்குடும்பப் பெருவிழாவில் ஒவ்வொருவரும் - அது தாயாக, தந்தையாக, பிள்ளையாக யாராக இருந்தாலும் – ஒருவர்மீது அன்பு செலுத்தி, ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடந்து, நல்லதொரு குடும்பத்தைக் கட்டியெழுப்பி, இந்த மண்ணில் விண்ணகத்தைக் காண்போம்.
சிந்தனை
‘குடும்பம் என்பது கடவுள் நமக்காகப் பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் விண்ணகம் (சொர்க்கம்). அதை விண்ணகமாக்குவதும் பாதாளமாக்குவதும் (நரகம்) நம் கையில்தான் உள்ளது’ என்பர் சான்றோர் பெருமக்கள். ஆகையால் நாம், அன்பை அடித்தளமாகக் கொண்டு, குடும்பங்களைக் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.