நம்மை அன்புசெய்யும் கடவுள்:
ஒருநாள் மாலைவேளையில் நண்பர்கள் இருவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இருவரும் பிரியவேண்டிய நேரம் வந்ததும், ஒருவர் மற்றவரிடம், “நண்பா! உனக்குத் திருவிவிலியம் வாசிக்கும் பழக்கம் உண்டா?” என்றார். “ஒரு காலத்தில் வாசித்தேன். இப்பொழுது விட்டுவிட்டேன்” என்றார் மற்றவர். “நீ ஏன் திருவிவிலியத்தை வாசிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டாய்?” என்று முதலாவர் அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது இரண்டாமவர், “எனக்குக் கடவுள்மீது அன்பு இருப்பதாய்த் தெரியவில்லை, அதனால்தான் திருவிவிலியம் வாசிக்கின்ற பழக்கத்தை விட்டுவிட்டேன்” என்றார். உடனே முதலாமவர், “உனக்குக் கடவுள்மீது அன்பு இருக்கின்றதோ, இல்லையோ கடவுள் உன்மீது பேரன்பு கொண்டுள்ளார்” என்றார். முதலாமவர் இப்படிச் சொன்னதும், இரண்டாமவர், “கடவுள் என்மீது பேரன்பு கொண்டிருக்கும்பொழுது, நான் அவர்மீது அன்பு கொள்ளாமல் இருப்பதும், திருவிவிலியம் வாசிக்காமல் இருப்பதும் நல்லதாக எனக்குத் தெரியவில்லை. இனிமேல் நான் திருவிவிலியம் வாசிக்கின்றேன்” என்று உறுதியளித்தார்.
ஆம், கடவுள் நம்மீது பேரன்பும் பேரிரக்கமும் கொண்டுள்ளார். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதை குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
புகழப்பா வகையைச் சார்ந்த திருப்பாடல் 103, ஆண்டவர் செய்த கனிவான செயல்களுக்காக அவரைப் போற்றிப் புகழவேண்டும் என்று தொடங்கி, ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; அவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும் என்பதோடு நிறைவு பெறுகின்றது.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்த நன்மைகள் ஏராளம். அவர்கள் ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, வேற்று தெய்வங்களை வழிபட்டபொழுதும், அவர் அவர்களுடைய பாவங்களுக்கேற்பத் தண்டிக்காமல், அவர்களை மன்னித்து அவர்கள்மீது பேரன்பும் இரக்கமும் காட்டினார். அத்தகைய கடவுளை போற்றிப் புகழவேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியரான தாவீது மன்னர் அழைக்கின்றார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்த கனிவான செயல்களைப் போன்றே நமக்கும் செய்திருக்கின்றார். ஆகவே, நாம் அவரைப் போற்றிப் புகழ்வது தகுதியும் நீதியும் ஆகும்.
சிந்தனைக்கு:
ஆண்டவர் நம்மீதுகொண்ட பேரன்பை நம்வாழ்வில் நாம் உணர்ந்திருக்கின்றோமா?
நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றோமா? அவரது கனிவான செயல்களை மறவாமல் இருக்கின்றோமா?
சுவர்களை அல்ல, மாறாக திறந்த மனத்தோடும் இதயத்தோடும் உறவுப் பாலங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவாக்கு:
‘என்மீது அன்புகூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போரக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்’ (இச 5: 10) என்பார் ஆண்டவர். எனவே, நம்மீது பேரன்பு காட்டும் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.