"தொடக்கத்திலிருந்தே பாவம் செய்து வரும் அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு இவ்வுலகில் தோன்றினார்" (1 யோவான் 3:8) என்பதே நாம் பெற்றுள்ள மீட்பின் நற்செய்தி. மனிதகுல மீட்பரான இயேசு மனிதராகப் பிறக்க வழியாக இருந்தவர் என்பதால், கடவுளின் திட்டத்தில் மரியாள் சிறப்பிடம் பெறுகிறார். உலகின் பாவத்தைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் தாய் ஆகுமாறு, மரியாள் மாசற்றவராய் படைக் கப்பட்டார். பாவத்தின் கறை படாமல் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த மரியாள், "பாவத்தின் மீதும் சாவின் மீதும் வெற்றி கண்டவரான தம் மகனுக்கு இன்னும் அதிக நிறைவாக ஒத்தவராகுமாறு விண்ணுலக மாட்சிக்கு கடவுளால் உயர்த்தப் பெற்றார்." (திருச்சபை எண். 59) எனவே, சாத்தானை வெற்றி கொள்ளும் 'கடவுளின் இயல்பு மரியாளிடமும் இருக்கிறது.' (1 யோவான் 3:9)
"வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்" (லூக்கா 10:18-19) என்ற இயேசுவின் வார்த்தைகள், சாத்தானை வெல்லும் அதிகாரத்தை சீடர்களுக்கு வழங்குகின்றன. "ஆட்டுக் குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் சாத்தானை வென்றார்கள்" (திருவெளிப்பாடு 12:11) என்று மறைநூல் கூறுகிறது. இவ்வாறு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டவரின் வல்லமையால் சாத்தானை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கும்போது, இயேசுவின் தாய் மரியாளுக்கும் இந்த ஆற்றல் இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு எங்கே இடம் இருக்கிறது?
அனைத்துக்கும் மேலாக, "புதிய ஏவாளாகிய மரியாள், ஆதிப்பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்காமல் கடவுளின் தூதரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டதால், உலக மீட்பராக கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு உலகின் மீட்புக்கு வழி திறந்ததால், சாத்தான் என்று அழைக்கப்படும் அலகையின் வீழ்ச்சிக்கு மரியாளே காரணமாக அமைந்தார். சாத்தானை வெற்றிகொண்டவர் கிறிஸ்து இயேசுவே என்றாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த மரியாள்வுக்கும் அந்த வெற்றியில் கடவுள் பங்கு அளித்தார். இவ்வாறு, "அமைதி தரும் கடவுள், மரியாளின் காலடியில் சாத்தானை நசுக்கிப் போட்டுள்ளார்." (உரோமையர் 16:20) எனவே, பாவிகளின் அடைக்கலமான மரியாள் சாத்தானை வெல்பவராகத் திகழ்கிறார் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.