தூய லூர்து அன்னை என்ற பெயர், பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ்என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா பிப்ரவரி 11ந்தேதி கொண்டாடப்படுகிறது,
பிரான்சு நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிரூஸ். இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858 பிப்ரவரி 11ந்தேதி இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.
பெர்னதெத் அன்னையின் முதல் காட்சியைக் கண்டபோது, மரியா அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மரியாவின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். பிப்ரவரி 18ந்தேதி, மரியாவைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர். ஒரு காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.
பிப்ரவரி 25ந்தேதி காட்சியின்போது, மரியாவின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது.[ மார்ச் 25ந்தேதி அன்னை மரியா பெர்னதெத்திடம், “நானே அமல உற்பவம்” ("que soy era immaculada concepciou") என்று தன்னைப் பற்றிக் கூறினார். இதற்கு பாவம் எதுவுமின்றி பிறந்தவர் என்பது அர்த்தம்.
மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு காட்சி அளித்த மரியன்னை, அவற்றில் 15 காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.
ஏப்ரல் 7ந்தேதி பெர்னதெத் அன்னையின் 16வது காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை. ஜூலை 16ந்தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியைக் கண்ட பெர்னதெத், "இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை" என்று கூறினார்.
அன்னை மரியா ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும் முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு செபமாலை வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.
பெர்னதெத் மரியாவின் காட்சிகளை கண்ட நாட்களிலேயே, லூர்து காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1858 நவம்பர் 17ந்தேதி, காட்சிகளைப் பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இறுதியாக 1862 ஜனவரி 18ந்தேதி, டர்பெஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ், "பெர்னதெத் சூபிரூசுக்கு கன்னி மரியா காட்சி அளித்தபோது, இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயல்பாடுகள் நிகழ்ந்தது உண்மையே" என்று அறிவித்தார்.[8]திருத்தந்தை 9ம் பயஸ், லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் லூர்து நகர், அன்னை மரியாவின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.
அதன் பிறகு அன்னை மரியா காட்சி அளித்த மசபியேல் குகையின் அருகே, மரியாவின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. காட்சியின்போது தோன்றிய நீரூற்றும், பெரிய ஓடையாக மாறி ஆற்றில் கலப்பதுடன், நம்பிக்கையோடு அதன் நீரைப் பருகுவோருக்கு குணமளிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் லூர்து அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.